இந்தியப் பொருளாதாரத்தில் பெண்கள்

அன்புள்ள ஜெ,

அண்மையில் அரவிந்தன் கண்ணையன் இந்தக் குறிப்பை எழுதியிருந்தார்.

இந்தியப் பொருளாதாரத்தில் பெண்கள்

இன்றைய Wall Street Journal-இல் ஒரு கட்டுரை “What’s Holding Back India’s Economic Ambitions? Just 24% of women in India are working or looking for work” என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு விகிதம், உலக வங்கியின் கணக்குப் படி, இந்தியாவில் 2000-2010 வரை 30%, பிறகு சரிகிறது. 2015-18 மேலும் சரிந்து 20% வரை வந்தது. அதன் பின் சிறிது முன்னேறினாலும் இன்றும் 25%-க்கு கீழ் தான். உலக அளவில் 45-50% வரை பெண்கள் பங்கேற்கிறார்கள். கட்டுரை வெளியிடுவது அமெரிக்க பத்திரிக்கை என்பதால் அமெரிக்கா ஒப்பீடுக்காக கொடுக்கப்பட்டது, அமெரிக்காவில் 55-60% வரை பெண்கள் பொருளாதாரத்தில் பங்கெடுக்கிறார்கள். இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் பெண்கள் பங்கெடுப்பு அதிகம்.

நான் வளர்ந்த 80-90ச் தமிழகத்தை ஒப்பிட்டால் இன்றைய தமிழகத்தில் பெண்களை அதிகமாகவே வேலையிடங்களில் பார்க்க முடிகிறது. இந்திய அரசு இம்மாதிரி புள்ளி விபரங்கள் இந்தியாவில் பெண்கள் செய்யும் பல வேலைகள் கணக்கில் வருவதில்லை என்று ஆட்சேபம் தெரிவிக்கிறதென கட்டுரை சொல்கிறது. ஆயினும் இந்தியாவில் பெண்கள் பொருளாதாரத்தில் பங்கெடுப்பது செல்ல வேண்டிய தூரம் அதிகம். கலாசாரமும் பெண்கள் வேலைக்கு செல்ல உதவும் சூழல் இல்லாமையும் காரணங்கள். பிந்தையதற்கு உதாரணம் போதிய நல்ல குழந்தை காப்பகங்கள் இல்லாமை என்பேன்.

இந்திய கலாசாரம் பொதுவாக சுட்டப்பட்டாலும் 2015-இல் இருந்து, இந்துத்துவ ஆட்சிக்குப் பின், பெண்கள் பங்களிப்பு அடைந்த சரிவு தொடர்புடையதா என்று விவாதிக்கலாம். இஸ்ரோவில் பெண்கள் பங்களிப்பு பற்றி வரும் பெருமித புகைப்படங்களும் நினைவுக்கு வருகிறது.

சவுதி அரேபியாவில் இந்தியாவை விட பெண்கள் பொருளாதாரத்தில் பங்கெடுக்க முன் வருவதாக கட்டுரை சொல்கிறது. இந்தியாவின் நிலை ஆப்கானிஸ்தான் மாதிரியாம்.

கட்டுரையின் மிக முக்கியமான ஆச்சர்யமான வரி “உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும் கடந்த 10 வருடத்தில் நிகர புது வேலை வாய்ப்புகள் பூஜ்யம்”. “Despite being the world’s fastest growing major economy in recent years, India added zero net new jobs over the past decade”.

