ஆசிரியருக்கு வணக்கம்!
“காவியங்கள் முழுமை தன்மையோடு இருக்கும், எங்கிருந்து தொடங்கினாலும் உங்களால தொடர முடியும்னு” உங்க கட்டுரை வரிகளை நினைத்துக்கொண்டு, வெண்முரசை நான் வீட்ல இருந்த களிற்றியானை நிரையிலிருந்து தொடங்கியிருக்கிறேன். ஒரு மாதம் யோக பயிற்சி செய்து திரட்டிய ஆற்றலுடன், “ரிஷி யக்ஞம்” செய்வதுடன் மீண்டெழவும் காத்திருந்த எனக்கு இது சரியான தேர்வாக இருந்தது.
களிற்றியானை நிரையையில்,
” ஒவ்வொரு நிகழ்வும் வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டது. ஒவ்வொரு உணர்வும் பிறிதொரு உணர்வால் சிதறடிக்கப்பட்டது. ஒவ்வொரு பெருவீரனும் தன் ஒளிமிகுந்த முகத்துடன் எழுந்த கணமே இருள் கவியும் முகிலொன்று அவன் தலைக்குமேல் தோன்றியது. அறம் திகழும் நிகழ்வை கீழ்மையின் உச்சமென பிறிதொரு நிகழ்வு ஈடு செய்தது. எங்கும் ஒரு கணமும் நிலைக்கவிடாது மலைவெள்ளச் சுழிப்பென அப்போரின் கதைகள் அவனை அலைக்கழித்தன.”
“அன்பும் வெறுப்பும், மகிழ்வும் துயரும், இன்பமும் துன்பமும், நன்மையும் தீமையும், இருளும் ஒளியும், இருத்தலும் இன்மையும்”
இருப்பதாய் உணர்கிறேன்.
வெண்முரசு கூட்டங்கள், கடிதங்கள், இணைய பக்கங்கள் வழியே வெவ்வேறு கோணங்கள் இனிதான் பார்க்கப்போகிறேன். அதற்கு முன்,
“குழந்தைகள் அனைத்துப் பாடல்களையும் குழந்தைப்பாடலாக மாற்றிக்கொள்வது போலத்தான். இங்கு இனி இப்பெரும்போர் அனைத்துமாகலாம். மண்ணைக்கொண்டு இல்லங்களும் அடுகலங்களும் அமைப்பதுபோல். அதைக்கொண்டே இங்கு வாழ்க்கை அமைக்கப்படலாம்.”
என்பது போல நான் ஒவ்வொரு கதைமாந்தர்களிடமும் எதோ ஒரு கணத்தில் என்னை இணைத்து எனக்கு அணுக்கமான கோணத்தில் பார்க்கிறேன்.
மேலும் இதை தொகுக்கும் பொருட்டு, ஒவ்வொன்றுக்கும் பிறிதொன்றுடன் இருக்கும் உறவு, ஒவ்வொன்றின் பொருள். மானுடரின் எல்லை, நிகழ்வுகளின் ஒருமை ஆகியவற்றை எண்ணி பார்க்கிறேன்.
ஆதன் கதாபாத்திரம்:
முதல் பக்கத்தில், சிறுவனாக தனித்து ஏதுமறியாமல் அறிமுகமான ஆதன், கடைசி பக்கத்தில் பேரரசிக்கு முன் கலிதேவனின் பூசகராக இருந்தது வரை முழுமையாக வரையரை செய்யப்பட்டு இருந்தான். தன்னுடைய இலக்கு தேடி தனிமையில் அமர்ந்து தொலைவை நோக்கியபடி இருந்தவன், அஸ்தினபுரம் எனும் சொல்லினால் தூண்டப்பட்டு, முதுசாத்தானிடமும், மிழயரிடமும் சொல்லிவிட்டு “துளியும் இழப்புணர்வு தோன்றவில்லை. கிளையசையாது எழுந்து பறக்கும் ஒரு பறவைபோல் அவன் அனைத்தையும் விட்டு நீங்கினான்” இதன்படி அவன் முழுதாய் அஸ்தினபுரியை நோக்கி செல்கிறான்.
