(தொடர்ச்சி) ரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்- சுசித்ரா
நண்பனின் சிந்தனைப் பாணியில் எப்போதுமே ஓர் இறுக்கத்தை உணர்ந்ததாக சொன்னேன் அல்லவா? அவன் கேள்வியே அந்த இறுக்கத்தின் வெளிப்பாடென இப்போது தோன்றுகிறது. அந்த இறுக்கத்தை புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.
அந்த சிந்தனை முறையை ஒருவித மரபுவாதம் (traditionalism) என்று தான் சொல்ல வேண்டும். மதம் சார்ந்த ஆசாரவாதம் அல்ல நான் சொல்வது. மிகக்கூர்மையான, தர்க்க ஒழுங்குடைய சிந்தனை. ஆனால் ஓர் இறுகிய தன்மை உடையது. அது கவிதையின் உண்மையை சந்தேகிக்கும் பியூரிட்டன் நோக்கு என்று சொல்லலாம். தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றை கூர்மையாக சொன்னால் ஏற்றுக்கொள்ளும். உருவகமாக, கவித்துவமாக ஒன்றை வெளிப்படுத்தினால் அதை அதன் முழுமையில் ஏற்றுக்கொள்ளாது. வெட்டிப் பிளந்து ஆராய முற்படும். சில சமயம் சிந்தனையில் கவித்துவமான ஒரு தாவல் வழியாக மேலும் விரிவாக ஒன்றின் தரிசனம் நமக்கு அமையப்பெறும் அல்லவா? அதை இவ்வகை சிந்தனை ஏற்றுக்கொள்ளாது. எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும். இந்த ‘கவிதைச்சந்தேகப்’ போக்கு மரபுவாதிகளிடம் மட்டும் அல்ல, யோசிக்கையில் நவீன அறிவியல்வாதிகளிடமும் அநேகம் உள்ளது. நண்பனின் கூற்று எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்று சற்று உணர முடிகிறது.
*
இந்த போக்கை இந்தியச் சிந்தனையாளர்களிடமும் வேறு வகையில் உணர்ந்திருக்கிறேன்.
இந்தியாவில் பெரும்பாலும் ‘ஆன்மீகம்’ என்று பேசுவோர் தூய மனம் பக்தி சரணாகதி என்றோ அல்லது தத்துவம் தர்க்கம் தியானம் என்றோ அதை வரையறுப்பதை கண்டிருக்கிறேன். இன்று காலை கூட ஒரு சாமியார் ‘அன்வய-வியதிரேக’ தர்க்கத்தை தியானிப்பது வழியாக எப்படி விடுதலை அடைய முடியும் என்று போதிப்பதை காதுபோக்கில் கேட்டேன். எது இவ்வுலகத்திலானது, எது நிரந்தரமானது என்று பிரித்தறியும் முறை என்று அவர் சொன்னார். அந்த வழி என்பது ஒவ்வொரு நொடியும் பூரண போத விழிப்போடு ரேசர் பிளேடை வைத்து கோடு போட்டுக்கொண்டே இருப்பது என்று தோன்யது.
அப்படிப்பட்ட முறைகளை நான் சந்தேகிக்கவில்லை. அவை மெய்மையை பகுத்தறிகின்றன என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவற்றை நான் அறிந்த கலையின் உயர்வுகளோடு எப்படி இணைத்துக்கொள்வது?
*
இன்னொரு சாமியாரிடம், மற்றொரு சமயத்தில், நான் கேட்டேன். நீங்கள் இலக்கியம் வாசித்ததுண்டா என்று. அவர், “நான் என் பதினாறாம் வயதில் தாகூரில் கோரா நாவலை வாசித்தேன். அதை வாசித்து ஒரு வாரம் நான் தூங்கவில்லை. அந்த நாவலின் துக்கங்களையும் சந்தோஷங்களையும் நான் எனக்குள் மீண்டும் மீண்டும் நடித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் அதிலிருந்து விடுபடவே முடியவில்லை. பிறகு தோன்றியது. இந்த உலகத்தில் இத்தனை நடிப்புகளைக் கடந்து செல்லவேண்டியவன் அதன் மாயைகளிலிருந்து விடுபட வேண்டியவன் மேலும் நடிப்புகளை தன் மேல் சுமத்திக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று. அதன் பிறகு நான் இலக்கியம் படிக்கவில்லை,” என்று சொன்னார்.
*
எனக்கு இவ்வாரு தோன்றுகிறது.
தர்க்கம் வழியாகவோ சேவை வழியாகவோ நாம் விலக்கத்தையும் உயர்மனநிலையும் அடையலாம். அகங்காரம் தீண்டாமல் வாழலாம். ஆனால் நம் அனுபவங்களின் சாராம்சத்தை அடையும் அந்த பேரனுபவமானது வெறுமனே ஒரு தர்க்கப் புதிரின் பதிலாக இருக்குமா? அதில் துளிக்கூட உச்ச அனுபவம் – ஒளி, விரிவு, பறத்தல் – இருக்காதா? நம் ஞானியரின் அனுபவங்களை படிக்கையில் அப்படித் தோன்றவில்லை. அதை அவர்கள் ஆனந்தம் என்றே சொல்கிறார்கள். பித்தையும் மாளாக்காதலையும் பேரின்பத்தையும் தான் திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். அந்த பெருநிலைகளை சற்றேனும் நான் அனுபவித்திருக்கிறேன் என்றால் அது கலையின் ஊடாகத் தானே?
சென்ற தத்துவ வகுப்பில் நீங்கள் வேதங்களை பற்றிச் சொன்னதை சிஸ்டீன் தேவாலயத்தின் கூரையைக் கண்டபோது எண்ணிக்கொண்டே இருந்தேன். சிருஷ்டி கீதம் கேட்டபோது ஏற்பட்ட அதே எழுச்சி அங்கே உருவானது. வேதங்களின் எழுச்சி. அங்கே கவிதையும் தெய்வ உணர்வும் பிரபஞ்ச உணர்ச்சியும் வெவ்வேறானது அல்ல. ஒவ்வொரு முறை ஒரு புதிய வேதத்தை இயற்றும் போதும் மனிதன் அந்த ஆதி நிலையை அடைகிறான். அதை நடித்துப்பார்த்து அதுவாக ஆகிறான்.
அந்த எழுச்சி எங்கிருந்து உருவாகிறது?
மண்ணிலிருந்து. கலை பூமியிலிருந்தும் வாழ்க்கையிலிருந்து இயற்கையிலிருந்தும் எழுவது. நம் உச்சங்கள் அனைத்தும் வெளியிலிருந்து வானத்திலிருந்து அருள்பாலிப்புகளாக வருபவையல்ல. பூமியைத் தொட்டு நம் புலன்கள் வழியாக நாம் பெற்றவற்றை வானம் வரை உயர்த்தி ஏற்றும் ஒரு மனப்பாங்கு நம்மில் செயல்படுவதனால் வருவது.
*
இவ்வளவு சொன்ன பிறகு கடைசியாக ஒன்று. இந்த பயணம் வழியாக நான் பெற்ற ஓர் அனுபவம். அதை என்னால் விளக்கவோ ஆராயவோ முடியவில்லை. சொன்னவற்றுடன் தொகுக்க முடியவில்லை. இப்போது நான் முன்வைத்த குழப்பங்களை எல்லாம் மீறிய ஓர் அனுபவமாகவே எனக்குள் அது இருக்கிறது. அதை வெறும் நம்பிக்கையென்றோ கலை உணர்வு என்றோ விளக்க முடியவில்லை. ஆனால் கலையும் அழகுணர்வும் இல்லாதிருந்தால் அந்த அனுபவம் என்னை தீண்டியிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.
எளிய சொற்களில், வெறும் அனுபவமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.
நாங்கள் தங்கியிருந்த விடுதி Saint Maria Maggiore என்ற தேவாலயத்துக்கு மிக அருகே இருந்தது. இந்த தேவாலயம் ரோமில் மேரிக்கென்று கட்டப்பட்ட முதல் தேவாலயம். மைய அமைப்பு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த mosaic வகை ஓவியங்களை அந்த தேவாலயத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் மேலும் விரித்துக் கட்டப்பட்டது. ரோமில் வீதிக்கு வீதி அப்படி நிறைய மரியன் தேவாலயங்கள் உள்ளன. அவள் அந்நகரின் அரசி போல் வீற்றிருக்கிறாள். எளிய மக்களின் தஞ்சம் அவள்.
ரோமில் மேரியின் வழிபாடு தொடங்கிய வரலாறு சுவாரஸ்யமானது. நான்காம் நூற்றாண்டில் கிறித்துவ மதம் ரோமில் ஓர் வழிப்பாட்டு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு கிறிஸ்து மனிதனா தெய்வமா என்ற விவாதம் உருவானது. கிறிஸ்துவின் பிறப்பின் இயல்பு என்ன, அவர் பிதாவின் சாரத்தைக் கொண்டு தொடர்பவரா அல்லது தனி இருப்பாக படைக்கப்பட்டாரா போன்ற கேள்விகள் விவாதிக்கப்பட்டன. தெய்வமும் மனிதனும் எப்படி அவனில் இணைந்து இருக்க முடியும் என்று ஆராயப்பட்டது. அவன் ரத்தமும் சதையுமாக உடல் எடுத்துப் பிறந்தான் ஆனால் அவன் தேவனின் சாரத்திலிருந்து வேரல்ல என்று முடிவு செய்யப்பட்டது.
ஐந்தாம் நூற்றாண்டில் அந்த விவாதங்கள் மேரியின் இயல்புகளை நோக்கித் திரும்பின. மேரி இறைவனின் அன்னையா? அல்லது கிறிஸ்து என்ற மனிதனின் அன்னையா? அவள் இறைவனின் அன்னை என்றால் அவள் இயல்பு என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன. அவளை முக்கால கன்னி என்றும் இறைவனின் தாய் என்றும் வகுத்தார்கள். முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த இறைவிகளின் இயல்புகள் அவளுடன் இணைந்துகொண்டன. அவளை ‘விண்ணக அரசி’ என்று அழைத்தனர். ‘கடல் விண்மீன்’ என்று அழைத்தனர். அவை எகிப்திய இறைவி ஐசிஸின் பட்டங்கள். ஐசிஸும் சேயை கையில் வைத்திருந்த தாய் தெய்வம். விண்ணகத்தை ஆண்டவள்.
மேரி அதன் பின் நட்சத்திரங்களை சூடியவளாக நீல வண்ண ஆடையால் சூழப்பட்டவளாக ஓவியங்களில் தோன்றத் தொடங்கினாள். மேரி எப்போதும் நீல ஆடைக்குள் சிவப்பு ஆடை உடுத்தியபடி காட்சிப்படுத்தப் பட்டாள். சிவப்பு அவள் மகனான இயேசுவை குறித்தது. நீலத்துக்குள் சிவப்பு என்பது போல் விண்ணக அரசியான அவள் அவனை ரத்தமும் சதையுமாக ஈன்றாள். பிற்கால ஓவிய மரபுகளில் இயேசு அதற்கு நேர்மாராக மேல் ஆடை சிவப்பும் உள் ஆடை நீலமும் என்று தோன்றலானார். அது மனித ரூபத்தில் தோன்றிய இறைவனை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
உண்மையில் பிதாவுக்கும் சுதனுக்குமான உறவை கிறித்துவ இறையியல் ஒருவாராக வகுத்துக் கூறிவிட்டது. ஆனால் மாதாவுக்கும் சுதனுக்குமான உறவு இன்னும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. அது விண்ணக இறைக்கும் மண்ணில் நிற்கும் மனிதனுக்குமான (மனுஷிக்குமான) உறவு அல்லவா? எது அவ்வுலகத்திலானது எது இவ்வுலகத்திலானது எது விண் எது மண் என்ற இனிமையான மாயம் மரியத்துக்கும் இயேசுவுக்குமான உறவில் நிறைந்திருக்கிறது. நீலம் சிவப்பு இவ்விறு நிறங்களின் ஊடாட்டமே இறைவனுக்கும் மனிதனுக்குமான மிஸ்டிக்கான உறவை உணர்த்துவதாக எனக்குத் தோன்றியது. இறைவனை ஏந்திய மனிதன் இறைவனுக்குள் சென்று இறைவனாகும் மாய உருமாற்றத்தை சுட்டுகிறது.
ஆனால் இதெல்லாம் பிறகு வாசித்தது. இந்த பயணத்தில் நான் மேரியை அடைந்த விதம் வேறு. ஒரு வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் Saint Maria Maggiore-யில் வெவ்வேறு வழிப்பாடுகளை காணச் சென்றேன். ஒரு பயணத்தில் எப்போதுமே அப்படி அன்றாட வழக்கத்தின் ஒரு துளியை வைத்துக்கொள்வது எனக்குப் பிடிக்கும். ஒரு நாவலில் ஒரு சிறிய உபகதை நிகழ்வது மாதிரி அதற்கென்று ஓர் எடுப்பும் தொடுப்பும் முடிவும் உருவாவதை கண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நான் வேடிக்கை பார்க்கத்தான் சென்றேன். வழிபாடு நடந்த அந்த விசாலமான சாப்பெலுக்குள் ஏனோ என்னால் காலடி எடுத்து வைத்துச் செல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேவாலயம் முழுவதும் அலைந்தேன். அதன் கட்டுமானத்தைப் பார்த்தேன் ஓவியங்களை பார்த்தேன் சிற்பங்களைப் பார்த்தேன். ஆனால் சாப்பெலுக்குள் மட்டும் என்னால் புக முடியவில்லை. அது மிகப்புராதானமான, புனிதமான ஓர் அமைப்பாக எனக்குத் தோன்றியது. நம்பிக்கையாளர்களால் அவர்களுடைய நம்பிக்கையின் பெயரால் எழுப்பப்பட்ட கனவு. என் சந்தேகங்களுடன் குழப்பங்களுடன் அந்த பரிசுத்தமான இடத்தில் நுழைய எனக்கு அருகதை இல்லை என்ற எண்ணம் என் கால்களை பாதித்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே செல்வோம் என்று நினைத்தும் ஒவ்வொரு நாளும் கருப்பு உலோகத்தில் அலங்கார வேலைப்பாடு செய்யப்பட்ட மூடிய வாயிலுக்கு வெளியே நின்றபடி அதன் இடைவெளிகள் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு வழிபாடை பார்ப்பதை விட அங்கே வரும் மக்களை பார்ப்பதே மேலும் சுவாரஸ்யமாக இருந்தது. மூன்றாம் நாளில் அந்த வேளையில் யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியத் தொடங்கியது. எப்போதுமே இணைந்து வந்து சன்னமான குரலில் பாடும் மூன்று இத்தாலிய முதியவர்கள். சுருட்டைத்தலை மேல் ஊதா நிற மேலாடை போர்த்தி முன்னிருக்கையில் மண்டியிடும் இளம் ஆஃபிரிக்க இனப் பெண். கஞ்சி போட்டு கரகரப்பாக உறைந்த வெள்ளை ஆடைகளும் வெள்ளை ஸ்டாக்கிங்கும் ஷுவும் அணிந்த இரண்டு குண்டான கன்னியாஸ்திரீகள். துதிபாடல் புத்தகங்களை அடுக்கி விளையாடும் சிறுவன். அவனை கோழி போல் மேய்த்த ஃபிலிப்பீனோ தாய். அனைவரையும் தோரணையாக உத்தரவிட்டு அணிவகுத்து அமரச்செய்த ஒரு கருப்பு ஆசாமி, அங்கே அதிகாரப்பூர்வமற்ற சட்டாம்பிள்ளை அவர் தான்
அதில் ஓர் இளைஞன். மிக அழகானவன். ஏதோ அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் போல் எப்போதும் நேர்த்தியான உடையில் இருந்தான். ஒவ்வொரு நாளும் சரியாக நான்கு மணி அடிக்கும் போது அவசரமாக வந்து அலங்கார ஜாலிவேலை செய்யப்பட்ட இரும்பு வாயிலை திறந்து சென்று வழிப்பாட்டில் இணைந்து கொள்வான்.
சில நாட்களில் அவன் இயல்பு பிடிகிடைத்தது திரும்பி அவன் வருவதை எதிர்நோக்கத் தொடங்கினேன். ஓடி வருவான். என்னைக் கடந்து இரும்பு வாயிலைத் திறந்து வாசலில் அவசரமாக குனிந்து மண்டியிட்டு சென்று கடைசி வரிசையின் ஓரத்தில் அமர்வான். அவன் சென்றதும் சட்டாம்பிள்ளை கண் காட்ட நான் மெல்ல வெளியிலிருந்து அலங்கார இரும்பு வாயிலைச் சாற்றிக்கொள்வேன்.
அந்த வாரம் முழுவதும் கடந்தது. ஒவ்வொரு நாளும் நான் வெளியே நின்றபடி வழிபாட்டைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் தன் சுழற்சியை இயல்பாகக் கண்டுகொண்ட ஓர் இயற்கை நிகழ்வு போல வழிபாடு நடைபெற்றது. நட்சத்திரங்களின் நகர்வைப்போல், பருவங்களைப்போல். முதலில் திருவசனம். பிறகு நறுமணப்புகை. இறுதியாக இசை. ‘ஆமென்’ என்றதும் பெருமூச்சுடன் சிலுவையிட்டுக்கொண்டு அந்த வழிபாட்டுச் சுழலிலிருந்து மனிதர்கள் தனித்தனியாகி எழுந்து வந்தார்கள்.
இரவெல்லாம் நான் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறைப்பற்றி அவர்களுடைய சடங்கு முறைகளை பற்றி தத்துவங்களைப்பற்றி வாசித்தேன். ஆனால் மாலைகளில் அந்த அலங்கார இரும்புச்சுவருக்கு வெளியிலேயே நின்றேன்.
இப்படி ஐந்து நாள் கடந்தது.
ஆறாம் நாள். நான்கு மணி அடித்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. பாதிரியார் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார். சிறு புயல் போல அவன் என்னக் கடந்து ஓடிக் கதவைத் தள்ளி மண்டியிட்டான். அவன் வலக்கையை நெஞ்சில் வைத்துத் தலைகுனிவதைக் கண்டேன். அந்த வேகத்திலும் அந்த பொழுதில் முழு சமர்ப்பணத்தின் தூய அசைவோடு அவன் தலை தாழ்ந்தது. அவன் முழு பிரக்ஞையும் அந்த அசைவில் குவிய அவன் காலடியில் அவன் நிழல் விழுந்தது. அந்த அசைவில் அவன் தலைமுடி மஞ்சள் வெளிச்சத்தில் பொன்னின் ஒளி கொண்டது.
அது ஒரு கணம் தான். பிறகு அவன் எழுந்து ஓரத்து இருக்கைக்குச் சென்றான். இரும்பு வாயிலை மூட உத்தரவு வர எப்போதும் போல் நான் வெளியே நிறுத்தப்பட்டேன்.
ஆனால் அன்றைய நாளில் எல்லாம் மாறிவிட்டிருந்தது. அந்த இளைஞன் மண்டியிட்டபோது அவன் சிறு அசைவு, அந்த அசைவில் அவன் கூந்தல் கொண்ட பொன்னிறம், அந்த பொன்னின் ஒளி அறை முழுதும் நிறம்பி ஒவ்வொன்றையும் தொட்டுக்காட்டியது போல் அன்று நான் கண்ட அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமான உருவும் அர்த்தமும் கொண்டிருந்தன. வசனங்களை சன்னமாக வாசித்த பாதிரியாரின் புராதான லத்தீன் தனித்தனி உருண்ட சொற்களாக செவியில் தோன்றியது. கூழாங்கற்களை கையில் உருட்டுவது போல் சின்னஞசிறிய மலைப்பாறைகள் மேல் ஏறி இறங்குவதைப்போல் அவற்றுடன் விளையாட வேண்டும் என்று நா தவிதவித்தது. தூபக்கலம் பெரும் அர்த்தத்தோடு கனமாக அசைந்தது. அதிலிருந்து நறுமண கந்தம் பேரழகுடன் பொழிந்தது. அப்போது படர்ந்த புகையில் தேவாலயமே நிறங்கள் குழைந்து கனவின் சாயல் கொண்டது.
சடங்குகளின் இறுதிக்கட்ட நிசப்தத்துக்குப் பின்னால் பியானோவின் இசை மெல்ல, குழந்தை நடை பழகுவது போல், பரிசுத்தமான படிகள் எடுத்து வைத்தது. குரல்கள் ஒவ்வொன்றாக அதில் சன்னமாக கூடி இணைந்தன. கோடைகாலக் காலையொன்றில் சிற்றோடை பொன்னொளிர ஒழுகிச்செல்வது போல அந்தக் குரல்களின் மனிதர்கள் அனைவரும் அவர்கள் மட்டுமே அறிந்த புனித யாத்திரை ஒன்றில் சேர்ந்து புறப்பட்டார்கள். அவர்கள் தலைகளெல்லாமே அந்த இளைஞனின் அதே அசைவில் குனிந்திருந்தன. ஆம், அதே அசைவு. அதே பொன்னிற அசைவு. ஒரு கணத்தில் அங்கே நான் மட்டும் தான் இருக்கிறேன், அனைத்துமே எனக்குள் நிகழும் என் கனவு என்று தோன்றலானது.
இரவெல்லாம் அதை எண்ணி எண்ணிப் பார்த்தேன். அந்த இளைஞனின் அசைவு ஏன் அவ்வளவு தெய்வீகமாகத் தோன்றியது? அது அவன் அழகினாலோ அது மாதாவின் சன்னிதி என்பதாலோ மட்டும் உருவாகவில்லை. அங்கே தன்னை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த இளைஞனின் உள்ளம் ஓர் உணர்வை அடைந்தது. அந்த சிறு அசைவு அதன் வெளிப்பாடு தான். அதை விட முக்கியமாக அது அவனில் நிகழ அவன் அனுமதித்தான். அது தான் அவன் தெய்வீகம்.
வழிபாட்டுணர்வு என்றால் “நான்” உன்னை வணங்குகிறேன் என்பதல்ல. அதில் “நீ” மட்டும் தான் இருக்கிறாய். நீ, உன் பாதம். இது தலை வைக்கும் இடம் தலை கொடுக்கும் இடம் இங்கே அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதென்ற பிரக்ஞை. அங்கே மண்டியிடாமல் இருக்க முடியாது. மிகச் சுதந்திரமான இயல்பான செயல் அது மட்டும் தான். The most perfect natural freedom. அதை அவன் அடைந்திருந்தான். அது தான் அவன் தெய்வீகம்.
ஆனால் அப்படி தலை வைக்க தலை கொடுக்கும் இடம் எது? அங்கே இருப்பது யார்? யார் அந்த “நீ”? என்னால் அந்தப் புதிரை அவிழ்க்க முடியவில்லை. அப்படியே உறங்கிவிட்டேன்.
ஏழாம் நாள் நான்கு மணிக்கு சற்று முன்னால் தேவாலயம் சென்றேன். இரும்புக்கதவுக்கு வெளியே நின்று கரிய அலங்கார இடைவெளிகள் வழியாகப் பார்த்தேன். வழிபாடுகளுக்கான ஆயுத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. தூபக்கலன் மேஜை மேல் இருந்தது. அதன் சங்கிலிகள் ‘என்னை தூக்கிக்கொள்’ என்பதுபோல் கீழே துவண்டிருந்தன. சாப்பலின் மையமாக பொறிக்கப்பட்டிருந்த பைசண்டைன் பாணி படத்தில் இரவின் ஆகாசத்தை உடுத்தியது போல ஆழமான நீல நிற ஆடையில் மாதாவும் அவர் கரங்களில் ரத்தச்சிவப்பு ஆடையில் சிசுவும் வீற்றிருந்தார்கள்.
அந்த இளைஞன் இன்னும் வர நேரமிருந்தது.
நான் இரும்புக் கதவை மெல்லத் திறந்தேன். எளிதாகத் திறந்தது.
அந்த இளைஞனின் அனுதின காலடிகளில் என் பாதங்களை பதித்து வைப்பது போல வாசலைக் கடந்து நடந்தேன். அவன் தினந்தோரும் மண்டியிடும் இடத்துக்கு வந்தேன். என் கால்கள் மண்டியிட்டன. முகம் கவிழ்ந்தது. இமைகள் மூடின.
ஆம், அவனை நடிக்க முடியுமா என்றே நான் முற்பட்டேன். அவனாக ஆக வேண்டும் என்ற பெரும் விருப்பம் எனக்குள் மூண்டது. அதுவே என் கால்களையும் கைகளையும் இயக்கியது. அவனாக நடிப்பதன் வழியாகவாவது அவன் பார்த்ததை நான் பார்க்க முடியுமா, அந்தத் தொடுகையின் ஒரு கணத்தை அடைய முடியுமா என்று என் உள்ளம் ஏங்கியது. நடித்து நடித்தே அங்கே செல்ல முடியும் வேறு வழியே இல்லை என்ற வலுவான எண்ணமே என்னை அந்த பொழுதில் மிகச்சிறப்பான நடிகை ஆக்கியது. ஆகவே அவனைப்போலவே நுழைந்தேன். மண்டியிட்டேன். முகம் கவிழ்த்தேன். முகம் கவிழ்ந்த அந்தக் கணத்தில் நான் நடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
அந்த இருட்டில் எதையும் பார்க்கவில்லை எதையும் நினைக்கவில்லை. எண்ணமே இல்லை. சுற்றிச் சூழ்ந்து பெரிதாக மிகமிகப் பெரிதாக… எது? நீலம் வானம் நட்சத்திரம். எனக்குள் கண்ணீர் பெருகிப் பெருகி வந்தது.
எதற்காக? எதற்காக இத்தனை பேரழகு? இதை எப்படிச்சொல்வது?
இதோ, இப்படி, நடிப்பை நீட்டிக்கொண்டே, நடிப்பு அழியும் கணங்களுக்காக ஏங்கிக்கொண்டபடி சொல்லிப்பார்க்கிறேன். நடிப்பைத் தவிர இதெல்லாம் பேச என்னிடம் வேறு பாஷை இல்லை.
அன்புடன்
சுசித்ரா