*

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் பேசுவதற்கு முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதையே நான் என் தொழில் சார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இந்தியா மெய்யாகவே இந்த விஷயத்தில் செல்லவேண்டிய தொலைவு அதிகம்

இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வது குறைய இந்துத்துவ அரசியல்கட்சி ஆட்சியிலிருப்பது காரணம் என்பது அரவிந்தன் கண்ணையனின் புனைவு. இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். உட்பட்டவை பெண்களை நேரடியாக அரசியலில் ஈடுபடவும், வேலைக்குச் செல்லவுமே தூண்டுகின்றன. பெண்கள் வீட்டிலிருக்கவேண்டும் என்பது பழமைவாதிகளின் தரப்பு. இந்துத்துவா போன்ற ராடிக்கல் அமைப்புகள் அந்தப் பழமைவாதத்தை ஏற்பவை அல்ல. அதனாலேயே பழமைவாதிகள் இந்துத்துவர்களை வசைபாடுவதை இணையத்திலேயே நிறையப் பார்க்கலாம்.

நாஜிகள் உட்பட ராடிக்கல்கள் எப்போதுமே பெண்களை அரசியல்படுத்த முயல்பவர்கள்தான். இஸ்லாமிய ராடிக்கல்கள்கூட இந்தியாவில் அதைச் செய்கிறார்கள்..  பழமைவாதத்திலுள்ள பல விஷயங்களை ராடிக்கல்கள் ஏற்பதில்லை. அதை நீங்களே பலமுறை எழுதியிருக்கிறீர்கள்.

இங்குள்ள முற்போக்கினர் இந்துத்துவா, இந்து பழமைவாதம், இந்து மதநம்பிக்கை மூன்றுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். அல்லது தெரிந்தும் அதை மழுப்ப முனைபவர்கள். அப்படி மழுப்பினால்தான் இந்து அல்லாத மதவெறியர்கள் முற்போக்கு போர்வையில் அவர்களுடன் சேர்ந்துகொள்ளமுடியும் என அவர்களுக்குத் தெரியும். அது அரசியல்.

எல்லாவற்றிலும் ஒரே அரசியல் பார்வையை கொண்டுவந்து எல்லா பிரச்சினைகளையும் ஒரே பிரச்ச்னையாக மாற்றுவது இன்றைக்குள்ள முக்கியமான குழப்பம். எதைப்பற்றியும் பேசமுடியாத நிலை இங்கே உள்ளது. ஒரு அரசியல் மாற்றம் வந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது இன்றைய ஹை வோல்டேஜ் சமூகவலைத்தளங்கள் உருவாக்கும் குறுகிய மனநிலை.

அதை மீறி பேசவேண்டிய விஷயம் இது என நினைக்கிறேன்.

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்

நான் சிங்கப்பூரில் இருந்த அனுபவங்களை எழுதும்போதும், பின்னரும் இதைப்பற்றி எழுதியுள்ளேன். என் பார்வையும் உங்கள் பார்வையுடன் இணைவதுதான்.

இந்தியாவின் யதார்த்தத்தை மேலைநாட்டு சர்வேக்கள் வழியாக அறியமுடியாது. அந்த சர்வேக்கள் நம்மூர் ராஜன் குறை மாதிரியானவர்களைக் கொண்டு எடுக்கப்படுவன. அவர்கள் கேட்பதை எழுதித்தருபவர்கள் இவர்கள். அரசு அறிக்கைகளும் அதே ரகம். அவை எப்படி தயாராகுமென நான் அறிவேன். நான் அதையெல்லாம் செய்துகொண்டிருந்தவன்.

இந்த அடிமட்ட அறிக்கைகளை நம்புவதனால்தான் ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பெண்கள் வேலைக்குப்போவது குறைவு, லிபியாவை விட வாழ்க்கையின் பாதுகாப்பு இந்தியாவில் குறைவு என்பதுபோன்ற ஆய்வுமுடிவுகளை நாம் அன்றாடம் அடையப்பெறுகிறோம்.

(இந்தியாவின் கணக்காயர் அறிக்கைகளையும் ஆய்வறிக்கைகளையும் வெள்ளைக்காரன் ஆத்மார்த்தமாக நம்புவதனால்தான் நம்மூர் என்.ஜி.ஓ வண்டி ஓடுகிறது.)

