காமம் ,வன்முறை, ஐரோப்பிய நவீனக்கலை.

Max Beckmann- The Night

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,

வேலையை விட்டுவிட்டு இரண்டு மாதங்கள் ஐரோப்பா பயணம் செய்து திரும்பிய பின் இப்போது ஐரோப்பிய சினிமாக்களை தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். Summer 1993, Alcarras என்கிற இரு படங்களைப் பார்த்தேன்.

ஸ்பானிய நாட்டுப் படங்கள். பார்க்கும் போதே தோன்றியது உண்மையில் இது தான் நான் பார்த்த ஸ்பெயின். பயணத்தில் சிலரைப் பார்க்கும் போது நான் யோசிப்பது இவர்களின் அன்றாடம் எப்படி இருக்கும் என்பது. அப்படி  கிராமப்புற தோட்டங்கள் நடுவே சில தனித்த வீடுகளைப் பார்த்ததும் தோன்றியது. இந்தப் படங்களின் கதையும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் அன்றாடத்தின் பின்னணியில் சொல்லப்படுகிறது. பெண்ணியச் சிந்தனை, காதலின் பரிதவிப்பு இவை எதுவும் இல்லாமல் ஒரு பெண் இயக்குனரால் எடுக்கப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. தனது சொந்த வாழ்க்கையை தழுவி இப்படத்தை எடுத்திருக்கிறார். அதனாலேயே இது ஆதென்டிக்காக உள்ளது.

இது வரை நமக்கு அறிமுகமான தற்போதைய ஸ்பானிய படங்கள் எல்லாம் Pedro Almodover மற்றும் அவர் பாணி படங்களே. அவற்றின் பேசுபொருள்  நேரடியாகவோ மறைமுகமாகவோ காமமே. இது போன்ற படங்களின் உபயத்தால் எனக்கு அந்த சமூகம் மீது ஒரு விதமான எதிர்மறையான எண்ணமே பயணத்திற்கு முன்பு இருந்தது. ஒரு விதமான உறவுச் சிக்கல் உள்ள சமூகம் என்ற எண்ணம். ஆனால் பயணத்தில் அது மாறி இருந்தது. அவர்கள் சிக்கலான மனிதர்களாக தெரியவில்லை.அவர்களது குடும்ப அமைப்பும் வலுவானதாகவே உள்ளது போலத்தான் தெரிகிறது.

இதை முன்வைத்து ஒரு கேள்வி. வெகு நாட்களாக கவனித்துவருவது மேற்கத்திய கலைப்படங்களில் அன்றும் இன்றும் செக்ஸ்தான் பெரும்பாலும் பேசுபொருளாக உள்ளது. அதையே சுற்றிச் சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது எல்லாவற்றையும் அதனோடு சேர்த்து முடிச்சிட்டுக் கொள்கிறார்கள். மகிழ்ச்சி, துக்கம், விடுதலை, விரக்தி, இழப்பு, துரோகம், குற்றவுணர்ச்சி,தனிமை என்று எல்லாவற்றையும்  செக்ஸ் என்பதோடு சேர்த்து குழப்பிக்கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. மொத்த மேற்கத்திய சமூகமே, எல்லா பிரச்சனைக்கும் அடிப்படைக் காரணம் செக்ஸ் தான் என்றும் அதற்கான தீர்வும் செக்ஸில் தான் இருக்கிறது என்றும் நம்புகிறதா என்ன? அல்லது சினிமாக்காரர்கள் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? இல்லை முன்பு நீங்கள் காதல் பற்றி கூறியது போல செக்ஸையும் சினிமாவில் குறியீடு என்று எடுத்துக் கொள்ளவேண்டுமா?

