ரப்பர் மின்னூல் வாங்க
ரப்பர் வாங்க
வணக்கம்.
ரப்பர் நாவலின் புதிய பதிப்பு வெண்முரசு பதிப்பகம் வெளியிடுவது பற்றி எழுதியதை படித்தேன்.
1910 ல் வேளிமலை தோட்டத்தில் முதன்முதலாக ரப்பர் நடவு கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கியது.வீட்டுக்கு ஒரு மரம் என்றால் ரப்பர் என்பதே நமது பகுதி தாரக மந்திரமாக இன்று மாறியது.மலையோர பகுதிகளில் தென்னை மரங்கள் வெட்டி சாய்த்து ரப்பர் நடவு நடந்தது.ரப்பர் விலை வீழ்ச்சியால் மீண்டும் அதே இடங்களில் ரப்பர் அகற்றப்பட்டது,தென்னை வந்தது.ரப்பர் விலை உயர்ந்த பின்னர் தென்னை நடவு இல்லை.
மரவள்ளிக் கிழங்கு கிடைக்க மரச்சீனியும் வாழையும் ரப்பர் நடவு செய்த பிறகு முதல் மூன்று ஆண்டுகள் விவசாயம் செய்து கொண்டனர் ரப்பர் விவசாயிகள்.ரப்பர் வாரியம் ரப்பர் இடையே மரவள்ளிக் கிழங்கு விவசாயம் வேண்டாம் என்று கூறினர்.இப்போது ஏற்றுமதிக்கான பைனாப்பிள் விவசாயம் நடக்கிறது.
ஒரு காலத்தில் ரப்பர் விவசாயம் செழித்தோங்கிய குலசேகரம் பகுதியை குமரி குவைத் என்றார்கள். குவைத்தின் செல்வ குவியல் போல குலசேகரம் வட்டார பகுதியும் ரப்பரால் மகிழ்ந்தது.
அந்த காலம் இப்போது மலையேறி போய்விட்டது. ஒன்றிய அரசுகளின் புதிய பொருளாதார கொள்கையாளர் தாராள இறக்குமதி நடவடிக்கை காரணமாகவும் ஏராளமாக ரப்பர் இறக்குமதி செய்யப்படுவதாலும் உள் நாட்டு ரப்பர் விலை தாழ்ந்து இன்று ரப்பர் விவசாயிகள் குறிப்பாக சிறு குறு ரப்பர் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் சலுகைகள் கேட்டு கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களைப் போன்று இப்போது நடத்தவும் முடியவில்லை. தமிழ்நாடு அரசுக்கும் சொந்தமான ரப்பர் தோட்டம் கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதியில் மட்டுமே உள்ளது. அதை விரிவுபடுத்தி வளர்த்தால் மிக நல்ல லாபம் கிடைக்கும் தொழிலால் ஏராளமான தொழிலாளர்களுக்கும் நேரடியான வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு அரசுக்கு அவ்வாறான திட்டங்கள் இல்லை என்பது மட்டுமல்ல ரப்பரை பற்றி தெரியாத அதிகாரிகள் உள்ளதால் அவர்கள் கவனத்தில் இப் பிரச்சனையை கொண்டு வந்தாலும் செவி கொடுப்பதில்லை.
தமிழ்நாட்டில் தேயிலையும் காப்பியும் போல அரசின் கவனத்தில் ரப்பர் இன்றுவரை இருக்கவில்லை. கடந்த காலங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலங்களில் தங்களது “அறம் ” இலக்கிய புத்தகத்தை சமர்ப்பித்திருந்த அமரர் ஜே. ஹேமச்சந்திரன்(முன்னாள் சிபிஐ-எம் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் இப்ப பிரச்சனையை எடுத்துரைத்த காரணத்தால் ரப்பர் தொழிலையும் தொழிலாளர்களையும் அரசு துறையில் பாதுகாக்க முடிந்தது. ஆனால் இப்போது அதுவெல்லாம் நடப்பது கனவாகவே உள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்களோடு இணைந்து தொழிற்சங்க பணியாற்றுகின்ற ஒருவன் என்ற முறையில் இன்று இதை பதிவு செய்கிறேன். ரப்பர் நாவல் அகிலன் நாவல் போட்டியில் பரிசு பெற்றதை மகிழ்ச்சியோடு பல நண்பர்களின் கவனத்தில் கொண்டு செல்லும்போது நான் ரப்பர் தோட்ட தொழிலாளிகளின் சங்கப் பணிகள் துவங்கிய காலம்.
திரைப்படக் காட்சிகள் போல என்றும் உள்ளத்தில் நெருக்கமாக இருக்கும் ரப்பர் நாவல் வாசிப்பு தமிழ் வாசகர்கள் மத்தியில் இருந்தாலும் இன்னும் நீண்ட காலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்ட பகுதிகளில் அதிகம் வாசிக்கும் காலம் வரத்தான்போகிறது.
அன்புடன்,
பொன்மனை வல்சகுமார்,
கன்னியாகுமரி மாவட்டம்.