நாமே நம்மைச் சுற்றி சாதாரணமாகப் பார்க்கும் யதார்த்தம் ஒன்றுண்டு. அதைக்கொண்டே நாம் நிறையப் புரிதல்களை அடையமுடியும். பல விஷயங்கள் கண்கூடானவை. ஆனால் ஆங்கிலப் புள்ளிவிபரங்கள்தான் தேவை என நம்மூர் உயர்மட்ட அறிவாளிகள் அடம்பிடிப்பார்கள். வெள்ளைக்கார அறிக்கை என்றால் மேலும் பரவசம்.

அவர்களுக்கு தங்கள் கால்கீழ் உண்மையைக்கூட பார்க்குமளவுக்கு சமகால வாழ்க்கையுடன் தொடர்பு இருப்பதில்லை. அது இந்தியாவிலுள்ள இன்றைய வர்க்க் அடுக்குமுறையின் பிரச்சினை. ஓருவர் எந்த தளத்தினாலும் உயர்நிலைக்குச் சென்றுவிட்டால் உயர்குடி வாழ்க்கை அமைகிறது. இந்திய உயர்குடியினருக்கு நடுத்தர மக்களின் வாழ்க்கை தெரியாது. ஒருமுறைகூட அவர்கள் தெருவிலிறங்கி நடப்பதில்லை. பேருந்தில் ஏறுவதில்லை. தனியாகப் பயணம் செய்வதில்லை. ஒரு கிராமவாசியுடன் இணையாகப் பழகுவதுமில்லை. அவர்கள் சொர்க்கவாசிகளான தேவர்களைப் போல.

அப்படி முற்றான அயல் வட்டத்தில், இந்திய யதார்த்தமே தெரியாமல் வாழும் அறிவுஜீவிகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். இலக்கிய விழாக்களில் சந்திக்கும்போது இந்த ஆங்கிலமெழுதும் அறிஞர்கள் எப்பேற்பட்ட உயர்குடிப்பேதைகள் என்னும் பெருந்திகைப்பையே அடைகிறேன்

அவர்கள் உலகமெங்கும் சென்று சமூகப் -பொருளியல்- அரசியல் கட்டுரைகள் வாசிப்பவர்கள். ஆங்கில ஊடகங்களில் எழுதுபவர்கள். அவர்களுக்குக் கள ஆய்வில் நம்பிக்கையே இல்லை. அவர்களிடமிருப்பதெல்லாம் அவர்கள் அரசு நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து திரட்டும் தரவுகள் மட்டுமே

அவர்களின் தன்னம்பிக்கையை எதுவும் உடைக்க முடியாது. இந்தியாவின் மையப்பிரச்சினையே ஓர் அடித்தளச் சிக்கலை இவர்கள் வரை கொண்டுசெல்ல ஊடகமே இல்லை என்பதுதான். இவர்களில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், திட்டவல்லுநர்கள், இதழாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பலதுறை நிபுணர்கள், உயர்நிர்வாகிகள் என அனைவருமே அடங்குவர். இந்தியாவின் பெருஞ்சிக்கலே இவர்களுக்கு இந்தியா தெரியாது என்பதும், அதேசமயம் இவர்கள்தான் இந்தியாவை தீர்மானிக்கிறார்கள் என்பதும்தான்.

*

இந்திய யதார்த்தம் என்ன? இந்தியாவில் அடித்தள மக்களில் பெண்கள் வேலை செய்யாமல் எந்தக் குடும்பமும் வாழமுடியாது என்பதுதான் நம் சூழல். இதை ஏதாவது ஒரு கிராமத்தில் ஒருநாள் வாழ்ந்தாலே காணமுடியும்.  இந்தியாவின் மக்களில் பெரும்பான்மையினர் அடித்தள மக்களே.

