மீள்தல், அமிழ்தல்

வணக்கம் ஜெயமோகன் சார்,

உங்களை சந்திக்காத உங்களிடம் தொடர்பில் இல்லாத வாசகனை பற்றியது இக்கடிதம். ஜூலை 15 – ஆம் தேதி நாற்பது வயதில் இறந்துவிட்டான்.

’ரத்தமும் சதையுமா மனச பிச்சு வீசி, எங்கயோ இருட்டான குழிக்குள்ள தள்ளிவிட்டு அவ்வளவுதான்னு நெனைக்கும் போது ஒரு சொட்டு வெளிச்சத்த காட்டி எந்திரிச்சு வா -ன்னு சொல்ற மாதிரி இருக்கும் இந்தாள் எழுதுற எல்லா கதையும்’ என்று என்னிடம் உங்களைப் பற்றிய அறிமுகத்தை  இப்படித்தான் கொடுத்தான் என் அண்ணா அமர் .

அவனுடைய அறையில் நிறைய புத்தகங்களை வைத்திருந்தான்.‌ அப்போது வரை வெளியாகியிருந்த உங்களுடைய அனைத்து புத்தகங்களும் அதில் அடக்கம். ஆனால் நான் கேட்கும் போது , ’நீ மொதல்ல சங்கச் சித்திரங்கள் படி, ஜெயமோகன புரிய ஆரம்பிக்கிறதுக்கு இந்த புக் ஒரு நல்ல தொடக்கம். இதிலேயே அந்தாள் எழுதின எழுதப்போற எல்லா கதைகளுக்கும் கரு இருக்கும். இத முடிச்சிட்டு அந்தாளோட எல்லா புக்ஸ்ம் படிச்சு முடி உன்னால அந்த சிலந்தி வலைய பாக்க முடியும்’ என்றான்.

சங்கச்சித்திரங்கள் என்ற புத்தகத்தை நான் 2014-ல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்‌போது படித்தேன். அப்போதே அமர் அண்ணாவிற்கு குடிப்பழக்கம் அதிகமாகியிருந்தது. அவன் புத்தகங்கள் படிப்பதை நிறுத்தியிருந்தான். அவனிடமிருந்த புத்தகங்களையெல்லாம் மொத்தமாக  எரித்துவிட்டு அழுதான். ‍இரண்டு நாட்களுக்குப் பிறகு திரும்பவும் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை வாங்கி வந்தான்.

’அம்மிணி , அருணாச்சலம் எப்படியோ ஒரு சொட்டு வெளிச்சத்த கண்டுபிடிச்சு வெளிய ஓடி வந்துட்டான். ஆனா வீரபத்திரபிள்ளையால முடியலையே! நீ ஏன்னு யோசிச்சு பாத்திருக்கியா?’ என்றான்.  உலகையே இரண்டாக கிழித்து விடுபவனின் பலத்தை கொண்டு புத்தகத்தை கிழித்து வீசி திரும்பவும் அழுதான்.

நான் உங்களுடைய வாழ்க்கையை கூட உதாரணமாக கூறிப் பார்த்தேன். ’அவருக்கும் அம்மா, அப்பா இறந்த அப்புறமும் அவரு நல்லபடியா வாழறாரு தானே?” என்றெல்லாம். ‘அம்மா, அப்பா இறந்திருந்தால் கூட  துயரத்திற்கும், துக்கத்திற்கும் ஆட்பட்டு அதிலிருந்து வெளியே வந்திருக்க முடியும். ஆனால்  அவங்களோட வாழ்க்கை பெரிசுன்னு  தனித்தனியாக போயிட்டவங்க,  நான் என்னிக்குமே வெளியே வரமுடியாத  சுயபச்சாதாபத்திலேயே தவிக்க விட்டுட்டாங்க’ என்றான்.

