ஆலயக்கலைப் பயிற்சியும் சிற்பியும்

பேரன்புள்ள ஜெ!

வணக்கம்.

நான் சிற்பி பா.கா.முருகேசன், தச்சுக்கலையும், திருத்தேர்க்கட்டுமானமும் எங்கள் குலத்தொழில். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட எனக்கும், இலக்கியத்துக்குமான தொடர்பு என் சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கும், மழைக்குமான அளவே.ஜெயகாந்தனும், ஜெயமோகனும் வேறு வேறு என்பதையே தங்கள் தீவிர வாசகரான ,நண்பர் ரதீஷ் வீட்டு புத்தக அலமாரியிலும், தங்களை வசைபாடி பகிரப்பட்ட இடதுசாரி நண்பர்களின் முகநூல் பதிவிலும் பார்த்தே தெரிந்து கொண்டேன். காரணம் மரமும், தச்சுக் கருவிகளும் தவிர மற்ற அனைத்தும் பிழைப்பை கெடுத்து விடும் என்று இன்றும் உறுதியாக நம்பும் என் தந்தையும், முதல் ஆசானுமான பா.காளிமுத்து ஆச்சாரி.

25 ஆண்டுகள் ஆகிவிட்டது, வழிவழியாக வந்த அறிவைக்கொண்டு ஓரளவு படைத்திருப்பதாக நம்புகிறேன். எங்கள் வகையறாவில் கடைசி கலைஞனாக நான் மட்டுமே தற்போது எஞ்சி நிற்கிறேன். என் மீதான தந்தையின் பிடி தளர்ந்து தசாப்தம் ஆகிவிட்டது.

ஏதோ உறுத்தல், திருப்தியின்மை, சலிப்பு, பழைய படைப்பு போன்று நம் படைப்பு உயிரோட்டமாக இல்லையே என்ற சுய பரிசீலனை, ஒரு கட்டத்தில் நாம் மரச்சிற்ப கலைஞர்தானா? என்ற சந்தேகம், சடலத்தோடா சல்லாபிக்கிறோம் என்ற குற்ற உணர்வு என்னுள் பெரும் கலகம் செய்யத் தொடங்கியது.

சிற்பக்கலையின் மூலமான சிற்ப சாஸ்திரங்களை தேடிக்கண்டுபிடிப்பது அகழ்வாராய்ச்சின் பிரயத்தனமாகவும், அதனை படிப்பது அதை விட சவாலாக  இருந்து. மூத்த சிற்பிகளும் ஸ்தபதிகளும் உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு உதவி கேட்டுப் போன எனக்கு பரிதாபமும் ஏமாற்றமுமே மிஞ்சியது. பல மூத்த சிற்பிகள் ஏதோ ஏலியன்களை பார்ப்பது போல சிற்ப சாஸ்திரங்களை பார்த்தனர். பெரும்பாலானோருக்கு நானே அவற்றை அறிமுகம் செய்தேன். சாஸ்திர அறிவு கொண்ட சில மூத்த ஸ்தபதிகளோ சான் பிரான்சிஸ்கோ, டொரோன்டோ புரோஜெக்ட்களில் பிஸியாக இருந்தனர். இந்துசமய அறநிலைய துறையின் வெளியீடுகளையும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வெளியீடுகளையும் ஓரளவு நானே தட்டுத் தடுமாறி படித்திருந்த வேளையில் தான் நண்பர் ரதீஷ் வாயிலாக வெள்ளி மலை ஆலயக் கலை பயிற்சி முகாம் பற்றி அறிந்தேன். புத்துணர்வு முகாம் செல்லும் கோவில் யானை போல சங்கிலிகளை உதறி புறப்பட்டேன்.

