பணம், கல்வி, இலட்சியவாதம்

அன்புள்ள ஜெமோ

நான் ஒரு சின்ன விசயத்துக்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். அண்மையில் ஓர் எழுத்தாளர் படிப்பால் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் பணம் ஈட்டுவதுதான் மகிழ்ச்சியையும் வெற்றியையும் அளிக்கும் என்றும் எழுதியிருந்தார். எனக்கு அது பற்றி சந்தேகமிருந்தாலும் உங்களிடம் கேட்பது என் எண்ணங்கள் சரிதானா என்று தெரிந்துகொள்வதற்காகத்தான்.

அதேபோல சில இளம் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக இலட்சியவாதம் சார்ந்த வாழ்க்கை எல்லாம் பொய்யானது என்று எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதையும் நான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இவற்றைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எனக்கு இதைப்பற்றிய குழப்பங்கள் உள்ளன. எல்லாமே என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையுடனும் சம்பந்தப்பட்டவை.என்னால் இதை தெளிவாக யோசிக்கமுடியவில்லை என்பதனால் கேட்கிறேன். நன்றி

கலைச்செல்வன் அருணாச்சலம்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

 

அன்புள்ள கலைச்செல்வன்,

நீங்கள் ஒரு கருத்தை அன்றாடவாழ்க்கையில் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? அக்கருத்தைச் சொல்பவர் யார், அவருடைய வாழ்க்கையில் அவர் அக்கருத்தை எப்படி அடைந்திருக்கிறார் என்று பார்க்கிறீர்கள் இல்லையா? ஒருவர் சொல்லும் ஒரு கருத்து அவருக்குப் பயன்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அத்துடன் ஒரு கருத்து உங்கள் நடைமுறைவாழ்க்கைக்குப் பயன்படுமா என்று பார்ப்பீர்கள். பயன்படாதவற்றை உங்களுக்குரியதல்ல என்று தவிர்ப்பீர்கள்.

அதைப்போலத்தான் சமூக ஊடகம் போன்ற பொதுவெளிக் கருத்துக்களையும் அணுகவேண்டும். ஒரு கருத்தைச் சொல்பவர் தன் வாழ்க்கை வழியாக அதை வந்தடைந்துள்ளார். அந்தக் கருத்துதான் அவரது வாழ்க்கை. அந்த வாழ்க்கை உங்களுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கதா, அந்த ஆளுமையை நீங்கள் பின்தொடர நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அக்கருத்தை பொருட்படுத்துங்கள். அந்தக் கருத்து உங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ளது என பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். இதில் என்ன குழப்பம்?

இதைப்போன்ற ஐயங்கள் எல்லாருடைய இளமையிலும் அலைக்கழிக்கின்றன. அவற்றுக்கு தானாகவே தனக்குரிய விடைகளைத் தேடி அடையவேண்டும். அந்த விவாதத்திற்கு துணைசேர்க்க வேண்டியவை  உங்களால் மதிக்கப்படுபவர்களின் சொற்கள்தான். நான் என் சொற்களை முன்வைக்கிறேன். இது சரியென பட்டால் யோசியுங்கள்.

முதல் விஷயம், பணம். பணம் என்பது உலகியல் வாழ்க்கையின் அடிப்படை. பணத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு நிறைவாழ்க்கை சாத்தியமா என்றால் ஆம்.சாத்தியமே. அப்படி வாழும் இருநூறு முந்நூறு பேரையாவது எனக்கு நேரில் தெரியும். பல ஆண்டுகளாக. அவர்கள் உலகியலில் உள்ள புலன்வழி இன்பங்கள், உலகியல் மரியாதைகள் ஆகியவற்றில் எந்த ஈடுபாடும் அற்றவர்கள். மெய்யாகவே அவற்றில் அவர்களின் உள்ளம் படிவதில்லை. அவர்களுக்குப் பணம் பொருட்டு அல்ல.

உலகியலின்பங்களும் மதிப்பும் முக்கியம் என்றால் பணமும் தேவை. பெரும்பாலானவர்களுக்கு உலகியல் இன்பங்கள் தேவை. நல்ல உணவு, உடை, வீடு, கேளிக்கைகள். சமூகத்தில் ஓர் இடமும் தேவை. அவர்கள் பணம் ஈட்டியே ஆகவேண்டும். பணத்தை ஓர் அடித்தளமாகக் கொள்ளவேண்டும். அதற்குமேல் தங்களுக்கான இலட்சியங்களை, ஈடுபாடுகளை அவர்கள் மேற்கொள்ளலாம்.

