வணக்கம் ஜெ,
இந்த முறை(ஜூன் மாதம்) யோகமுகாமில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. கடந்து சென்ற காட்டுப்பன்றிகளை பார்த்தபடியே முதல்முறையாக நித்யவனத்தை வந்தடைந்தேன். சிறிய மலைமுகடுடன் கூடிய அழகிய இடம். காலை உணவு முடித்து குரு சௌந்தரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். வெண்முரசு காலத்தில் தினமும் வாசித்து பின்தொடர்ந்ததை அறிந்து மகிழ்வுடன் அது ஒன்றே போதும், உங்களை வாழ்வில் வேறு தளங்களுக்கு எடுத்து செல்லும் என்று வாழ்த்தினார்.
மூன்று நாட்களும் சரியான கால அட்டவணையுடன் சிறப்பாக நடந்தது. குறிப்பாக மூன்று நாட்கள் யோகத்தை பற்றி மட்டுமே சிந்தித்து, கேட்டு, உரையாடியது நிறைவாக இருந்தது. எளிய முறையில் தெளிவான பார்வையுடன் யோகத்தை அறிமுகம் செய்து அதில் முழுவதும் ஈடுபடவைத்து உரையாடல்கள் மூலம் அவரவருக்கான அறிதல்களை அடைய செய்த குருஜி சௌந்தர் அவர்களுக்கு நன்றி. நம் வட்டத்தில் உணவை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நித்யவனத்தில் குளிருக்கான சூடான உணவு அளித்த அந்தியூர் மணி அவர்களுக்கும் நன்றி.
கடந்த 20 வருடங்களில் அவ்வப்போது சில யோக பயிற்சிகளை செய்தவன் என்ற முறையில் யோக முகாமில் நான் உணர்ந்தவை மற்றும் எனக்காக அறிதல்கள் சிலவற்றை பகிர விரும்புகிறேன்.
யோகத்தை பற்றி முழுமையான அறிமுகம் கிடைத்தது. சில பயிற்சிகள் செய்தபோது மனம் உடலை இயக்குவதையும், எளிய முறையில் உடல் மற்றும் மன இறுக்கத்தை களைய முடிவதையும் உணர்ந்தேன். நான் ஏற்கனவே பயிற்சி செய்து வரும் யோக பயிற்சிகளுடன் முகாமில் கற்றுக்கொண்ட பயிற்சிகளை எவ்வாறு இணைத்து செய்வது என்று எளிதாக விளக்கினார். முகாம் முடிந்து சில நாட்களில் அலைபேசியில் அழைத்து ஆயுர்வேதத்தின் பார்வையில் என் உடலின் தன்மையையும் அதற்கான உணவு மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் விரிவாக பேசினார்.
அன்று தொடங்கி இன்று வரை முகாமில் கற்ற பயிற்சிகளை தினமும் செய்து வருகிறேன். குருவிடமும் எனக்கு ஏற்படும் அனுபவங்களை பகிர்ந்து வருகிறேன். மொத்தத்தில் என்னை நான் சீர்தூக்கி பார்க்கவும், உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்களின் மூலம் விழிப்புணர்வுடன் நிறைவாக வாழவும் யோக முகாம் உதவியிருக்கிறது. என் நண்பர்களுக்கும் யோக முகாமில் கலந்து கொள்ள வலியுறுத்தி வருகிறேன். அடுத்த இரண்டாம் நிலை யோகமுகாமை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
நித்யவனத்தை நிறுவி அனைத்து தளங்களிலும் பயிற்சிகளை அமைத்து தரும் ஆசானுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வணக்கத்துடன்
இ. செல்வேந்திரன்
ஓசூர்