சோர்வும் மீள்வும், கடிதம்

மீள்தல், அமிழ்தல்

தொடங்காமையில் இருத்தல்

நாம், நமது உள்ளம்

ஆசிரியருக்கு வணக்கம்,

நலம் தானே உங்கள் தளத்தில் மூன்று நாட்களாக வந்து கொண்டிருக்கும் கடிதங்களும் உங்கள் பதிலையும் படித்தபிn பத்து நாட்களுக்கு முன் வறீதையா கான்ஸ்தந்தின் அவருக்கு எழுதிய கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது.

ஷாகுல் ஹமீது.

கையறுநதி ஆசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களுக்கு வணக்கம்,

வாசிப்பு அனுபவம் குறித்து அடுத்த கடிதத்தில் எழுகிறேன்.இப்போது என் கதையை கொஞ்சம் கேட்டு விடுங்கள்.

பனைமர சாலை ஆசிரியர் இறை போதகர் காட்சன் சாமுவேல் அவரது நூலை உங்களிடம் சேர்க்க சொன்னார். நான் பார்சலில் உங்களுக்கு அனுப்பினேன். பெற்றுகொண்டதும் என்னை போனில் அழைத்தீர்கள். காட்சன் “ஷாகுல் நீங்க நேரில் சந்திக்க வேண்டியவர்”போகாமல் விட்டு விட்டீர்களே”  என கேட்டார்.

அப்போது சந்தித்திருந்தால் அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக முடிந்திருக்கும்.கடந்த மார்ச் மாதம் மூத்தவரும்,என் ஆசிரியருமான எழுத்தாளர் மீரான் மைதீனின் திருவாழி வெளியீட்டு விழாவில் நீங்கள் மேடையில் பேசும்போது உங்களை அடையாளம் கண்டு கொண்டு நான் தான் ஷாகுல் என அறிமுகம் செய்தேன்.

இம்முறை நான் கப்பலுக்கு கொண்டு புத்தகங்களில் உங்கள் நூல் இருந்தது.எப்படி என் கைக்கு கிடைத்தது என தெரியவில்லை.

கடந்த மாதம் மீரானின் திருவாழி வாசித்த பின் அவர் கேட்டார்.அடுத்து என்ன வாசிக்க போறீங்க என. கையறுநதி என்றேன். ஆனால் எழுத்தாளர் இமையத்தின் செல்லாத பணம் வாசித்தேன்.

கடந்த திங்கள்கிழமை மீண்டும் உங்கள் நூல் கைக்கு வந்தது.கப்பலின் கடிகாரம் பின்னோக்கி செல்ல தொடங்கியதால் புதன் அதிகாலை நான்கு மணிக்கு முன்னே விழித்ததால் உங்கள் நூலை அதிகாலை அமர்ந்து வாசித்தேன். இருதினங்களும் அழுது தீர்த்தேன்.

இனி என் கதையை சொல்கிறேன்.

2012  ஆம் ஆண்டு கசல் எனும் கப்பலில் அமெரிக்காவின் ஹூஸ்டன் துறைமுகப்பில் பணியில் இணைந்தேன்.ஒரு வாரத்துக்குப்பின் பனமாவின் மன்சிலினோ துறைமுகப்பில் கப்பல் நின்றபோது வீட்டிற்கு அழைத்து பேசினேன்.அதே துறைமுகப்பிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன் ஊருக்கு செல்ல இறங்கினேன்.

மலேசியாவில் வாழும் ஹமீமா மைனியிடம் பேசும்போது “என்னவோ தெரியல மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு,எனக்கு எப்பவுமே ஹோம் சிக் கிடையாது கப்பலுக்கு வந்ததும் உடேன செட்டில் ஆயிருவேன் இப்போ என்னவோ தெரியல” என்றேன்.

“ஊர்ல  இருந்து வந்தது இல்லா,செரியாயிரும் ஒண்ணும் கவலை படாம தொழுது துவா கேளுங்கோ”என எனக்கு ஆறுதல் சொன்னார்.நான் கொஞ்சம்,கொஞ்சமாக  மாறிகொண்டிருந்தேன்.வேலையில் நாட்டம் இல்லை. காலையில் இந்த நாள் ஏன் விடிந்தது என்றிருக்கும். காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வினாடியும் கடத்துவது மிக,மிக கடினமாயிற்று.