ஆனால் பணம் மட்டுமே எல்லாம் என்று ஒருவர் சொல்வார் என்றால் அவர் இரண்டு வகையில் ஒருவர், ஒன்று, பணமீட்டும் கனவுடன் இருப்பவர். இரண்டு, பணமீட்ட முடியாத விரக்தியில் இருப்பவர். பணத்தை கொஞ்சமேனும் அறிந்தவர் அதைச் சொல்ல மாட்டார். பணத்தை என்னவாக மாற்றுகிறோம் என்பதே அதன் மதிப்பாக உள்ளது என அவர் அறிந்திருப்பார்.

படிப்பா, பணமா என்ற கேள்விக்கு வருகிறேன். பணமீட்டுவது மட்டுமே வாழ்க்கை என நம்பும் ஒருவர், பணமீட்டுவதற்காகப் படிக்கிறார் என்றால் அது அபத்தமானது. பணமீட்டுவதற்கான சிறந்த வழி படிப்பு அல்ல. பணமீட்ட சிறந்த வழி வணிகம் மட்டுமே. அதை முழுமூச்சாகப் பயில்வதே செய்யவேண்டியது.

அப்படியென்றால் எதற்குப் படிப்பு? நானறிந்த பெருந்தொழிலதிபர்கள் பலர் அடிநிலையில் இருந்து கடுமையான உழைப்பால் மேலெழுந்து வந்தவர்கள். அதிகம் படிக்காதவர்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் ஹார்வார்ட், ஆக்ஸ்போர்ட் என பெரும்படிப்பைப் படித்தவர்கள். ஏனென்றால் பணத்தைக் கையாள படிப்பு தேவை. அடிநிலையில் இருந்து ஒருசிலர் மட்டுமே மேலெழ முடியும். மேலெழுந்தவர்கள் அங்கே நீடிக்கவேண்டுமென்றால் படிப்பு தேவை.

படிப்பு என்பதே வாழ்க்கையின் தரம் என்பதை முடிவு செய்கிறது. படிப்பற்ற செல்வந்தர்கள் படிப்புள்ள செல்வந்தர்கள் என்பதே இரண்டு வேறுவேறு வர்க்கங்கள். படிப்பற்றவர்கள் படிப்புள்ளவர்களின் உலகில் நுழையவே முடியாது – பல மடங்கு செல்வம் இருந்தாலும். அதற்காக அவர்கள் படும் தவிப்பை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். செல்வம் பயன்மதிப்பாக ஆகவேண்டுமென்றால் அதற்கு கல்வி தேவை. நாகரீகநடத்தை, பண்பாட்டு ஆர்வம், உயர்தர கேளிக்கைப் பழக்கம் .சமூக இடம் எல்லாமே செல்வத்துடன் கல்வி இணையும்போது உருவாகின்றவை.

சரி, ‘வாழ்க்கையில் நிலைகொள்ள’ கல்வியா வணிகமா எது உகந்த வழி? அதை தனிப்பட்ட அனுபவங்கள் சார்ந்து அணுகுவதைவிட புறவயமாகப் பார்ப்பதே சிறந்தது. இன்று வாழ்க்கையில் நிலைகொள்பவர்களின் வழிகள் என்ன? படிப்பு, அதனூடாக ஒரு வேலை ஒரு வழி. தொழில் கற்றுக்கொண்டு அதைச் செய்து நிலைகொள்வது இரண்டாவது வழி. (குற்றம், அரசியல் இரண்டிலும் ஈடுபட்டு வெல்வது என இன்னொரு வழியும் உண்டு. இன்று குற்றம் இன்றி அரசியல் இல்லை.)

இவற்றில் வெற்றிவிகிதம் மிக அதிகமாக உள்ளது படிப்பின் வழியில்தான். படிப்பின் வழியில் தற்செயல்கள், அதிருஷ்டம் ஆகியவற்றுக்கு பெரிய இடமில்லை. அதில் ஓர் உறுதிப்பாடு உள்ளது. அதில் முதலீடுசெய்யப்படும் உழைப்புக்கு பெரும்பாலும் நிகரான பயனும் உண்டு.

