குருதியும் வெற்றியும்- கடிதம்

அன்புள்ள ஜெ

ஸ்டாலின் ராஜாங்கம் இணையத்தில் எழுதிய குறிப்பு இது:

*

பள்ளிக்கூடம் வரும்போதெல்லாம் பத்து ரூபாய் கேட்கிறான்.கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறான்.நாளைக்கு வரும்போது 20 ரூபாய் கொண்டு வா என்கிறான்.டீச்சர் இருக்கிறார் பேச வேண்டாம் என்று சொன்னால் அம்மாவைப் பற்றி ஏசுகிறான்.தேர்வு எழுதும் போது காட்டச் சொல்கிறான். இல்லை என்றால் அடிக்கிறான். பேனாவை வைத்துக் குத்துகிறான்.தமிழ் ஆசிரியர் வந்தால் ஊளையிட சொல்கிறான்.வகுப்பில் வைக்கும் தேர்வை எழுத கூடாது என்கிறான்.வெளியே

ஓட்டலிலிருந்து சாப்பாடு வாங்கி வரச் சொல்கிறான்.தேர்வு எழுத தேர்வுத்தாள் வாங்கினால் எனக்கும் தா என்கிறான்.

– நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை தன் மீது நடத்தப்பட்டு வந்த சீண்டல்கள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்த புகார் கடிதத்தின் சாரம் இது.தினமும் இது மாதிரி சின்ன சின்ன டார்ச்சர்களை சந்தித்து வந்த சின்னதுரை ஒருக்கட்டத்தில் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடுகிறான்.படிப்பதை விட்டு விட்டு சென்னையில் ஏதாவது வேலைக்கு சென்று விடவும் திட்டமிடுகிறான்.பள்ளிக்கு வராததை ஒட்டி தலைமை ஆசிரியர் அழைத்து விசாரித்த போது தான், மேற்கண்ட விசயங்களை அவனால் சொல்ல முடிந்திருக்கிறது.அவற்றை புகார் கடிதமாக எழுதச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.இந்த ‘எளிய ‘புகாரை அளித்த அன்றைய இரவில் தான் புகாரோடு தொடர்புடையவர்களால் சின்னத்துரை வெட்டப்பட்டிருக்கிறான்.

உடலாலும் உள்ளத்தாலும் ஒரு சிறுவன் முற்றிலும் சீர்குலைக்கப்படுவதற்கு எந்த நியாயமான காரணமும் (சாதியை தவிர) இருக்க வேண்டியதில்லை,

அதற்காக கொலை வரையும் செல்லலாம் என்பதே தாக்கியவர்கள் மனநிலையாக இருந்திருக்கிறது.

தன் சக மாணவன் மீது இத்தகைய வன்முறைகளை ஏவும் மனநிலை அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? தாங்கள் செய்வது தவறு என்கிற மனநிலை எழாததற்கு காரணம் என்ன? தாங்கள் செய்வது சரி என்னும் துணிச்சலை தருகிற உளவியல் எது? இவை தான் சமூகத்தின் மனோபாவம் என்றால் நாம் என்ன செய்ய போகிறோம்?

*

இதிலுள்ள சாதிய அம்சத்தை அவர் சுட்டிக்காட்டியிருப்பது சரிதான். ஆனால் இதை இன்னும் யதார்த்தமாகவே பார்க்கவேண்டும். இதெல்லாம் யாருக்கும் தெரியாத விஷயங்களும் அல்ல. இதை அறியாமல் ஒருவர்கூட தமிழ்நாட்டில் வாழமுடியாது. ஆனால் அவரவர் அரசியலுக்கு ஏற்க ஒன்றுமே தெரியாதவர் போலப் பேசுவார்கள்.

