இரண்டாயிரம் குதிரைகள் கொண்ட தேர்!

(சிவகுருநாதன் நூற்பு என்னும் கைநெசவு www.nurpu.in இயக்கத்தை நடத்திவருகிறார்) 

வாழ்க்கையை எப்படி பார்க்கரீங்க? இப்ப நெசவு நெய்யும் வாழ்க்கை நிறைவை கொடுக்குதாங்க?

என்ன கண்ணு, “நிசமாவே நான் மனசுக்குள்ள சந்தோசமா இருக்கேன். ஆனா வெளியே பாக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு எல்லாமே இந்த தறிதான். வெளி கஷ்டம்னு சொல்லறது ஒவ்வொருத்தரின் ஆசையை எப்படி பூர்த்தி செய்ய முடியுமா அப்படினு யோசிச்சாதான் கஷ்டமாகுது. ஆனால் தறியில் ஏறிட்டனா எல்லாமே மறைஞ்சிடும்” என்று சொன்னபடியே இன்னும் சுவாரசியத்தோடு உரையாட ஆரம்பித்தார் எழுபது வயதை நெருங்கும் தற்போது வேட்டி நெய்யும் கண்ணன் அய்யா.

இதற்கு அடுத்து அவர் பேசியது எனக்கு உண்மையிலேயே ஒரு கால இயந்திரத்தில் சென்று வந்ததுபோல ஒரு உணர்வை ஏற்படுத்தியது. “கண்ணு எனக்கு இந்த தறி தேர் மாதிரி. எங்க அப்புச்சிதான் எனக்கு பேர் வெச்சாரு. அவருக்கு காது சரியா கேட்காது. ஆனா அனுபவம் அதிகம். கண்ணனு பேர் வெச்சதே தேர் ஓட்டதாண்டா அப்படீனு சொல்லிட்டு வாடா கண்ணா வந்து தேரை ஓட்டுனுதான் கைத்தறியை கற்றுக்கொடுத்தார்.

இப்ப கைத்தறியல் இருக்கிற 2630 இழை எல்லாமே எனக்கு குதிரைகள்தான். வாட்டு சுண்டும் கயிறு 2630 குதிரைகளையும் இழுத்து பிடிக்கும் கடிவாளக்கயிறு. கீழே மிதியை மிதிச்சதும் வண்டி தயாராகிடும். பெட்டியை இழுத்து நாடாவை சுண்டினதும் என்னோட குதிரைகள் எல்லாம் பறக்க ஆரம்பச்சிடும். நான் எனக்கு பிடிச்ச இடத்துக்கு வேகமா போயிட்டு வருவேம்பா. எந்த கஷ்டமும் இருக்காது. நான் வேகமாக வாட்டடிக்க என்னைவிட வேகமான தேர் பறக்கும். அவ்வளுதான் எல்லாம் சரியாகிவிடும்.”

எவ்வளவு வேகமாக பறந்தாலும் ஒரு குதிரைக்கு ஏதாவது ஒன்னுனா தேரை நிறைத்தி இறங்கிப்போய் பார்த்து சரி செய்திட்டு மீண்டும் பறக்க ஆரம்பிச்சிடுவேன். பாதாள உலகம், சொர்க்கலோகம் அப்புறம் வெளிநாடு, மகள் வீடு எல்லா இடத்தையும் போய் பார்திட்டு வந்திடுவேன். ஏதாவது மனக்கஷ்டத்தோடு இதுல உட்கார்ந்தா இறங்கறதுக்குள்ளே வழி பிறந்திடும். சொன்னா நம்பமாட்டப்பா நான் பிறக்கறதுக்கு முன்னாடி எப்படி இருந்ததுன்னும் நான் செத்துட்டனா எப்படி இருக்கும்னு பார்த்திருக்கேன். எல்லாமே தேர்ல ஏறினதுக்கு அப்புறம்தான் நடந்தது.

ஒவ்வொரு பாவில் வருகிற துணியையும் தேர் பயணத்தோட சாட்சியா பார்க்கிறேன்.  ரொம்ப கஷ்டமா இருந்துச்ன்னா தேர் பறக்காது. அத்தனை குதிரையும் பறக்காம ஓடும். அப்போ இழை அந்துபோகும். துணி சரியாவே கிடைக்காது. அந்த துணியை வெளியே கொடுக்க மாட்டேன். ஏனா அந்த கஷ்டம் அந்த துணியை உடுத்திரவங்களையும் போய் சேர்ந்திடும். என்னோட அப்புச்சி, அம்மா அப்பா எல்லோரும் இறந்து கொஞ்ச நாள் கழிச்சு நெய்தபோது அப்படி துணி வந்தது. அப்படி வந்த துணியை கோயிலுக்கு போய் சாமிகிட்ட கொடுத்திடுவேன். அந்த கஷ்டத்தை அவன் பார்த்துப்பான்.

“இந்த தறியில நெய்யற துணியை உடுத்திரவங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும். இந்த துணியை வாங்கிறதுக்கு முன்னாடியோ அல்லது அதற்கு பின்னாடியோ எந்த பிரச்சனையும் அவங்க குடும்பத்தில வரக்கூடாது. அப்படியே எதாவது இருந்தாலும் எல்லாம் சரியாகிவிடனும்” என்று சொல்லிதான் எங்க அப்புச்சி தறியில ஏறுவதற்கு முன்னால சாமி கும்பிட்டு நெய்ய ஆரம்பிப்பார். அதேதான் நானும் செய்திட்டு இருக்கேன்.

ஒவ்வொரு கைத்தறி நெசவாளர்களும் தான் நெய்யும் வேலையை ஒரு யக்ஞம் போலவே செய்கின்றனர். அதனாலேயே கைத்தறி துணியில் ஓர் உயிரோட்டம் இருக்கிறது. அதனை தொடும்பொதோ அணியும்போதோ நம்மை அறியாமலேயே ஒருவித மகிழ்ச்சியும் நிறைவும் கிடைத்துவிடுகிறது. உலகமே வேகமாக கால இயந்திரத்தை எதிர் நோக்கும் இந்த அதிவேக யுகத்தில் அதைவிட வேகமா இயங்குகிற ஒரு தேரில் பயணித்துக்கொண்டே நிறைவோடும் மகிழ்வோடும் பயணித்துக் கொண்டிருக்கிறார் கண்ணன் அய்யா.

அய்யாவின் பாதங்களை தொட்டு வணங்கி ஆசிகள் பெற்றுக்கொண்டு, எப்படியாவது இந்த தன்மையை அடைந்துவிடவேண்டும் என்றும், நானும் என் தேரில் பறக்கவும் அந்த தேரை ஓட்ட மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்கவும் நூற்பில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

எல்லாம் செயல் கூடும்…

நன்மை மலர்கிறது…

சிவகுருநாதன்

www.nurpu.in

முந்தைய கட்டுரைபொதிகை பேட்டி
அடுத்த கட்டுரைரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்- சுசித்ரா