தொழில் அப்படி அல்ல. அதில் ஈடுபடுபவர்களில் வெற்றிவிகிதம் மிகக்குறைவு. நான் தொழில்துறையில் , வணிகத்தில் ஈடுபடுபவர்களை நேரடியாக பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதில்  மிகக்கடுமையான போட்டி உண்டு. சுற்றிலும் சும்மா கண்ணோட்டிப் பாருங்கள். எத்தனை கடைகள், உணவகங்கள் ஓராண்டில் மூடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்று கவனியுங்கள்.

தொழில்- வணிகத்திலுள்ள சிக்கல்கள் வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. மாதச்சம்பளக்காரர்கள் வணிகம் என்பது மிக எளிது என்றும், அதில் பணம் கொட்டிக்கிடப்பதாகவும்,போனால் அள்ளிவிடலாம் என்றும் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். என்னுடன் பணியாற்றியவர்களில் விருப்ப ஓய்வு பெற்ற பலர் அந்த தொகையை வணிகத்தில் இறக்கி பெருநஷ்டம் அடைந்தனர். காரணங்கள் பல.

ஒன்று, வணிகக் களத்தில் பெருமுதலீடு என்னும் முதலைகள் உண்டு. ஏற்கனவே பெரிய நிறுவனம், பெரிய நிதிப்புலம் கொண்டவர்கள் சிறிய முயற்சிகளை நொறுக்கிக்கொண்டே இருப்பார்கள். அது அங்குள்ள காட்டுநீதி.

இன்னொன்று, சாதி ,சமயம் போன்ற பின்புலங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட களத்தில் அதற்குரிய சாதியினரும் மதத்தினருமே வணிகம் செய்யமுடியும் என்பது எழுதப்படாத நெறி. அதை மீறமுடியாது.

மூன்றாவதாக, இன்று ஏந்த வணிகமும் சட்டென்று உருவாகும் தொழில்நுட்ப மாற்றத்தாலோ அல்லது சர்வதேச வணிகச்  சூழலாலோ, அல்லது பிற இடர்களாலோ அழிந்துவிட வாய்ப்புண்டு. கொரோனாவால் அழிந்த வணிகங்கள் பல்லாயிரம்.

இதை அறியாத எவரும் இங்கில்லை. ஆகவேதான் ஐம்பதாயிரம் பொருளீட்டும் ஊழியருக்கு பெண் கிடைக்கிறது, இரண்டு லட்சம் ஈட்டும் சிறுவணிகருக்கு பெண் கிடைப்பதில்லை. காரணம், உறுதிப்பாடு பற்றிய ஐயம்.

சிறுவணிகங்கள் மற்றும் தொழில்களை கூர்ந்து நோக்குங்கள். தொடக்க காலகட்டத்தில் வாழ்க்கையை முழுமையாக, ஒரு நிமிடம்கூட மிச்சமில்லாமல், ஒரு சிந்தனைகூட பாக்கியில்லாமல், அந்தத் தொழிலுக்கு அளிக்கவேண்டும்.குடும்பம் கேளிக்கை மகிழ்ச்சி என எதற்கும் நேரமிருக்காது. ஒரு மாதச்சம்பளக்காரன் சுயதொழில் செய்பவரின் உழைப்பில் பாதியைச் செய்தான் என்றால் அவன் ஒரு யோகி. விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைக்காமல், ஒரு கணமும் கவனம் பிசகாமல் வேலை செய்யாமல் தொழிலும் வணிகமும் செய்ய முடியாது

அப்படியும் அந்தத் தொழில் உறுதியாக வெற்றிகொடுக்கும் என நம்பமுடியாது. அதில் அதிருஷ்டம் என்னும் அம்சம் இருந்துகொண்டே இருக்கிறது. எந்த வணிகமும் அடிப்படையில் சூதாட்டமே.