இன்னொரு விஷயம் இந்த ஜெயமோகன் மாடல் விவாதத்தை ஒட்டி.நான் இந்த ஐரோப்பிய பயணத்தில் கவனித்தது. மேற்கத்திய நாடுகளை பொறுத்த வரை இன்று பயணம், சாகசப் யணம் மேற்கொள்வதில் பெரும்பான்மை அங்குள்ள பெண்கள்தான். ஹொஸ்டெல்கள் எல்லாம் பெண்கள் கூட்டம் தான். அத்தனை பேர் பேக்பேக்கிலும் யோகா மேட், கையில் புத்தகங்கள் போன்றவற்றைப் பார்க்கலாம். அவர்கள்தான் உருப்படியாக ஏதோ செய்வது போல் தோன்றுகிறது. ஆண்கள்  சலிப்பேற்ப்படுத்துகிறார்கள். சொல்ல உருப்படியாக எதுவும் இல்லை எனினும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனியாக பயணம் செய்யும் ஆண்களும் அருகிவிட்டார்கள். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா வருகிறார்கள். இரவெல்லாம் குடிக்கிறார்கள். பகலெல்லாம் தூங்குகிறார்கள்.

கண்முன்னே ஏதோ மாற்றம்  நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. ஒரு வேளை மேற்கத்திய ஆண்களுக்கும் ஜெயமோகன் மாடல் தேவைப்படும் போல.

ஞானசேகர்

அன்புள்ள ஞானசேகர்,

எனக்கு அண்மைக்கால ஐரோப்பியக்  ‘கலைப்படங்கள்’ ‘தீவிர இலக்கியங்கள்’ பற்றி ஆழமான அவநம்பிக்கை உருவாகி நீண்டநாளாகிறது. அவை நேர்மையானவை அல்ல. அவையும்  ஒருவகையில் பெருவணிகப்படங்களைப் போல சந்தைத்தேவைக்காக தயாரிக்கப்படுவனதான். காமம் மிகப்பெரிய விற்பனைப்பொருள். இந்த கலைப்படங்களால் மிக அகன்ற காட்சிகளை, செலவேறிய படமாக்கலை அளிக்க முடியாது. ஆகவே காமம், உச்சகட்ட வன்முறை ஆகியவற்றை நோக்கிச் செல்கிறார்கள். அவற்றை கொண்டு ரசிகர்களைத் தேடுகிறார்கள்.

உலகப்படவிழாக்களுக்கு வரும் பெரும்பாலான படங்கள் உள்ளீடற்ற சமையல்கள். ஆனால் உலகமெங்கும் விருதுகள் பெற்றவை. கிம் கி டுக் போன்ற சாமர்த்தியசாலிகள் அத்தகைய போலிப்படைப்புகளை கீழைநாட்டிலிருந்தும் உற்பத்திசெய்து விற்பனை செய்தார்கள். இவற்றை போலி என்று சொல்ல ஒரு நுண்ணுணர்வும், தன் மீதான நம்பிக்கையும், ஒரு விவாதத்தில் விளக்கும் வாசிப்பும் தேவை. அது இங்கே இல்லை. இங்குள்ள சினிமா ஆர்வலர்கள் சினிமா மட்டுமே பார்ப்பவர்கள். கலைக்கொள்கைகளை அறியாதவர்கள். விமர்சனங்கள் வழியாக சினிமாவைக் கற்றுக்கொள்பவர்கள்.

இங்கே இன்று இரண்டுவகையான சினிமாக்களும், எழுத்துக்களுமே பரவலாக உள்ளன. ஒன்று, வழக்கமான பேசுபொருட்களில் அரசியல் பேசும் படங்கள். பெண்ணியம், அகதிகளின் வாழ்க்கை, மூன்றாமுலகத்துக் கிளர்ச்சிகள், இன்னபிற. இவற்றை எப்படிப் பேசவேண்டும், என்ன நிலைபாடு எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு  ‘டெம்ப்ளேட்’ உண்டு. அதாவது அவற்றைப் பார்க்கும் வெள்ளையின கலையிலக்கிய ரசிகர் தன்னை ஒரு பரந்த உள்ளம் கொண்ட, முற்போக்கான மனிதர் என நம்ப இடமளிக்கவேண்டும். அவர் நின்றிருக்கும் மேற்குலகின் சுரண்டலை அவர் அறிவார். அதைக் கடக்க அவருக்கு அக்கலைப்படைப்பு உதவவேண்டும். இரண்டாவது வகைமை, ஒரே சொல்லில் perversion என வகைப்படுத்தத் தக்கது. 99 சத கலைப்படங்களும் நாவல்களும் இவ்விரு வரையறைகளுக்குள் நிற்பவை.

இந்தப்படங்களுக்கும் கதைகளுக்கும் அப்பால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள வாழ்க்கை இயல்பாகவே எல்லா மானுடமேன்மைகளுடனும், எல்லா மானுடச்சிக்கல்களுடனும், நம்மைப்போன்றே உள்ளது. அமெரிக்க அம்மாக்கள் நம் அம்மாக்களேதான். ஐரோப்பிய அப்பாக்கள் நம் அப்பாக்களேதான். சின்னச்சின்ன கலாச்சார வேறுபாடுகள் உண்டே ஒழிய அங்கெல்லாம் இந்த கலையிலக்கியங்கள் காட்டும் மீறல்களும் கொந்தளிப்புகளும் பிறழ்வுகளும் மட்டும் கொண்ட அன்றாடமெல்லாம் இல்லை. அவர்களுக்கும் இந்த கலையிலக்கியங்களுக்கும் சம்பந்தமும் இல்லை.

*

மேலைநாட்டு சினிமா மற்றும் இலக்கியத்தில் பாலியல் – வன்முறை இரண்டும் மிகுதியானமைக்குச் சில காரணங்கள் அப்பண்பாட்டின் பரிணாமத்தில், அவர்களின் சென்ற நூறாண்டுக்கால வரலாற்றில் உண்டு.

நீண்டகாலம் பாலியல்சார்ர்ந்த கடும் கட்டுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நிலவிய சமூகம் அது. மதம் சார்ந்தது அந்த ஒடுக்குமுறை . ஆகவே உளவியல் சார்ந்தது. கடும் அச்சம் மற்றும் குற்றவுணர்வால் நிலைநிறுத்தப்பட்டது. அதைக் கடக்க ஐரோப்பாவுக்கு முந்நூறாண்டுகள் தத்துவ விவாதம் தேவைப்பட்டது. அத்துடன் அந்த மதம் மிக வலுவான அமைப்பு கொண்டது. அரசுக்கு நிகரானதாகவும், முன்பு அரசாகவும் இருந்தது. ஒவ்வொரு தனிமனிதனையும் பட்டியலிட்டு நேரடியாக வழிநடத்தியது. ஆகவே பொதுவாக நாட்டாரியல் பண்பாடு ஓங்கிய கீழைநாடுகளைப் போல பாலியல் சுதந்திரம் அங்கே பலநூற்றாண்டுகளாக இருக்கவில்லை. இங்கும் நெறிகளும் மதவழிகாட்டலும் உண்டு. ஆனால் மொத்தச் சமூகத்தையும் ஆட்சிசெய்தவை நாட்டார்க் குடிமரபுகளே. அவை அன்றுமின்றும் தளர்வானவை.

ஐரோப்பியர்களுக்கு நிர்வாணம் என்பது ஒரு கொண்டாட்டம். அவர்கள் நீண்ட குளிர்காலம் முழுக்க பல அடுக்கு ஆடைகள் அணியவேண்டியவர்கள். ஆகவே கோடையில் கழற்றி வீசுகிறார்கள். அதேதான் பாலியலிலும். பதினெட்டாம் நூற்றாண்டு முதல் மதக்கட்டுப்பாடுகள் அகலத் தொடங்கியதும் அவர்கள் பாலியல் விடுதலையை கொண்டாடலானார்கள். அவர்களின் பெரும்பாலான இலக்கியங்கள் பாலியலின் மீறலை, விடுதலையை பேசுபொருளாகக் கொண்டவை. செவ்விலக்கியங்களுமேகூட. ஃப்ளேபர்ட் முதல் டி.எச்.லாரன்ஸ் வரை. மார்கி து சேத் முதல்  ஆல்பர்ட்டோ மொரோவியா வரை. இதே காலகட்டத்தில் எழுதிய ஐசக் டெனிஸன் முதல் மேரி கெரெல்லி வரையிலான எவ்வளவோ மெய்யான செவ்விலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட்டு  இந்த பிறழ்வும் மீறலும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

ஐரோப்பாவில் இருந்த  மதம் ஆயிரத்தைநூறாண்டுக்காலம் தனிமனிதன் என்னும் கருத்தையே நிராகரித்தது. மதத்தின் பிடி விலக ஆரம்பித்த பதினாறாம் நூற்றாண்டு முதல் மெல்லமெல்ல தனிமனிதன் என்னும் கருத்துரு அங்கே உருவாகி நிலைகொண்டது. Free will இயக்கம் போன்றவை தனிமனிதனின் அகவிடுதலையை, தன் வாழ்க்கையை தானே தேர்வுசெய்வதற்கான உரிமையை முன்வைத்தன. Pursuit of happiness போன்ற கருத்துக்கள் வேரூன்றின. மனிதன் தன் மகிழ்வையும் நிறைவையும் தானே தேடிச்செல்லும் உரிமைகொண்டவன் என வாதிடப்பட்டது. பர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஐரோப்பிய மறுமலர்ச்சியையே ‘இன்பத்தின் வெற்றி’ என்கிறார். (தமிழில் அந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. The Conquest of Happiness) இன்பநாட்டத்திற்கு முதன்மை அளிக்கும் ஒரு சிந்தனைக் கலாச்சாரம் அங்கே உருவானது. ஐரோப்பியப் பேரிலக்கியங்கள் பலவும் அதையே பேசுகின்றன.

பின்னர், தனிமனித விடுதலையையும் பாலியல் விடுதலையையும் இணைத்துக்கொண்டனர் அடுத்த தலைமுறையினர். ஒவ்வொருவரும் அவரவருக்கான இன்பத்துக்காக மட்டுமே வாழ்வது இயல்பானது மட்டுமல்ல, உகந்ததும்கூட என்னும் மனநிலை உருவாகியது. தொடக்ககால கலைப்படைப்புகள் அதை வலியுறுத்துவதைக் காணலாம். நல்ல சமூகம் என்பது முடிந்தவரை தனிமனித விடுதலையை அனுமதிப்பது, இன்பநாட்டத்திற்கு எந்த கட்டுப்பாட்டையும் விதிக்காதது என்ற நம்பிக்கையை அவை உருவாக்கின. ஆனால் அனைவருமே எடுப்பவர்கள் என்று ஆகிவிட்டால் கொடுப்பது எவர் என்ற கேள்வியையே அவர்கள் சந்திக்கவில்லை. மானுட உறவுகளில் இன்பம் என்பதே அளிப்பதன் வழியாக உருவாவது மட்டுமே. அதை அவர்களின் பொதுத்தத்துவவாதிகள் பேச ஆரம்பித்தது மிகப்பிந்தித்தான். எண்பதுகளில் எரிக் ஃப்ராம் போன்றவர்கள் அதைச் சொல்ல ஆரம்பித்தனர்.

இன்பநாட்டமே வாழ்வின் சாரம் என்னும் கருத்துடன் இணைந்துகொண்டது ஃப்ராய்டியம். சென்ற தலைமுறை வரை கலைஞர்களில் ஃப்ராய்டியம் என்னும் அரைவேக்காட்டுச் சித்தாந்தம் அளித்த செல்வாக்கும் ஆச்சரியமானது. அது அச்சித்தாந்தத்தின் வீச்சு அல்ல. இவர்களுக்கு அப்படியொன்று தேவையாக இருந்தது. காமகுரோதமோகம் என அடிப்படை விலங்குணர்வுகள் மானுட உள்ளத்தில் நிறைந்துள்ளன என தெரியாத எந்த மதமும் இல்லை. இந்து மரபும் பௌத்த சமண மரபுகளும் அவற்றை மிக விரிவாகப் பேசியுள்ளன. ஆனால் அவற்றைக் கடந்த உணர்வுகளால்தான் மானுடன் உருவாகி வந்துள்ளான். சமூகம் உருவாகி வந்துள்ளது. ஆனால் ஃப்ராய்ட் காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே மானுடன் என வகுத்தார். ஆகவே மானுடனின் உடைவும் சரிவும் தடுக்கவே முடியாதவை என வாதிட்டார்.

தனிமனித வாதம், பாலியல் விடுதலை, ஆகியவற்றுடன் வன்முறையும் காமமுமே மனிதனின் அடிப்படை இயல்புகள் என்னும் ஃப்ராய்டிய நம்பிக்கையும் கலந்தபோது 1920 கள் முதல் இலக்கியத்தில் ஓர் எதிர்மறை அலை வீசியது. மானுடனை அழிந்துகொண்டிருக்கும், மீட்கவே முடியாத ஒரு விலங்கு என்னும் கோணத்தில் சித்தரிக்கும் படைப்புகள். 1950 களுக்குப்பின் அந்த கருத்து சினிமாவையும் ஆக்ரமித்தது. உலகப்போர்கள் உருவாக்கிய சோர்வுநிலையும் அதனுடன் இணைந்துகொண்டது. அன்று உருவான பல்வேறு கலைக்கொள்கைகள், கலையியக்கங்கள் அடிப்படையில் எதிர்மறைப்பார்வை கொண்டவை. காமம், வன்முறை இரண்டையும் உச்சகட்டமாக முன்வைப்பவை, அவையே மானுடசாரம் என வாதிடுபவை. சர்ரியலிசம், டாடாயிசம், ஃப்யூச்சரிசம் போல சுட்டிக்காட்டியபடியே செல்லலாம்.

*

அக்காலக் கலையிலக்கியங்கள் இந்தப்பார்வையை முன்வைத்ததற்கு இத்தனை பண்பாட்டுப் பின்னணி உள்ளது. ஆனால் அந்த அலை மெய்யாகவே ஒரு படைப்பூக்க வெளிப்பாடு. அன்று அது அவர்களுக்கு உண்மையாகவே இருந்தது. இன்று அந்த அலை சிந்தனையில் இல்லை. ஆனால் புதிய அலை என ஏதும் உருவாகவுமில்லை. விமர்சகர்கள் அந்த பழைய அலையின் பின்பரவசத்தில் வாழ்கிறார்கள். அவற்றை நகல்செய்யும் படைப்புகளைக் கொண்டாடுகிறார்கள். ஆகவே இன்று சினிமா எடுப்பவர்கள், இலக்கியம் படைப்பவர்கள் அவற்றை மீண்டும் உருவாக்குகிறார்கள். அவை உடனடியாக ஏற்பு பெறுகின்றன.

இன்று கலைப்படம், தீவிர இலக்கியம் ஆகியவையேகூட வணிகம்தான். அவ்வணிகத்தை  உண்மையில் வழிநடத்துபவர்கள் முகவர்கள். இலக்கிய முகவர்களும் கலைமுகவர்களும் இப்படித்தான் படைப்பு இருக்கவேண்டும், இப்படி இருந்தால்தான் விற்கும் என்கிறார்கள். படைப்பவர்கள் அதற்கேற்ப படைக்கிறார்கள். இன்று கொடூரமான வன்முறை, கட்டற்ற பாலியல் இரண்டும் இருந்தாகவேண்டும் என வகுத்திருப்பவர்கள் இந்த முகவர்கள்தான். இதை ஒரு முதன்மை முகவரே என்னிடம் சொன்னார். நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இன்று மேலைநாட்டுச் சிந்தனை ஒரு பெருந்தேக்கத்தை அடைந்துவிட்டிருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் என நினைக்கிறேன். அவர்களை ஆட்டிவைத்த பெருங்கேள்விகளை விரிவாக எழுதிவிட்டனர். அவற்றை கடந்தும் விட்டனர். அவர்களை ஆட்டிவைத்த மரபு x நவீனம், சமூதம் x தனிமனிதன், மதம் x அறிவியல், பாவம் x குற்றவுணர்வு போன்ற பல முரண்கள் இன்று அச்சமூகத்தில் பொருளிழந்துவிட்டன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சாமானியர்களின் வாழ்க்கை ஏறத்தாழ சமானமானதாக ஆகிவிட்டது.  தனித்தன்மைகள் மிகமிக அரிது. பண்பாட்டுத்தனித்தன்மை இல்லை. வட்டாரத்தனித்தன்மை இல்லை. இனக்குழுத்தனித்தன்மைகள் இல்லை. எல்லா வாழ்க்கையும் ஒன்றே. வேண்டுமென்றே ஏதேனும் சாகசம் செய்தால்தான் உண்டு. அறியப்படாத வாழ்க்கை என ஏதுமில்லை. தனிவாழ்க்கையின் உறவும் பிரிவும் என எல்லா சிக்கல்களும் ஏறத்தாழ ஒன்றே. அவை மிகமிக எழுதப்பட்டுவிட்டன.

