டோட்டோ சான், கடிதம்

டோட்டோ சான் வாங்க

வணக்கம் ஜெயமோகன் சார்,

 ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த டோட்டா-சான் என்ற சிறுமி, பேப்பரில் வரைய ஆரம்பித்து அது நீளமாக செல்லும் போது அதற்கு கீழே வரையாமல் தொடர்ந்து மர மேசையில் வரைந்து முடிக்கிறாள். இதைப் போன்ற பல காரணங்களுக்காக ஆசிரியரிடம்  தண்டனை பெற்று பள்ளியை விட்டு நீக்கம் செய்யப்படுகிறாள். இப்படிபட்ட சிறுமிக்கு  சாக்பீசை கையில் கொடுத்து “டோமோயி” பள்ளியின் கூட்ட அறையின் தரையில்  முழுவதும் எழுதிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு எவ்வளவு  சந்தோஷத்தை கொடுக்கும்.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் இருந்த பள்ளியின் கதை. சிறுவயதில் வீட்டுக்குள்ளேயே எனக்கென சிறு வீட்டை தலையணைகளை கொண்டு அமைத்துக் கொண்ட மகிழ்ச்சிக்கு இணையாகவே இருந்தது, ரயில்வே பெட்டிகளை வகுப்பறைகளாக கொண்ட “டோமோயி” பள்ளியை பற்றி படிக்கும் போது.

தலைமையாசிரியரான கோபயாஷியின்,

மலையிலிருந்து கொஞ்சம்…..

கடலிலிருந்து கொஞ்சம்..… 

என்ற உணவுப் பழக்கத்தை வீட்டில் இப்போது நானும் பின்பற்றி வருகிறேன்.

மெல்லு அதை மெல்லு….

நன்றாக அதை மெல்லு….

என்ற பாடலை டோட்டோசான் காயமடைந்த  ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் பாடுகிறாள். அதற்கு முன் மற்ற பள்ளி மாணவர்கள்  பாடிய தேச உணர்ச்சி பாடல்கள், வீர கட்டுரைகள் எதுவுமே அவர்களின் மனதில் நிற்பதில்லை. ஆனால் டோட்டோசானின் மெல்லு அதை மெல்லு என்ற பாடல் தான் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. எங்கேயோ தொலைத்துவிட்ட குழந்தைமையை அவர்களுக்குள் தூண்டிவிடுகிறது. ராணுவ வீரர்கள் எப்போதுமே வீரத்தையும், போரையும் தான் மனதில் வைத்திருப்பார்கள் என்ற பொது எண்ணத்தை இது மாற்றி அமைக்கிறது.

எங்களுடைய பால்வாடியிலும் ( அங்கன்வாடி )  சாப்பிடுவதற்கு முன் ஒரு பாடல் பாடுவது வழக்கம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை…

ராகம் போட்டு பாடுவோம்.இதில் வரும் தொகுத்தவற்றுள் என்பதை நாங்கள் வெகுகாலமாக சோத்துவட்டல் என்றே பாடி வந்தோம். அதனால் தான் சாப்பிடுவதற்கு முன் அதை பாட சொல்கிறார்கள் என நம்பினோம்.

டெட்சுகோ-சான் என்பதை டோட்டோ-சான் என்ற பெயராக கொண்டது போல.

தன்னுடன் படிக்கும் இளம்பிள்ளை வாதம் வந்த யசுயாகிசானை மரத்திலேற்றிய டோட்டோசானை பெரியவர்கள் பார்த்திருந்தால் அவ்வளவு தான். ஆனால் யசுயாகி சானுக்கு தேவைப்பட்டது இதைப் போன்ற சாகசம் தானே. பத்திரமாக இருக்கும்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வைகளிலிருந்து அவனுக்கு கிடைத்த மாபெரும் விடுதலை.

டோமோயி பள்ளியின் திறந்தவெளி சமையல் , டோட்டோசான் அம்மா சமையல் செய்வதை தினந்தோறும் கவனித்து வருகிறாள். திறந்தவெளி சமையலின் போது, சமையலை முடித்துவிட்டாலும் ஏதோ நிறைவடையாதது போல தோன்றுகிறது டோட்டோசானுக்கு. அம்மா செய்வதைப் போலவே பாத்திரத்தை மூடி இருக்கும் தட்டை சற்று நகர்த்தி சூடு பட்டதும் ஸ்ஸ்ஸ் என்று அதை காது நுனியில் வைத்து தேய்த்துக் கொண்டதும் தான் சமையல் முடிவடைந்ததாக நிறைவடைகிறாள். படிக்கும் போது சிரித்துக் கொண்டே படித்த நிறைய அத்தியாயங்களில் இதுவும் ஒன்று.

ஜன்னலில் ஒரு சிறுமி புத்தகத்தில் வரும் கோபயாஷி  எனக்கு என்னுடைய தலைமையாசிரியரையே நினைவுபடுத்தினார்.

டோட்டோசான் உளவாளியாக ஆசைப்படுவதாக தன்னுடைய வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனிடம் கூறுகிறாள் . ஆனால் அவனோ சிறிது நேரம் யோசித்துவிட்டு உளவாளியாக வேண்டுமானால் அழகாக இருக்க வேண்டும். மேலும் அதிகம் வாய் பேசாதவர்களாக இருக்க வேண்டும் என கூறுகிறான். அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த டோட்டோசான் , தனக்கான துறையாக டோமோயி பள்ளியின் ஆசிரியையாக பணியாற்றுவது என முடிவு செய்து தலைமையாசிரியரிடம் கூறுகிறாள். அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார்.போரினால் டோமோயி பள்ளி எரிந்து விடுகிறது. டோமோயி பள்ளியின் ஆசிரியராக முடியாவிட்டாலும் டோட்டோசான் இந்த புத்தகத்தின் மூலம் உலகெங்கிலும் டோமோயி போன்ற பள்ளியின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்த்திருக்கிறார்.

டோமோயின் கல்விமுறை எல்லாவிதத்திலும் தன்னிறைவடைந்த சமுதாயத்தில் மட்டுமே வெற்றியடைவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்றே நினைக்கிறேன்.

டோமோயி பள்ளி அற்புதமான பள்ளி…உள்ளும் வெளியேயும் அற்புதமான பள்ளி…. என்ற டோட்டோசானின் பாடல் மட்டுமே புத்தகத்தை முடித்த பிறகும் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஜன்னலில் ஒரு சிறுமி ( டோட்டோசான்) ஒலி வடிவில் :

https://youtube.com/playlist?list=PLvWdiqurBsACE1eChT5ndb1itD0PthAu6

மனோபாரதி விக்னேஷ்வர்.

முந்தைய கட்டுரைநீலக்கண்கள் – இசாக் டினேசன்
அடுத்த கட்டுரைசெவ்வியல் இசையும், சூஃபி இசையும்….