தமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

https://twitter.com/AjithanJey5925

ஆறேழு பக்க நீளத்தில் பனிரெண்டு அத்தியாயங்கள், மொத்தமே எழுபத்தி சொச்ச பக்கங்களில் சுமாராக பத்தாயிரம் முதல் பதிமூன்றாயிரம் சொற்களில் எழுதப்பட்ட மிகச் சிறிய நாவல் இது (என்று கணிக்கிறேன்) ! நூலின் தலைப்பான அல்கிஸா என்று படித்தபோது அல்லது கேள்விப்பட்ட போது இதொரு எழுத்துப் பிழை என்றே முதலில் எண்ணினேன். காரணம் இடையில் “ஸ்” என்பதைச் சேர்த்தால் அல்கிஸ்ஸா – அதாவது கதைகள், வரலாறு என்பதாகும். கஸஸ், கஸீதா என்கிற சொல்லை ஒப்பிடும்போது அல்கிஸா என்பது அரிதான அதிகம் வழக்கில் இல்லாத சொல்லும்கூட.

ஆனால் அஜிதன் மிகத் துல்லியமாக அல்கிஸா என்கிறார், இந்த நுட்பமான சொல் தேர்வுக்காகவே முதலில் அஜிதன் மீது வியப்பேற்பட்டது. கிஸா என்றால் போர்வை, அதாவது ஆடையின் கதை என்று சொல்லலாம். திருக்குர்ஆனுடைய 33:33 என்கிற வசனத்தை மூலக் கருவாகக் கொண்டது. அதன் அழகான விவரணைகளைத்தான் உஸ்தாத் படே குலாம் அலிகானின் பாடல்களாக இந்த நாவலில்  விரிகிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஆதாம், நோவா, ஆப்ரஹாம், மோசே, இயேசு என்கிற வரிசையில் கடைசியானவர் நபிகள் நாயகம். அவருடைய இறப்புக்குப் பிறகு, உடனிருந்த தோழர்களில் மூத்தவரான அபுபக்கரை முஸ்லிம்கள் தங்களின் தலைவராக -தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இவர்களே பெரும்பான்மை சன்னி பிரிவினரென்று தோராயமாக 150 கோடி பேர்கள் இருக்கக் கூடும். இந்த கலீபா வரிசையை ஏற்காமல் இமாம் என்றொரு குரு மரபை ஷியாக்கள் உருவகித்தனர். இருபது கோடி என்கிற அளவுக்கு உலகெங்கும் வாழ்ந்து வரும் சிறுபான்மையினர் ஆவர்.

அந்த வகையில் ஷிஆ பிரிவு முஸ்லிம்களின் தோற்றத்துக்கு காரணமான “கர்பலா நகரத்தின் படுகொலை” நடந்த ஆண்டு கி.பி. 680. இந்த அல்கிஸா நபிகளாரின் வாழ்வில் நடந்த சம்பவமாக இருப்பதால் – எப்படிப் பார்த்தாலும் கி.பி. 625-630க்கு இடைப்பட்ட ஆண்டில் நடந்திருக்கலாம். நபிகளாருக்குப் பிறகு அலி அவர்களின் தலைமையை அறபுகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால் இரத்தக் கறை படிந்த துர்நிகழ்வுகள் பலதும் வரலாற்றில் பதிவாகி இருக்காது. ஆனால் If & but என்பதாக இன்று யோசித்துப் பார்ப்பதில் எந்த பொருளுமில்லை.

அல்கிஸா நாவலின் பேசுபொருள் மூன்று தளங்களில் நிகழ்கிறது. நபிகள் நாயகத்தின் பேரர் இமாம் ஹுசைன் கொல்லப்பட்ட கர்பலா சோகக் கதையை ராஜஸ்தானிலுள்ள அஜ்மீரில் உஸ்தாத் படே குலாம் அலிகான் (1902 – 1968) பாடுகிறார். அங்கு கூடியிருக்கும் பக்தர்களில் ஹைதருக்கு 19 வயது, சுஹ்ராவுக்கு அதைவிட குறைவான (ஒருவேளை மைனராகவும்) வயதிருக்கலாம். ஹைதர் என்பது இமாம் அலியின் இன்னுமொரு பெயர், சுஹ்ரா என்பது அவருடைய மனைவியும் நபிகளாரின் மகளுமான ஃபாத்திமாவின் விளிப் பெயராகும். இந்த பெயர்களின் தேர்வுமேகூட அஜிதனுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இருக்கும் புலமைக்கு சான்றாக கொள்ளலாம் என்பேன்.

இவ்வளவுதானா என்றால் ஆம், ஆனால் இது ஒன்று பிறிதொன்றுடன் பின்னப்பட்டிருக்கும் விதம், அதன் கலவை, மொழி நெய்யப்பட்ட விதம், நிகழ்வுகளின் வரிசை – வெறும் அஜ்மீரிலோ, நாகூரிலோ டூரிஸ்ட்டாக ஒரு பயணம் போய் வந்து ரெடிமேடாக எழுதி விடக் கூடியதல்ல, இந்த தலைப்பும், அங்குள்ள விஷயங்களும் ஆசிரியரின் ஆன்மாவிலிருந்து எழுந்த ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

இஸ்லாமிகேட் கலைப் பிரதி ஒன்றை முஸ்லிமல்லாதவராலும் படைக்க இயலும் என்பதால் தமிழில் அவ்வகைப்பாட்டுக்குள் அஜிதனையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய வழக்கில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், இந்து – அவ்வாறு இல்லாதவர் என்கிற இருமையில் புறந்தள்ளும் (exclusive) போக்கை மறுத்து எல்லோரையும் உள்ளீர்க்கும் (inclusive) அம்சத்தில் – இந்த படைப்புக்கு முன்போ, பின்போ இதன் ஆசிரியரின் மதம், சமூக, சாதிய, வர்க்க, மொழி, நிலப் பின்னணி எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எழுதப்பட்ட கணத்தில் நாவலின் மையநீரோட்டத்துக்கும், கருப் பொருளுக்கும் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுக்காமல் இதன் கலையமைதி கைவரப் பெற்றிருக்காது.

ஆய்வு என்று சொல்ல முடியாது என்றாலும், என் சேமிப்பிலும் நண்பர்களின் நூலக அறையில் துழாவிய வரை யாரெல்லாம் இவ்வாறு இளம் வயதில் (நாவலை) எழுதினார்களென்று பார்த்தேன். 1993-யில் பிறந்த அஜிதன் தன் முப்பதாம் வயதிற்குள் இரண்டு நாவல்கள் எழுதியிருப்பது வியப்பைத் தந்தது. மைத்ரி, அல்கிஸா இரண்டுமே எழுத்தாளனின் பௌதீக நிலப்பரப்புக்கு வெளியிலுள்ள களம் என்கிற பொதுப்பண்பு என்பதை கணக்கிலெடுத்து பார்த்தால் அவருடைய முயற்சி எத்தனை பெரியது என்பேன்.

