கேண்மை தேரல்

Festival- Satyajit Roy

அன்புள்ள ஜெ

செயலும் கற்றலும் கற்பித்தலும் விந்தையானதொரு போதை.அதனாலேயோ என்னவோ உங்களை கடக்க இயலவில்லை. நாள்பொழுதில் உங்கள் குறித்தான சிந்தனைகள் அல்லாத நாள் இல்லை. உங்களை கண்டடைந்த நாளிலிருந்தே ஒன்றை நுணுக்கமாக கவனித்திருக்கிறேன் அடிக்கடி நீங்கள் கூறுவது ‘நேரம் குறைவாக இருக்கிறது  ‘ ஆரம்பத்தில் இது என்ன இவர் எதற்க்கெடுத்தாலும் இப்படி கூறுகிறார் என்ற ஒருவித வன்மம் போன்ற எதோவொன்று தோன்றும். சிலவற்றை காலத்தினால் மட்டுமே விளக்க முடியும்  விளங்கியது. சக்திக்கு மீறிய செயல்களை செய்து கொண்டிருக்கிறேன். நாட்கள் பரக்கின்றன. நினைத்ததை விடவும் தொழிலில் சூடு அதிகம் ஆனாலும் குளிருக்கு இதம் தரும் போன்ற சூடு குளிராக  இலக்கியம் நீங்கள். ஆனாலும் அவ்வப்போது ஏற்படும் இரவுப்புயல்களின் நாசம் அடுத்த நாள் வரை தொடர்கிறது.

அப்படியான ஒரு இரவுப்புயலில் இரண்டு நாட்கள் சிக்கினேன். நன்கறிவேன் இதை விடக்கூடாது இந்த இரவுப்புயலிலிருந்து விலகி ஒளி நோக்கி சென்றாகவே வேண்டுமென. ஏழாம் உலகம் வாசித்த இரவு போன்ற கணத்த இரவு, கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்தபடியே இரவு என்னை புதிய வாசகர் சந்திப்பில் கொண்டு இறக்கியது. வாழ்வின் பெரும் தரிசனம்

அந்த மூன்று நாட்களும் குறிப்பாக இரவு படம் படமாக நினைவிலிருக்கிறது. அதுவரை யாருடனும் இரவு நிலவொளியின் அழகை கண்டதேயில்லை. வளர்ந்தபின் இரவில் யாரும் கதையும் கூறியதில்லை. இதோ இதோ எழுதிக்கொண்டே சென்று விட்டேன் அந்த நிலவை தேடி ஏதோ ஒன்றை கூறி அனைவரையும் சிரிப்பில் மூழ்கடித்து மீள்வதற்குள் ‘ நிலா இன்னும் வரல’ என்பீர்கள் அனைவரும் திரும்பி நிலவை தேடுவோம். நிலா சோம்பேறி போல் வந்து நிற்கும். சட்டென காட்டின் அடி ஆழத்திலிருந்து அழுவது போன்ற ஒலிகள் வரும் தனியாக இருந்திருந்தால் சிறுநீர் கழித்திருப்பேன்.

இந்த அழகான நினைவலைகளுக்கு நடுவே சென்ற வாரம் சென்று சந்தித்த சிவராஜ் அண்ணன் மற்றும் மதுமஞ்சரி அக்காவின் அழகிய நினைவுகள். பூக்கரம் நீட்டி அணைத்துக்கொண்டார் சிவராஜ் அண்ணன். இரவு அவர்களுடன் தங்கினேன் நிறைய பேசினோம் தேவிபாரதி அவர்களின் நொய்யல் புத்தகம் வழங்கினார். அந்த இரவும் தரிசனம் போல் அமைந்தது மெல்லிய உரையாடல்கள் இனக்கமான மனிதர்கள் என அவ்வளவு நெகிழ்ச்சியானதொரு இரவு . சிவராஜ் அண்ணனின் கணமான சிரிப்பும் மதுமஞ்சரி அக்காவின் மலர்ந்த முகமும் அழித்தாலும் அழியாதவை அழிக்க முடியாதவை.

இந்த அனுபவங்கள் எனை மென்மேலும் பண்படுத்துவதை போல் உணர்கிறேன் இதை எழுத வேண்டுமாவென தோன்றியது ஆனாலும் வாசிப்பதும் எழுதுவதுமே உயிரின் சுகமென அறிந்தபின்  எழுதிவிடுவோமென முடித்துவிட்டேன்.  ‘உச்சிமலை என்பது ஒரு வாய்ப்பு’  உச்சிமலை வரை வந்த பின் இந்த இரவுப்புயல் மிகவும் எளியதாகி அழகான பழைய நினைவுகளை அசைபோடுவதற்க்கென்றே கிடைத்த பாவப்பட்ட பேய் .வாழ்க்கை இனிக்கிறது

அன்புடன்

சக்தி வாசா

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள சக்தி,

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் ஒரு செயற்சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். உழைப்பு- சேமிப்பு- நுகர்வு என ஒரு வட்டம். வேலை- வீடு என இன்னொரு வட்டம். இவற்றில் நாம் சலிப்புறுகிறோம். அந்தச் சலிப்பை அவ்வப்போது களைந்து கொண்டோமென்றால் ஓர் எல்லையில் ஒட்டுமொத்தமான ஒரு முறிவுக்குப்பின் அமையும் தீவிரமான உளவீழ்ச்சித் தருணங்களை, கடும் சோர்வுகளை நம்மால் தடுக்க முடியும்.