படிப்பு சார்ந்து நிலைகொண்ட வாழ்க்கை அப்படி அல்ல. அதில் உழைப்புக்கு எல்லை உண்டு. பிற வாழ்க்கைக்கூறுகளை அடையமுடியும். தனிப்பட்ட சுவைகளை தேடிச் செல்லமுடியும். வாழ்க்கையின் தரம் என்பது அப்படி சில அளவுகோல்களைக் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டியதே. அன்றி என்ன கார் வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமே அளவுகோல் அல்ல.

படிப்பு – தொழில் என்னும் இருவழிகளில் தொழிலில் உயர்வெற்றி அடைந்தவர்களை மட்டும் நாம் பார்க்கிறோம். குறிப்பாக மாதவருமானக்காரர்கள் அவர்களை எண்ணியே உளம்புழுங்குவார்கள்.தொழில் வணிகக் களத்தில்  தோற்றவர்களே பற்பல மடங்கு என பார்க்க மறுக்கிறோம். அவர்கள் கல்வியற்றவர்கள் சிலர் இருக்கலாம், ஆனால் அவர்கள் மடையர்கள் அல்ல. அவர்கள் போராடி வென்றவர்கள். அதற்குரிய தகுதிகளை உருவாக்கிக்கொண்டவர்கள்.

கல்வியின் பாதையில் தோற்றவர்கள், தகுதியற்றவர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களைவிட வென்றவர்களின் விகிதமே மிகமிக அதிகம். தோல்வியடைந்தவர்கள் பலர் தங்கள் தகுதியை மிகையாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள். கல்வி என்பது பாதுகாப்பான பாதை. ஊர்வழி போல. அங்கேயே தோற்றவர்கள் தொழில் வணிகமெனும் காட்டுவழியில் முதல் காலடியிலேயே ஓநாய்களால் உண்ணப்பட்டுவிடுவார்கள்.

படிப்பு என்பதிலேயே இரண்டு வகைமை உண்டு. தகுதியடைவது, நிபுணத்துவம் பெறுவது. வெறுமே ஒரு தகுதியை மட்டும் ஈட்டிக்கொள்பவர் வேலைச்சந்தையில் அவருக்கு அளிக்கப்படுவதை பெறுகிறார். அந்த தகுதியையும் ஈட்டிக்கொள்ளாதவர்கள் பலநூறுபேர். நிபுணர் தனக்குரியதை கேட்டுப்பெறுகிறார். இன்று எந்தத்துறையிலும் நிபுணர்கள் அரசர்களுக்கு நிகரான மதிப்புள்ளவர்கள். சினிமாவில் நீங்கள் ஒரு வரைகலை நிபுணர் என்றால், ஒலிப்பதிவு நிபுணர் என்றால் மணி ரத்னம் உங்களுக்காகக் காத்துக்கிடப்பார்.

கல்விசார்ந்த எந்தத் துறையிலும் நிபுணர்களே வென்றவர்கள். தொழில்துறையில் அப்படி வென்றவர்கள் எனத்தக்கவர்கள் அதிருஷ்டமும் கைகொடுத்தவர்கள். திறமையும் உழைப்பும் மட்டும் போதாது. ஆனால் கல்விசார்ந்த துறைகளில் அறிவும் உழைப்பும் மட்டுமே நிபுணர்களை உருவாக்குகிறது.

*

இலட்சியவாதம் பற்றி கேட்டீர்கள். இலட்சியவாதத்துக்கு எதிரான எல்லா பேச்சுகளுமே ஒருவகை எதிர்மறை நடைமுறைப் பார்வை கொண்டவை. ‘கட்டக்கடைசியில் என்ன மிச்சம்?’ என்ற கேள்வி சார்ந்தவை. அந்தக் கேள்வியை கேட்கத்தெரியாதவர்கள் அல்ல இலட்சியவாதிகள். அப்படிக் கேட்டால் நடைமுறைவாழ்க்கையிலேயே என்னதான் எஞ்சும்? குடும்பமா? மனைவி குழந்தைகளுக்காக வாழ்வதில் என்ன அர்த்தமுள்ளது? பிள்ளைகளை படிக்கவைத்து, திருமணம் செய்து வைத்து, பேரன்பேத்தி பார்ப்பதைப்போல அபத்தமான செயல் வேறுண்டா? அதைவிட எந்த இலட்சியவாதமும் அர்த்தமுள்ளதுதான்.

