இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள்
மீள்தல், அமிழ்தல்
அன்புள்ள ஜெ
நம்பிக்கையும் நம்பிக்கை இழப்பும் தெரியும் இரண்டு கட்டுரைகள். ஒருவர் நம்பிக்கை வழியாக தன்னை மீட்டுக்கொண்டார். பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். பயனுள்ள வாழ்க்கை என்றால் தனக்கும் பிறருக்கும் பயனுள்ள வாழ்க்கை. யசோக் அவர்களின் மீட்சியும் வாழ்க்கையும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
அவருடைய பழைய வாழ்க்கையில் அவர் எதில் சிக்கியிருந்தார் என்று தெரிகிறது. அவர் சிக்கியிருந்தது இங்கே சர்வசாதாரணமாகக் கிடைக்கும் தெருமுனை அரசியல் வெறுப்பு கசப்பு சந்தேகம் ஆகியவைதான் அதன் அடிப்படை. காழ்ப்புதான் மொழி. ஆனால் அவ்வளவு தீவிரமாகப் பேசுவார்கள். அதில் விழாமல் இளமையிலே எவரும் கடந்துவர முடியாது.
நான் உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் உச்சகட்ட கசப்புடன் வாதிட வருபவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு நீங்கள் எழுதுவது சிந்திப்பது என்ன என்றே தெரியாது. மண்டைக்குள் ஓர் அரசியல் பேய் போல பிடித்திருக்கும். ஒரு மனநோய்தான் அது. வேறேதும் தெரியாது. அவர்களின் எஜமானர்கள் அந்த மனநோயை உற்பத்திசெய்து பரப்புவார்கள். நீங்கள் தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்று சொன்னால்கூட ‘தோழர் நுட்பமாக வன்மத்தைப் பரப்புறான் பாத்தீங்களா?’ என்று அதை கட்டுடைப்பார்கள். அவர்களுக்கு இதில் நல்ல பயிற்சி உண்டு. எல்லாம் பெரிய மேதாவிகள். அதற்கான லாபமும் உண்டு. பின்னால்செல்லும் கும்பல்தான் வெறும் கூட்டம்.
அவர்களிடமிருந்து சிலர்தான் தப்பமுடியும். தப்பியவர்கள் நம்பிக்கையும் தீவிரமும் கொண்ட வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும். மற்றவர்கள் அதிலேயே கிடப்பார்கள். கொஞ்சநாளிலே ஒருபக்கம் யதார்த்தவாதிகளாக ஆகிவிடுவார்கள். மறுபக்கம் ஃபேஸ்புக்கிலே சத்தம்போட்டுக்கொண்டும் இருப்பார்கள். தங்களைத்தாங்களே பில்டப் செய்துகொள்ளும் சத்தம் அதெல்லாம்.
அமர் தப்பமுடியவில்லை. அதற்கு இன்னொரு பிடி காரணம். அவருடைய ஈகோ. அவருடைய ஊழ் என்று சொல்கிறீர்கள். நான் யசோக் போல தப்பிவிட்டவன். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
எஸ்.செல்வராஜ்