அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம். க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ கட்டுரைகளின் முதல் தொகுதியை அழிசி இவ்வாண்டுத் தொடக்கத்தில் வெளியிட்டது. பலமுறை கவனப்படுத்திய அந்நூல் திருப்திகரமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்போது அந்நூலின் இரண்டாவது தொகுதி வெளிவந்துள்ளது. 65 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரசுரம்.
மூன்றாவது தொகுதியும் வரவேண்டும். இன்னும் அந்தப் பிரதி கிடைக்கவில்லை. அத்தொகுதி வெளியானதா என்ற ஐயம்கூட எழுகிறது. ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக வந்ததாக சில குறிப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பிரதியைக் காணக் கூடவில்லை. தேடல் தொடர்கிறது. இப்போது இரண்டாவது தொகுதி மறுவெளியீடு காணும் தருணத்தில் மூன்று தொகுதிகளையும் மொத்தமாகக் காணும் ஆவல் மேலிடுகிறது. க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ நூலுக்கான இடத்தை தொடர்ந்து சுட்டிக்காட்டி, மறுபிரசுரத்திற்கு வழிகோலிய தங்களை நிறைமனத்துடன் வணங்குகிறேன்.
நன்றியுடன்
ஶ்ரீநிவாச கோபாலன்
கீழநத்தம்
அழிசி பதிப்பகம். க.நா.சு நூல்கள் வாங்க
அன்புள்ள ஸ்ரீனிவாசகோபாலன்
நலம்தானே?
அழிசிபதிப்பகம் க.நா.சுவின் நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவருவது மிகச்சிறந்த பணி. க.நா.சு நிறைய எழுதியவர். பல நூல்களை இன்றைய முகநூல் எழுத்துபோலவே சாதாரண மனநிலையில் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லா எழுத்துக்களும் முக்கியமானவை. இரண்டு காரணங்களுக்காக. ஒன்று எந்த நூலிலும் இலக்கியச் செய்திகள் இருக்கும். இலக்கியம் சார்ந்த அழகியல் கருத்துக்களும் இருக்கும். இரண்டாவதாக, அவை நேர்மையான காலப்பதிவுகளாகவும் இருக்கும்.
அத்துடன் க.நா.சுவின் புனைவல்லாத எழுத்துக்களை நான் இன்று வாசிப்பது அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட மனநிலைக்காக. அதை ‘இலக்கியமெனும் ஆன்மிகம்’ மீதான அவருடைய பற்று எனலாம். அது ஒருவகை மதப்பற்றுபோலவே அவரிடம் கடைசி வரை இருந்தது. இலக்கியத்துக்காக மிக இளமையிலேயே தன்னை தந்துகொண்டவர் அவர். இலக்கியத்துடனேயே வாழ்ந்தவர். வாழ்க்கையில் வேறெதற்கும் இடம் அளிக்காதவர். வாழ்க்கையின் பொழுதுகளைக்கூட இலக்கியமன்றி இன்னொன்றுடன் பங்கு வைக்காதவர். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பையே நாம் யோகம் என்கிறோம். அவர் ஓர் இலக்கிய யோகி. அத்தகையோர் நம் சூழலில் என்றும் உள்ளனர். மிகச்சிறுபான்மையினர். தேடினால் மட்டுமே கண்டடையத்தக்கவர்கள். ஆனால் தேடி அடைவது வாழ்க்கையை பொருளுள்ளதாக ஆக்கிக்கொள்ள விழையும் ஒவ்வொருவருக்குமுரிய கடமை.
க.நா.சுவுக்கு இலக்கியம் எதையும் தரவில்லை. இளமையில் அவர் மாற்று இதழ்களை நடத்தும்பொருட்டு தன் தந்தை சேர்த்து தந்துவிட்டுச்சென்ற சொத்துக்களை இழந்தார். ஆங்கில இதழியலெழுத்தை நம்பியே வாழ்ந்தார். உயர்கல்வி கற்றவராயினும் வேலைக்குச் செல்லவில்லை. இதழியல் வேலையைக்கூடச் செய்ய மறுத்துவிட்டார். ஒருவகையான தற்கொலைப் போராளி மனநிலை அது. அவர் உறுதியான இலக்கியக் கருத்துக்கள் கொண்டிருந்தார். அவற்றை முன்வைத்துக் கொண்டே இருந்தார். அன்றைய சூழல் அவருடைய எண்ணங்களுக்கு நேர் எதிராகச் சென்றுகொண்டிருந்தது. சொல்லப்போனால், பூதாகரமாகப் பெருகிக்கொண்டிருந்தது. அவருடைய தரப்பு கல்கிக்கு எதிராக புதுமைப்பித்தனையும் மௌனியையும் குபராவையும் ந.பிச்சமூர்த்தியையும் ஆர்.சண்முகசுந்தரத்தையும் முன்வைப்பது. அவர்கள் மறக்கப்பட்டனர். கல்கியும் கல்கியின் மரபினரும் பேருருவம் கொண்டு எழுந்தனர். கல்கி மரபினர் அன்றைய காங்கிரஸ் அரசின் ஆதரவுடன் அத்தனை அதிகார இடங்களிலும் பரவினர். விருதுகளைப் பெற்றனர்.