சுனிதாவிடம் மெதுவாக சொன்னேன்.எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் நானாகவே இல்லை” என்றபோது அவளது கேள்வி “இந்த வாத்தியாருக்கு என்ன ஆச்சு” என. தொடர்ச்சியான எதிர்மறை எண்ணங்கள் எதிலும் உற்சாகம் இல்லை. நாட்களை கடத்துவது கடினமாக இருந்தது.ஏழு மாத பணி ஒப்பந்தம் ஒரு மாதம் கூட முடியவில்லை. என்ன செய்வது எனத்தெரியாமல்  …

சுனிதாவின் கேள்வி சரி. நான் யோகா ஆசிரியர். ஆழ்நிலை தியானம் செய்பவன்,முறையாக ஐவேளை தொழுகை கடைபிடிப்பவன் பலருக்கும் கவுன்சிலிங்,மோட்டிவேசன்,ஸ்ட்ரெஸ் மானேஜ்மெண்ட்,தூக்கமில்லையா எப்படி தூங்குவது எனச்சொல்லி கொடுப்பவன். நான் ஹீலிங் கொடுத்த சிலருக்கு  மனபிரச்சனை,உடல் பிரச்னைகளிலிருந்து விடுதலை  கிடைத்துள்ளது.

நான் நாளுக்கு நாள் கீழே போய்கொண்டே இருந்தேன். பேச்சு குறைந்தது.பணிநேரத்தில் கழிப்பறையை தாளிட்டுக்கொண்டு அழுகை,தொடர் எதிர் மறை எண்ணங்கள். அது நானல்ல.நான் பயின்ற தியானம்,யோகா பயிற்சிகள்,வாசித்த நூல்கள் எதுவும் எனக்கு உதவவில்லை. எனக்கு தெளிவாக தெரிந்தது நான் இருவராக இருக்கிறேன் என. நானாக இருக்கும் நேரத்தில் ஒன்றும் பிரச்சினை இல்லை. உடலில் வலுவே இருக்காது மனதிலும்,தனிமையில் தொடர்ந்த அழுகை,கப்பலிலிருந்து குதித்து விடலாம்,வீட்டுக்கு போய்விட வேண்டும்,என்னை சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள் ஒரு தர்காவில் நான் பைத்தியமாகி விட்டேன் சுனிதா என்னை பார்க்க வந்தபோது எனக்கு ஒன்றும் இல்லை என அழுகிறேன்  இப்படியான  எண்ணங்கள் தொடரும்போது அது நானில்லை எனவும் எனக்கு தெரிந்தது.

இரவு வந்ததும் சீக்கிரம் தூங்கிவிடுவேன். எட்டு மணிக்குள் தூங்கி காலை ஆறு அல்லது அதற்கு பின்பு தான் விழிப்பேன். தூக்கத்தில் கனவோ,எண்ணமோ ஏனோ இல்லை.காலை விடிந்தால் முன்னால் இருக்கும் ஒரு பகல் பொழுதின் ஒவ்வொரு வினாடியும் நகராது நின்றுகொண்டே இருக்கும்.

நான் மோசமாகி கொண்டே வந்தபோது எனது அண்ணனுக்கு எழுதினேன்.என் உடல் மட்டும் இங்கே இருக்கிறது.மனம் இங்கில்லை.என்னால் பணி செய்யவே இயலவில்லை நான் காப்டனிடம் சொல்ல போகிறேன். என்னை வீட்டுக்கு அனுப்ப சொல்லி என.

அண்ணன் உடனே பதில் எழுதினார்.சொல்லிவிடாதே காப்டனிடம் உன் மனப்பிரச்சனையை சொல்லி விட்டால் நீ மீண்டும் கப்பலுக்கு போகவே முடியாது.உளவியல் ரீதியாக பாதிக்கபட்டவன் என முத்திரை குத்தி வீட்டில் இருப்பாய் என. ஒரு சிறு மாத்திரை சரி செய்து விடலாம்.அடுத்த பணியாளர் மாற்றம் எப்போது என சொல் மருந்து அனுப்புகிறேன் என்றார். காப்டனை சந்திக்கும் சற்று முன் அந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது.

என் பாதிப்பு அதிகரித்து கொண்டே போனது அதன் உச்சம் எலக்ட்ரிகல் அதிகாரி தந்த பணி உயரமான இடத்தில் வெல்டிங் அடிக்க. அதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து விட்டு ஒற்றை கையால் மேலே இருந்த குழாயில் பிடித்துகொண்டு கீழே பார்த்தேன் பத்தடிக்கும் அதிகமான உயரம் கீழே ஒரு ஹீட்டர் எனப்படும் ஒரு இயந்திரம் இருந்தது.கையை விட்டு விட்டால் அதன் மீது விழுவேன் முதுகெலும்பு உடையும் வீட்டுக்கு அனுப்புவார்கள் அல்லது நான் சாவேன்.

அந்த எண்ணம் வந்து கையை குழாயிலிருந்து எடுக்கும்முன் அவர் என்னை அழைத்தார். “வெயிட் சேப்ட்டி பெல்ட் போட்டுக்கோ,கீழ இறங்கு நான் எடுத்துட்டு வாறன்” என.

அப்போது தான் விபரீதம் புரிந்தது என்ன செய்து விட பார்த்தேன்.அந்த ஒரு நொடி கையை விட்டிருந்தால் கப்பல் நடுக்கடலில் போய்கொண்டிருந்தது.சுதாரித்து கொண்டேன். பாதுகாப்பு பட்டையை அணிந்து பணியை செய்து முடித்தேன்.

உம்மாவிற்கு போனில் அழைத்து அழுதேன் “என்னை காப்பற்று” என எதிர்முனையில் உம்மாவும் அழுதாள். சுனிதாவின் மூத்த சகோதரியை அழைத்தேன் என் பிரச்சனைகளை சொன்னேன். சுனிதாவிடம் சிலமுறை “ஷாகுல் எப்படி இருக்கறார்” என கேட்டதற்கு நல்லா இருக்கிறார் என சொல்லியிருக்கிறாள். என்னைபற்றி சில கெட்ட கனவுகளும் எண்ணங்களும் வந்ததால் தங்கையிடம் என்னைபற்றி கேட்டதாக சொன்னார்.புருஷன் மனநிலை பாதிக்கப்பட்ட கவலையில் இருந்த அவள் யாருடனும் எதையும் சொல்ல விரும்பவில்லை.

உம்மா லாயம் தோப்பு பள்ளி இமாமை கண்டு விசயத்தை சொன்னபோது “அவர் கண்மூடி தியானித்த பின் கண்ட காட்சிகளை வைத்து”. இருக்கும் வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் எனச்சொல்லியிருக்கிறார்.

நான் கப்பல் செல்வதற்கு ஒரு வாரம் முன்பு தான் அந்த வீட்டில் சுனிதாவையும்,பிள்ளைகளையும் குடி வைத்துவிட்டு சென்றேன்.பின்னர் சுனிதா அந்த வீட்டிற்கு போகவேயில்லை.  லாயம் தோப்பில் உள்ள தர்காவில் ஒரு வாரம் தொடர்ந்து குர்ஆன் ஓதி முழுமை செய்து ஏழாவது நான் அங்கேயே சமைத்து ஏழைகளுக்கு உணவு  வழங்க வேண்டுமென்ற பரிகாரத்தையும் சொல்லியிருக்கிறார்.

எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலை.உம்மா,மாமி,குட்டிம்மா என ஆறுபேர் தினமும் குர்ஆன் ஓதி ஐந்து கிலோ அரிசியில் தர்காவில் சோறு சமைத்து ஏழைகளுக்கு வழங்கினாள். பின்னர் நான் மெதுவாக நான் தேறினேன் எனக்கு வித்தியாசம் நன்றாக தெரிந்தது.வேறு வீடு பார்த்து பின்னர் மாறிகொண்டாள்.

எனது யோகா குரு நாகர்கோவில் ராதாகிருஷ்ணன் அவர்களை அழைத்து அனைத்தயும் சொன்னேன். கடும் தவம் ஏதும் இப்போது செய்ய வேண்டாம். சிறிது நேரம் தவம் பின்னர் எனக்கும் குடும்பத்திற்கும் என்னிடமே அருட்காப்பு  கொடுக்க சொன்னார்.

எனக்கு தெரியும் அது மூளையில் சுரக்கும் அந்த சுரப்பியின் விளையாட்டு என. ஆனால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.எனக்கு மனப்பிறழ்வு  அல்லது depression ஆகிறது என எனக்கு உடனே தெரிந்தது. அதனால் தான் மீண்டு வந்தேன்.

எனது மருத்துவ தோழியிடம் இதுபற்றி விரிவாக விவாதித்தேன்.ஏன் இப்படி ஆகிறது எனக்கேட்டேன்.காரணம் தெரியாது என்றார். தோழி ஒருவர் அமெரிக்கவில் நரம்பியல் ஆராய்ச்சி செய்பவர்.ஒரு நாள் காலை நடையில் பேசினோம். சகோதரி ஒருவர் இருபது வருடங்களாக இந்த பாதிப்பில் இருக்கிறார் தொடர் மருத்துவமும். என்ன செய்வது என கேட்டேன். “அவங்கள நல்லா பாத்துகோங்க” கவனம் என்றார்.

ஷாகுல் ஹமீது,

முந்தைய கட்டுரைதொன்மங்கள், மரபு, இலக்கியம்- கடிதம்
அடுத்த கட்டுரைசிறுமியின் தஞ்சை, பாவண்ணன்