எம்.ஆர்.ஜம்புநாதன்- ஒரு மோசடியின் இரை

நல்ல வாசகனை ரத்தம்கொதிக்கச் செய்யும் அற்பத்தனங்கள் தமிழில் எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருக்கும். அவற்றை எவரும் பொருட்படுத்துவதுமில்லை. அவற்றைப் பற்றிப்பேசினால் உடனே சம்பந்தப்பட்டவர்களின் சாதியடிப்படையில் மட்டுமே அவ்விவாதத்தை தமிழ் அறிவுச்சூழல் அணுகுவது வழக்கம்.

அப்படிப்பட்ட அற்பத்தனங்களிலொன்று, ம.ரா.ஜம்புநாதனுக்கு நிகழ்ந்தது. தலித் கல்விக்காக அரும்பாடுபட்ட முன்னோடிகளில் ஒருவர் அவர். ஆரியசமாஜத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதி. அன்று பெரும் எதிர்ப்புடன் அவர் வேதங்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

அதை நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அலைகள் வெளியீட்டகம்  சென்னை பல்கலை தமிழ்த்துறை தலைவராக இருந்த வீ.அரசு என்ற பேராசிரியரை தொகுப்பாளராகக் கொண்டு மறுபிரசுரம் செய்தது. வீ.அரசு அதில் செய்தது அதன் பழைய பாணிச் சொற்கள் சிலவற்றை மாற்றியமைத்ததும், சில அடிக்குறிப்புகளைவி.என்.ராகவன் என்பவரைக்கொண்டு மொழியாக்கம் செய்து சேர்த்ததும்தான்.

இவ்வாறு ஒருவர் செய்த மொழியாக்கத்தை இன்னொருவர் மாற்றியமைக்க உலகின் எந்த அறிவியக்கத்திலும் இடமில்லை. அந்த மூலமொழியாக்கம் ஓர் இலக்கியப்பிரதி. இன்னொரு மொழியாக்கம் வேண்டுமென்றால் இன்னொருவர் அதைச் செய்யவேண்டும். ஓர் ஆசிரியரின் நடையை அவர் மறைந்தபின் இன்னொருவர் மாற்றுவது மாபெரும் அத்துமீறல். இந்தப்பேராசிரியரை நானறிவேன். எந்த மொழித்திறனும் அற்ற மொண்ணையான ஒருபேராசிரியர். சொல்லும்படியான ஒரு நூல்கூட இல்லாதவர்.

அத்துடன் இந்த மாபெரும் நூல்வரிசையின் நூல்களில் அட்டையில் ம.ரா.ஜம்புநாதன் பெயர் இல்லை. உள்ளே முதன்மைப்பக்கத்திலும் அவர் பெயர் இல்லை. ‘செவ்விதாக்கம் வீ.அரசு’ என அந்தப் பேராசிரியரின் பெயர் மட்டுமே உள்ளது. ஜம்புநாதன் பற்றிய ஒரு விரிவன குறிப்புகூட நூலில் இல்லை. அந்நூலின் முதல் பிரசுர வரலாறு இல்லை. அவருடைய ஒரு படம்கூட இல்லை. (இவையனைத்துமே பழைய பதிப்புகளில் உள்ளன)

ஜம்புநாதனின் மொழியாக்கம் பெரும்போராட்டத்திற்கிடையே, தமிழகத்தின் சைவ மடங்களின் உதவியுடன் வெளிவந்தது. அதை அன்றைய முக்கியமான அரசியல்தலைவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். பல அறிஞர்கள் புகழ்ந்துள்ளனர். ஜம்புநாதன் அன்றைய இந்திய அறிவியக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர். எதையுமே அலைகள் வெளியீட்டகத்தின் இந்நூலை வாசித்தவர்கள் அறியமுடியாது.

பேராசிரியர்கள் அறிவுத்திருட்டிலேயே வாழ்பவர்கள். மனசாட்சியைத் தொட்டு அந்த பதிப்பாளராவது யோசித்திருக்கவேண்டும், அவர்கள் வெளியிட்ட ஒரு நூலை இப்படி இன்னொருவர் ’தூக்கி’ வெளியிட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அனைத்தையும்விட வருத்தம்தருவதொன்றுண்டு. ஜம்புநாதனின் இரு மகள்களின் வழி வாரிசுகள் இன்றுள்ளனர். அவர்கள் மிக உயர்ந்த பொருளியல்நிலையில் உள்ளவர்கள். ஜம்புநாதனின் மூலநூல்கள் எல்லா இணைய ஆவணக்காப்பகங்களிலும் உள்ளன. அவர்கள் மிகச்சிறு தொகை செலவழித்து இந்நூல்களை வெளியிட்டிருக்கமுடியும். ஆனால் பெரும்பாலும் வாரிசுகளுக்கு ஆர்வமே இருப்பதில்லை. தமிழ் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. நம் சூழலின் அவலங்களை எண்ணித்தீராது.

எம்.ஆர்.ஜம்புநாதன்

எம்.ஆர்.ஜம்புநாதன்
எம்.ஆர்.ஜம்புநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருவருட்செல்வி – கடிதம்
அடுத்த கட்டுரைநாம், நமது உள்ளம்