திருமங்கை ஆழ்வார் அறிவுத்திருடரா?

அன்பிற்கினிய ஜெ,

பெருமாமலரின் மகரந்த துளிகளாய் ஆழ்வார்களின் பாடல்கள் என் சிந்தையில் சிதறி ஒளிர்கின்றன.

வழக்கம்போல யூடியூப் வழியாக செவியிலும், கணிப்பொறியின் மற்றொரு பக்கத்தில் வரிவடிவாகவும் ஆழ்வார் பாடல்களை அனுபவித்து கொண்டிருந்தேன். இன்று திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகம். திருக்குறுந்தாண்டகத்தின் பதின்மூன்றாம் பாடலில் நிறுத்தினேன். காரணம் அப்பாடலின் இரண்டு மற்றும் மூன்றாம் அடிகளை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலையில் முன்பே படித்திருக்கிறேன்.

ஒரே தாளில் இரு பாடல்களையும் கையால் எழுதிப்பார்த்தேன். ஒரு அட்சரம் கூட பிசகவில்லை.

இரும்பனன் றுண்டு நீரும் போதரும் கொள்க என்தன்

அரும்பிணி பாவமெல்லாம் அகன்றன என்னைவிட்டு

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட

கரும்பினைக் கண்டுகொண்டென் கண்ணிணை களிக்குமாறே.

திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகத்தின் பதின்மூன்றாம் பாடல் இது.

விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம்

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட

கரும்பினைக் கண்டுகொண்டென் கண்ணிணை களிக்குமாறே. 

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலையில் பதினேழாம் பாடல் இது.

இவ்விரு பாடல்களின் பின்னிரு அடிகள் அட்சரம் மாறாமல் இருவேறு ஆழ்வார்கள் பாடியதாக கிடைக்கிறது.

தந்தை என்பதால் ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வாரை பாடுகிறாள். மதுரகவி ஆழ்வார் தன் அன்னையாய் அத்தனாய் நம்மாழ்வாரையே பாடுகிறார். குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் தொண்டரடிப்பொடி என்ற சொல் வருகிறது. ஆனால் அச்சொல் தொண்டரடிப்பொடி ஆழ்வார் என வழங்கப்பெறும் விப்ர நாராயணரல்லர்.

முதலாழ்வார்கள் மூவரும் தென்பெண்ணை ஆற்றின் கரையிலிருக்கும் திருக்கோவிலூரில் சந்தித்து கொண்டார்கள் என்பது சிந்தைக்கினிய புனைவு என்றுதான் தோன்றுகிறது. அவர்களின் பாடல்களில் அவ்வாழ்வார்கள் பற்றியோ, அவர்களின் சந்திப்பு, உரையாடல் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.

திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் சீடராக அறியப்படுகிறார். திருமழிசை ஆழ்வார் தன் குருவைப் பற்றி எதுவும் பாடியிருக்கிறாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் கனிகண்ணன் என்ற தன் சீடனைப்பற்றி பாடியிருக்கிறார்.

வையம் தகளி வார்கடலே நெய் வெய்ய கதிரோன் விளக்கு என பொய்கையாழ்வார் பாடியதை ஸ்தூலமாக கொண்டால், அன்பே தகளி ஆர்வமே நெய் இன்புருகு சிந்தை இடுதிரி என பாடி சூக்குமத்தை உணர்த்துகிறார் பூதத்தாழ்வார். அதாவது பொய்கை பாடிய திருவந்தாதியை பூதமும், பூதம் பாடிய திருவந்தாதியை பொய்கையும் அறிந்திருக்க வாய்ப்புண்டு என்பதற்கு அவர்களின் பாடல்களே சான்றாகிறது. மற்றபடி எந்த ஆழ்வாரும் மற்ற ஆழ்வாருடன் உரையாடியது பற்றிய குறிப்புகள் எதுவும் அவர்களின் பாடல்களில் எனக்கு தெரிய இல்லை. (நானொன்றும் பெரிய அப்பா டக்கர் இல்லை என்பதை நினைவிற் கொள்க).

இப்படி இருக்க தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடல் வரிகளை அட்சரம் பிசகாமல் எப்படி திருமங்கையாழ்வார் எடுத்துக் கொண்டார்? காலத்தால் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார்தான்.

சென்ற ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை வாசித்திருந்தேன். நாகப்பட்டினத்தில் இருந்த பெளத்த கோயிலில் இருந்த புத்தரின் அழகிய பொற்சிற்பத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருள் கொண்டு, திருமங்கையாழ்வார் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பினார் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் அந்நூலில் குறிப்பிடுகிறார்.

