கதைப்புள்ளிகளின் கோலம்

ரப்பர் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

காடு வாசித்து விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில், நான் யார், என்ன செய்கிறேன் என்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதை உங்கள் இணையத்தில் அந்த கடிதம் வெளிவந்து, அதை வாசிக்கையில் தான் உணர்ந்தேன். காடு என்னுள் விதைத்த எண்ணங்களை  சூடு குறைவதற்குள் உங்களிடம் பகிர வேண்டும் என்ற நினைப்பில் இருந்ததால், என்னை பற்றி பகிர விட்டுப்போனேனோ என்னவோ…

என் பெயர் பவித்ரன். சொந்த ஊர்-உடுமலைப்பேட்டை. 25 வயதாக இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது. Social Work-இல் முதுகலை பட்டம் பெற்று, பழங்குடி நலன் மற்றும் மனித-விலங்கு மோதல்கள் சார்ந்து பணி செய்து வருகிறேன். வாசிப்பை பொறுத்தவரை, என்னை ஒரு இளம் வாசகன் என்றே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். கடந்த ஆறு வருடங்களாக வாசிப்பு  தளத்தில் தவழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நாட்டு, அல்லது இந்த ஊர் இலக்கியம் தான் எனது விருப்பம் என்று இல்லை. ஒரு புதினத்தின் கரு, அல்லது அது உருவாக்கப்பட்ட விதம், அல்லது கதையின் கதாபாத்திரங்கள், அல்லது கதையின் களம், இப்படி எதாவுது  ஒன்று என் மனதிற்கு புடித்தவாறு அமைந்தால் அது நான் விரும்பும் படைப்பு ஆகிறது. இப்படிதான் இந்த ஆறு வருடத்தில், கசாகிண்டே இதிகாசத்தின் ரவியும்; சித்தார்தனில் வரும் வாசுதேவனும்; கிழவனும் கடலும் புதினத்தின் சாண்டியாகோ கிழவனும்; குட்டி இளவரசனும்; பஷீரும் (பஷீரின் கதைமாந்தர்களாக மாறி மாறி வருவது பஷீர் தானே?); ஏழாம் உலகத்தின் கதாபாத்திரங்களும்; சமீபத்தில் படித்த பாரபாஸும் என் மனதிற்கு நெருங்கிய கதாபாத்திரங்கள் (மனிதர்கள்) ஆனார்கள். இவை தவிர, வனவாசியின் வனமும்; சந்திர மலையின் நிலக்காட்சியும்; எரிந்த பனிக்காட்டின் வேதனைகளும்; சோளகர் தொட்டிகளின் குமுறல்களும் என் மனதுள் நிலைத்து இருக்கின்றன. ஒரு வாசகனாக நான் கடந்த இலக்கிய சாலைகள் இவ்வளவு  தான். இன்னும் செல்ல வெகு தொலைவு இருக்கிறது என்பதை அறிகிறேன்.

நேற்று மாலை உங்கள் ரப்பர் புதினம் வாசித்து முடித்தேன். ரப்பர் புதினத்தில் என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரமாக கண்டன்காணி இருக்கிறார். அவருடைய பொக்கைவாய் சிரிப்பை என் நினைவில் இருந்து எதை கொண்டும் அழிக்க இயலாது என்பது உறுதி. பொன்னு பெருவட்டர்  கண்டன்காணியை அருகில் வரச்சொல்லி தொட்டுப்பார்க்கும் காட்சி புதினத்தின் உச்சமாக எனக்கு படுகிறது. இரு கிழவர்களும் பரஸ்பரம் அருகே இருந்து கண்ணீர் சிந்தும் அந்தக்காட்சி, வீட்டின் ஹாலில் இருக்கும் ரெம்ப்ராண்டின் ஓவியத்தை விட பல மடங்கு உயர்வாக தெரிகிறது. கண்டன்காணி-பெருவட்டபர்-இன் உறவை (அவர்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்த காலம்) இன்னும் விரிவாக காட்சிப்படுத்தியிருந்தால், கண்டன்காணி என் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மனிதராகி இருப்பர் என்றே தோன்றுகிறது. கண்டன்காணியின் இதயம் மட்டுமே ரப்பரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்டன்காணியை தலை முதல் பாதம் வரை அறிய வேண்டும் என்று மனம் தவிக்கிறது.

