இருளும், இருளுருவும்- கடிதங்கள்

ஜெயமோகன் குறுநாவல்கள் வாங்க

அன்புள்ள ஜெ!

மிக்க அன்புடன் பார்த்திபன்.
தங்களுடைய ‘டார்த்தீனியம்’ நேற்று வாசித்தேன். ஒரு நல்ல குடும்ப சூழலில் ஆரம்பித்து ஒரு கட்டத்தில் பதற்றம் தொற்றிக்கொள்ள முடிவுக்குப்பின்னர் பதைபதைப்பு மனதில் உட்கார்ந்துக் கொண்டு  நீங்க மறுக்கிறது.  ஒரு துளி விஷம் என்றாலும் பாற்கடலும் பாழ்தான் போல.  மரம் என்ற போர்வையில் வளரும் விஷம் அம்மரத்தை கனிவுடன் வளர்த்தவரையும் இல்லாமலாக்கும்போது விடாப்பிடியாக மனது ஒன்றைப் பற்றிக்கொண்டு எவ்வித தர்க்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் ஒரே பிடிவாதமாக இருப்பதன் பலனை அடையத்தான் வேண்டும் என்பது கண்கூடு.
ஒவ்வொரு உயிரும் வீழும்போதும் வீழ்ந்த சோகத்தை முழுமையாக உணராது தன் அன்புடன் அந்த மரத்தின் மீதான பரிவை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கும் அப்பாவை என்னால் உதறித்தள்ளமுடியவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற புரிதலோடு அப்பா அனைத்து உயிர்களிடமும் வைத்திருக்கும் அன்பு – பலரால் உணர்ந்தறியா பேரன்பு. ‘கேட்டிலும் துணிந்து நில்’ என்பதற்கு உதாரணம் அப்பாவுக்காக துணை நிற்கும் அம்மா .
எல்லா இழப்புக்களுக்கும் மத்தியில் உயிர்வாழும் ‘ராஜு’ க்கள் இருக்கிறார்கள் இன்னமும்.
பதைபதைப்பைக் கடக்க ‘சங்கச் சித்திரங்கள்’ வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
மிக்க அன்புடன்
பார்த்திபன்.ம.
காரைக்கால்.
அன்புள்ள ஜெ,
அண்மையில் நான் வாசித்த கதைகளில் எல்லா வகையிலுமே மகத்தான கதை என்பது மண். ஒரு மாபெரும் சினிமா போல இருந்தது. அதை சினிமாவாக எடுத்தால் அதை வெல்ல ஒரு இந்திய சினிமா இல்லை. என்னென்ன இடங்களை தொட்டுச்செல்கிறது. இந்திய சமூகத்தின் சரிவைச் சொல்லும் கதையா? சூழியல் அழிவைச் சொல்கிறதா? ஆன்மிக அழிவைச் சொல்கிறதா? அந்த யானை உண்மையில் என்ன? எவ்வளவு பெரிய டிராமா.
உங்கள் 30 வயதுக்குள் எழுதிவிட்டீர்கள். இன்றுவரை பெரிதாகப்பேசப்படாமலேயே இருக்கிறது இந்தக் கதை
அன்புச்செழியன்
சென்னை
முந்தைய கட்டுரைஇருந்துகொண்டே இருப்பவர்கள்
அடுத்த கட்டுரைரோம்,கிரேக்கம், உலகம் – ஒரு விவாதம்-2