பாவண்ணன் சந்திப்பு, பதிவுகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இன்றைய க.நா.சு உரையாடல் அரங்கில் நல்ல கூட்டம். கனடாவிலிருந்து உஷா மதிவாணன் மற்றும் வெங்கட் அவர்கள், எழுத்தாளர் எஸ்ஸார்சி , சிறப்பு விருந்தினர் பாவண்ணனே தனக்கு கதை எழுத வழிகாட்டியவர் என்று சொல்லும் அவரது ஊர்க்காரர் வளவதுரையன், வாசகனுபவக் கட்டுரைகள் எழுதும் எஸ். ஜெயஸ்ரீ, நீங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்தவர்கள், ஆளுமைகள் இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தோம். நீங்கள் உஷா அவர்களை பாட்டி கலை வந்துவிட்டது என்று கிண்டல் செய்ய, அவரும் பெருமையுடன் ஏற்றுக்கொண்டு சிரிக்க முதல்  நான்கு நிமிடம் கலகலப்பாக சென்றது. சிரித்துக்கொண்டே ஒருங்கமைக்கும் ஜாஜா வந்துதான் அட்டேன்ஷன் சொல்லி நிகழ்வுக்குள் நுழைத்துவிட்டார்.  கலகலப்பு அப்புறமும் பாவண்ணன், வாசகர்களுக்கு அளித்த பதில்களில் தொடர்ந்தது என்பது வேறு விஷயம்.

பாவண்ணனின் படைப்புகளை முன்வைத்து சிறப்புரையாற்றிய நண்பர்கள் பழனி ஜோதி, விசு இருவரும் பத்து நிமிடத்தில் சொல்வதை சரியாகச் சொல்லவேண்டும் என்று பலமுறை பயிற்சி செய்துவிட்டு வந்தவர்கள் போல பேசினார்கள். ‘பாய்மரக்கப்பல்’ நாவலை இதுவரை வாசித்திருக்காத வாசகர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும் , வரலாற்றையும், மாறி வரும் உலகின், வாழ்வின் பரிமாணங்களையும் பதிவு செய்த அந்த நாவலின் அழகியலை ஒரு விமர்சனப்பார்வையோடும் பழனி உரையை மிகக் கச்சிதமாக வடிவமைத்திருந்தார். விசு,  கன்னட மொழி கற்றுக்கொண்டதால், தனது முதல் வேலை ஸ்திரமானது என்பதில் ஆரம்பித்து, மொழியாக்கத்திற்கான பாவண்ணன் அவர்களின் உழைப்பை, இலட்சத்தில் ஒருவரென குறிப்பிட்டது, உரைக்கு நல்ல திறப்பாக இருந்தது.  நியோகம், கற்பு, தர்மம் பற்றி பருவம் நாவலின் (மகாபாரத) பாத்திரங்கள் வைக்கும் கேள்விகளை முன்வைத்து, இந்த நாவல் எப்படி மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மற்ற  நாவல்களிலிருந்து வேறுபடுகிறது என்று சுருக்கமாக உரையாற்றினார். மூல ஆசிரியரான எஸ்.எல். பைரப்பா அவர்களின்  மற்ற மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல்களில் அவர் காட்டும் பார்வையை சொன்னது,  இந்தச் சிறு உரையிலேயெ விசுவின் பரந்த வாசிப்பனுவத்தை காட்டியது.

பாவண்ணன், திண்ணை இதழில் , ரசனை சார்ந்து தமிழ்ச்சிறுகதைகள் பற்றி எழுதிய கட்டுரைகள் வாசகர்களுக்கு மிகப்பரிச்சியம். அவரது யதார்த்த அழகியல் புனைவுகளை வாசிக்கும் ஒரு கூட்டம் உண்டு. கன்னட படைப்புகளை தமிழுக்கு கொண்டுவந்த முக்கியமான மொழியாக்க வல்லுனர். பாரதிதாசனுக்கு அப்புறம் நான்தான் என்ற கனவுகளுடன் மரபுக்கவிதைகள் எழுதியவர். தனது தம்பி தங்கைகளுக்கு மூத்த சகோதரனாக கதைகள் , பாடல்கள் சொல்லி வழிகாட்டி நடத்தியவர். அவரிடம் இவை அனைத்தையும் சார்ந்து  நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள் கேள்விகள் கேட்டார்கள்.

பழனியின் பயணம் பற்றிய கேள்விக்கு , தான் பயணத்தில்தான் அனைத்தையும் யதேச்சையாக கண்டடைந்ததாகவும், பயணம் தனக்குப் பெட்ரோல் போட்டுக்கொள்வதைப்போல என்றார்.