பெண்கள் செய்யும் குடும்பவேலைகள் பற்றி நான் பேசவில்லை. அடித்தளப் பெண்களில் சமையல், வீடுபேணுதல் போன்ற குடும்பவேலைகள் ஒரு சிறுபகுதியே. பெரும்பகுதி உழைப்பு வேளாண்மை, பீடிசுற்றுதல் போன்ற கைத்தொழில்கள், நெசவு, கட்டுமானப்பணி, சிறுவணிகம், பலவகை சிறுதொழில்கள் ஆகியவற்றில்தான் உள்ளது. அவை பொருளியலில் பெரும்பங்கு கொண்டவை.

இப்பெண்களின் உழைப்பு இன்னமும் முறைப்படுத்தப்படவில்லை. இன்னமும் ஆவணப்படுத்தப்படவுமில்லை. பெரும்பாலான அடித்தளக் குடும்பங்களில் பெண்களை house wife என்றுதான் பதிவுசெய்திருப்பார்கள். காரணம், அப்படி குறிப்பிடுவது கௌரவம் என்பது ஒன்று. பலவகை நிதியுதவிகளுக்கு அதுவே சாதகமானது என்பது இன்னொன்று. அடித்தளப் பெண்களில் தொழில் கூலிவேலை என பதிவுசெய்துள்ள எந்த ஆவணத்தையாவது பார்த்துள்ளீர்களா? நான் பலநூறு ஆவணங்களை அரசு கணக்கீடுகளுக்காகப் பார்த்தவன். சாதாரணமாக, அவ்வாறு வழக்கமே இல்லை.

அடித்தளப் பெண்களின் உழைப்பு முறைப்படி பதிவுசெய்யப்பட வேண்டும். அவர்களின் கூலி முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான சங்க அமைப்புகள் வேண்டும். அவர்களின் பணிச்சூழலைக் கண்காணிப்பதற்கான அமைப்புகள் வேண்டும். அவை இப்போதுதான் பெயரளவுக்காவது தொடங்கியுள்ளன.

ஆனால் நடுத்தர, உயர்நடுத்தர, உயர் வட்டங்களில் பெண்கள் ’சும்மா இருப்பது’ மிக அதிகம். அதுவே கௌரவம் என்னும் நம்பிக்கை இந்தியச் சூழலில் உள்ளது. பழங்காலத்தில் தொழில் என்னும் கட்டத்தில் ‘சுகஜீவனம்’ என்று போட்டுக்கொள்வது மோஸ்தராக இருந்தது. இந்தியப் பெண்களுக்கு அந்த மனநிலை நீடிக்கிறது.

அண்மைக்காலத்தில் இந்தியாவில் உயர்நடுத்தரக் குடும்பங்களில் பெண்களுக்கு தொழில், வணிகம் ஆகியவற்றில் ஈடுபாடு உருவாகத் தொடங்கியுள்ளது. நடுத்தர, கீழ்நடுத்தரக் குடும்பங்களில் வேலைக்குச் செல்லவேண்டியது கட்டாயமும் ஆகியுள்ளது. ஆனால் இன்னமும்கூட இந்த வர்க்கங்களில் வேலைசெய்யாத பெண்களே மிகுதி. இந்த மனநிலையும், இந்த வாழ்நிலையும் உலகில் பல நாடுகளில் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் குடும்ப வேலையை பொருளியல் உற்பத்தி சார்ந்தது என நினைக்கவில்லை. ஆகவே பெரும் உழைப்புசக்தி வீணாக இங்கே இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அவ்வகையில் மேலே குறிப்பிட்ட அறிக்கை முக்கியமானது, கவனத்துக்குரியது என நினைக்கிறேன்.

