நாம், நமது உள்ளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் நலம் என நம்புகிறேன். எதிர்பாராத விதமாக எனக்கு கால் மூட்டு ஜவ்வில் ஒரு விரிசல் ஏற்பட்டு மதுரையில் இருக்கிறேன். கடந்து ஒரு வாரம் முழுவதும் மனம் சரியில்லை. நேற்று மிக மோசம். நானும் பார்த்துவிட்டேன். பௌர்ணமி அமாவாசை நாட்களில் மனது சொற்களால் பெருகுகிறது. மாதத்தில் ஒரு முறை கண்டிப்பாக வருகிறது. அரிதாக இரு முறை. மனம் பித்து பிடித்தது போல் உள்ளது. எதுவென்றாலும் அதை வார்த்தையாக மாற்ற முயன்று மனம் விழிப்புடனே உள்ளது.

பெரும்பாலும் அதுபோன்ற நாட்களில் உறக்கம் என்பது இல்லை. எதிர்பாராதவிதமாக என்றுதானே சொன்னேன். ஆனால் காலில் அடிபட்டு ஓடாமல் இருப்பேன். அனைவரும் எனை பார்த்து இரக்கப்படுவர். இதுபோன்ற எண்ணம் இரண்டு மாதத்திற்கு முன் வந்தது. ஒருத் துளி கணத்தில்.  அது மீண்டும் நேற்று திரும்பி வர அமைதியழந்தேன். நான் இதை நிதானிக்க தவறினேனா.

இதுவெல்லாம் தொடங்கியது ஒரு கனவில். இருளத்தொடங்கும் நேரம். என் கையில் இருந்த ஒரு டப்பா தூர சென்று விழ, அதை எடுக்கப் போகிறேன். இடையில் ஒரு இரு சக்கர வாகனம் விபத்தாகி கிடக்கிறது. ஒரு குழந்தை அதன் அருகில் அமர்ந்துள்ளது. அதை சுற்றி ரத்தம் ஓடுகிறது. அங்கே சுழன்று கொண்டிருந்த என் போனை எடுத்துக் கொண்டு அவசரமாக நடக்க ஒரு கரிய நாய் முகத்தில் பாதி சதை இல்லாமல் ரத்தமாக கூரான பற்களை காட்டியபடி வருகிறது. அது கன்றுகுட்டி உயரம் இருக்கும். அதன் கண்களில் குரோதம் அல்லது வெறிப்பு மட்டுமே இருந்தது.

உண்மையிலே நடுங்கினேன். பக்கத்தில் பழ வண்டியில் இருந்த ஏதோ பொருளை எடுத்து அதை நோக்கி எறிகிறேன். அது விலகி என்னை நோக்கி பாய்கிறது. அதற்குள் நான் பழ வண்டிக்கு பின் உள்ள நடைபாதையில் ஏறி கொஞ்சம் தள்ளி இருந்த பெரிய மரத்தை ஒட்டி சென்று திரும்பி பார்க்கிறேன். மரத்தை ஒட்டிய பெஞ்சில் கருப்பான ஒரு உருவம் அமர்ந்திருக்கிறது. வெறும் கரும் புகை. வெற்று குழி கண்கள். துளை கொண்ட மூக்கு. குழி கண்ணில் நாயின் அதே வெறிப்பு. அது மானுடரின் வெறிப்பு அல்ல. உடல் நடுங்கியது. நான் அந்தளவு கனவில் நடுங்கியதில்லை.

இது என் நினைவிலும் பெரிய பாதிப்பை செலுத்துகிறது. எதிர்மறையான விஷயங்களை உங்களுக்கு எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். ஆனால் இதை வேறு யாரிடம் சொல்ல எனத் தெரியவில்லை. இதை எப்படி மேலாண்மை செய்வது என தெரியவில்லை. என் இயல்புக்கும் என் வேலைக்கும் ஒத்துவருமா என்ற சந்தேகம் எப்போதும் உள்ளது. சமாளித்துவிடுவேன் என்றும் தோன்றுகிறது. இருந்தும் அமைதியின்மை.