’அம்மிணி இந்த விஷ்ணுபுரத்தில வர்ற அஜிதன் மாதிரி யாருமில்லாமல் தனிமையில் உயிர் போகறது நல்லதுன்னு நெனைக்கிறேன்’ என்றான் ஒரு முறை. ’ஆனா எனக்கு வாழணும்னு ஆசையா இருக்குது’ என்றும் கூறினான்.அவனால் துறவறத்தை மேற்கொள்ள முடியாத அளவிற்கு உலகியில் பற்று அதிகமாகவே இருந்தது. வாழ வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

’இந்த பிரான்ஸிஸ் மாதிரி நான் என்னிக்காச்சும் வாழ்க்கையில எதையாவது ஒண்ண சட்டென புடிச்சுக்கிட்டு மீண்டு வந்துரணும்னு ஆசையா இருக்குது’ என்றான். நானும் அப்படி ஏதாவது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தேன்.

எம்.ஏ கார்ப்ரேட் சோஸியாலஜி படித்தான். ஒரு என்.ஜி.ஓ- வில் வேலைக்கு சேர்ந்தான். அங்கு நடந்த வியாபாரங்களை ஏற்றுக்கொள்ள  முடியாமல் வேலையை விட்டுவிட்டு குடியை அதிகப்படுத்தினான்.  இரப்பர் நாவலில் வரும் பிரான்ஸிஸ் , பின் தொடரும் நிழலின் குரலில் வரும் வீரபத்திரபிள்ளை , அருணாச்சலம் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்ததாக வாழ்ந்தவன் அமர் அண்ணா .

பிரான்ஸிஸை போல செல்வ செழிப்பான வீடு, பெற்றோர்களின் மேல் வெறுப்பு, திருமணம் செய்து கொள்ளவில்லை சுற்றியிருக்கும் போலிப் பாவனைகளை கண்டு எரிச்சல். ஏதோ ஒன்றை அவன் தேடிக் கொண்டே இருந்தான். வீரபத்திரபிள்ளையை போல வேண்டுமென்றே தன்னுடைய அறிவை அழித்துக் கொண்டு தெருவோரமாக குடித்து படுத்து கிடந்திருக்கிறான். அறிவை அழிப்பதன் மூலம் தன்னை மீட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணியிருந்தான். பெற்றோர்களை பழி வாங்கிவிட்டதாக எண்ணினான்.

அருணாச்சலத்தை போலவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடலும், உளமும் தேறி வந்தான். அமர் அண்ணா தன்னை மீட்டுக் கொள்வதற்குள் அவனுடைய உலகம் முற்றிலும் மாறிப் போயிருந்தது. முப்பத்தைந்து வயதை அடைந்திருந்தான். அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் வளர்ந்திருந்தனர். திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு வீட்டில்  எப்போதுமே மரியாதை இருப்பதில்லை. சொந்த வீட்டிலேயே அவனால் முன்பு போல அதிகார தோரணையில் வலம் வர முடியவில்லை.

ஊர் ஊராக சுற்றி வந்தான். கூடலூரில் அவனுக்கான புதிய அமைதியான உலகை அமைத்துக் கொள்ள முடியும் எனத் தோன்றியிருக்கிறது போல. அங்கேயே ஐந்தாண்டுகளாக இருந்தான். யுனிவர்சிடி கோல்ட் மெடல் வாங்கியவன் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு உரிமையானவன், அங்கே இருந்த ஒரு லாட்ஜில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து வீடு வீடாக பினாயில் விற்கும் வேலையை செய்து வந்திருக்கிறான். இதைக் கேட்கும் போது நெஞ்சு விம்மி விம்மி அழுகையாக வந்தது.

யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை. அவனைப் பற்றிய விவரங்கள் ஏதும் எங்களுக்கு தெரியவில்லை. அவனுடைய நண்பர்களிடம் கூட பேசுவதில்லை. எங்கேயோ உயிரோடு இருக்கிறான் என்பதே எங்களுக்கு ஒரு நிம்மதியை தந்து கொண்டிருந்த நேரத்தில் அவன் இறந்த செய்தி ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது.

கூடலூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஏதோ ஒரு மூலையில் அனாதை பிணமாக கிடந்தவனை ஓடிச்சென்று மார்போடு அணைத்துக் கொண்டு அழுவதை  தவிர எங்களால் ஏதும் செய்யமுடியவில்லை.