இதை ஜெ.விலிருந்தே தொடங்கலாம் என்றால், ஜெயமோகனின் முதல் நாவலான ரப்பர் 1990-களில் வெளியான போது அவருக்கு 28/29 வயதிருந்து இருக்கலாம். முதல் தலைமுறையைச் சேர்ந்த இராஜமைய்யர் (1872- 1898) –கமலாம்பாள் சரித்திரம் 1893-யில் எழுதிய போது அவருக்கு வயது 21. அ. மாதவைய்யா (1872 – 1925) – பத்மாவதி சரித்திரம் –  26-வது வயதில் எழுதினார். க.நா.சு. (1912 – 1988) சர்மாவின் உயிலை 30 வயதிலும்; சுந்தர ராமசாமி (1931 – 2005)  – புளிய மரத்தின் கதையை – 35 வயதிலும், அசோகமித்திரன் (1931 – 2017) கரைந்த நிழல்கள் – 39 வயதிலும்; ஜெயகாந்தன் (1934 – 2015)– 23 வயதிலும் தங்களின் முதல் நாவலை எழுதியுள்ளனர் என்று தரவுகள் காட்டுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் சமூக ஊடகம், இணைய பெருவெளியின் கவனச் சிதறல்களுக்கு முகம்கொடுக்கும் தலைமுறையைச் சார்ந்த ஒருவர் தன்னுடைய முப்பது வயதிற்குள் – அதுவும் தன்னோடு சமூக, சமய, மொழி ரீதியாக நேரடித் தொடர்பு இல்லாத ஒரு களத்தில் இவ்வளவு சிறப்பான, கலையமைதி கூடிய ஒரு படைப்பை அளிக்க முடிந்தது என்றால் அது சாதனை என்றே தைரியமாக சொல்லிக் கொள்வேன்.

எந்தவொரு நூலும் அதற்கேயுரிய காலம், வெளி, பண்பாட்டுப் பின்புலம், மொழியில்  வெளிப்படும். இந்த நாவலைப் போல தமிழில் ஏதும் வந்துள்ளதா, அல்லது இந்திய இலக்கியத்தில் என்னவாக பதிவாகியுள்ளது என சற்று மனதில் அசைப்போட்டுக் கொண்டேன்.

Qurratulain Hyder (1927 – 2007) எழுதிய அக்னிநதி தமிழில் வெளிவந்தே ஐம்பதாண்டுகளாகி இருக்கும். Ismat Chughtai (1915 – 1991) எழுதியவற்றில் ஏராளமான சிறுகதைகளும் தமிழில் கிடைக்கின்றன. Saadat Hasan Manto (1912 – 1955) சீனிவாச ராமாநுஜம் மொழிபெயர்ப்பில் முழு சிறுகதை தொகுப்பும் வந்துள்ளது. Rajinder Singh Bedi (1915 – 1984), முன்ஷி பிரேம்சந்த் (1880 – 1936) Intizar Hussain (1925 – 2016) என  உருது இலக்கியத்திலிருந்து தமிழில் வாசிக்க கிடைக்கின்ற எல்லோருமே ஏதேனுமொரு வகையில் முற்போக்கு எழுத்தாளர் முகாமுடன் தொடர்புள்ளவர்கள். ஆனால் அவ்வாறான பின்னணி இல்லாதவர்களால் பிறிதொரு மொழிக்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

இப்படியொரு நாவல் எழுதி முடித்த பிறகு அச்சாக்கத்துக்கு முன்பான (pre-production) உருவாக்க நிலையிலிருந்த போது “பாரிஜாத்”தைப் பற்றி அஜிதனிடம் கேட்டேன். நல்லவேளை அவர் அதை படித்திருக்கவில்லை. நாசிரா ஷர்மா என்கிற இந்தி எழுத்தாளர் 2011-யில் 900 பக்கங்களில் கர்பலாவை மையப்படுத்தி பிரமாதமான நாவலை எழுதியுள்ளார். இந்த நாசிரா ஷர்மா

Imam Khomeini (1900 – 1989) உலகெங்குமுள்ள ஷியாக்களின் மதகுரு ஆவார். நமது தமிழ் / இந்திய மரபில் ராஜகுரு என்போமே, மன்னராக இருந்தாலும்கூட அவருக்கு கீழாகவே இருப்பார் அல்லவா? அதைப் போல் ஈரானைப் பொறுத்தவரை பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு மேலேயுள்ள உச்சபட்ச பதவி அது. அந்த இமாம் கொமைனியை இந்த நாசிரா ஷர்மா – பெண்ணாக இருந்துகொண்டு நேர்காணல் செய்துள்ளார். அவர் எழுதிய பாரிஜாத் நாவலை தமிழில் சென்னை எத்திராஜ் கல்லூரியின் இந்தி மொழிப் பேராசிரியர் சாய் சுப்புலட்சுமி மொழிபெயர்த்திருந்தார். இதில் கையாளப்பட்ட அறபு, பார்சி, உருது மொழி பெயர்ச் சொற்களை, கலைச்சொற்களை ஓப்புநோக்கவும் திருத்தவும் உதவி கோரப்பட்ட போது கோவையிலுள்ள என் நண்பர் பைஸ் காதிரி இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  கொரானா பெருந்தொற்று இருந்ததால் சற்று தாமதமாகி 2021-யில் வெளியான இந்த நாவல் இதே தலைப்பை விரிவாக பேசக் கூடியது. (சாகித்ய அகாடமி வெளியீடு)