அன்புடன்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

அன்புள்ள ஆ,

உங்கள் கனவுகள் சாதாரணமாக அனைவருக்கும் உருவாகும் இயல்பான தீக்கனவுகளே. கனவுகளுக்கு முன்பு உளவியலில் நம்பப்பட்டது போல பெரிய ஆழ்ந்த பொருளேதுமில்லை. அவற்றைக்கொண்டு ஒன்றை மட்டுமே சொல்லமுடியும். உங்களுக்கு அச்சம், பதற்றம் ஆகியவை உள்ளன. அவற்றை போக்கிக் கொள்ளவும்.

உங்களுக்கு கொஞ்சம் உளச்சோர்வு இருக்க வாய்ப்புண்டு. அதற்கான புறக்காரணங்கள் சில இருக்கலாம். ஆகவேதான் தூக்கம் குறைவாக உள்ளது. தூக்கத்தை மட்டும் சரிசெய்துகொண்டாலே போதும் என நினைக்கிறேன். அதற்கு எளிய முறையில் என்றால் யோகம், தியானம் போன்றவையே உதவும். கூரிய பிரச்சினை என்றால் மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படும். நீங்கள் இக்கனவுகளை மிகையாக்கிக்கொள்ளாமலிருந்தாலே போதும்.

ஆனால் உளச்சோர்வு நிலையில் தியானம், யோகம் போன்றவற்றை தனியாகச் செய்யலாகாது. தானாகவே செய்யவும்கூடாது. உடனிருந்து நோக்கும் ஆசிரியர் தேவை. கூட்டாகவே செய்யவேண்டும். உளச்சோர்வு நிலையில் திரளுடன் இருத்தல் ஒவ்வாமையை அளிக்கும். தவிர்க்கவே பார்ப்போம். ஆனால் திரள்தான் அதற்கு மருந்தே.

*

தனிப்பட்ட முறையில் உளச்சோர்வு, செயலின்மை குறித்த கடிதங்கள் எனக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அனேகமாக அவ்வாறு ஒரு கடிதம் வராத நாளே இல்லை.

இவற்றை ஏன் எனக்கு எழுதுகிறார்கள்? நான் உளவியலாளன் அல்ல. நடைமுறைச்சிக்கல்களுக்குப் பெரிதும் உதவும் நிலையிலும் இல்லை. ஆனால் வாசகர்களுடன் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருப்பவன். உரையாட முற்படும்போது இயல்பாகவே ஓங்கி நின்றிருக்கும் முதன்மைச் சிக்கல்களே எழுந்து வருகின்றன. அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

இவற்றை நிபுணர் என்னும் நிலையில் அல்ல, தானும் இந்த உளநிலைகள் வழியாகக் கடந்து வந்தவன் என்னும் முறையில்தான் பதிலளிக்கிறேன். நடைமுறை சார்ந்த பதில்களை அளிக்கிறேன். யோசிக்கும்படிச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

ஒருவேளை இவற்றை இக்கடிதங்களை எழுதுபவர்களின் பெற்றோரே சொல்லிவிடக்கூடும். நமக்கு தாய்தந்தையர் சொல்வதை கேட்க பல உளத்தடைகள் உள்ளன. ஆணவச்சிக்கல்கள் உள்ளன. ஆகவே ஓர் ‘அயலவர்’ சொல்ல விரும்புகிறோம் என படுகிறது.

*

உளச்சோர்வு பற்றி இரண்டு அடிப்படைப் புரிதல்களை நாம் அடையவேண்டும்.

ஒன்று, உளச்சோர்வை வென்று வெளியேறவேண்டும் என நாம் நம் தரப்பில் இருந்து விரும்பவேண்டும். நாமே முயலவேண்டும்.