ஆலயக் கலை பயிற்சி என்றால் நிறைய சிற்பிகள், ஸ்தபதிகள்  வருவார்கள், ஒரு தொடர்பும், தொழில் குறித்த பரஸ்பர பகிர்தல் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்ற என்னை வழக்கம் போல் என் குலத்தோர் தனித்து விட்டனர். அந்த கூடுகை முற்றிலும் வேறாக இருந்தது. பெரும்பாலானோர் ஐடி ஊழியர்கள், மருத்துவர், பொறியாளர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள், அல்லது இவர்களோடு நான் இங்கே என்ன செய்யப்போகிறேன் ஒரே குழப்பமாக இருந்தது. பின்பு ஓரளவு அனுமானிக்க முடிந்தது அவர்கள் அனைவரும் ரதீஷ் போலவே தங்கள் தீவிர வாசகர்கள் என்று. நான்கு ஐந்து பேராக கூடி தீவிரமாகவும், பரவசமாகவும் பேசிய வண்ணம் இருந்தனர். விஷ்ணுபுரம் என்றனர், வெண்முரசு 13 ம் பாகம் 14ம் பாகம் என்றனர் எனக்கு தலையே சுற்றியது.

வகுப்பு தொடங்குவதாக அறிவித்து மாலையிட ஒரு கற்சிற்பம் முன்பு கூடினோம். அருகே என்னை விட வளத்தியாக ஒருவர். அவர் தான் ஆசிரியர் எனவும் “பொன்னியின் செல்வனில் ” ஒர்க் பண்ணியதாக வழக்கத்தைவிட மெதுவாக கிசுகிசுத்தார்” ரதீஷ்.இது தமிழ்த்தாய் சிற்பமா?” என நான் ஜே.கே விடம் கேட்க “இல்லை சரஸ்வதி” என பதில். பதிலுக்கு நான் “வீணை இல்லாமல் எப்படி சரஸ்வதி” என்றேன். இப்படி முந்திரிக்கொட்டைத்தன கேள்விகளை மூன்றாம் நாள் வரை கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் என் பட்டறையில் நான் இருக்கும் சவுகர்யத்திற்கு நித்யவனம் எனக்கு பழகியிருந்தது.  ஒரு கட்டத்தில் கவிஞர் சாம்ராஜ் என் அண்ணனாகியிருந்தார், இன்னும் பலர் என் உறவுகளாகியிருந்தனர் மூன்று நாளும் என் பரவசத்திற்கு எல்லையே இல்லை. வரலாறு, பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், தொல்லியல் துறை ஆய்வுகள், ஆலயக் கட்டிடக்கலை பரிணாம வளர்ச்சி என்று ஜே.கே உருட்டி கொடுத்துத் கொண்டே இருந்தார். யானைப்பசி எனக்கு வேதாளமாக கேட்டுக்கொண்டே இருந்தேன் எல்லாவற்றிற்கும்  ஐந்தாறு கோணங்களில் பதில் இருந்தது அந்த விக்கிரமாதித்யனிடம்.அசாத்திய நினைவாற்றல், ஆழ்ந்த ஞானம் பிரம்மிப்பாக இருந்தது. ஒரு பெரிய வழிகாட்டுதல் கிடைத்தது. வாசிப்பின் வாயிலாக என் முன்னோருக்கும் எனக்கும் இடையே அறுந்து கிடக்கும் அறிவுக் கொடியை முடிந்துவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்தக்கலையையும், தங்களையும் இன்னும் ஆழமாக வாசிக்கவும்,

நேசிக்கவும்  துவங்கிவிட்டேன். பாழடைந்த திருக்கோயில் கதவு தங்களால் திறக்கப்பட்டிருக்கிறது ஜெ! அறிவொளி கருவறை வரை பாய்கிறது. தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்த வெளவால்கெளெல்லாம் பறந்து விட்டன.

நன்றி

பா.கா முருகேசன்

கோயமுத்தூர்.

*

அன்புள்ள முருகேசன்

நாங்கள் பயிற்சி வகுப்புகளை தொடங்கியமைக்குக் காரணமே இதுதான். நமக்கு இன்று நவீன முறையில் பயிற்றுவிக்கும் அமைப்புகளே இல்லை. மரபையும் மரபுக்கலைகளையும் கற்பிக்கும் பழையமுறை தேங்கி பயனற்றுப்போயிருக்கிறது. ஆகவேதான் தகுதியான புதிய ஆசிரியர்களைக் கண்டடைந்து இவ்வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம். இவற்றில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் அடையும் புதிய திறப்புகள் நிறைவூட்டுகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைசனாதனம், சனாதன எதிர்ப்பு
அடுத்த கட்டுரைஇலட்சியவாதம், கடிதம்