இதற்கு முன்பு இஸ்மத் சுக்தாய் (1915 – 1991) எழுதிய கடைசி நாவல் 1971-ல் Ek Qathra Khoon – பிற்பாடு ஆங்கிலத்தில் தாஹிரா நக்வியால் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் கழித்து  (2020-யில்) மொழிபெயர்க்கப்பட்டது. பாரிஜாத் படிக்க எடுத்தபோதுதான் one drop of blood -The Story of Karbala-வையும் அதன் உருது மூலநூலையும் ஒருசேர படித்தேன். உருது, அரபு மொழியில் கர்பலா குறித்து ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் இருப்பதை அறிய நேர்ந்தது.

அல் கிஸா – இஸ்லாம் விளக்கம் மேலேயுள்ள சுட்டியைப் பின் தொடர்ந்து சென்ற போது விளக்கத்துக்கான தேவை முதலில் ஏன் எழுந்தது என்று யோசிக்கிறேன். இதுபோன்ற சூழலை நேர்செய்யவே Islamicate Literature பிறக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Christendom என்று சொல்லாட்சி ஐரோப்பிய மேற்குக்கு வெளியிலுள்ள ஆப்ரிக்க கண்ட நாடுகள், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளையும் – கத்தோலிக்க பெரும்பான்மையின் அடிப்படையில் நிலவெல்லை கடந்த கிறிஸ்தவ உலகமாக சுட்டப்படுகிறதோ அவ்வாறே ( இந்த இஸ்லாமிகேட் என்பதும்) பயன்படுத்தப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தாங்கள் மட்டுமே செறிவாக வாழும் குடியிருப்புகளில், வீட்டிலும், பள்ளிவாசல்களிலும் முஸ்லிமாக வாழ்ந்துகொண்டு, பொதுவெளியில், கடைவீதியில், அலுவலகத்திலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் இருத்தலியலை இச்சொல்லாட்சி குறிக்கிறது.

Occidentalism vs orientalism என்பதை மேலைநாட்டு மரபு, கீழைநாட்டு மரபு என்பதாக மட்டுமல்லாமல் “நிலைகொண்ட / தேங்கிய” என்கிற எதிர்மறைப் பண்பிலேதான் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான orientalist அறிஞர்கள் கீழைநாட்டு மதங்களை தாழ்ந்த, சீரழிந்த, வளர்ச்சிப் போக்கை மறுக்கும் ஆற்றலாகவே பார்த்து வந்தனர்.  காலனிய மேலாதிக்கத்தை நியாயப்படுத்தவும், சுரண்டலை, கொள்ளையை முறைப்படுத்த இதுபோன்ற திரிபுகள் தேவைப்பட்டன.

இஸ்லாமியர்கள் என்பவர்கள் பணக்கார ஷேக்குகள் மட்டுமல்ல, உலகம் முழுவதும்  – கிட்டத்தட்ட எல்லா கண்டங்களிலும் வாழும் சாதாரண மனிதர்கள், அறமற்றவர்களாக, கோமாளிகளாக, காமுகர்களாக, தீவிரவாதிகளாக, முட்டாள்களாக, மதவாதிகளாக  இருப்பது பொய்யான புனைவுகள், அவர்கள் அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் அகதி, ஆப்ரிக்க கண்டத்தில், ஆசிய நிலப்பரப்பின் முழு பகுதியில், சூரியன் உதிக்கும் தூர கிழக்கு நாடுகள் வரை பரவி – அதன் உள்ளுர் மரபின் அறுபடாத நீட்சி என்று சொல்கிறது.

