“சைதன்ய யதி அவர்களிடம் அந்த திருவொடு இருந்தது. அதில் காணிக்கைகளை வாங்கிக் கொண்டார்”
ஒரு ஆவலால் கேட்கிறேன்.தங்களிடம் பழைய திருவோடு உள்ளதா?
சுப்பு மணி
*
அன்புள்ள சுப்பு மணி,
சாஸ்திரப்படி முறையாக துறவு பூண்பவர்கள் மட்டுமே திருவோடு ஏந்தவேண்டும்.
சரி, ஆனால் பொதுச்செயல் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு மானசீகத் திருவோடு உண்டு. நான் அதை நவம்பரில் ஏந்துவேன். அதுதான் ஆண்டு முழுக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நடவடிக்கைகளுக்காக.
ஜெ
மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
பெரியசாமித் தூரன் விருதுவிழாப் பதிவில் https://www.jeyamohan.in/186484/
நீங்கள், குமரியில் நாதசுரத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறீர்கள். “மையத்தமிழ்ப்பண்பாடில் இருந்து குமரி நோக்கி நீண்டுவரும் ஒரு மாயக்கரம் அது.”
நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு சந்தேகம். நாதசுரத்தைப் பற்றி அல்ல. மையத் தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி.இன்றைய நாட்களில், தஞ்சை அல்லது மதுரை தமிழ்ப்பண்பாட்டின் மையமாகக் கருதப்படுகிறது.
ஆனால், பழங்காலத்திலும் அப்படித்தானா? ‘ச’கரம் வல்லினத்தில் வருகிறது. (கசடதபற வல்லினம்). எனக்குத் தெரிய, நெல்லை மாவட்டக்காரர்கள் தான் சகரத்தை வல்லினமாக (ச்சகரம் ச்சோறு ச்சக்கரம் ச்சப்புனு அடி) உச்சரிக்கிறார்கள். மைய மற்றும் வட தமிழ்நாட்டுக் காரர்கள் சகரத்தை ஸகரமாகவே (மெல்லினம் அல்லது இடையினமாக) உச்சரிக்கிறார்கள்.
தமிழ்ப் பண்பாட்டு மையம், பேரரசர்கள் காலத்தில், நெல்லையிலிருந்து வடக்கு நோக்கி மதுரை அல்லது தஞ்சைக்கு நகர்ந்துவிட்டதா என்பதே என் சந்தேகம். அல்லது, மொழி மையமும் பண்பாட்டு மையமும் வேறுவேறு பகுதிகளாக இருந்தனவா?
அன்புடன்,
வி. நாராயணசாமி.
அன்புள்ள நாராயணசாமி,
மொழி, உச்சரிப்பு ஆகியவற்றைக்கொண்டு தமிழ்ப்பண்பாட்டின் மையம் எது என சொல்லிவிடமுடியாது. உண்மையில் பழைய தமிழ் குமரிமாவட்டம், இலங்கை, நம் கடற்கரைகள் ஆகியவற்றில் பேசுவதுபோன்ற, ஏறத்தாழ ஒரே ஓசை கொண்ட உச்சரிப்புடன் பேசப்பட்டிருக்கும். இந்த பகுதித்தமிழ்களில்தான் பழந்தமிழ்ச் சொற்கள் ஏராளமாக உள்ளன. அவை பிறபகுதி வட்டார வழக்குகளில் இல்லை.
ஆனால் குமரி, இலங்கை, கடலோரம் போன்றவை மையங்கள் அல்ல; அவை விளிம்புகள்தான். அங்கே படையெடுப்பும் ஆக்ரமிப்பும் அயலாட்சியும் நடக்கவில்லை என்பதனால் அந்த வட்டார மொழிகள் பாதிப்பின்றி தப்பித்தன. எது மையமோ அதுதான் எப்போதும் படையெடுத்துக் கைப்பற்றப்படும் இல்லையா?
தமிழ்ப்பண்பாடு என்பது இரண்டு பேரரசுகளின் உருவாக்கம். சோழப்பேரரசு முதன்மையாக. அடுத்து குறுகியகாலம் இருந்த பாண்டியப்பேரரசு. அப்போதுதான் நிலையான ஆட்சி, போர் இல்லாத சூழல் ஆகியவை உருவாயின. உபரி ச்செல்வம் திரட்டப்பட்டு கலை, சிந்தனை ஆகியவற்றுக்கும் பாசனங்கள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கும், மதத்திற்கும் அளிக்கப்பட்டது. அதனூடாகவே நாம் இன்று பண்பாடு எனச் சொல்லும் எல்லாமே உருவாயின.
சோழப்பேரரசின் தலைமையிடம் தஞ்சை- பழையாறை. பாண்டியப்பேரரசின் மையம் மதுரை. ஆகவே அந்த இரு புள்ளிகளில்தான் தமிழ்ப்பண்பாடு மையம்கொண்டிருந்தது. இன்றும் அங்குதான் அந்த நீட்சி உள்ளது. குறிப்பாக, தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் என சொல்லத்தக்க, கோயில்கலைகள், , மதத்தத்துவங்கள், பண்டைய இலக்கியம், மரபிசை, உணவுகள் ஆகியவற்றுக்கு தஞ்சையே இன்றும் முதன்மையிடமாக உள்ளது
ஜெ