அஸ்தினபுரியை புகழ்ந்து பல கதைகளை கேட்டு கற்பனையில் அதை பெருக்கிய மறுநொடி, அப்படி ஒரு நகர் இருக்காது என்ற சொல்லையும் அவன் பயண தொடக்கத்திலே கேட்டான்.
“தனக்கு அழிவையே துயரையே அளிப்பதாயினும் அறிவை ஒருபோதும் மனிதனால் வேண்டாமென்று சொல்ல இயலாது. அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது” என்றான் ஆதன்.
“பழைய வேதம் படைக்கலம் ஏந்தியது. இப்புதிய வேதம் அருள் மட்டுமே கொண்டது” என்றான் ஆதன்.”
இதன் வழியே அவனின் அறிதல்களை நான் உணர்ந்து கொண்டேன்.
குழவிப் பருவத்திலே சித்தன் மேட்டில் துறவியிடம், “அவர்கள் அனைவரும் ஏன் ஒன்றுபோல் இருக்கிறார்கள்?”, “தனித்திருந்தால் என்ன ஆகும்?” என்று கேள்விகள் கேட்டவன்.
அஸ்தினபுரி செல்லும் “மக்கள் திரளை மாறிமாறி நோக்கிக்கொண்டு நடந்தான். அணுகிப் பேசி ஒவ்வொருவரிடமும் அவர்களின் இலக்கென்ன என்பதை உசாவி அறிந்தான்.”
எனும் போது, தன் இயல்பை மாற்றியதை அறிந்து கொண்டேன்.
தொடர்ந்த பாதையிலே சூதர்கள், நாடோடிகள், வணிகர்கள், சக பயணிகள் வழியே அவன் கற்றுகொண்டே இருக்கிறான். அவர்களால், அவனுக்கு குழப்பங்கள் தோற்றுவிக்கப் படுகின்றன, அவர்களாலேயே தீர்க்கப்படுகின்றன.
“ஆதன் தன்னுள் ஓர் அச்சத்தை உணர்ந்தான். அங்கு வந்து சேர்வதற்கு சில நாட்களுக்கு முன்னரே அஸ்தினபுரி எனும் சொல்லை அவன் அஞ்சத்தொடங்கிவிட்டிருந்தான். அச்சொல் இனித்து இனித்து வளர்ந்து பேருருக்கொண்டு அவனை தன் கையில் எடுத்து விளையாடி பின் அவனை சலித்து வீசிவிட்டிருந்தது. அச்சொல்லின் பேருரு அவனை அச்சுறுத்தியது. அது தன்னை ஈர்த்து கொண்டு செல்வதும் நல்லதற்கல்ல என்று அவன் எண்ணினான். செல்ல வேண்டியதில்லை என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். தொடக்கத்திலேயே அதை உணர்ந்து விலகிச்சென்ற அழிசி தன்னைவிட வாழ்வு குறித்த தெளிவு கொண்டவன் போலும்.”
என்று அவன் குழம்பியிருக்கும் போது முதியவராகிய ஊஷ்மளன், “மெய்யாகவே அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள். இங்கிருந்து ஒரு வெறியில் கிளம்பி திரும்பச் சென்றுவிடவும் கூடும் நீங்கள். உங்கள் இயல்பு அது என்று இத்தனை காலம் உடன் வந்த எனக்கு தெரியும். ஆனால் அது நல்ல முடிவல்ல. பின்னர் அஸ்தினபுரியை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பீர்கள். அஸ்தினபுரி பெருகி உங்களை சிறைப்படுத்திவிடும். அஸ்தினபுரியை உதறவேண்டுமெனில்கூட அதை நீங்கள் பார்த்தாக வேண்டும்” என்று அவனுக்கு பதிலுரைத்தார்.
கோட்டை குறித்து அவன் பார்வையில்,
“கோட்டை அவ்வூரைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தான். பெரிய கலம் ஒன்றுக்குள் வாழ்வதுபோல என்று தோன்றியது. அரக்கப் பேருரு ஒன்றின் கைகளின் அணைப்புக்குள் வாழ்வதுபோல. அவனுக்கு அது அச்சத்தையும் திணறலையும் உருவாக்கியது. அவன் அக்கோட்டைக்குள் அந்தியுறங்கவில்லை.