க.நா.சு மூர்க்கமாகக் கைவிடப்பட்டார். தமிழில் வணிகப்பொழுதுபோக்கு எழுத்தும் வாசிப்பும் வளர்ந்தது. வணிகக்கேளிக்கை இதழ்கள் பல இலட்சம் பிரதிகள் விற்றன. இலக்கிய இதழ்கள் நின்றுவிட்டன. கொஞ்சம் இலக்கியக் கவனம் இருந்த சுதேசமித்திரன் நாளிதழே நின்றுவிட்டது. க.நா.சு மாற்று இதழ்களை தொடங்கினார். அவை வெற்றிபெறவில்லை. அவர் சிற்றிதழியக்கத்தை தொடங்கினார். சிற்றிதழ்களே நீடிக்க முடியவில்லை. அவரால் உருவாக்க முடிந்ததெல்லாம் ஐநூறுக்கும் குறைவான வாசகர்களையும் பத்துப்பதினைந்து எழுத்தாளர்களையும் மட்டுமே. ஆனால் க.நா.சு அவர்களிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தினார். க.நா.சு மரபு என ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தினார். அதனூடாக அழகியல் சார்ந்த இலக்கிய மரபு ஒன்று அறுபடாமல் நீடிக்க வழிவகுத்தார். இன்று நவீன இலக்கியத்தில் பறப்பது அவருடைய கொடி தான்.
க.நா.சுவின் இந்த அர்ப்பணிப்பு இந்த அறிவு வட்டத்திற்கு வெளியே புரிந்துகொள்ளப்பட முடியாதது. அரசியலாளர்கள் இது ஒருவகை அரசியல் பற்று என்று புரிந்துகொள்வார்கள்.சாதிவெறியர்கள் இது அவருடைய சாதிப்பற்றின் வெளிப்பாடு என புரிந்துகொள்வார்கள். அவருக்கு ஏதோ லாபம் இருந்தது என்றே சாமானியர்கள் நினைப்பார்கள். கா.நா.சு வாழ்நாள் முழுக்க வறுமையில் வாழ்ந்தவர். பேருந்துக்குப் பணமில்லாமல் வெயிலில் சென்னை தெருக்களில் நடந்தவர். தனது சாதியினரால் வெறுக்கப்பட்டவர், அந்தச் சாதியின் முதன்மை ஆளுமைகளை மறுத்தவர் என்பதனால். புதுமைப்பித்தன் போன்றவர்களை முன்வைத்தார் என்பதனால். மதநம்பிக்கை அற்றவர். மத பீடங்களை பொருட்படுத்தாதவர். அரசியலை எவ்வகையிலும் கண்டுகொள்ளாதவர். அவருடைய ஆன்மிகம் அவருக்கே உரிய ஒரு தனித்தேடல் கொண்டது. க.நா.சுவை தமிழ்ச் சிற்றிதழ் மரபைச் சேர்ந்த ஒருவர் ஒரே கணத்தில் முழுக்கப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் அம்மரபு க.நா.சுவால் உருவாக்கப்பட்டது.
க.நா.சு மரபினர் அனைவருமே இலக்கியப் போராளிகள், இலக்கியத் தியாகிகள்தான். சுந்தர ராமசாமியாக இருந்தாலும் சரி, அடுத்த தலைமுறையினராக இருந்தாலும் சரி. அவர்களுக்கு அதிகாரம், பணம் , ஏற்பு எதுவுமே அமைவதில்லை. ஆயினும் அவர்களின் நம்பிக்கையும் விசையும் குறைவதே இல்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையில் உங்களைப் போல இளைஞர்கள் வந்திருக்கிறீர்கள். க.நா.சுவின் மானசீக மாணவர்கள். இப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள மாணவர் நிரை தமிழ் மரபிலேயே மிகச்சில ஆசிரியர்களுக்கே அமைந்துள்ளது. ஆன்மிக – மதமரபுக்கு வெளியே க.நா.சுவுக்கு மட்டுமே. தமிழில் இது ஒரு விந்தை. வரலாறு என்றும் நினைவுகூரும் பெருநிகழ்வுகளிலொன்று.
க.நா.சு அழகியல் விமர்சகர். வடிவமும் மொழியும் வாழ்க்கைசார்ந்த நுட்பங்களுடன் வெளிப்படுவதே இலக்கியமென நினைத்தவர். ஆனால் கடுமையான எதிர்விமர்சனங்கள், அலசல் விமர்சனங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. விமர்சகராகச் செயல்படாத விமர்சகர் அவர். அவருடையது நல்லவற்றை சுட்டிக்காட்டுவது மட்டுமே. ‘நல்லா அமைஞ்சு வந்திருக்கு’ என்பதற்கு அப்பால் அவர் பாராட்டுவதுமில்லை. அவருடைய முதன்மைப் பங்களிப்பு என்பது பட்டியல்கள். வாசித்திருக்கிறீர்களா அவருடைய முக்கியமான பட்டியல்.
இந்தப்பட்டியல்கள் வழியாக க.நா.சு ஒரு ‘மூலநூல்தொகையை’ தமிழிலக்கியத்திற்கு உருவாக்கியளித்தார். அதை இன்றுவரை தமிழிலக்கிய விமர்சனம் கடக்கவில்லை. அதை ஒட்டியும் வெட்டியுமே இன்றுவரை விவாதங்களும் நிகழ்கின்றன. க.நா.சு அதில் இலக்கிய அழகியலை மட்டுமே பொருட்படுத்துகிறார். அவரை மிகக்கடுமையாக எதிர்த்த இடதுசாரித் தரப்பிலேயே அவர் சுட்டிக்காட்டியவர்களே காலத்தில் மேலெழுந்து அந்தத் தரப்பினராலும் ஏற்கப்பட்டனர்.
இன்றைய தமிழிலக்கியவாசகன் க.நா.சுவின் பட்டியலை அறிந்திருக்கவேண்டும். அவற்றிலுள்ள நூல்களை வாசித்து தன் மதிப்பீட்டை உருவாக்கியிருக்கவேண்டும். அவன் அவற்றிலிருந்து சற்றேனும் மேலே சென்றால் மட்டுமே அவனுக்கு இலக்கிய மதிப்பு
ஜெ
க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன்