அகவிழைவை தொடர்தல் தேவையா?

அன்புள்ள ஜெ,

இது சான் ஜோஸ், கலிபோர்னியாவில் இருந்து பரத். நான் நெய்வேலியில் பிறந்து வளர்ந்தேன், தற்போது கலிபோர்னியாவில் சுமார் 3 தசாப்தங்களாக வசித்து வருகிறேன்.

மக்களுக்கான உங்கள் சேவைக்கு நன்றி. சுய உதவி புத்தகங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் புத்தகங்களில் நான் பொதுவாக ஈர்க்கப்படுகிறேன். ஆனால் என்ன காரணத்தினாலோ (அநேகமாக நான் தமிழன் என்பதால்) உங்கள் தன்மீட்சி வார்த்தைகளும் அறிவுறுத்தலும் என் மனதிற்கு நேராக சென்றன. அதாவது என்னால் அதை ஆழமாக உள்வாங்க முடிந்தது.

இப்போது கேள்விக்கு:

So Good They Can’t Ignore You என்ற புத்தகத்தை படித்தேன். அதில், அந்நூலாசிரியர் கார்ல் நியூபோர்ட்உங்கள் உள்விழைவை தேடிச்செல்லுங்கள்’ என்னும் புகழ்பெற்ற கருதுகோளுக்கு எதிராக வாதிடுகிறார்

அது உலகம் முழுக்க பேசப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று. உங்கள் ஆர்வத்தைக் கண்டுபிடியுங்கள், நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள். அப்படி கண்டுபிடித்தபின் அதில் வேலைசெய்தால் அனைத்தும் வசப்படும் என நமக்கு எப்போதும் சொல்லப்படுகிறது.  இது ஆபத்தான தவறான கருத்து என்று அவர் கூறுகிறார். பல்வேறு சோதனைகள் மற்றும் வெற்றிபெற்றவர்களின் (ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட) ஆழ்ந்த அவதானிப்புகளின் அடிப்படையில் அவர்களெல்லாம் வேலையை எடுத்துக்கொண்டு, அதில் மூழ்கி, அதில் தங்கள் நல்வாய்ப்புகளை தேடி அடைந்தவர்கள் என்று வாதிடுகிறார்

அதாவது ஆர்வம் பின்னர் வரும், வேலையே முதலில் வரும். இதை இரண்டு கூற்றுகளாக பார்க்கலாம்.

நமக்குரிய வேலையை கண்டுபிடித்தல்  > அதில் உழைத்தல் என் பது ஒரு தரப்பு.

வேலையை செய்தல் > அதில் உழைத்தல்> அதன் வழியாக நமக்குரிய ஈடுபாட்டை அடைதல் என்று இன்னொரு தரப்பு

இந்த விவாதம் பற்றி விரிவாகக் கூற முடியுமா? “இது அல்லது அது” பதில் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் உங்கள் விவாதத்தின் ஆழம் மற்றும் பகுப்பாய்வு மூலம் நீங்கள் அதை எடுத்துக்கொள்வதை அறிய ஆர்வமாக உள்ளேன்.

பரத் முகுந்த்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள பரத் முகுந்த்

passion என்பது கொஞ்சம் மேலோட்டமான சொல். விழைவுகொண்ட செயல் என அது பொருள்படுகிறது. உள்ளம் எதை நாடி, முழுமையாக எற்கிறதோ அது. ஆனால் நான் இணையாகப் பயன்படுத்தும் சொல் என்பது தன்னறம். தனக்குரிய செயல், எதில் தான் சிறப்புற வெளிப்பட முடியுமோ, எதில் நிறைவுறமுடியுமோ அச்செயல். பிறப்பால் வருவது அல்ல. சூழலால் அளிக்கப்படுவது அல்ல. ஒருவரின் அகம் இயல்பாகச் சென்றமையும் செயல்.

இந்து மரபில் செயல் என்பது எதுவானாலும் அது விடுதலையின் வழியே. ஒருவர் தான் செய்யும் செயலை முழுமையாக ஈடுபட்டு, தன்முனைப்பும் தன்னலமும் இல்லாமல், செய்வாரென்றால் அது வேள்விச்செயலே. செயல்கள் வேள்வியாகட்டும் என கீதை அதையே சொல்கிறது.

தன்னறம் என்பதை கண்டடைந்து அதன்பின் செயலில் ஈடுபடவேண்டுமா அல்லது செயல்வழியாகவே ஒருவர் தன்னறத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டுமா?

நான் இந்த வினாவுக்கு ஒரு நடுநிலையான பதிலையே அளிக்க முடியும். ஒரு வரையறையாக இப்படிச் சொல்கிறேன்.

ஒருவர் தன் அகத்துக்கு உகந்த ஒன்றிலேயே தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியும், நிறைவடைய முடியும். ஆனால் ஒரு செயல் தன் அகத்துக்கு உகந்ததா இல்லையா என அவர் அச்செயலை ஆழ்ந்து செய்யாமல் உணரமுடியாது.

தன் அகத்துக்கு உகந்த செயலை மட்டுமே செய்வேன் என்று சொல்லி, அதைக் கண்டுபிடித்துவிட விரும்பி, செயலே செய்யாமல் உழல்பவர்கள் உண்டு. அவர்கள் எதையுமே செய்வதில்லை. செயலின்மையில் மெல்ல மெல்ல மூழ்குவார்கள். செயல் பற்றிய பகற்கனவுகளை பெருக்கிக் கொள்வார்கள். ஒருநாள் வரும், அன்று செயலாற்றுவேன் என நினைத்து எல்லா வாய்ப்புகளையும் தவறவிடுவார்கள்.

எந்தச் செயலும் ஒரு மூடுண்ட கோட்டைபோன்றது. பாறாங்கல் பரப்பாகவே அது தோன்றும். முழுவிசையுடன் அதை மோதினாலொழிய அதில் வாசல் திறக்காது. திறந்து உட்புகுந்தாலொழிய அதை அறிய முடியாது. அறிந்த பின்னரே அது உங்களுக்கு உகந்ததா இல்லையா என சொல்லமுடியும்.

ஆகவே நான் செயலாற்ற விரும்புபவர்கள் அனைவரிடமும் சொல்வது அந்த ’செயலை செய்யத் தொடங்குதலைத்தான்’. என் நண்பர் ஒருவர் வயலின் பயிற்றுநர். அவர் தன்னிடம் வயலின் பயில வருபவர்களிடம் சொல்லும் நிபந்தனை ஒன்றுண்டு. “வயலிலின் நல்ல ஓசையை எழுப்பக்கூட உங்களால் முடியவில்லை என்றாலும்கூட ஆயிரம் மணிநேரம் வாசித்துப் பயின்ற பின்னரே வயலில் பயிற்சியை மேலும் தொடரவேண்டுமா வேண்டாமா என்னும் முடிவை நீங்கள் எடுக்கவேண்டும். என்ன ஆனாலும் ஆயிரம் மணிநேரம் வாசிப்பேன் என உறுதிகொண்டீர்கள் என்றால் தொடங்குவோம்”

எச்செயலுக்கும் அதுவே நிபந்தனை. ஒரு செயல் உங்களுக்கு வாய்க்கிறது என்றால் அதில் அடிப்படைத் திறனாளராக ஆவதற்குத் தேவையான அளவுக்கு அதில் ஈடுபடுவேன் என ஓர் உறுதியை மேற்கொண்டபின் அதை எதிர்கொள்வதே ஒரே வழி. அது தேவையற்றது என்று முடிவெடுக்கக்கூட அந்த அடிப்படை பயிற்சியும், அதற்கான காலமும் தேவை. முதலில் கடும் ஒவ்வாமையை அளித்த செயல்கள், உள்ளே நுழையவே முடியாது என தோன்றிய செயல்கள், மெல்லமெல்ல உங்களை பைத்தியம் பிடிக்கச்செய்து மூழ்கடிப்பதைக் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையே அது என ஆவதை அறிவீர்கள்.

அவ்வாறு செய்லொன்றை செய்வதற்கான வழிமுறைகள் சில உள்ளன.

அ. அச்செயலை நீங்கள் ஒரே மூச்சில் முழுமையாகச் செய்யப்போவதில்லை. நீங்கள் அதை துளித்துளியாகவே செய்யப்போகிறீர்கள். அந்த துளியை மட்டும் கருத்தில்கொண்டு அதை முழுமையாகச் செய்ய முயலுங்கள். 25000 பக்க வெண்முரசு என்னால் எழுதப்படவில்லை. ஒவ்வொரு நாளும் முழு ஈடுபாட்டுடன் ஓர் அத்தியாயம் எழுதப்பட்டது அவ்வளவுதான்.

ஆ. ஒரு செயலைச் செய்யும்போது அதில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும் ஒரு சிறு வெற்றி அமைவதுபோலப் பார்த்துக்கொள்ளுங்கள். சிறிய வெற்றிகளே பெரிய சாதனைகளுக்கான ஊக்கத்தை அளிப்பவை

ஆ. செயல்கள் மேல் ஒவ்வாமை உருவாக விடாதீர்கள். ஒரு செயலை ஒத்திப்போட்டால் குற்றவுணர்ச்சி அடைவீர்கள். அக்குற்றவுணர்ச்சியால் மெல்ல மெல்ல அச்செயல் மேல் ஒவ்வாமை கொள்வீர்கள்.அச்செயலை  நினைக்கவே மறுப்பீர்கள் அது அச்செயலைச் செய்வதை கடினமானதாக ஆக்கும்.

இ. செய்தாகவெண்டிய செயலை செயற்கையாக இனிதாக ஆக்கிக்கொள்ளலாம். என் வழக்கம் அது. செய்தே ஆகவேண்டிய, கொஞ்சம் சலிப்பூட்டும் வேலை என்றால் அதனுடன் சின்னச்சின்ன இனிமைகளை இணைத்துக் கொள்வேன். அதனுடன் ஒரு குறிப்பிட்ட வகை காபி அருந்துவேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்வேன். ஒரு குறிப்பிட்ட பாட்டை கேட்டுவிட்டு ஆரம்பிப்பேன்.

உ. அச்செயலைப் பற்றி நீங்களே பாராட்டி, மகிழ்ந்து ஒரு குறிப்பு எழுதிக்கொள்ளுங்கள். அச்செயல் ஒரு தன்னூக்கப்படுத்தலாக அமைவதைக் காண்பீர்கள்.

Passion என ஒன்று இல்லை என நான் சொல்ல மாட்டேன். என்னால் ஒரு வணிகத்தைச் செய்து நிறைவடைய முடியாது. (ஆனால் செய்தால் அதை முழுமையாகவே செய்து வெல்வேன். என் செயல்கள் எதையும் நான் சோர்ந்து கைவிட்டதில்லை). என் அகவிழைவு இருப்பது இலக்கியத்தில், அறிவார்ந்த செயல்பாட்டில். இதை நான் ‘கற்பனை செய்து’ கண்டுபிடிக்கவில்லை. ’செயலாற்றி’ கண்டுபிடித்தேன்.

ஆனால் தன் passion என்பது எங்கோ உள்ளது, அதைக் கண்டடையும் வரை செயலேதும் ஆற்றமாட்டேன் என்பவர்கள் அந்த அகவிழைவையும் கண்டடையப்போவதில்லை. ஏனென்றால் செயல்வழியாகவே அதைக் கண்டடைய முடியும். ஒரு செயலில் இருந்தே அச்செயலுக்கு செல்லமுடியுமே ஒழிய செயலின்மையில் இருந்து சென்றடைய முடியாது. செயலாற்றாமல் இருக்கும் ஒருவரின் அருகே அவருடைய செயற்களம், அவருடைய passion காத்திருந்தாலும் அவரால் அதைக் கண்டடைய முடியாது.

செயலில் தீவிரமாக ஈடுபடாமல் பல செயல்களில் தொட்டுத் தொட்டுச் செல்பவகள் பலர் உண்டு. அதி தீவிரமாக இறங்கிவிட்டு அதேவிசையில் ஆர்வமிழந்து அடுத்ததற்குச் சென்றுவிடுபவர்கள் உண்டு. இரு சாராரையும் ‘தாவுநர்’ (Shifter) என ஆங்கிலம் வரையறுக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்களை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என் இளமையில் நான் அறிந்த பலர் அத்தையவர்கள். அவர்கள் இன்று எதையுமே அடையாதவர்களாக, எதையுமே செய்யாதவர்களாக, உளம்கசந்தவர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கச் சூழலில் இந்த தாவுநர்கள் மிக அதிகமாக ஆகிவிட்டனர். வெவ்வேறு துறைகளுக்கு தாவ அங்குள்ள சூழலும் அனுமதிக்கிறது. அவர்களை உத்தேசித்து எழுதப்பட்ட நூல் அது. இங்கும் ஒரு சாராருக்கு அது பரிந்துரைக்கத் தக்கதே.

இங்குள்ள சிக்கல்கள் சற்று வேறுபட்டவை. இங்கே ஒரு துறையில் ஈடுபட்டபின் இன்னொன்றுக்குச் செல்வது எளிதல்ல. ஆகவே தாவுநர்கள் சூழலாலேயே கட்டுப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும் அலைதல், வெறுமே நாட்கடத்தல் இந்த தலைமுறையில் மிகுதி. அவர்களுக்கு இது உதவலாம்.

இந்தியச் சூழலில் இன்னொன்றும் உண்டு. இங்கே ஒருவர் தன் அகம்விழைந்த ஒன்றைச் செய்து உலகியல் வாழ்க்கையை நடத்த முடியாது. ஓர் எழுத்தாளன் எழுதி வாழமுடியாது. பாடியோ நடித்தோ இங்கே வாழமுடியாது. ஆகவே அவர்கள் வேறொன்றை தொழிலாகச் செய்தாகவேண்டும். அச்செயலை வெறுத்தபடிச் செய்தால் அது பெருந்துன்பம். அதில் தோல்வியும் அமையும். அதை விரும்பிச் செய்தாகவேண்டும். அதற்குரிய உளநிலையை உருவாக்கிக்கொள்ள இந்த வழிகாட்டுதல் உதவலாம்.

ஒருவர் தன் தொழிலை வெற்றிகரமாகச் செய்ய அதில் ஈடுபாடு கொள்வது அவசியம். அதற்கு அப்பால் அவர் தனக்குரிய முறையில் தன் அகவிழைவுகளை நாடி அதில் ஈடுபடவும் செய்யலாம். என்றாவது தொழிலை விட்டு முழுமையாக அகவிழைவை தொடருமளவுக்கு பொருளியல் சூழல் நம்பிக்கை அளிக்குமென்றால் அதைச் செய்யலாம்.

“என் தன்னறம் என்ன?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை இன்னொருவர் சொல்ல முடியாது. நீங்கள் உங்கள்முன் வரும் செயல்களில், நீங்கள் செய்யக்கூடும் செயல்களில், முழுமையான தீவிரத்துடன் ஈடுபடுங்கள் என்றும் செயல்வழியாக கண்டடைவீர்கள் என்றும் நான் பதில் சொல்வேன்.

ஜெ

கேண்மை தேரல்

நம்மை நாம் மீட்டெடுத்தல்

இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள்

மீள்தல், அமிழ்தல்

தொடங்காமையில் இருத்தல்

நாம், நமது உள்ளம்

முந்தைய கட்டுரைஎன்.ஸ்ரீராம்
அடுத்த கட்டுரைபாவண்ணன் சந்திப்பு, பதிவுகள்