இலட்சியவாதத்திற்கு எதிராகப் பேசுபவர்களைக் கவனியுங்கள். அவர்கள் இரண்டுவகையினர். ஒன்று, தன்னலவாதிகள், அடிப்படையில் நேர்மையற்றவர்கள், சுரண்டல்காரர்கள். அவர்களுக்கு இலட்சியவாதம் பொருளற்றதாகத் தோன்றுவது இயல்பு. அவர்கள் இன்னொருவர் நேர்மையான இலட்சியவாதியாக இருக்கமுடியும் என நம்பவே மாட்டார்கள்.

அவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் தங்களைப் பற்றிய மதிப்பின்மையை அடைவதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் தங்களை நியாயப்படுத்தியாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். “யார் சார் யோக்கியன்” என்று பேசுவார்கள். நான் பலமுறை வியந்ததுண்டு. தன்னலவாதியாக, அயோக்கியனாக இருப்பவன் ஏன் அந்நிலையில் நிறைவுடன் இருக்க முடியவில்லை? ஏன் அவன் தன்னை நியாயப்படுத்த போராடிக்கொண்டே இருக்கிறான்? அவனுக்கு என்னதான் செய்கிறது?

ஏனென்றால் முழுமையான தன்னலவாதி என ஒருவன் இருக்கமுடியாது. இன்னொரு பக்கம் அவனே இலட்சியவாத அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருப்பான். பிள்ளைகளிடம் பாசம், சுற்றத்தார் மேல் பற்று என பல இயல்புகள் அவ்வகைப்பட்டவை. ஒருபக்கம் தன்னலத்தை முன்வைத்து இலட்சியவாதத்தை நிராகரித்தபடி மறுபக்கம் இன்னொருவகை இலட்சியவாதத்தை தக்கவைக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சிக்கல்.

இலட்சியவாதத்தை நிராகரிப்பவர்களில் இரண்டாம்சாரார் சோர்வுமனநிலை கொண்டவர்கள். எப்போதுமே ஓர் எதிர்மறைப் பார்வையும், கசப்பும், அவநம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். வைரஸ் தன்னை பரப்ப முயன்றபடியே இருப்பதுபோல உளச்சோர்வும் தன்னை பரப்ப முயன்றபடியே இருக்கும். அதை அவர்கள் அறியாமலேயே செய்கிறார்கள், அவ்வளவுதான்.

ஒவ்வொருநாளும் உளச்சோர்வு கொண்டவர்களின் கடிதங்கள் எனக்கு வருகின்றன. அவர்கள் அனைவருமே தங்களைப் பற்றி மிகையான எண்ணம் கொண்டவர்கள், தங்களைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பவர்கள், தங்களை நிலைநிறுத்த வேண்டுமென்ற விழைவு மட்டுமே கொண்டவர்கள். ஆனால் செயல்திறனை பயிலாமல் பகற்கனவுகளை பெருக்கிக்கொள்பவர்கள். அதிலிருந்து விடுபடவும் முயல்பவர்கள். ஆகவே எப்போதும் அலைக்கழிப்பும் துயரமும்தான்.

அடிப்படையான இலட்சியவாதம் கொண்டவர்களில் எவரிடமும் அந்த உளச்சோர்வை நான் கண்டதில்லை. ஏனென்றால் தாங்கள் என்னென்ன ஆகவேண்டும், தங்களுக்கு என்னென்ன கிடைக்கவேண்டும் என அவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதில்லை. ஆகவே ஏமாற்றமும் இல்லை. அவர்கள் தங்கள் இயல்புக்கு ஏற்ற ஒரு களத்தை கண்டடைந்து அங்கே ஊக்கத்துடன் செயல்படுபவர்கள். அங்கே அன்றாடம் சிறிய சாதனைகளை நிகழ்த்துபவர்கள். அதன் மகிழ்ச்சியிலேயே வாழ்பவர்கள். அவர்களுக்கு சோர்வும் ஐயமும் அவநம்பிக்கையும் இல்லை.

இலட்சியவாதம் எதற்காக என்று கேட்டீர்கள் என்றால் இப்படிச் சொல்வேன். இலட்சியவாதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்தாளன் இதழ்
அடுத்த கட்டுரைஇன்று சென்னை,நாளை கோழிக்கோடு, பின்னர் செதுக்கோவியங்கள்.