தனிமை அவனை என்னவெல்லாம் செய்திருக்குமோ என்று கற்பனைகள் செய்தே அழுது தீர முடியவில்லை. அவனுடைய அறையில் புத்தகங்கள் ஏதும் இல்லை. அவன் எதைத் தேடிக் கொண்டு அங்கு வாழ்ந்தான் என்பதும் தெரியவில்லை. அங்கிருக்கும் ஜோசியக்காரரிடம் அவனுடைய ஜாதகத்தை எடுத்துசென்று பார்த்திருக்கிறான். உலகியலின் ஆசை அவனுக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது என்றே நினைத்து அழுகிறேன். வாழ வேண்டும் என்ற ஆசையில் இருந்தவனை ஏன் கடவுள் இவ்வாறு செய்ய வேண்டும்? அவன் குடித்துவிட்டு தெருவோரமாக படுத்திருந்த போதெல்லாம் நடக்காத விசயம் வாழ ஆசைப்படும் நேரத்தில் ஏன் நடக்க வேண்டும்? ஏன் இப்படி ஒரு வாழ்க்கையை கடவுள் தர வேண்டும்? குடும்பம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பெற்றோர்களின் புறக்கணிப்பு இருந்தாலும், இன்னமும் மூன்று தலைமுறை அமர்ந்தே உண்ணும் அளவிற்கான செல்வம் இருந்தும், நல்ல கல்வி இருந்தும், புத்தகங்கள் வாசிக்கும் அறிவு இருந்தும், அமர் அண்ணா வாழ்க்கையில் ஏன் இப்படி இருந்தான்?

கல்வியறிவு மறுக்கப்பட்டு வறுமையில் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள் கூட எப்படியோ வாழ்வில் மேலே வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் போது ஏன் அமர் அண்ணாவால் வாழ முடியவில்லை.

அமர் அண்ணாவிற்கு இருந்த அலைக்கழிதல் எனக்குமே இருந்தது. மற்ற அண்ணன்களும், அக்காக்களும் குடும்ப விசயங்களை எளிதாக எடுத்துக் கொண்ட அளவிற்கு என்னாலும் , அமர் அண்ணாவாலும் முடியவில்லை. ஆனால் காதல் என்ற ஒரு சொட்டு வெளிச்சத்தை இறுகப்பற்றிக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். அமர் அண்ணாவிற்கும் காதல் இருந்தது, ஆனால் அவனுடைய குடிப்பழக்கம் காரணமாகவே அதையும் இழந்தான். ஆண்களுக்கு உரித்தான  சமூக ஏற்றுக் கொள்ளுதலான குடியும், சிகெரெட்டையும் பயன்படுத்தி தான் துக்கத்தை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியுமா?

எதை எதையோ நினைத்து அழுகிறேன்! வெறும் மனித உணர்ச்சிகளுக்காக ஒரு மனிதனின் வாழ்வு இருக்கிறதா? எதற்காக இத்தனை குழப்பங்கள் வாழ்வில்? மனிதர்கள் ஏன் உறவுகளின் சிக்கல்களில் மீள முடியாமல் மடிகிறார்கள். உறவுகள் ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது?வாழ்வின் பொருள் தான் என்ன?

நம் வாழ்க்கை நம்முடைய பொறுப்பு என்று புரிகிறது. ஆனால் அது எந்த வயதிலிருந்து நம்முடைய பொறுப்பாக மாறுகிறது? சுற்றி நடக்கும் சம்பவங்களால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி?

நான் அமர் அண்ணாவை பற்றி நினைப்பதையே, திருமணத்திற்கு பிறகான இந்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தியிருந்தேன். அவனுக்குள் இருக்கும் இருளை நினைத்து பயந்தே வலுக்கட்டாயமாக அவனை மறந்திருந்தேன்.

எந்த செயல்களிலுமே ஈடுபடாத தன்னிரக்கம் மட்டுமே ஆட்டிப்படைத்த உங்களுடைய வாசகனை அவன் இறந்த பிறகே உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.

உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள மனோபாரதி,

இவரைப்போல மாய்ந்த மூன்றாவது வாசகர் இவர். முன்பு மகிழவன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டிருந்த ஒருவர். கார்த்திக் தமிழன் என்னும் இன்னொரு வாசகர். அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதில் உச்சகட்ட உணர்வுநிலைகளில் ஏறியிறங்கிக்கொண்டிருந்தார்.

ஏதேனும் வகையில் தனிமைப்பட்டவர்கள்தான் தனிப்பட்ட கடிதங்களை எழுதுகிறார்கள். அவர்களின் சிக்கல்கள் பலவகைப்பட்டவை. அந்தரங்கமானவை. சமூகத்தின் பொதுவான அணுகுமுறையால் தீர்த்துவைக்கப்பட முடியாதவை. சமூகத்தின் பொதுப்போக்கினருக்குப் புரியாதவையும்கூட. ஆயினும்கூட எனக்கு எழுதுபவர்களில், என் வாசகர்களில் இவ்வாறு நிகழ்வது மிக அரிது. எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஆயினும் இது துயரளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் அரியவர்கள். ஒவ்வொருவரும் எனக்கு முக்கியமானவர்கள்.

*

நீங்கள் சொன்ன நண்பரின் சிக்கல் என்ன என்று இனி நம்மால் அறியமுடியாது. ஆனால் அவரைப் போன்றவர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் அவரைப் போன்றவன். அவரைப்போன்றவர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன்.

இந்த உலகியல் வாக்களிக்கும் இன்பங்கள் எதிலும் பெரிய ஈடுபாடு அவருக்கு இருந்திருக்காது. உணவு, ஆடை, ஆடம்பரங்கள், நுகர்பொருட்கள் எதுவும் உடனடியாகச் சலிப்பை அளித்திருக்கும். அவற்றில் திளைப்பவர்களுடன் நெருங்க முடிந்திருக்காது. தான் ஒருபடி மேலானவன் என அவர் அறிந்திருப்பார். அறிவார்ந்த தீவிரம் ஒன்றே அவருக்கு மெய்யான இன்பத்தை அளித்திருக்கும். எங்கோ ஒரு தீவிரப் பங்களிப்பை ஆற்றினாலொழிய அவர் நிறைவடைந்திருக்க மாட்டார்.

ஆனால் தனக்குரிய களம் எது, செயல் எது என உணர்ந்திருக்க மாட்டார். அப்படியொன்று அமையும் என்னும் கனவு இருந்திருக்கும். அதை கண்டடைந்திருக்க மாட்டார். வேறுவேறு வாழ்க்கைகளைக் கனவுகண்டு, அக்கனவுகளை அந்தரங்கமான மீட்டலாக வைத்துக்கொண்டு, தனிமையில் இருந்திருப்பார். நானும் அவ்வாறு இருந்துள்ளேன். நான் என்னை மீட்டுக்கொண்டேன். எனக்கு என் ஆசிரியர்கள் உதவினர்.

இந்த விலக்கநிலை உருவாக்கிய தனிமையும் உளச்சோர்வும்தான் அமர் அவர்களின் நோய்.  தனிமை உளச்சோர்வை வளர்க்கிறது. உளச்சோர்வு தனிமையை உருவாக்குகிறது. அது ஒரு நச்சுவட்டம். அதனுடன் குடி இணைந்துகொண்டால் அது மிக அபாயகரமானது. அதை உடைத்து வெளியேறியாகவெண்டும். அவரால் இயலவில்லை.

ஆனால் அது இயன்றிருக்கும். உறுதியாகவே வென்றிருக்கலாம், நிறைவுற்றிருக்கலாம். அவர் அதற்கு முயன்றிருக்க வேண்டும். அவருக்கு ஒரு வெளியுதவி, ஒரு வழிகாட்டுநரின் உதவி இருந்திருந்தால் போதும். குடி ஒரு பிரச்சினைதான். அது உள்ளமும் உடலும் இணைந்த சிக்கல். ஆனால் அதற்கு மிகச்சிறந்த மீள்வழிகள் இன்றுள்ளன. நிறுவன உதவிகள் உள்ளன. அதற்குரிய உளநிலையை அடைந்தால் போதுமானது.

