அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி. (நாம், நமது உள்ளம்) தன்னை கடத்தல் ஆர்டர் செய்துள்ளேன். தற்போது மனம் அமைதி அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் எழுந்து நடமாடுவேன்.
என்னுடைய பிரச்சினை என்பது ஆன்மீக வறுமை என தோன்றுகிறது. மொத்த பிரபஞ்சத்தை மையமாக்கி பார்க்கும் பார்வை எனக்கு மரபிலிருந்து கிடைக்கவில்லை. பால்யத்தில் ஒரு மரபான தொடர் இருந்திருந்தால் இதுபோன்ற சிக்கல் எனக்கு வராதோ என நிறைய தடவை யோசிப்பேன். நான் சாமி கும்பிடுவதில்லை. முன்பு எதன் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் பல்வேறு அலைக்கழிப்புக்கு பின் நான் கண்டடைந்தது சில உள்ளன என தோன்றுகிறது.
இப்போது எல்லாவற்றையும் நம்ப முயல்கிறேன். ஆனால் 25 வருட பழக்கம் எளிதல் விடுபடாது என்றும் தோன்றுகிறது.
அப்பா திமுக. அம்மா கிராமத்தில் இருந்த தூரத்து உறவு. அம்மாவிடம் சாமி இருந்தது. மரபு இருந்தது. ஆனால் அது ஒருவகையான மூர்க்கமானது. அப்பாவுக்கு நிலையில்லாத வேலை. அதனால் தொடர்ந்து அப்பா அம்மாவுக்குள் சண்டை. கடைசி வரை அவர்களால் இணக்கமாக முடியவில்லை.
அம்மாவினால் எனக்கு கோவில்கள் பிடிக்கும். அது வளர்ந்து கோவில்கள் மீது பிரேமையே உருவானது. காலமழிந்து இருக்க ஒர் இடம். இருந்தும் முழுதாக செல்ல முடியாமல் இளமைக்கே உரிய அரசியல் சிந்தனைகளால் அலக்கழிக்கப்பட்டேன். மற்றொரு பக்கம் காடு. அரசியல் எல்லாவற்றையும் சந்தேகிக்க சொன்னது. எல்லாவற்றையும் எதிர்க்ககூடியதாக மாற்றியது. நெடுநாள் என்னால் எதையும் எதிர்த்துக்கொண்டே இருக்கமுடியாது என உணர்ந்தேன். காடு எல்லாவற்றையும் உள்ளே அனுமதித்தது. இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது, காட்டில் நான் அடைந்தது ஒருவகையான தெய்வீக நிலை. அதன் பெயரை அப்படி சொல்வதில் இருந்த தயக்கம், இயற்கை என்று சொல்லிக்கொண்டேன். எல்லாவற்றையும் உள்ளடக்கியதை தேடி காந்தியை வாசிக்கிறேன். நேர்நிலையான வாழ்க்கை்குள் அதற்குபின்னயே வருகிறேன்.
அப்போது நான் கண்டுகொண்டது எல்லாம் இங்கு சமன் செய்யப்படுகிறது. இந்த பிரபஞ்சம் பல்வேறு விதமாக விரிகிறது. ஆனால் அதை தொகுத்துக்கொள்ளவும் அதை சீரணிக்கவுமான சக்தியில்லாமல் திணறினேன். இப்போதும். எனக்கு கடவுள் வேண்டாம். இந்த பிரபச்த்தின் மையத்தை தொகுத்துக்கொள்ளகூடிய திராணி வேண்டும். இளமையில் ஒரு கட்டத்தில் முட்டாள்த்தனமாக காமத்தை ஒடுக்கினேன். ஆணவத்துடன் போராடினேன். போராட போராட அது வளர்ந்து பேருரு கண்டு அதன் முன் இரையாகி நின்றேன். இப்போது அதிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் வீணடித்த காலம் நிறைய. நான் என் ஆணவத்தை தொகுத்துகொள்ள வேண்டுமா, அல்லது கரைத்தழிக்க வேண்டுமா. பிரபஞ்சத்தின் மையத்தை என் மையத்தை தொகுக்க ஆணவம் வேண்டுமா வேண்டாமா. நான் என்னை கட்டுபடுத்தி கொள்ள வேண்டுமா. ஆன்மீகமாக என்னை மேம்படுத்த என்ன வழி. எனக்குள் பொங்கும் இருளையும் ஆபாசங்களையும் கடப்பதற்கு என்ன வழி. அன்புள்ள ஜெ. நான் முட்டாள்தனமாக இயற்றியதிலிருந்து வெளி வர வேண்டும்.
நன்றி
அன்புடன்
ஆ