விருதுகள், கனவுகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தூரன் விருது விழாவில் இந்த ஆண்டு இருக்க வேண்டும் என்று சென்ற ஆண்டு விழா முடியும் போதே எண்ணிக்கொண்டேன். இந்த ஆண்டு விழா அறிவிப்பு வந்தவுடன் அலுவல் சார்ந்த பணிகளையும் அதற்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டேன்.

விழாவில் ஜெட்லாக் காரணமாக கொஞ்சம் தூக்க கலக்கத்தோடு அமர்ந்திருந்தாலும் நாதஸ்வர இசை என்னை முழுவதுமாய் ஆட்கொண்டது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கர்நாடக இசை (வாய்ப்பாட்டு) கற்றிருந்ததால் ராகங்கள் ஓரளவுக்கு தெரியும். ஆபோகி அரங்கில் ஒலித்த போது “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” என்னும் நான் கற்றுக்கொண்ட பாபநாசம் சிவன் கிருதி நினைவில் வந்தது. நளினகாந்தி த்யாகய்யரின் “மனவியலாக்கின் சேரா  தட்டே” பாடலையும் துவிஜாவந்தி தீக்ஷதரின் “அகிலாண்டேஸ்வரி” கிரிதியையும் என்னை முணுமுணுக்க வைத்தன. கூடவே இளையராஜா  இந்த ராகங்களில் அமைத்த பாடல்களும்.

இந்த தூரன் விருதிற்கான விருதுத்தொகையை அளிப்பதில் உள்ள மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதற்காக உங்களுக்கு என் நன்றி. இறுதியாக நிகழ்ச்சி முடிந்து புறப்படும் போது உங்கள் ஆசி பெற வந்த என்னை நீங்கள் ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள். அந்த நிமிடம் என் ஆயுள் இறுதிவரை நினைவில் தங்கும். அனைத்திற்கும் நன்றி ஜெ.

அன்புடன்

வாசு

அன்புள்ள வாசு

ஒரு காலகட்டத்தின் புயல் என என் உரையில் சொன்னேன். அதில் பறப்பவர்கள் நாம். அது ஒரு நல்லூழ். நாம் நம்மைமீறிய சிலவற்றுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். அது ஒரு விடுதலை

ஜெ

அன்பின் ஜெயமோகன்

 

வணக்கம்.

1.

தூரன் விழா பதிவுகளில் வையாபுரிப்பிள்ளை நினைவாகஅவர் பெயரில் விழா நடத்துவது குறித்து நீங்கள் எழுதியதை சில நாட்களுக்கு முன் படித்தேன்.  இது குறித்து ஒரு முடிவெடுத்தவுடன் எனக்கு தெரியப்படுத்தவும். விழா செலவுகளில் பங்கெடுக்க ஆர்வமாய் உள்ளேன். புரவலம் வழி நல்லூழ் தொழுதலுக்காக விஜியின் [மனைவி அவர்கள்] புரிதலுடன்,  உயிலில் சிறு மாற்றம் செய்யலாம் என உள்ளேன்.

2.
நாதஸ்வர இசை தொடர்பான பதிவுகளுக்கு உளம் நிறைந்த நன்றி. திருமெய்ஞானம், தலைச்சங்காடு ஊர் பெயர்களை படிக்க மனதில் சிலிர்ப்பு. வெட்டிவிட நினைத்தாலும் முடியவில்லை, கவலையின்றி இளம் வயதில் அலைந்த ஊர்களை, நிலங்களை, நினைவுகளை. வரும் காலத்தில், திருப்பாம்புரம் சகோதரர்களைமீனாட்சிசுந்தரம், சுவாமிநாதன் [ ஒருவர் இல்லை இப்போது என நினைக்கிறேன்] கௌரவிப்பதாக இருந்தால், அதன் பொருளாதார பொறுப்பு எனது கடமை. அவர்களுக்கு நான் ஒரு வகையில் கடன் பட்டுள்ளேன்.

வாசன் பிள்ளை

 

அன்புள்ள வாசன்,

இன்னும் சில நண்பர்களை தொடர்பு கொள்ளலாம் என நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களுக்கான ஓர் விருது நான் உத்தேசிப்பது. ஐம்பது அகவைக்குக் குறைவானவர்கள். மதுரை அல்லது நெல்லையில். ஒரு விழா, மார்ச் அல்லது ஏப்ரலில். திட்டமிட்டபின் தொடர்பு கொள்கிறேன்.

இசைக்கலைஞர்களை முன்னிலைப்படுத்தும் எண்ணமும் உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைகாவல் மாடங்களும் பிரம்ம ராட்ஷசனும்- கடிதம்
அடுத்த கட்டுரைஎஸ்.அண்ணாமலை