அதன்பின் அவன் அத்தனை கோட்டைகளையும் தவிர்த்தே வந்தான். இரவில் கோட்டைக்கு வெளியே வந்து துயில்கொண்டான்.”
“அவன் அத்தனை கோட்டைகளிலிருந்தும் அஸ்தினபுரியை வேறுபடுத்த முயன்றுகொண்டே இருந்தான். அது பிறிதொன்று, முற்றிலும் இன்னொரு வகையானது என மீளமீள சொல்லிக்கொண்டான். ஆனால் அஸ்தினபுரி அவன் கண்ட அத்தனை கோட்டைகளையும் போலத்தான் இருந்தது. அதை பலமுறை முன்னரே கண்டுவிட்டான் என்றே உணர்ந்தான். உள்ளே சென்றால் அதன் அனைத்து இடங்களும் அவன் ஏற்கெனவே சென்றமைந்ததாகவே இருக்கும். ஆனால் அது அவ்வண்ணம் இருப்பது அவனுக்கு நிறைவளித்தது. அவன் அதை நோக்கியதுமே உள்ளே சென்றுவிட்டான். கணம் கணம் என பல வாழ்க்கைகளை அதற்குள் முடித்துவிட்டான்.
அவன் முதலில் தன் உள்ளம் சொல்லின்றி, அசைவின்றி இருப்பதைப்போல் உணர்ந்தான். பின்னர் தன்னிடம் இருக்கும் ஆழ்ந்த அமைதியை எண்ணி தானே வியந்தான். அங்கிருக்கும் அனைவரும் ஆலய முகப்பிற்குச் சென்று நிற்கும் பக்தர்கள்போல தோன்றினார்கள். சிலர் விழி விரித்து வாய் திறந்து நோக்க, பலர் உளம் கசிந்து அழுதனர். அவர்கள் அதைக் கண்டு ஏமாற்றம் அடையவில்லை. அது கருவறைக்குள் நின்றிருக்கும் தெய்வம். கருவறைத்தெய்வங்கள் சிறிதாயினும் ஏமாற்றம் அளிப்பதில்லை. தெய்வத்தை வழிபடுபவர்கள்போல அவர்கள் நெஞ்சை கையுடன் அழுத்தி தள்ளாடும் கால்களுடன் கோட்டையை நோக்கி சென்றனர். அருகே ஒரு பெண் விம்மியழுதுகொண்டிருந்தாள். அவளை அழச்செய்வது எது? கேட்டறிந்த கதைகளா? அன்றி அதன் பேரமைப்பா? அவன் அதை எப்போதும் கண்டிருந்தான். எளிய மக்கள், துயர்மிக்கவர்கள், எழுந்து ஓங்கிய எதன் முன்னரும் உளம்சோர்ந்து அழுதுவிடுகிறார்கள். அது கொலைவெறிகொண்டு எழும் கொடுந்தெய்வமே ஆனாலும். தங்கள் எளிமையாலேயே அவர்கள் வல்லமை முன் அடைக்கலம் தேடுபவர்களாக ஆகிவிடுகிறார்கள்.”
“நகரின் காவல் என பெண்கள் அமைந்திருப்பதே அமைதியை அளிக்கிறது” என்று சம்வகையிடம் கூறியவன், அஸ்தினபுரியை பார்த்து அதை உதறி கலிதேவனுக்கு பூசகனாக,
“அவன் தீயாட்டும் சுடராட்டும் மலராட்டும் காட்டினான். கலிதேவனின் மூடிய விழிகளுக்குக் கீழே என்றும் அவன் காணும் புன்னகையை உணர்ந்தான். சுடர்கொண்டு காட்டும்போது திரௌபதியை நோக்கினான். பந்த வெளிச்சம் மேனிமென்மையில் மிளிர அவள் விழிமூடி கைகூப்பி நின்றிருந்தாள்.”
என்பதோடு களிற்றியானைநிரை நிறைவு பெறுகிறது.
ஒவ்வொரு கோணத்திலும், களிற்றுயானை நிறை பெருகி வருகிறது. வேறொரு கோணத்தில் அடுத்த கடித்ததை எழுதுகிறேன்.
நன்றி!
சக்தி ராஜ்,
பாப்பான்குளம்