இப்படி சிந்தனைத் தேக்கம் ஏற்படும்போது மானுட உள்ளம் காமம் வன்முறை நோக்கிச் செல்வதைக் காணலாம். சோர்வுநிலையை காமத்தால் தூண்டிக்கொண்டு கடக்க முயல்வது மானுட இயல்பு. இளம்பருவத்தில் அசாதாரணமான எதிர்ப்பும் மீறலுமாக வெளிப்பட்ட கவிஞர்களைக் கவனியுங்கள். அந்த விசை காலப்போக்கில் இல்லாமலானதுமே அவர்கள் மீண்டும் மீண்டும் காமத்தை எழுத ஆரம்பித்திருப்பார்கள். சுகுமாரன் அல்லது பாலசந்திரன் சுள்ளிக்காடு என உதாரணங்கள் பல. அதுவே பண்பாடுகளுக்கும் ஒட்டுமொத்தமாக நிகழலாம்.

இன்றைய ஐரோப்பிய -அமெரிக்க எழுத்துக்களையும் சினிமாக்களையும் பார்க்கையில் அவர்களுக்கு எழுதுவதற்கு விஷயமில்லை என்று தோன்றுகிறது.  அந்த வெறுமையை மூன்று வகைகளில் எதிர்கொள்கிறார்கள். ஒன்று அறிவியல் புனைவு மற்றும் மிகைக்கற்பனைகள். பழைய புராணங்களின் கதைக்கட்டமைப்பை அறிவியலுடன் இணைத்துக்கொண்டு, அறிவியலின் புதிர்களை கற்பனையால் நிரப்பிக்கொண்டு மேலே செல்கிறார்கள். மெய்யான சாதனைகள் இந்தத் தளத்திலேயே உள்ளன. இரண்டு, அயல்பண்பாடுகளை மேலைப்பண்பாடு சந்திக்கும் தருணங்களை எழுதுவது. இது புலம்பெயர் இலக்கியம் அல்லது பயண இலக்கியம் வழியாக நிகழ்கிறது. இதிலும் நல்லபடைப்புகள் உள்ளன. எஞ்சியிருக்கும் பெரும்பகுதி ‘காமவன்முறைக் கழிவு’கள்தான். அவையே அதிகமும் வந்து நம் மீது கொட்டுகின்றன.

நீங்கள் சொல்வது உண்மை. இன்று ஐரோப்பாவின் உயிர்த்துடிப்பான பகுதி பெண்களே. வன்முறை எல்லா வகையிலும் தேவையற்றதாக ஆகிவிட்ட ஒரு சமூகத்தை அவர்கள் உருவாக்கியதுமே ஆண்களைவிட பெண்கள் முக்கியமானவர்களாகிவிட்டனர் என நினைக்கிறேன். ஐரோப்பியப் பெண்களை பார்க்கையில் அவர்களிடமிருந்தே புதியமானுடச் சாத்தியங்கள் எழக்கூடுமென தோன்றுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமி இணையதளம்