நான்குநேரி விவகாரத்தில் முதன்மையாக கவனிக்கப்படவேண்டிம்யது உள்ளூர் அரசியல். அந்தக்கொலைமுயற்சியைச் செய்த சிறுவர்களின் குடும்பமே அரசியல் குடும்பம். அவர்கள் ஒவ்வொருவரும் திமுக, மதிமுக போன்ற கட்சிகளில் இருக்கிறார்கள். அதிமுகவில்கூட இருக்கலாம். இவர்களுக்கு இருக்கும் சாதிப்பின்புலத்தால்தான் இவர்களுக்கு இந்த அரசியல் இடம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள grassroot அரசியல் என்பது ஒரே ஃபார்முலா கொண்டதுதான். உள்ளூரில் எண்ணிக்கைபலம் கொண்ட சாதியில் இருந்து குற்றப்பின்னணி கொண்ட ஒருவர்தான் எல்லா அரசியல்கட்சிகளுக்கும் அடித்தளத்தில் தலைவராக இருப்பார். கௌன்சிலர், கிளைத்தலைவர், வட்டத்தலைவர் ஆகிய பதவிகளில் இருப்பார். கோவாப்பரேட்டிவ் வங்கி போன்றவற்றை ஆக்ரமித்து வைத்திருப்பார். அவருக்கு போலீஸ் நிலையத்தில் செல்வாக்கு இருக்கும். அவருக்கு ஒரு தேவை என்றால் கட்சிக்காரர்கள் வந்து நிற்பார்கள்.ஊர் முழுக்க அவரைப்பார்த்து பயப்படுவார்கள். அந்தப்பயம்தான் அவர்களின் முதலீடு. அவர்களில் சிலர் படிப்படியாக மேலேறி மந்திரிகளாககூட ஆகிவிடுவார்கள்.

இவர்களை அந்த அரசியல்கட்சி தவிர எவருமே கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அரசியல்கட்சிகள் அதனைச்செய்ய மாட்டார்கள். அவர்களின் அஸ்திவாரமே அதுதான். அவர்களின் குடும்பத்து பிள்ளைகளும் அதே மனநிலையில் வளர்கிறார்கள். எதிர்கால அரசியல் தொண்டர்கள் அவர்கள். இந்த குற்றப்பின்னணி அவர்களுக்கு பெரிய ஒரு அடையாளமாகத்தான் ஆகும். இப்போது ஒரு கொலைமுயற்சி வழக்கு நடைபெறுகிறது. சாதாரணாக் குடும்பம் என்றால் உடைந்து போயிருக்கும். ஆனால் இவர்கள் அரசியல்குடும்பம். அவர்களுக்கு இது ஒரு பெருமைதான். ஜாமீனில் வெளிவந்தால் அந்த பையன்களை ஊரே பயப்படும். படிப்படியாக கட்சியில் மேலே செல்வார்கள். இதுதான் உண்மை

ஒரு தலித் தாக்கப்பட்டபோது இது பிரச்சினை ஆகிறது. ஆனால் நீதிமன்றத்தில் ஒன்றும் நடக்காது. இப்படி எத்தனையோ வழக்குகள். இதில் அரிவாள் வெட்டு இருந்ததனால் இவ்வளவு பரபரப்பு. அடி மட்டும் என்றால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அடிபட்டவன் தலித் அல்ல என்றால் மீடியா கவனிக்காது. அடிபட்டவன் ஆசாரிமார் போல ஒரு எண்ணிக்கை பலமில்லாத சாதி என்றால் கேட்கவே ஆளில்லை.இதே நிலைமையில்தான் ஒவ்வொரு சாமானிய மாணவனும் இன்றைக்கு பள்ளிகளுக்கு போய்வருகிறான். பெரும்பாலான ஊர்களே இவர்களைப்போன்றவர்களின் கட்டுப்பாட்டிலேதான் உள்ளன.

இதெல்லாம் இப்போது எவருமே பேசமுடியாது. தாக்குவதும் அரசியல்கட்சிகள். அதை கண்டித்துப்பேசவேண்டுமென்றாலும் அதே அரசியல்கட்சிகள் என்ன சொல்கிறதோ அதையே சொல்லி கண்டிக்கவேண்டும். இல்லையேல் நமக்கு வசைதான். அடிகூட கிடைக்கலாம்.

ஆர்

(நான் ஆசாரிமார். நெல்லை மாவட்டம். ஆகவே பெயர் வேண்டாம்)

குருதியும் வெற்றியும்

முந்தைய கட்டுரைதூரன் விழா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைதீபு ஹரி