சலிப்பைக் களைவதற்கான வழி எப்போதுமே பிறருடன் சேர்ந்திருத்தல்தான். முன்பெல்லாம் சுற்றத்தோடிருந்தாலே அந்த களிப்பு அமைந்துவிடும். பழைய வாழ்க்கையில், சிற்றூர்களில் மாதந்தோறும் அதற்கான தருணங்களுண்டு. குடும்ப விழாக்கள், ஊர்த்திருவிழாக்கள், பண்டிகைகள் என வந்துகொண்டே இருக்கும்.என் இளமையில் வாழ்க்கை என்பதே விழாமுடிந்து அடுத்த விழாதான். ஒன்றுமே இல்லையென்றாலும் சாவடியில் ஏதாவது கதைசொல்லல் நிகழ்ச்சி இருக்கும்.

அன்றைய நல்வாய்ப்பென்பது ஏறத்தாழ அனைவருக்குமே ஒரே வகையான ஆளுமை வார்ப்பு இருந்தது என்பதுதான். அது மரபால் உருவாக்கி அளிக்கப்பட்டது. ஒரே ரசனை, ஒரே வகையான மனநிலைகள். ஆகவே எங்கே கூடினாலும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே வட்டத்தினர் மகிழ்ச்சியாக அந்த கூடுகையை கொண்டாட முடியும். அதை மீறி ஒரு தனித்தன்மை மிகச்சிலருக்கே இருந்தது. அவர்களுக்கு தனியாக இருக்கும் திறனும் இருந்தது.

இன்றைய காலகட்டம் மரபின் பிடி இல்லாதது. ஒவ்வொருவரும் தனக்குரிய வகையில் உருவாகி வருகிறார். தனித்தன்மைகொண்ட குணாதிசயங்களும் சுவைகளும் கொண்டவராக இருக்கிறார். நம்மைச் சூழ்ந்துள்ளவர்களில் பெரும்பகுதியினர் காலப்போக்கில் பொதுவான கருத்துக்கள், பொதுவான ரசனைகளில் இணைந்து பொதுவான ஆளுமையை அடைந்துவிடுகிறார். அவர்கள் தங்களுக்குரிய திரள்களில் இயல்பாக திளைக்க முடியும்.

அறிவுத்திறன், ரசனை கொண்டவர்களுக்கு அவை இல்லாத கூட்டம் ஒவ்வாமையை உருவாக்கும். தன்னை பயிற்றுவித்துக்கொண்டு அவர் அவர்களுடன் ஒத்திசைந்து போகலாம். ஆனால் அவர்களின் அணுக்கத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கமுடியாது. விளைவாக அவர் திரளுடன் இருத்தல் என்னும் அனுபவத்தை இழக்கிறார். மனிதனின் அடிப்படையான கொண்டாட்டம் ஒன்று அவருக்கு இல்லாமலாகிறது.

ஆகவே இன்றைய சூழலில் ஒருவர் தனக்கான நட்புச்சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் ரசனை, அறிவுத்திறனுக்கு இசைந்தவர்களைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அதை ஓர் இளைப்பாறலாக, கொண்டாட்டமாக அவர் வகுத்துக்கொள்ள வேண்டும். தானாக அது அமைந்தால் அமைக என எண்ணக்கூடாது. தேடி அமைத்துக்கொள்ளவேண்டும்.

அத்தகைய ஒன்றுதான் நாம் ஒருங்கிணைப்பது. அது கற்றல் மட்டுமல்ல, அறிவர் கேண்மை என குறள் சொல்லும் நட்புச்சூழலும்கூட. அதை உருவாக்குவதே எங்கள் நிகழ்வுகளின் முதன்மை நோக்கம். ஆகவேதான் போதைப்பழக்கம், கடுமையான விமர்சனங்கள் மற்றும் பூசல்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில்லை. எல்லாச் சந்திப்பும் மகிழ்ச்சியாக அமையவேண்டுமென உறுதியுடனேயே எல்லாச் சந்திப்புகளையும் அமைக்கிறோம்.

நீங்கள் அடைந்த சோர்விலிருந்து விடுபட்டமைக்கு மகிழ்ச்சி

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்.அண்ணாமலை
அடுத்த கட்டுரைதியானப் பயிற்சி அனுபவ பகிர்வு