அன்பின் ஜெ
கடந்த ஆண்டு குருபூர்ணிமா நாளிலிருந்து நீங்கள் அளித்த வழிகாட்டுதலின்படி நானும் நண்பர் மூர்த்தியும் வெண்முரசு மீள்வாசிப்பை தொடங்கினோம்.வெண்முரசை நீங்கள் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை வெண்முரசோடுதான் பொழுது விடிகிறது.நண்பர் மூர்த்தியும் நானும் ஒவ்வொரு அத்தியாயமும் வாசித்தபின் அதுபற்றி பேசவதுண்டு.
பல இடங்களில் பலவிதமான உணர்வுகளுக்கு ஆட்பட்டு வந்தாலும் கார்கடல் இருபத்தொன்பதாவது அத்தியாயம் வாசித்ததும் தங்களுக்கு எழுதாமல் இருக்க முடியவில்லை.
அதர்மத்தின் பக்கம் நின்றதால் ஆண்டவனும் கர்ணன் பக்கம் நிற்கவில்லை என்று நமக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அரவுமணம்பெற்ற புரவிபோல குடில் கதவு திறந்து குந்தி உள்நுழையும்போதே கர்ணன் மீது அனுதாபம் பற்றிக் கொள்கிறது.
தொடக்க உரையாடலில் கர்ணனின் மௌனம் குந்தியை சீண்டுகிறது .”என்மேல் கொண்ட வஞ்சத்தை நீ இன்னும் மறைக்கவில்லை.அதற்கப்பால் என்ன?”
“இதற்கெல்லாம் நான் என்ன மறுமொழி சொல்ல முடியும்? நான் எதையும் மறைக்கவில்லை. ஆனால் ஆழங்களில் திகழ்பவை என்ன என்று அவை வெளிவரும்போது மட்டுமே நாமனைவரும் அறிகிறோம்” என்று தாய்க்கும் பிள்ளைக்குமான உரையாடலை வெகு சாமர்த்தியமாக கொண்டு செல்கிறீர்கள்.
“முலையூட்டாத அன்னையை குழந்தை வெறுப்பதுபோல் தன்னில் ஒரு பகுதியை உருக்கி தனக்கு அளிக்காத ஆண்மகனை பெண் வெறுக்கிறாள். நீ உன்னில் ஒரு துளியையும் விட்டதில்லை. இரும்பில் வார்த்த சிலை என இத்தனை காலமும் இருந்திருக்கிறாய். நீ என்னை புரிந்துகொள்ளமாட்டாய் என நானும் அறிந்திருந்தேன். ஏனென்றால் நீ எவரையுமே புரிந்துகொள்ளவில்லை
“.அறிந்துகொள், நீ இந்த குருக்ஷேத்ரக் களம்விட்டு மீளமாட்டாய். ஏனென்றால் நீ எவரேனும் ஆகுக, நீ பொருதிக்கொண்டிருப்பது இந்த யுகத்தின் தலைமகனிடம். நாளைய யுகத்தின் படைப்பாளனிடம். நீ வெல்லவே முடியாது. எவரும் வெல்லமுடியாது. எதுவும் தடைநிற்க இயலாது. நான் பதைப்பது அவன் வெல்லவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் வெல்வான். என் தவிப்பு அந்த வேள்வியில் என் மைந்தர் அவிப்பொருளாகிவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் நீ அழிவாய். இந்த குருக்ஷேத்ர மண்ணில் நெஞ்சுடைந்து விழுவாய். அப்போது அறிவாய், நீ ஒருநாள்கூட வாழவில்லை என. அன்பையே நீ அறிந்ததில்லை. மைந்தரின்பத்தையும் அறியவில்லை. உன் வாழ்நாளெல்லாம் நீ உன்னையே சமைத்துக்கொண்டிருந்தாய்” என்று குந்தி பேசும்போது தாய்மையின் தாத்பரியம் குலைகிறதோ என்கிற கவலை நமக்கு ஏற்பட்டாலும் குந்திக்கு நீதியை நிலை நாட்டும் கடமை இருக்கிறதே.அவள் தற்கால தாயல்லவே, கற்கால தாயல்லவா?பேரரசியாயிற்றே என்று மனம் சமாதானம் அடைகிறது.
“அர்ஜுனனை அன்றி பிற நால்வரையும் எந்நிலையிலும் கொல்லமாட்டேன் என்று சொல்” “ஒருமுறை மட்டும் அரவம்பை அர்ஜுனன் மீது ஏவுக! பிறிதொருமுறை அதை அவன் மீது ஏவாதொழிக!”என்று இரண்டு வரம் கேட்க கண்ணனால் ஏவப்பட்ட குந்தியின் சூழ்ச்சியால் கர்ணனோடு சேர்ந்து நமக்கும் மனம் பதறுகிறது.
திரௌபதி தனது சுயம்வரத்தில் கர்ணனை முதன்முறையாக பார்த்தபோது கர்ணனின் பேரழகைக்கண்டு வியந்து நிற்கையில் அருகிருப்போருக்கு அவள் உதடுகள் பிரியும் ஓசையும் கேட்கும் என்றெழுதி எங்களை வியக்க வைத்தீர்கள்.அப்பேர்பட்ட உலக பேரழகன் கர்ணன் தன் மனைவியரை கையாள முடியாத காரணத்தை குந்தியின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது.
மானுடர்களுக்கான உளவியல் நிபுணர்கள் இவ்வத்தியாயத்தை வாசித்தால் பிறழ்வு கொண்டோரை நேர் செய்ய சட்டகம் வகுத்துக் கொடுக்கும்.
எனது தந்தைக்கு நாங்கள் அறுவர்.நான்மூத்தவன்.பால்யத்தில் இரவுணவுக்குப்பின் வாசலில் ஈச்சம்பாய்விரித்து மல்லாக்க படுத்து நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்துக்கொண்டே அப்பாவிடம் மகாபாரதக் கதைகள் நிறைய கேட்போம்.
அப்பா சொல்லிக்கொடுத்ததைவிட நீங்கள் ஆயிரம் மடங்கு சொல்லிக்கொடுத்திருக்கிறீர்கள் வெண்முரசு வாயிலாக.
சிறுவயதிலிருந்து எத்தனையோ தெருக்கூத்துகள் மேடை நாடகங்கள் சினிமாக்கள் பார்த்திருக்கிறோம்.வெண்முரசுதான் மகாபாரதத்தை முழுமைப்படுத்தியது.
ஜெ, அகமும் புறமும் இணைந்தே வாசித்தாலும் வாசித்து முடித்ததும் புறம் அடுத்த வேலையை பார்க்கப்போகும். அகம் உங்கள் எழுத்திலேயே நிலைத்து நிற்கும் நெடுநேரம்.
நன்றி ஜெ.
அன்புடன்
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி