நம்மை நாம் மீட்டெடுத்தல்

அன்புள்ள ஜெ

நான் உங்கள் தளத்தில் யோகம், தியானம் பற்றி வந்துகொண்டிருக்கும் கடிதங்களை பார்க்கிறேன். என்னுடைய சிக்கல்களை விரிவாக எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் அவை புதியதாக இருக்கப்போவதில்லை. உங்களுக்கு தெரிந்தவையாகவே இருக்கும். என் பிரச்சினை இதுதான். எப்போதுமே மனச்சோர்வுடன்தான் இருக்கிறேன். தனிமையாகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு தனிமை பிடிக்காது. உத்ஸாகமாக நண்பர்களுடன் இருப்பதை விரும்புவேன். ஆனால் கொஞ்சநேர்த்திலேயே தனிமை ஆகிவிடுவேன். அவர்களுக்கும் நான் சலிப்பூட்டிவிடுவேன்.

தனியாக இருக்கும்போது இரண்டுவகையான கற்பனைகள் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். நான் செய்யப்போகும் சாதனைகளையும், நான் அடையப்போகும் இன்பங்களையும், என்னை பற்றிய மிகையான எண்ணங்களையும் எண்ணிக்கொண்டிருப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிந்தனைகள் அப்படியே கழிவிரக்கமாக ஆகிவிடும். எவருமே என்னை மதிக்கவில்லை என்று நினைப்பேன். அவர்கள் முன்னால் நான் செத்து அழியவேண்டும் என்றும் அதன்பிறகு அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ளவேண்டும் என்றும் நினைப்பேன். இப்படி நினைத்து நானே அழுததெல்லாம் உண்டு.

ஆனால் என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. படிப்பு முடியவில்லை. என்னால் முடிக்க முடியவில்லை. எந்த வேலையையும் மனம் ஒப்பிச் செய்ய முடியவில்லை. எந்த செயலாக இருந்தாலும் அதை ஒத்திப்போடத்தான் தோன்றுகிறது. eல்லாவற்றையும் செய்யவேண்டுமென நினைப்பேன்.ஆனால் எழுந்திருக்கவே முடியாதபடி மனம் அசைவே இல்லாமலிருக்கும். தூக்கம் மிகக்குறைவு. ராத்திரி தூங்க 3 மணி 4 மணி ஆகிவிடும். அது வரை இணையத்தில் எதையாவது தேடித்தேடி பார்ப்பேன். பெரியதாக எதையும் வாசிப்பதில்லை. என்ன வாசித்தேன் என்றே ஞாபகமிருக்காது. ஆங்காங்கே ஓரிரு பத்தி வாசிப்பதோடு சரி. பாட்டுகூட முழுசாக கேட்பதில்லை. காலையில் எழுந்திருக்க நேரமாகும். அதன்பிறகும் பகல் முழுக்க தூக்கம் வந்துகொண்டேஇருக்கும்.

இப்படியெல்லாம் இருக்கிறோமே என்ற எண்ணம் உண்டு. ஆனால் என்னால் எதையும் உருப்படியாக இதுவரைச் செய்ய முடிந்ததில்லை. அதை நினைத்து வருத்தமும் உண்டு. எதையாவது செய்யவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் எதையுமே தொடங்காமலிருக்கிறேன். என்னுடைய திறமை என்ன என்றே தெரியவில்லை.

என் கேள்வி இதுதான். நீங்கள் பலவகையான தியான முகாம்களை நடத்துகிறீர்கள். யோகமுகாம் நடைபெறுகிறது. இவற்றில் என்னைப்போன்றவர்களுக்கு ஏதாவது பயனுண்டா? இவற்றில் தொடர்ந்து ஈடுபடுவது முடியுமா? நான் சில யோக தியான வகுப்புகளை ஆன்லைனில் கற்றுக்கொண்டேன். ஆனால் அவற்றைத் தொடர என்னால் முடியவில்லை.

கே

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள கே,

வழக்கமான கடிதம்தான். ஆனாலும் பிரதிநிதித்துவம் உண்டு என்பதனால் பதிலுடன் வெளியிடுகிறேன்.

உங்களுக்கு இருப்பது உளச்சோர்வு. ஆனால் உளச்சோர்வுநோய் அளவுக்குச் செல்லவில்லை என நினைக்கிறேன். அதை ஓரு நிபுணர்தான் சொல்லமுடியும்.

உங்கள் சிக்கல் பெருவாரியான இளைஞர்களிடமுள்ளது. இது முதல் தோல்வியில் இருந்து தொடங்குகிறது. பெற்றோர் ,சுற்றம் ஆகியோர் சொல்வதற்கேற்ப தன்னை மிகையாக மதிப்பிட்டுக்கொண்டு அம்மதிப்பீட்டுக்கு எதிராக உண்மை நிலையை சந்திக்கையில் சோர்வுறுபவர்கள் உண்டு. தனக்கு ஆர்வமில்லாத களங்களில் இறங்கிவிட்டு, உண்மையில் தனக்கு ஆர்வமில்லை என பின்னர் கண்டடைபவர்கள் உண்டு.நடுவே உருவாகும் கவனக்குலைவால் தோல்வியடைபவர்கள் உண்டு. அண்மைக்காலப் பிரச்சினை, சமூகவலைத்தள ஊடாட்டம் காரணமாக எதிலும் தன்னைக்குவிக்க முடியாமையால் தோல்வியடைதல்.

