தூரன் விருது, கடிதங்கள்

அன்பின் ஜெ

முக்காலமும் உங்கள் எழுத்தையே சுவாசமாக கருதி வாழும் நாங்கள் ஆறாம் தேதி மாலை ஆறு மணிக்கு விருது விழா துவங்கும் நேரத்தில் அறக்கப்பறக்க ஓடி வந்து கலந்து கொண்டோம்.

உங்கள் உரை கேட்க எப்பாடு பட்டேனும் எங்கிருந்தாலும் ஓடி வந்து கலந்து கொள்வோம்.திரு சிவசங்கரன் உரை மிக நெகிழ்ச்சியாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது.உரையின் இறுதியில் உங்களுக்கு அன்பு செலுத்திவிட்டு விடைபெற்று தம் இருக்கையில் அமர்ந்தபின் சில கணங்கள் தலைகுனிந்தவாறு தம்மை இயல்பாக்கிக்கொள்ள சற்றே பிராயத்தனப்பட்டார்.

தூரன் விழா, உளப்பதிவுகள்

தூரன் விழா விருது உரைகள்

இளங்கோவன் தன் சொந்த செலவில் ஆவணப்படம் எடுப்பது அவர் மேன்மக்கள் என்பதை உணர்த்துகிறது.தங்கள் விழா பதிவு கட்டுரையை வாசித்தபின்னர் முழு விழாவையும் நேரில் பார்த்த நிறைவு.எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் பேறு பெற்றோம்.

விழாவை ஒருங்கிணைத்த நண்பர்கள் விழாவை நடத்த உதவி செய்த மண்டப உரிமையாளர் செந்தில் மற்றும் அரங்கசாமி அருண் சதீஷ் போன்றவர்களின் பங்களிப்பு நெகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் சொல்லுக்கு ஓடியோடி உழைக்கும் ஈரோடு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நன்றி ஜெ.

மூர்த்தி விஸ்வநாதன்

அன்புள்ள ஜெ

தூரன் விருதுவிழா ஓர் அரிய இலக்கிய அனுபவம். இலக்கியம் வாசித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அவ்வப்போது ஒரு சோர்வும் தனிமையும் வருகிறது. பேச ஆளில்லை. மனம் சலிப்படைகிறது. ஆனால் இந்த விழாக்கள் நம்மை பல மாதங்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளித்து மீட்டுவிடுகின்றன. நண்பர் குழாம், பேச்சுகள் சிரிப்புகள் எல்லாமே அற்புதம். மகிழ்ச்சி ஜெ

சுந்தரராஜப் பெருமாள்

அன்புள்ள ஜெ

தூரன் விருதுவிழாவில் விருதுபெற்றவர்களின் மகிழ்ச்சியையே பார்த்துக்கொண்டிருந்தேன். மொத்தவிழாவும் அவர்களை நோக்கியே அமர்ந்திருந்தது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதே தெரியவில்லை. பெரும்பாலும் பின் வரிசையில் எங்கோ இருந்துகொண்டிருந்தீர்கள். அவர்களுக்கு இது ஒரு வாழ்நாள் வாழ்த்து. பிற படைப்பாளிகளை இப்படி முன்னால் நிறுத்துவதற்கு ஒரு பெரிய பார்வை வேண்டும். வேறெவரும் தமிழில் இதைச் செய்ததில்லை. வணக்கம்

பெரியசாமி கணேசன்

முந்தைய கட்டுரைதிரிபுகளின் பெருநிலம்
அடுத்த கட்டுரை2023 ,கோடை