ஆனால் அதற்கு இந்தியாவிலுள்ள தடைகள், சிக்கல்கள் என்ன? இந்துமதப் பழமைவாதம் ஒரு தடையா? அல்ல, அரை சதவீதம்பேர் கூட அதற்கெல்லாம் செவிகொடுப்பவர்களல்ல. (ஆனால் மெய்யாகவே தடையாக உள்ள இஸ்லாமியப் பழமைவாதம் பற்றி இங்கே எந்த முற்போக்கினரும் பேசமாட்டார்கள்) காஞ்சி சங்கராச்சாரியாரின் பரம பக்தர்கள்கூட அவர் சொல்லிக்கொண்டே இருந்தபோதிலும் பெண்களை வேலைக்கு அனுப்பாமல் இருக்கவில்லை. வட இந்தியாவிலும் அதேதான் நிலைமை.

முதன்மையான பிரச்சினை, அரசுத்துறை மற்றும் உயர்நிலைத் தனியார்த்துறை தவிர எங்குமே பெண்களுக்குரிய வேலைச்சூழல் இல்லை என்பதுதான். பல சிறு தனியார்த் துறைகளில் ஊழியர்கள் அடிமைகள்போல நடத்தப்படுகிறார்கள். அவமதிப்புகள் மிகுதி. இரவுபகலாகப் பணியாற்றவேண்டும். அது பெண்களுக்கு மிகக்கடினமானது. ஊதியமும் மிகக்குறைவு.

ஆகவேதான் பெரும்பாலான நடுத்தரவர்க்கப் பெண்கள் வேலைக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள்கூட நின்றுவிடுகிறார்கள்.கடும் குடும்ப வறுமையே நடுத்தர வர்க்கப் பெண்களை சிறு தனியார்த் துறை வேலைகளுக்குச் செல்லவைக்கிறது. திருமணமானதும் வேலையை விட்டுவிடவேண்டும் என்னும் கனவுள்ள பெண்களையே நிறையக் கண்டுவருகிறேன்.

உதாரணமாக, நம்மூரில் படித்த பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பளிப்பவை பள்ளிகள். அங்கே மாதம் எட்டாயிரம் ரூபாய் ஊதியத்துக்கு காலை எட்டுமணி முதல் மாலை ஆறுமணி வரை வேலைசெய்யவேண்டும். இது நாம் அடிக்கடிப் பார்த்துவரும் சூழல். இதுதான் பெண்கள் வேலையைத் தவிர்ப்பதற்கான முதன்மைக் காரணம்.

இந்த நிலை மாற இங்கே வரவேண்டியது ஒரு வேலைக்கலாச்சாரம். வேலையிடங்களிலுள்ள சுரண்டல், அவமதிப்புகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்றால் வலுவான சங்க அமைப்பு, சட்டப்பாதுகாப்பு தேவை. அது உருவாக வேண்டும். அதற்கு என்ன செய்வதென்றே யோசிக்கவேண்டும்.

அடுத்தபடியாகவே பிற இரு சிக்கல்கள். ஒன்று, நம் சமையல் முறை. உலகிலேயே சிக்கலான சமையல்முறை தென்னிந்திய உணவுக்குத்தான் என நினைக்கிறேன். வறுத்தல் பொடித்தல் என ஏகப்பட்ட செய்முறைகள். அத்துடன் மூன்றுவேளையும் சமைக்கும் பழக்கம். வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகைச் சமையல் தேவை என்பது. நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் உழைப்பில் பெரும்பகுதி சமையலிலேயே வீணாகிறது.

உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியாது. நம் சமையல்முறையை மாற்றிக்கொள்ளலாம். சிங்கப்பூரில் அரசு மானியம்பெறும் உணவகங்களில் சாப்பிடுவது சமையல் செய்வதைவிட மலிவானது. லீ குவான் யூ பெண்களை வேலைக்கு கொண்டுவர கண்டடைந்த வழி அது. அத்தகைய சமையலறைகள் உருவாகுமென்றால் மட்டுமே நம் சமையலடிமைமுறை ஒழியும்.