சென்ற ஆண்டு கோவை விஷ்ணுபுரம் விருது விழாவில் ஆசான் நாஞ்சில் நாடன் அவர்களிடம் இதுபற்றி கேட்டேன். தொ பரமசிவன் சொல்வது போல முழு அழகியல் சமயமான வைணவத்தில், ஒரு வைணவ ஆச்சார்யர் அழகுணர்ச்சியை புறந்தள்ளி ஒரு பொற்சிலையை உருக்கி பணமாக்க மனந்துணிந்திருக்கிறாரென்றால், வைணவத்தில் திருமங்கையாழ்வார் தேடியதுதான் என்ன என்று ஆசான் நாஞ்சில் நாடனிடம் கேட்டிருந்தேன். அவர் வெடித்து சிரிக்கும்படியான பதிலைச் சொன்னார்.

‘விடுங்க. அவன் அந்த சிலையை உருக்கி, கோயில்தானே கட்டினான். இன்றைய ராசா எவங்கிட்டயாவது கிடைச்சிருந்தா அவனுக்கு வீடு வாசல் கட்டுறதுமில்லாம ஏழெட்டு பொண்டாட்டியும் கட்டியிருப்பான்’ என்றார். இன்றைய யதார்த்தம் ஒரு பழைய தவறின் எடையை இழக்க செய்து விட்டது.

திருமங்கையாழ்வார் சோழ மன்னன் என்பதால் போர்கள் செய்திருக்க கூடும். ஆநிரை கவர்வது போல பிறர் பொருள் கவர்ந்திருக்க கூடும். ஆகவே புத்தர் சிலையை கைப்பற்றியது, உருக்கியதெல்லாம் காலவகையினான் வழுவலதான்.

திருமால் கோயில்கள் பெரும்பாலானவற்றை திவ்ய தேசங்களாக்கியவர் திருமங்கை ஆழ்வார்தான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரும்பங்கு அவருடையதுதான்.

திருமங்கையாழ்வாரை அறிவு கள்ளனாக என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் ஆழ்வார்கள் யாரையும் அறிவகந்தை கொண்டவர்களாகவும் கருத முடியவில்லை.

நாலாயிர திவ்ய பிரபந்தம் நாத முனிகளால் தொகுக்கப்பட்ட போது ஏதேனும் பிசகு நேர்ந்திருக்குமா? (இது பிசகுதானா என்பதும் கேள்விதான்)

வாளாலறுத்து சுடினும் திருமங்கையாழ்வார் பாடல்களை கற்பதை தொடர்வேன்தான். ஆயினும் மேற்குறிப்பிட்ட ஈரடிகள், இரு ஆழ்வார்களின் பெயரில் எப்படி வந்தது என்பதை அறிய விழைகிறேன்.

அன்பன்

அ மலைச்சாமி 

*

அன்புள்ள மலைச்சாமி,

உங்கள் குழப்பம் புரிகிறது. ஆனால் இலக்கியக்கொள்கைகள் நம்பிக்கைகள் ஆகியவை வரலாறு முழுக்க ஒன்றாக இருந்ததில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இலக்கியக் கொள்கைகள் உலகமெங்கும் ஒன்றாக இருக்கவும் இயலாது. நாம் அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு ஒரு பொதுத்தன்மை உருவானதே பதினேழாம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் வழியாக உலகம் முழுக்க ஐரோப்பியப் பண்பாடு சென்று சேர்ந்து, ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தி, எல்லா பண்பாடுகளையும் மாற்றியமைத்த பிற்பாடுதான்.