சுசித்ரா எழுதி அனுப்பிய ஜாஜாவின் குரலில் வந்த மொழியாக்கம் சம்மந்தமான இரு முக்கியமான கேள்விகளுக்கு தனது அனுபவத்திலிருந்து பதில்கள் சொன்னார். மொழியாக்கத்திற்கு அவர் எப்படித் தயாராகிறார் என்ற கேள்விக்கு, எடுத்துக்கொண்ட படைப்பை மூன்று முறை வாசிப்பேன் என்றார். ஒரு பாத்திரத்தை அவனா/அவளா/ அவரா என்று முடிவெடுப்பதற்குக்கூட ஒரு  நாவலை முழக்கப் படித்த பிறகே கண்டுணரமுடியும் என்றார். Idioms and Phrases-ஐ மொழியாக்கத்தில் கொண்டுவருவதுதான் மிகப்பெரிய சவால் என்றார். கன்னடத்திலிருந்து தமிழுக்கு செய்வதிலும், தமிழிலிருந்து மற்ற மொழிக்கு செய்யவிருப்பதிலும் உள்ள சவால்களை அதற்கான உதாரணங்களுடன் விளக்கினார்.

தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது என்ற இரண்டாவது கேள்விக்கான பாவண்ணனின் பதில் வருத்தத்திற்கு உரிய, ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மையாக இருந்தது. தமிழைத் தாய்மொழியாக்க் கொண்ட, கன்னடத்தை கற்றுக்கொண்டவர்களே மொழியாக்கம் செய்கிறார்கள். நல்லதம்பி, மலர்விழி, தமிழ்ச்செல்வி போன்றவர்கள் நல்ல மொழியாக்க வல்லுனர்கள்தான், ஆனால், அவர்களுக்கு கன்னடம் தாய்மொழியல்ல.  தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்யவேண்டும் என்றார். அதற்கான தீர்வு அருகில் இருப்பதுபோல் தெரியவில்லை என்றார்.

மொழியாக்கத்தில் இருக்கும் அவருக்கு, சொந்த படைப்பை படைப்பதற்கு தடைகள் உண்டா என்ற எப்பொழுதும் கேட்கப்படும் கேள்விக்கு அவரது பதில் ஊக்கப்படுத்துவதாக இருந்தது. அது ஒரு நல்ல விஷயம் என்றார்.  ஒரு ஊடகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது, இன்னொரு ஊடகத்தில் ஈடுபடுத்திக்கொள்வது புதிய தளங்களை தருகிறது என்றார். மொழியாக்கத்தின்போது புதிய சொல்கூட்டத்திற்குள் நுழைவதால், கூடுதலான ஊக்கம் கிடைக்கிறது என்பது அவரது பதிலாக இருந்தது.

தமிழ் இலக்கியத் தோட்டம் விருது வாங்க கனடா, பாவண்ணன் வந்திருந்தபொழுது, அவர் காந்திபோல் இருப்பதாக சில நண்பர்கள் சொன்னது நினைவு இருக்கிறது. ஜாஜா-வும் அதையே புன்னகையுடன் குறிப்பிட்டு, காந்தி பற்றிய அவரது கட்டுரைகளின் பின்னனியை கேட்டார். அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும்பொழுது அவருக்குள் காந்தி ஏற்படுத்திய தாக்கத்தை உணர்வுப்பூர்வமாக பார்க்கமுடிந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்ற காந்தி கண்ட கனவை , நல்லிணக்க ஆளுமைகள் உருவாகவேண்டிய கனவை எடுத்துச் சொன்னார்

பாவண்ணன் அவர்களுடன் அடுத்து உரையாடல் நடத்துகிறோம் என்று அறிந்தபின்னர் அவரது கட்டுரைகள், கதைகள், நாவல்கள் வாசிக்கப்படு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டன. ‘கோழி குரங்கை விழுங்கியதே’ என்ற, கட்டுரையில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் ஷரீஃப் அவர்களின் பாடல்கள்  நண்பர்களை மிகவும் கவர்ந்தன. வெங்கட் அவர்களின் கேள்விக்கான பதிலில் இன்று மேலும் பல நண்பர்களுக்கு, பாவண்ணனுக்கு கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் மேல் உள்ள ஆர்வமும், அவர் செய்த மொழியாக்கங்களும் தெரிய வந்திருக்கும்.

பாவண்ணன் நிகழ்வு முடிந்த ஓரிரு நிமிடங்களுக்குள் என்னை அழைத்து, நிகழ்வு தனது மனதுக்கு நிறைவாக இருந்தது என்றார்.  நாமும் அதைத்தானே சொல்கிறோம்.

நீங்களும் இன்று வந்திருந்து கேள்வி கேட்டு, Chat window-ல் கமெண்ட்ஸ் போட்டு முழுப்பங்களிப்பாராக இருந்ததை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பாவண்ணன் அவர்களுக்கும், ஆக்கப்பூர்வமான இலக்கிய உரைகயாடல்களுக்கு மூலகாரணமாக இருக்கும் உங்களுக்கும்  நண்பர்களின் சார்பாக மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்,

சௌந்தர்.

முந்தைய கட்டுரைஅகவிழைவை தொடர்தல் தேவையா?
அடுத்த கட்டுரை‘சாதி ஓர் உரையாடல்’- அதியா வீரக்குமார்