அது ஒரு கெட்ட கனவிலிருந்து நம்மை நாமே விழிப்படையச் செய்வதுபோல. நம் கட்டுகளை நாமே அறுத்துக்கொள்வதுபோல. அவ்வளவு எளிது அல்ல அது. ஏனென்றால் நாம் செயலின்மை, சோர்வு என நினைப்பவற்றில் இனியதுயரம் என ஒன்று உள்ளது. ஆங்கிலத்தில் அதை melancholy என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார்கள். அது நம் நாட்களை நிறைத்துவிடும் தன்மை கொண்டது. நம் சிந்தனையை முழுக்க அது மூழ்கடிக்கும். நம்மைச் சூழ்ந்திருக்கும் அனைத்தும் அதுவாகவே மாறிவிடும்.

அந்த நிலையில் நாம் அந்த உளநிலைக்கு உகந்தவற்றை வாசிப்போம், பார்ப்போம், பேசுவோம். அதில் திளைப்போம். அது கொல்லும் நஞ்சு. ஆனால் இனியது. அதில் திளைப்போம். அது சலித்து எவரும் வெளியேறுவதில்லை. அதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையுணர்ச்சி நமக்குள் உள்ளது. அது நம்மை அவ்வப்போது உசுப்பி, வெளியேறச் சொல்கிறது. கனவுக்குள் வரும் நேரப்பிரக்ஞை போல. ஆனால் கனவு நம்மை திரும்ப உள்ளே இழுக்கும். நாமே நம்மை விடுவித்துக்கொண்டே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.

மிக அரிதாகச் சிலருக்கு அந்த வெளியேறும் எச்சரிக்கையே எழாமலிருக்கும். அவர்கள் முழுமையாக அச்சோர்விலேயே மூழ்கியிருப்பார்கள். மிகச்சிலர் அச்சோர்வை மிகையான உற்சாக வெளிப்பாடுகளால், போலிச்செயல்வேகத்தால் மறைத்துக்கொண்டும் இருக்கக்கூடும். அவர்களை பிறர் அடையாளம் கண்டு மீட்கவேண்டியிருக்கும்.

இரண்டு, உளச்சோர்வில் இருந்து நாமே வெளிவருவது அனேகமாக இயலாது. வெளியுதவி தேவை.

உளச்சோர்வு என்பது புதைமணல். உதவிகோர மட்டுமே நம்மால் முடியும். எவ்வளவு முயன்றாலும் நாமே வெளிவருவது இயலாது. மிக அரிதாகச் சிலசமயம் சிலரால் முடியலாம். பொதுவாக பிறர் உதவி தேவை. அந்தப் பிறர் அதன்பொருட்டு நேரம் செலவிடக்கூடியவர்களாகவும், அதில் எவ்வகையிலேனும் நிபுணர்களாகவும் இருக்கக்கூடுமென்றால் நல்லது.

ஒரு நிபுணர் என்ன செய்ய முடியும்? அற்புதங்களை அவர் நிகழ்த்திவிட முடியாது. ஆனால் புதைமணலில் இருப்பவர்களுக்கு மெல்லிய ஒரு சரடு பிடிகிடைத்தாலே போதும். சமநிலையில்லாமல் ஒரு விளிம்பில் நடக்கையில் ஒரு மெல்லிய பிடியே போதும். அதைப்போலத்தான்.

நிபுணரிடம் நாம் நம்மை முன்வைக்கிறோம். பெரும்பாலும் நாம் நம்மை புனைந்துகொள்ளவே செய்வோம். உண்மை என்பது அந்த புனைவாகவே வெளிப்படும். நாம் என்னதான் ‘அப்பட்டமாக’ நம்மை முன்வைத்தாலும் அது புனைவே. அது நம் ஆணவம், எச்சரிக்கை எல்லாம் கலந்து உருவாவது. ஆனால் அப்படி புனையும்போதே நாம் நம்மை தொகுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுவோம். அதுவே பெரிய விடுதலை.

நிபுணர் இதேபோன்ற சூழல்களை நிறைய பார்த்தவராகவும், ஆகவே உணர்ச்சிகரமாக ஈடுபடாதவராகவும் இருப்பது அவசியம். இன்று உளவியல் ஆலோசனை சொல்லும் பலர் அவ்வாறல்ல என்பதையும் நான் அறிவேன். உளவியலாளர்களை விட யோக- தியான ஆசிரியர்கள் அவ்வகையில் பலமடங்கு மேலானவர்கள் என்பதையும் கண்டிருக்கிறேன்.

ஒரு நிபுணர் நம் பிரச்சினைகளை தீர்ப்பதில்லை. அவற்றை வகுத்து அளிக்கிறார். நாம் நம் பிரச்சினைகள் நமக்கு மட்டுமே உரியவை என நினைப்போம். அவை மிகச் சிக்கலானவை என நினைப்போம். அவற்றுக்கு மீள்வழியே இல்லை என நினைப்போம். அவர் அவை பொதுவான எளிமையான பிரச்சினைகளே என நமக்குக் காட்டுவார். அந்த சிக்கல்களுக்கு அடியிலுள்ள அடிப்படைகளை நமக்கு விளக்குவார். மீள்வழிகளைச் சுட்டிக்காட்டுவார்.

பிரச்சினை கொண்டவர்கள் அனைவருமே அந்த விளக்கங்களை, எளிமைப்படுத்தலை, வழிகாட்டலை எதிர்ப்பார்கள். ஏனென்றால் அவர்களின் பிரச்சினை பொதுவான எளிமையான பிரச்சினைதான் என்றால் அவர்களுக்கு ஓர் ஏமாற்றம் உருவாகிறது. அவர்களின் அகங்காரம் சீண்டப்படுகிறது. ஆகவே எதிர்த்து வாதிடுவார்கள். ஆனால் அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அது உண்மை என்றும் தெரியவரும். ஒரு சிறுசாரார் பிடிவாதமாக வெளியே வர மறுத்து வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தாங்களே வெளிவந்தால்தான் உண்டு.

இந்த நிபுணர்களின் முதன்மைப் பங்களிப்பு என்பது எங்கே எந்தப்புள்ளியில் உள்ளச்சிக்கல் என்பது மூளைநரம்பு சார்ந்த சிக்கலாக ஆகிறது என அவர்களால் சொல்லமுடியும் என்பதே. உளச்சோர்வே கூட அரிதாக உளப்பிளவுக்கு முந்தைய அடையாளமாக இருக்கலாம். அதற்கு மருந்துகள் மட்டுமே தீர்வு. வேறு எதுவுமே பயனுள்ளவை அல்ல. நல்ல ஆலோசகர் அங்கே உடனே அனுப்பிவிடுவார்.

நம்மை ஒருவர் செவிகூர்ந்து கேட்கிறார் எனும்போதே நாம் நம்மை அவருக்காக கட்டமைக்க ஆரம்பிக்கிறோம். கட்டின்றி பரவிக்கிடக்கும் நம் ஆளுமை அவ்வாறாக நம்மால் தொகுக்கப்படுகிறது. அவருடைய வழிகாட்டலை நாம் கைகொண்டால் மேலே செல்லமுடியும். அது ஒன்றும் கடினமானது அல்ல.

நம்மை ஒருவர் வழிநடத்துகிறார் என்னும்போது அவர் சொற்களை நாம் வெளியே இருந்து கேட்கிறோம். அதில் நாம் நமக்குரியவற்றையே ஏற்போம். ஆகவே அவை நமது சொற்களே. ஆனாலும் அவை வெளியே இருந்து வருவன என்பதனால் வெளியுதவியாகவே அமைபவை. அவற்றை நம்பினால் வெளிவர முடியும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஎம்.ஆர்.ஜம்புநாதன்- ஒரு மோசடியின் இரை
அடுத்த கட்டுரைஒரு நாவல் நூலகம்