அதற்கு இங்குள்ள உணவகங்கள் மேல் மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. இந்தியாவில் எவரும் தினமும் உணவகங்களில் சாப்பிடமுடியாது. உடல் அழிந்துவிடும். கலப்படம், சுகாதாரமின்மை, கவனக்குறைவு ஆகியவற்றுடன் சமைத்து உண்பதை விட ஐந்து மடங்கு செலவும் ஆகும். நான் சாப்பிட்டவரை இந்திய உணவகங்கள் போல சுகாதாரக்கேடான, அபாயகரமான உணவகங்கள் உலகிலேயே இல்லை. ஆப்ரிக்காவில்கூட.

நான் நட்சத்திர விடுதிகளில் தங்குபவன். அங்கேயே தொடர்ச்சியாக ஐந்துநாட்கள் சாப்பிட்ட்டால் உடல்நலக்குறைவு உருவாகும். வண்ணங்கள், ரசாயனங்கள், சுவையூட்டிகள் என அவை நஞ்சுகலந்த உணவுகள். மிக எச்சரிக்கையாக ரொட்டி, தேன், பழச்சாறு மட்டுமே அருந்தி வாழ்வேன். அல்லது எவராவது வீட்டிலிருந்து கொண்டுவந்து தரச்சொல்வேன். இந்தியாவில் பயணங்களில் மிகப்பெரிய சிக்கலே சாப்பாடுதான்.

நான் சிங்கப்பூரில் இருந்த நாள் முழுக்க ஓட்டல் உணவுதான். என் நண்பர் கணேஷ் அவருடைய விடுதியுணவை கொண்டுவந்து தருவார். அங்கே மூன்றுவேளையும் ஆண்டு முழுக்க உணவகங்களில் உண்பது சாதாரணம். ஏனென்றால் சிங்கப்பூரில் உணவுக்கலப்படம் செய்வது என்பது உணவகத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதுபோல. அகப்பட்டால் கதை முடிந்தது.

இந்தியாவில் கெட்டுப்போன உணவு, அழுகிய மாமிசம் முதல் நாய் இறைச்சிவரை  பிடிபடும் செய்திகள் அவ்வப்போது வெளிவரும். பிடிபட்ட நிறுவனம் அதிகம்போனால் அவர்களின் ஒருமணிநேர லாபத்தின் காசை அபராதமாகக் கட்டி அடுத்தநாளே கடை திறந்து விடுவார்கள். அகப்பட்டு செய்தி வெளிவந்த நிறுவனங்களின் கதையை மட்டும் கொஞ்சம் பின்தொடர்ந்து பாருங்கள். இந்தியாவின் உணவகக் கண்காணிப்பு என்பது எவ்வளவு அபத்தம் என தெரியும்.

அடுத்தபடியாகவே அங்கன்வாடிச் சேவைகளைச் சொல்ல முடியும். உண்மையில் இன்று அவை பெரிய சிக்கல்கள் அல்ல. கிராமப்புற அங்கன்வாடிகள் அரசு சார்பில் நன்றாகவே உள்ளன. நகர்ப்புறங்களிலும் தனியார் அங்கன்வாடிகள் உள்ளன. அவை ஓர் ஐரோப்பியத் தரத்தை அடைய முடியாதென்பது நம் நடைமுறைச்சூழல்.

பொருளியலுக்குப் பெண்களின் உழைப்பு இன்றியமையாதது என்பது உலகளாவச் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது இயல்பாக நிகழ்ந்துகொண்டுமுள்ளது. அதை பிரச்சாரம் செய்யவேண்டியதில்லை. அதற்கு வெளிப்படையான மதத்தடைகள் இருக்கும் சூழலில் மட்டும் ஒரு பிரச்சாரம் தேவைப்படலாம். இந்தியாவில் அதற்கான நடைமுறை சார்ந்த சிக்கல்களை நீக்குவதே இன்றியமையாதது

ஜெ

முந்தைய கட்டுரைநா.காமராசன்
அடுத்த கட்டுரைரோம், கடிதம்