மூன்று பெருந்தொகுதிகளாக வெளியான  The Venture of Islam: Conscience and History in a World Civilization என்கிற நூல் பண்பாட்டு ரீதியாகவும், சமூகக் குழுவாகவும், வரலாற்று வளர்ச்சிப் போக்கின்படியும் எழுந்த மக்கள் திரளை குறிக்க Islamicate என்கிற சொல் வகைப்படுத்துகிறது. Marshall Hodgson (1922 – 1968) என்கிற அமெரிக்க பேராசிரியர் “The campaign seeks to change the stories about Muslims and fight hate with knowledge (in literature)” என்று முன்வைக்கிறார்.

இவை அவருடைய இறப்புக்கு பிறகே அனேகமாக 1974-ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் இந்த இஸ்லாமிகேட் என்கிற சொல் புழங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக லெப்னானிலும், எகிப்திலும் – இஸ்லாம் என்பதை மதமாக ஏற்காமல் அறபு மொழியியை தாய்மொழியாக கொண்டிருக்கும் இலட்சக் கணக்கானவர்களும் ஒரே மூலத்தை பங்கிட்டுக் கொள்கின்றனர் என்கிறார். அதே போல் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள இஸ்லாம் என்பது  பெருங்கதையாடலுடன் கொடுத்தும், பெற்றும் வளர்ந்த மதம் – குறிப்பாக சூஃபியிசம் அவ்வாறான உள்நாட்டு கிளை எனப்படுகிறது.

https://www.newyorker.com/books/page-turner/the-erasure-of-islam-from-the-poetry-of-rumi

உலகப் புகழ்ப்பெற்ற மௌலானா ரூமி (1207 – 1273) எழுதிய மஸ்னவி என்கிற செய்யுள் பார்சி மொழியின் பைபிள் எனப்படுகிறது. அவரையேகூட மேற்கத்திய நாடுகள் இஸ்லாமிய நீக்கம் செய்த பிறகே சுவீகரிக்கின்றன. இந்த அபாயத்துக்கு சற்றும் குறையாத வகையில் – முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் சூஃபியிஸத்தை கிரேக்க, இந்திய – குறிப்பாக அரபு நிலத்துக்கு வெளியில் தோன்றிய மெய்யியல் தரிசனங்களின் நீட்சியென்றும் ஒதுக்கி வைக்கின்றனர். இது இரண்டாவது கேடாகும்.

இந்தப் பின்னணியை ஒரு ஓரமாக வைத்துக் கொண்டு கர்பலா நிகழ்வில் நேரடியாக இந்தியர்களின் சிறு குழு இமாம் ஹுசைனுக்கு ஆதரவாக – களமாடியதாக தொன்மம், ஐதீகம்– ஒரு வகையில் இயேசு பிறந்த போது வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியதாகவும் அதைக் கண்டு, கிழக்கிலிருந்து பின்தொடர்ந்து சென்ற ஞானிகள் இந்தியர்களென்றும் சொல்லப்படுவதைப் போல அதைவிட தீர்க்கமாக ஒரு கதை இங்கு நிலவுகிறது.

ஹுசைனி பிராமணர்கள், மொஹ்யால் இந்துக்கள் என்றொரு பிரிவினர் வட இந்தியாவில் உள்ளனர். சுனில்தத், சஞ்சய் தத், காஷ்மீரிலால் ஜாகிர் போன்றவர்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஹஜ்ரத் ராஹெப் மீர் சித்தானி என்பவர் அரேபியாவில் துணி வியாபாரம் செய்த இந்து எனப்படுகிறது. கர்பலாவில் நபி குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் என்று கேள்விப்பட்டு அங்கு போர்க் களத்துக்கு சென்றதாகவும், தன்னுடைய ஏழு மகன்களை ஹுசைனுடைய தரப்பில் நின்று களமாடி பலியானார்கள் என்பதும் தொன்மம். இது வரலாறா, வெறும் கதையா என்பதல்ல முக்கியம், இந்த நம்பிக்கையின்படி இன்றளவிலும் இந்துவாகவும், முஸ்லிமாகவும் இருந்துகொண்டு முஹர்ரம் ஆஷுரா நாளில் சுயவதையும், துக்கமும் அனுசரித்து வருவது உண்மை, அதை இங்கு தற்காலிகமாக எழகூடிய நீர்க்குமிழி அரசியல் மாற்றி அமைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

The Divine Comedy காவியப் படைப்பிலும்கூட Dante Alighieri (1265 – 1321) போன்ற கவிஞர்களுமேகூட நபிகளை, இமாம் அலியை தவறாக சித்தரித்த நிலைமை இருந்தது. விடியல் பதிப்பகத்தில் தமிழிலும் இந்த நூல் கிடைக்கிறது. ஆனால் அஜிதன் சரியான தரவுகளுடன், உணர்ச்சிகரமான நிகழ்வுகளை குறைகாண முடியாதபடி எழுதியுள்ளார் என்பதை கண்டு, தோழமையுடன் அவருடன் கரங்கோர்க்கிறேன்.

சோஸ் குஹ்னி என்பது மர்ஸியா என்பது கர்பலா நினைவாக மட்டுமே பாடப்படும் சோகப் பாடல்களாகும். கடந்த (ஜுலை) மாதம் உஸ்தாத் அஸ்கரி நக்வி சென்னையில் ஒரு கச்சேரிக்கு வந்திருந்தார். அஜிதனிடம் உடனடியாக தெரிவித்திருந்தேன். ஆனால் ஏனோ அவரால் அங்கு வர இயலாமல் போனது. ஆனால் வைத்திருந்த இரண்டு நுழைவுச் சீட்டுகளை சென்னைப் புதுக்கல்லூரி பேராசிரியர் “கல்தச்சன்” முரளியுடனும்,  Fyodor Dostoevsky எழுதிய Notes from Underground நாவலை (மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள் – NCBH) மொழிபெயர்த்த நண்பருமான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கூத்தலிங்கத்துடன் போயிருந்தேன். உள்ளபடியே இசைக் கருவிகள் இல்லாமல் வெறும் வாய்ப்பாடல்களான மர்ஸியா கிளாசிக் அனுபவமாகும். இவ்வளவு உருக்கமாகவும், நெகிழ்வாகவும் பாடப்படுவதை கேட்கும் காதுகள் வரம் வாங்கி வந்தவை என்பேன்.

மீர் அனீஸ் (1800 – 1874) மர்ஸியா சோக பாடல்களை எழுதிய புகழ்ப்பெற்ற கவிஞராவார்.  மீரின் கவிதைகளை  கவிதைகளைப் பற்றி அஜிதன் தெரிந்து வைத்திருப்பதை இணைய வழி உரையாடலில் கேட்டபோது எத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்று தோன்றியது. அதற்கும் ஒரு நன்றி.

அஜ்மீர் நகர வாயில்களில் ஒன்று, உஸ்தாத் படே அலி கான், அஜ்மீர் தர்கா, போர்க்களத்தில் வாளுடன் வேகமாகப் போகும் இமாம் அலி, போர்வை நிகழ்வு, திருவிழா நெரிசல் என x-ray போன்ற ரிவெர்ஸ் கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட ஐந்து படங்களும் இந்த நூலிலுக்கு பொருத்தமான தேர்வு.

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரை‘சாதி ஓர் உரையாடல்’- அதியா வீரக்குமார்
அடுத்த கட்டுரைஜங்கம பண்டாரம்