ஐரோப்பியக் காலனியாதிக்கத்திற்கு பல தனித்தன்மைகள் உண்டு. அதற்கு முன்னரும் நாடுபிடிக்கும் படையெடுப்புகள் நடைபெற்று உலகம் ஊடுருவப்பட்டதுண்டு. அவற்றில் அலக்ஸாண்டரின் படையெடுப்பு என்பது ஒரு மாபெரும் பண்பாட்டு உரையாடல். செங்கிஸ்கான், தைமூர் ஆகியோரின் படையெடுப்புகள் அழிவுத்தன்மையும் ஆதிக்கமும் கொண்டவை. ஆனால் குப்தர்களின் தென்கிழக்குப் பரவல் வெறும் கலாச்சார ஆதிக்கம் மட்டுமே. பாரசீக, ஆப்கானிய படையெடுப்புகள் வழியாக இஸ்லாம் இந்தியாவில் நிலைகொண்டது. அது மதப்படையெடுப்பு. ஆனால் ஐரோப்பியர்களுடையது அரசு, வணிகம், மதம், தத்துவம் ,கலாச்சாரம், ஆகியவற்றில் நிகழ்ந்த ஒரு முழுமுற்றன ஆதிக்கம். ஐரோப்பா அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் நிலவியலையே மாற்றியமைத்தனர். சிந்தனையையே கட்டமைத்தனர். அவ்வாறுதான் அவர்களின் இலக்கிய – தத்துவ நோக்கும் நமக்கு வந்தது. அது என்றும் இங்கே இருந்த ஒன்று என எண்ணிக்கொள்ளக்கூடாது.

உதாரணமாக, மொழியாக்கம் என்பதே நம்மைப்போன்ற கீழைக்கலாச்சாரங்களில் மிக அரிது என நமக்கு இன்னமும் தெரியாது. இந்து மத மூலநூல்கள் எவையுமே இந்தியாவின் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்திய இலக்கியங்கள் ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்தான். நம்மிடமிருந்தது தழுவல்தான். அதை வழிநூல் என நாம் சொன்னோம். அவ்வாறு இந்திய மொழிகளிலெல்லாம் ராமாயணமும் மகாபாரதமும் பலநூறு வழிநூல்களை அடைந்தன. காளிதாசனுக்குக்கூட அவ்வாறு வழிநூல்கள் அமைந்தன. பலசமயம் மூலநூல்களை வழிநூல்களில் குறிப்பிட்டுச் சொல்வது இல்லை. ஏனென்றால் இவை மூலநூல்களின் இயல்பான வளர்ச்சிகள் என்றே கருதப்பட்டன.

இன்னொன்றுமுண்டு, நம் மரபில் ஓர் இலக்கியப்படைப்பு அந்த ஆசிரியனுக்கு ‘உரியது’ என கருதப்பட்டதில்லை. ஆசிரியர்கள் பற்றிய செய்திகளே பெரும்பாலும் இல்லை.அவர்கள்மேல் இருந்த மதிப்பால் உருவான தொன்மங்களே உள்ளன. கபிலர் , ஔவையார், நம்மாழ்வார், வள்ளுவர், கம்பன் எவர் பற்றியும் நம்மிடம் வரலாறில்லை. பலசமயம் வெறும் அடையாளப்பெயரே உள்ளது. கபிலர், வள்ளுவர், கம்பர், ஔவையார் எல்லாம் குலப்பெயர்கள் அல்லது குடிப்பெயர்கள்தான்.  மாபெரும் சிற்ப அற்புதங்களைச் செதுக்கிய சிற்பி பெயரே இல்லை. படைப்பாளியின் வெளிப்பாடே படைப்பு என்னும் எண்ணங்கள் ஐரோப்பாவில் இருந்து நமக்கு வந்தவை. ஐரோப்பாவிலேயே கலையை கலைஞனின் வாழ்க்கையுடனும் அவனுடைய பார்வையுடனும் இணைத்து, அவனுடைய அகவெளிப்பாடாக மட்டுமே அணுகும் போக்கு என்பது ஜான் ரஸ்கின் எழுதிய நவீன ஓவியர்கள் (Modern Painters 1843) என்னும் நூல் வழியாக உருவான பார்வை எனப்படுவதுண்டு.

ஆகவே நம் கவிமரபில் ஒரு வழக்கம் உள்ளது. முந்தையோரின் வரிகளை அப்படியே எடுத்தாள்வது. அது இயல்பான தொடர்ச்சியாகவும், கலையழகாகவும் கருதப்பட்டது. கம்பனில் வள்ளுவர், நம்மாழ்வார் வரிகள் அப்படி ஏராளமாக எடுத்தாளப்பட்டுள்ளன. காளிதாசன் அப்படி மிக விரிவாக எடுத்தாளப்பட்ட கவிஞன். அது ஒரு காவிய இலக்கணமாகவே கருதப்பட்டது. இலக்கியம் ஒருவரின் அறிவுச்சொத்து ஆக கருதப்படவில்லை. ஆகவே அதை எடுத்தாள்வது அறிவுத்திருட்டாகவும் கருதப்படவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.அர்ஷியா
அடுத்த கட்டுரைசொல்முகம் வாசகர் குழுமம், கோவை: 50வது கூடுகை