முதல்தோல்வி தன்னம்பிக்கையை குலைக்கிறது. அதன்பின் பகற்கனவுகளில் எல்லாவற்றையும் வென்றுவிடலாமென நினைத்தபடி, நான் யாரென காட்டுகிறேன் என கற்பனைசெய்தபடி, வீணாக அமர்ந்திருக்க ஆரம்பிக்கிறோம். செயலுக்குள் இறங்க தடையாக இருப்பது தன்னம்பிக்கைக் குறைவுதான். ஆனால் அதை நாமே ஒப்புக்கொள்வதில்லை.நம்மை நாமே பகற்கனவுகளால் சிதறடித்துக் கொள்வதனால் நம் கவனம் எதிலும் குவிவதில்லை. நீண்டநேரம் தொடர்ச்சியாக எச்செயலிலும் ஈடுபட முடிவதில்லை. அது நமக்கேதெரிகையில் நாம் எதையுமே செய்யாதவர்களாகிறோம்.

அதற்குரிய வழி என்பது நம் உறைநிலையில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ளுதல்தான். துடலி போன்ற முட்புதர்களில் சிக்கினால் ஒரே வீச்சில் பிய்த்துக்கொண்டு விலகிவிடுவதே சாத்தியம். ஒவ்வொரு முள்ளாக விடுவிக்க முடியாது. ஒரு முள்ளை எடுக்கமுயன்றால் நான்கு முள் குத்தித்தொடுக்கும். அதேபோலத்தான். அந்த விலகலுக்கான முடிவை நாம் எடுப்பதே முக்கியம்.

கூடவே, வெளியுதவி, நிபுணர் வழிகாட்டல், தேவை. அதன் வழியாக செயலில் இறங்கி, சிறிய வெற்றிகளை அடைவது முதல்படி. ஒவ்வொருநாளும் அடையும் வெற்றிகள். அவற்றினூடாக வெற்றிக்குரியவனாக நம்மை நாமே புனைந்துகொள்ளுதல், நம்மை நாமே நம்புதல், செயலிலுள்ள இன்பத்தின் சுவையை அறிதல், செயலில் தொடர்ந்து ஈடுபடும் பயிற்சியை அடைதல். அதுவே மீளும் வழி.அதை முன்னர் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு யோகம், தியானம் உதவுமா? உறுதியாக உதவும். ஆனால் இணையவழி தியானம், யோகம் உதவுமா என எனக்கு ஐயமாக உள்ளது. முற்றிலும் நல்ல மனநிலையிலுள்ள, யோகமும் தியானமும் செய்யும் விருப்பு மேலோங்கியவர்களுக்கு இணையவழிக்கல்வி உதவலாம். தனிமையில் உழல்பவர்களுக்கு அது உதவுவதற்கு வாய்ப்பில்லை. அது அவர்களின் தனிமையை பெருக்கும். உளக்குழப்பங்களையும் உருவாக்கலாம்.

தனிமையிலும் சோர்விலுமுள்ளவர்கள் செய்யும் யோகமும் தியானமும் பலசமயம் அவர்கள் புனைந்துகொண்டிருக்கும் பகற்கனவுகளின் பகுதியாக ஆகிவிடுவதைக் காண்கிறேன். அவர்கள் அதையும் மிகைப்படுத்திக்கொள்வார்கள். அதையும் மாயநிகழ்வாக ஆக்கிக் கொள்வார்கள். அவர்களின் உளச்சோர்வு உளநோய் அளவுக்குத் தீவிரமானது என்றால் அந்த மிகையாக்கல் மேலும் விரிவடைந்து ஒரு பொய்யுலகையே உருவாக்கி அவர்களை மேலும் நோயாளிகளாக்கலாம். ஆகவே உளச்சோர்வுள்ளோரின் தியானம், யோகம் இரண்டும் அதற்குரிய ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதலால்தான் செய்யப்படவேண்டும். ஆசிரியர்கள் இவர்களை கண்காணிக்கவேண்டும்.

ஆனால், உளச்சோர்வு கொண்ட ஒருவர் ஓர் ஆசிரியருக்கு தன்னை சற்று திறந்து கொடுப்பார் என்றால், தன்னை சற்று அளிப்பாரென்றால் மிக எளிதாக மீளமுடியும். அது அவர் ஆசிரியருக்கு அளிக்கும் இடத்தைப் பொறுத்தே உள்ளது. அத்துடன் ஆசிரியருடனும் திரளான பிறருடனும் இணைந்து அதைச் யோகம் தியானம் முதலியவற்றைச் செய்வது மிக உகந்தது. மிகப்பெரிய எண்ணிக்கையில் அத்திரள் இருக்கலாகாது. அங்கே மீண்டும் நாம் தனிமையாக இருப்போம். உகந்த சிறுதிரள்தான் சிறப்பானது. தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கும் திரள், ஆசிரியர் வழிகாட்டல் ஆகியவை உதவும்.

யோகம், தியானம் ஆகியவை முதலில் உள்ளத்தைக் குவிக்க உதவுகின்றன. உடலை அதற்கேற்பப் பழக்குகின்றன. சரியான உடலியக்கமும் அதற்கு உகந்த உளச்செயல்பாடும் நிகழச்செய்கின்றன. இன்றைய சூழலில் உள்ளத்தை குவிக்கமுடிந்தாலே பாதிப்பிரச்சினை சரியாகிவிடும். துயிலையும் சீரமைத்துக்கொண்டால் முற்றிலும் விடுபட்டுவிட முடியும்.

ஜெ

மீள்தல், அமிழ்தல்

தொடங்காமையில் இருத்தல்

நாம், நமது உள்ளம்

முந்தைய கட்டுரைஎம்.கந்தசாமி முதலியார்
அடுத்த கட்டுரைகோட்டி, தெலுங்கில்