நாம், நமது உள்ளம்
வணக்கம் சார்.
நான் எட்டு வருடங்களாக மனநல ஆலோசகராக பணி செய்கிறேன். தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்தும் வேலை செய்து வருகிறேன். தங்களது தளத்தில் ‘நாம், நமது உள்ளம்’ பற்றிய கடிதம் வாசித்தேன். உங்களின் பதில் சிறப்பாக இருந்தது.
தற்போதைய சூழலில் பலரும் கவுன்ஸ்லிங் வேண்டும் என்று வருவது நல்ல மாற்றமாக இருக்கிறது. வருபவர்களின் பலரும் எங்களிடம் அவர்களது கற்பனைக்கும் பிரச்சனைக்கும் தீர்வு சொல்வோம் என்றே நினைக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அவர்களை நாங்கள் ‘ஜட்ஜ்’ செய்வதில்லை. இந்த இரண்டு காரணங்களுக்ககத் தான் அவர்கள் முதலில் எங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலில் இதற்கு நாங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.
உதாரணமாக காதல் சார்ந்த பிரச்சனையோடு வருகிறார்கள் என்றால் அதிலே கூட காதலை சேர்த்து வைப்பதும் பிரிப்பதும் எங்களது வேலை அல்ல. எங்களுக்கு முன் அமர்ந்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அவர்கள் சொல்கிறபோதே ஒரு தீர்மானதுக்குள் அவர்கள் வந்திருப்பார்கள். அதனை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இப்படி சொல்வதற்குத் தான் அவர்கள் எங்களை நாடுகிறார்கள்.
ஒருவகையில் அவர்கள் எங்களைக் கண்டு கொள்ள நாங்கள் கருவியாக இருக்கிறோம். பல நேரங்களில் இது எப்படி ஆகிவிடும் என்றால், ‘என்னுடைய காதலை நீங்கள் ஆதரிக்கவில்லை. நீங்கள் எங்களை பிரிக்கிறீர்கள்’ என்பார்கள். இங்கு காதலைப் பிரிவதும், சேர்ந்து கொள்வதும் அவர்களிடம் தான் இருக்கிறது என்பதே அவர்களுக்கு புரியாது. ஏனெனில் பிரச்சனையே இருந்தாலும் அவர்கள் காதலை நான் சரிசெய்ய வேண்டும் என்பது அவர்களது கற்பனையாக இருக்கிறது. யதார்த்தத்தை நாங்கள் எடுத்துவைக்கும்போது பயந்துவிடுகிரார்கள். இதையும் நாங்கள் சரி செய்ய வேண்டும் என்பது முக்கியமானது. நீங்கள் சொல்வது போல அவர்கள் தங்களைத் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களே அவர்களைக் கண்டு அஞ்சுவார்கள் அல்லது தெளிவடைவார்கள், இரண்டுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்.
ஒரு மனநல ஆலோசகர் பிரச்சனைகளை தீர்க்க மாட்டார். ஆனால் அதை எளிமைப்படுத்தி எடுத்து கூறி யார் மனநல ஆலோசகரை பார்க்க வந்தாரோ அவரை வாழ்க்கையில் எங்கேயும் தேங்கி ஆக விடாமல் செயல்பட வைப்பார். அப்படியும் அவர்களால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை என்றால், மனநல மருத்துவரைப் பார்க்கச் சொல்கிறோம்.
இதனை மிக அழகாக உங்க பதிலில் சொல்லி இருந்தீர்கள்.எழுத்தாளர்கள் மனநல மருத்துவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் எழுத்தின் வழியே மனநல ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பலருக்கும் தேவையான பதிலாக நீங்கள் பதிலும் ரொம்ப தெளிவாக இருக்கிறது.
மிக்க நன்றி
அன்புடன்
காயத்ரி மஹதி
மனநல ஆலோசகர்
அன்புள்ள காயத்ரி மகதி,
உளவியல் ஆலோசனை சொல்லும் அனைவரும் உலகமெங்கும் சந்திக்கும் நிகழ்வுதான் இது. ஆலோசனை பெற வருபவர் முதலில் ஆலோசகரை நம்ப மாட்டார். பின்னர் நம்பிக்கை பெறுவார். இன்னொரு சாரார் எடுத்த எடுப்பில் நம்புவார்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து இன்னொரு ஆலோசகரை தேடிச்செல்வார்கள். பலமுறை பலரிடம் சொன்னபிறகே தன்னை தொகுத்துக்கொள்பவர்கள் உண்டு. அதுவும் அவர்கள் அடையும் சிகிழ்ச்சையின் ஒரு முறைதான் என்றே கொள்ளவேண்டும்.
ஜெ