அத்துடன் இன்னொன்று, அவர் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும். அது மிக இன்றியமையாதது. ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமலிருக்கவேண்டும் என்றால் ஆழமான அறிவுறுதியும், தீவிரமான வேறு ஈடுபாடுகளும் கொண்டவராக இருக்கவேண்டும். பிறர் தேவைப்படாத ஆளுமை கொண்டவராக இருக்கவேண்டும். அத்தகையவருக்கு இந்தவகையான உளச்சோர்வுகள் எழாது. மற்றவர்கள் திருமணம் செய்துகொள்வதே பெரும்பாலான சிக்கல்களைத் தீர்திருக்கும். மனைவி மட்டுமல்ல, குழந்தைகள் அளிக்கும் வாழ்க்கை விருப்பம் என்பது மிகமிக அரிய ஒன்று. அமர் சொன்னது அதையே. அருணாச்சலத்திற்கு மகள் இருந்தாள், மனைவி இருந்தாள். வீரபத்ரபிள்ளைக்கு அவர்கள் இல்லை.

*

உளச்சோர்வு நம் காலகட்டத்தின் பொது நோய். இன்று நம் சூழலில் உளவியல் ஆலோசனை மையங்களும் ஏராளமாக உள்ளன.சென்னை, கோவையில்தான் உளச்சோர்வு மிக அதிகம் என நினைக்கிறேன்.  அவற்றின் தொழிற்சூழல் மையக்காரணமாக இருக்கலாம். தொடர்ச்சியான, திரும்பத் திரும்பச் செய்யப்படும் கடும் உழைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கோவையில் எல்லாம் காலை வேலைக்குப் போனால் இரவுதான் திரும்பமுடியும் எனும் சூழல் உள்ளது.

கனவு காண்பவர்கள், இலக்கிய வாசகர்கள் நடுவே உளச்சோர்வு மிகுதி என்பது ஒரு பொய்யான நம்பிக்கை. உண்மையில் ஒப்புநோக்க உளச்சோர்வு என்பது வாசிப்பவர்கள், இசைகேட்பவர்கள் நடுவே குறைவாக உள்ளது. ஏனென்றால் தங்களைத் தாங்களே அவதானிக்க அவர்களால் இயல்கிறது. அவர்கள் சொந்தமாகச் சிந்தித்து தங்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடிகிறது.பலருக்கு தன்னம்பிக்கை நூல்கள், ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் நூல்கள் உதவியாக இருப்பதை சொல்லியிருக்கிறார்கள்.

வாசிப்பு ,சிந்தனை பழக்கம் அற்றவர்கள்தான் இங்கே பெரும்பாலானவர்கள். உழைப்பை மட்டுமே அறிந்தவர்கள் . அவர்கள் தங்கள் உளச்சோர்வை அறிவதே இல்லை. அதை கடக்கவும் அவர்கள் முயல்வதில்லை. தொழிற்சூழலில் அப்படி உளச்சோர்வடைந்தவர்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நாமறிந்த இலக்கியச் சூழலில் உளச்சோர்வு ஒரு சதவீதம் என்றால் தொழிற்சூழலில் அது முப்பது சதவீதம். அதிலிருந்து தப்ப அவர்களறிந்ததெல்லாம் குடி மட்டுமே.

அவர்களில் ஒருசாரார் ஒரு கட்டத்தில் ஆன்மிகத்தை நாடுகிறார்கள். சிலர் சில நவீன ஆன்மிக மையங்களைச் சென்றடைகிறார்கள். அப்படி நம்பிச் செல்பவர்களில் பெரும்பாலானவர்களை அந்த ஆன்மிக மையங்கள் மீட்டுவிடுவதையும் காண்கிறேன். ஏனென்றால் அவை மரபான ஆன்மிகக்குறியீடுகளை பயன்படுத்தி அவர்களின் ஆழுள்ளத்துக்குள் ஊடுருவுகின்றன. அவர்களுக்கு பெருந்திரளான அமைப்பு ஒன்றை அளித்து அவர்களை திரளிலொருவராக உணரச்செய்கின்றன. தங்களுக்கு ஆசிரியர் எனும் பிம்பம் துணை இருப்பதாக, தெய்வம் உடனிருப்பதாக எண்ணச்செய்கின்றன. அந்த அணுகுமுறை அவர்களை மீட்கிறது.

(இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு கோவை வட்டாரத்தில் ஏராளமான போலி ஆன்மிகவாதிகள், போலி மருத்துவச் சிகிழ்ச்சையாளர்கள் பெருகியிருப்பதையும் காண்கிறேன்)

என்ன சிக்கலென்றால், வாசிப்பினூடாகவும் தன்னை மீட்டுக்கொள்ளமுடியாதவர்கள் பலர் உண்டு. அவர்களுடைய அகங்காரம் மிக வலுவானது. ஆகவே அவர்கள் இன்னொருவரை நாடுவதில்லை. அவர்கள் தங்கள் தனிமையை ஒரு தனித்தன்மையாக எண்ணி அதைப் பேணிக்கொள்ளவே முயல்கிறார்கள். உங்கள் அண்ணன் எனக்கு ஒரு கடிதமெழுதுவதைக்கூட அகங்காரச்சிக்கலாக எண்ணியிருக்கிறார் அல்லவா?

நம் சூழலிலுள்ள உளஆலோசகர்கள் அமர் போன்றவர்களுக்கு உதவ முடியாது. அமர் அவர்களைவிட வாசிப்பும் சிந்தனையும் கொண்டவர். அவருக்கு அவர்கள் புதியதாக எதையும் சொல்லிவிட முடியாது. அத்துடன் அமர் ஆழ்ந்த நுண்ணுணர்வு கொண்டவர். கலையுள்ளம் வாய்த்தவர். அவருடைய சிக்கல்களை பொதுவான உளவியலாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. நம் உளவியலாளர்களில் கலையிலக்கிய அறிமுகம் கொண்டவர்கள் மிகமிக அரிதானவர்கள்.

அமர் இருந்த அத்தனிமையே அவரை அழித்தது. எவரானாலும் அத்தனிமையை உடைத்து வெளியேறியாகவேண்டும். இணையான உளம்கொண்ட நண்பர்கள், தொடர்ச்சியான ஆக்கபூர்வச் செயல்பாடுகள் ஆகிய இரண்டுமே மீள்வதற்கான வழிகள். அதைக் கண்டடைய வேண்டும். அதற்கு அவர் முன்வந்திருந்தார் என்றால் மீண்டிருக்கலாம். என் எழுத்துக்கள் வழியாக அப்படி மீண்ட நூறுபேரையாவது நான் சுட்டிக்காட்ட முடியும்.

அடிப்படை வாழ்க்கைக்கான பொருளியல் பின்புலம் கொண்டவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். விரும்பியவற்றைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். பெரிய இலட்சியங்களை நோக்கி தன்னை செலுத்தியிருக்கலாம். அதற்கு அவர் தன் வாசல்களை கொஞ்சம் உள்ளிருந்து திறந்தாகவேண்டும்.

நம் சூழலில் இரண்டுவகை இலக்கியப் போக்குகள் உள்ளன. ஒன்று ஏதேனும் அரசியல் தரப்பைச் சேர்ந்து திரளும் தரப்பு. அங்கே மெய்யான வாசகர்களுக்கு இடமில்லை. கூச்சலிடும் கும்பலே தேவை. நுண்ணுணர்வுள்ளோர் அங்கே செல்லமுடியாது. அங்கே திரள்பவர்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறை மனநிலைகளுக்குச் செல்வார்கள். காழ்ப்பைக் கொட்டுபவர்கள் மெல்லமெல்ல தாங்களும் உளச்சோர்வு நிலையை அடைவார்கள்.

இன்னொரு பக்கம், நவீன இலக்கியச்சூழல். அதில் பெரும்பகுதி வாழ்க்கையில் வெவ்வேறு வகையில் ஒதுக்கப்பட்டவர்களால்  அல்லது ஒதுங்கிக் கொண்டவர்களால் எழுதப்படுவது. தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும்பகுதி உளச்சோர்வை வெளிப்படுத்தும் எழுத்துக்களே. உலகியல் ஆசைகள் மறுக்கப்பட்ட மனிதர்களின் கற்பனைகளும் , சோர்வுகளும், கசப்புகளும் என அவற்றை ஒட்டுமொத்தமாக வரையறை செய்யலாம்

ஆகவே அது இயல்பானதே. ஒரு சூழலில் ஓங்கியுள்ள மனநிலை இயல்பாக அந்தச் சூழலின்  இலக்கியத்திலும் இருக்கும். நம் சூழலில் உள்ள சோர்வு இலக்கியத்தில் மேலும் கூர்மையாக உள்ளது. சூழலைக் கடந்து, தனக்கான தரிசனத்தை முன்வைப்பவர்கள் மிக அரிதான எழுத்தாளர்களே. அவர்களையே நான் முதன்மைப் படைப்பாளிகள், காலம்கடந்தவர்கள் என மதிப்பிடுவேன்.

ஆகவே நம் சூழலில் இலக்கியவாசிப்பு சட்டென்று மேலும் சோர்வுக்குக் கொண்டுசெல்லக் கூடியதாகவே உள்ளது. அச்சோர்வில் இருந்து மீண்டு, எனக்கான தரிசனத்தைக் கண்டுகொண்டு, அதை முன்வைக்கவே நான் எழுதுகிறேன். அவை வேறொரு வாழ்க்கைப் பார்வையை அளிப்பவை. பல்லாயிரம்பேருக்கு அவை நம்பிக்கையின் வழியைச் சுட்டிக்காட்டுவதை அறிவேன்.

உலகியல் லாபம் கருதாத செயல் ஒன்றை நம்பிப் பற்றிக்கொள்ளுதல், அந்த இலட்சியவாதத்தை அன்றாட வாழ்வெனக் கொள்ளுதல், அதற்குரிய நண்பர்குழாமை அமைத்துக் கொள்ளுதல், அதற்குரிய வழிகாட்டுநர்களைக் கொண்டிருத்தல் ஆகியவை மெய்யாகவே இன்று நம்மைச்சூழும் பெரும் சோர்விலிருந்து அகன்று வாழ்வை நிறைவுறுத்துவதற்கான வழிகள். 

ஆனால் அவ்வழியை தலைக்கொள்ள ஒருவர் தன்னளவில் ஒரு காலடியையாவது எடுத்து வைக்கவேண்டும். அந்த உந்துதலை அளிக்கவே திரும்பத் திரும்ப இக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். அவை இலவச நூல்களாகவே வினியோகிக்கப்படுகின்றன.

அவ்வாறு ஓர் அடி எடுத்து வைப்பவர்களுக்கு உதவும்பொருட்டு முகாம்கள் நடத்தி மெய்யான நிபுணர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஊக்கமூட்டும் சூழலை அளிக்கிறேன். தமிழிலக்கியச் சூழலில் எந்த எழுத்தாளரும் இவற்றைச் செய்ததில்லை. நான் என்னை எழுத்தாளர் என்று மட்டும் எண்ணிக்கொள்பவன் அல்ல.

ஆனாலும் ஒருவரின் ஊழை அவரே கூட தீர்மானிக்கமுடியாதென்றும் அறிவேன். செய்யவேண்டிய ஒன்றை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமலிருக்க ஒருவருக்கு தோன்றுவதுகூட ஊழ்தான். நாம் செய்யவேண்டியவற்றைச் செய்துகொண்டே இருப்போம் என எண்ணிக்கொள்கிறேன்.

ஜெ

தொடங்காமையில் இருத்தல்

நாம், நமது உள்ளம்

முந்தைய கட்டுரைதம்பிமார் கதை
அடுத்த கட்டுரைதியானம் -உளக்குவிதல் பயிற்சி