கதை மூன்று தலைமுறைகளினோடாக  விரிகிறது. முதல் தலைமுறை-, அப்புக்குட்டன் நாயர், பெருவட்டர், கண்டன்காணி. இரண்டாம் தலைமுறை-ஏ.பி., செல்லையா பெருவட்டர், திரேஸ் பெருவட்டத்தி. மூன்றாம் தலைமுறை-பிரான்சிஸ், லாரன்ஸ், தங்கம், குளங்கோரி. சமூக நிலை மாற்றமும், இயற்கை மாற்றமும் இந்த மூன்று தலைமுறைகளின் ஊடாக நிகழ்கிறது. கீழ் நிலையில் இருக்கும் ஒரு சமூகம் மேல் எழுகிறது; மேல் எழுந்த அந்த சமூகம் மீண்டும் சீர்குலைகிறது. இதற்கு இணையாக, வனம் வாழை தோட்டமாக மாறி, ரப்பர் தோட்டமாக மாறுகிறது. பின்,  சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகுவதை புரிந்து அதை பாதுகாக்க வேண்டும் என்று லாரன்ஸ் எடுக்கும் ஸ்டெப். இரண்டாம் தலைமுறை-அதாவது செல்லையா பெருவட்டர் தலைமுறை-ஆகாயத்து பறவையாக இருக்கிறது.

எனக்கு painting பற்றி  அதிக பரிச்சியம் இல்லை. ரப்பரை படித்து விட்டு, சிந்தனையில் அதை பற்றி அசைபோடுகையில், ரப்பர் புதினம் ஒரு தேர்ந்த-ஆகச்சிறந்த-ஓவியமாக எனது imagination-இல் விரிகிறது (மரண படுக்கையில் பொன்னு பெருவட்டர் இருக்க அவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள்).

“எனவே நான் உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் மனந்திரும்பி குழந்தைகளை போல ஆகாவிடில் பரலோக ராஜ்ஜியத்திற்குத் தூரமாக இருக்கிறீர்கள்.”  ரப்பரை முழுவதுமாக படித்து விட்டு, இந்த வசனத்தை மீண்டும் வாசித்து பார்க்கையில் மீண்டும் கண்டன்காணி தான் நினைவில் வருகிறார். குழந்தைககளின் பேச்சுகளிலும், சிரிப்பிலும், ஏன் அசைவிலும் கூட அவ்வளவு சக்தி இருக்கிறது. நோய்வாய்பட்டவர்களை கூட சுகமானவர்களாகும் சக்தி அது. அவ்வாறான சக்தியுடைய அந்த ஆற்றங்கரை குழந்தைகளே பிரான்ஸிஸின் மனபாரத்தையும் குறைக்கிறார்கள்; இல்லை போக்கவே செய்கிறார்கள். அந்த ஆற்றங்கரையில் இருந்து பிரான்ஸிஸ் தொடங்குவது ஒரு புதிய பயணம். ஒரு குழந்தையாக மாறிய மனிதனின் பயணம்.

புதினத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறது பிரான்ஸிஸினுடையது. ஆனால் தொடக்கத்தில் வரும் பிரான்ஸிஸ் பின் கதையின் முடிவில் தான் வருகிறான். நான் முன்னே குறிப்பிட்ட painting-இல் இருந்து வெளியே சென்று விட்டு திரும்பி வந்து அவன் சேர்ந்து கொண்டதுபோல் எனக்கு  தோன்றுகிறது. எவ்வளவு தான் யோசித்து பார்த்தும் என்னால் இதை விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஏதேனும் குறிப்பிட்ட காரணத்திற்காக இவ்வாறு அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டதா? பிரான்ஸிஸ்க்கு

அவன் குடும்பமும், பெருவட்டர் குடும்பத்திற்கு பிரான்ஸிஸும் தேவையில்லை என்பதால் கதையின் மத்திய பகுதில் அவன் தோன்றவில்லையா? ஆனால் பொன்னு பெருவட்டருக்கு  பிரான்ஸிஸின்  அருகாமை தேவையாகத்தானே இருந்தது? ஒரு வாசகன் சிந்தித்து விளங்காமல், ஒரு ஆசிரியரிடமே அவர் படைப்பை பற்றி விளக்கம் கேட்பது தவறு எனில், மன்னிக்கவும்.

அன்பும், ப்ரியமும்,

பவித்ரன்

அன்புள்ள பவித்ரன்

ரப்பர் நாவலை படிப்பது குறித்து மகிழ்ச்சி. நாவல் பற்றி ஆசிரியன் பேசக்கூடாது என்றில்லை. உலகம் முழுக்கப் பேசியிருக்கிறார்கள். ஆனால் நாவலை வரையறைசெய்ய, வாசிப்பை மட்டுப்படுத்த முயலக்கூடாது

அந்நாவலின் வடிவம் கொலாஜ் எனப்படும் கலவைச்சித்திரம் போன்றது. அதில் படிப்படியான கதை நகர்வு, படிப்படியான கதைமாந்தர் வளர்ச்சி ஆகியவை இல்லை. தொடர்கதைகளாக வெளிவந்த நாவல்களில் அந்த தன்மை ஓங்கியிருக்கும். நம் யதார்த்தவாத நாவல்கள் பெரும்பாலும் தொடர்கதைகளாக வெளிவந்தவை. பதினெட்டாம் நூற்றாண்டு மகத்தான யதார்த்தவாதப் பேரிலக்கியங்களும் தொடராக வெளிவந்தவையே.

அத்தகைய நாவல்களில் நாம் ஏதேனும் ஒரு கதைமாந்தரை பற்றிக்கொண்டு அவர்கள் வழியாக மொத்த நாவலையும் தொகுத்துக்கொள்வோம். மிகப்பெரிய நாவல்களில் ஒன்றுக்குமேல் மையக்கதைமாந்தர் இருப்பார்கள். கதைமாந்தரின் ஆளுமை, பார்வை இரண்டும் பரிணாமம் அடைந்தபடியே இருக்கும். அதற்குரிய நிகழ்வுகள் அந்நாவலில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும்.

ரப்பர் அவ்வகையான நாவல் அல்ல. அது யதார்த்தவாத நாவல். ஆனால் யதார்த்தவாத நாவல்களின் அடுத்த கட்டத்தைச்ச் சேர்ந்தது. அதில் என்னென்ன உள்ளன?  வெவ்வேறு வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கதைமாந்தர் வந்து செல்கிறார்கள். ஒரே கதைமாந்தரின் வெவ்வெறு காலகட்டங்கள் நினைவுகள் வழியாகச் சொல்லப்படுகின்றன. பொன்னுமணிப் பெருவட்டரின் குழந்தைக்காலம் முதல் சாவு வரை வருகிறது. அத்துடன் தொன்மக்கதைகள் ஊடுருவுகின்றன. இவை சீராக வரிசையாகச் சொல்லப்படவில்லை. வெவ்வேறு கதைமாந்தர் வழியாக வெளிப்படுகின்றன.

அதாவது புள்ளிகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இணைத்து கோலமாக்கும் பொறுப்பு வாசகனுக்கு விடப்பட்டுள்ளது.அவ்வாறு கோலமாக ஆக்கும் வாசகன் மிகப்பெரிய ஒரு வரலாற்றுச் சித்திரத்தை அடைவான். அதுதான் அந்நாவலின் நோக்கம். காலவரிசைப்படி நாவலின் நிகழ்வுகளை ஒருங்கமைத்துப் பாருங்கள், இது தெரியும்.

நாவல் தொடங்குவது புலைப்பேடி என்னும் சடங்கு இருந்த காலகட்டத்தில். அதாவது ராணிபார்வதிபாய் ஆட்சிக்கு முன். 18850 களில். அங்கிருந்து தொடங்கி சமகாலம் வரை வருகிறது. நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சி. அது பொன்னுமணி நிலம் வாங்கும் தருணம் வழியாகச் சொல்லப்படுகிரது. நிலப்பிரபுத்துவத்தில் இருந்து நவ முதலாளித்துவத்தின் எழுச்சி. அது பொன்னுமணியின் மகன் வழியாகச் சொல்லப்படுகிறது .அதிலிருந்து அடுத்த காலகட்டம் பற்றிய ஒரு கனவு. அதுதான் பிரான்ஸிஸ்.

இந்நாவலின் கதைநாயகன் என எவருமில்லை. பெரிய கதைமாந்தர் என்றால் பொன்னுமணிப் பெருவட்டர் மட்டுமே. அவர்தான் குழந்தைப்பருவம் முதல் இளமை, முதுமை வரை சித்தரிக்கப்படுகிறார்.  இது பிரான்ஸிஸின்கதை அல்ல. மிகப்பெரிய ஒரு காலமாற்றத்தின் கதை. பிரான்ஸிஸ் அதில் ஒரு பகுதிதான்

பிரான்ஸிஸின் குணச்சித்திரம் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவனுடைய தனிமை, அதன் விளைவான பிறழ்வு, அவன் அடையும் குற்றவுணர்ச்சி, அதில் இருந்து அவன் ஒரு பெரிய கனவு வழியாக மீள்வது ஆகியவை நாவலின் பல இடங்களிலாக தொடுத்துச் சொல்லப்பட்டுள்ளன

இதை சீரான யதார்த்தவாத நாவலாக சொல்லியிருந்தால் 2000 பக்கம் தேவை. ரப்பர் 200 பக்கம்தான். பத்திலொன்றாகச் சுருக்கப்பட்டு செறிவாக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கதைச்சர்ந்தர்ப்பங்கள், கதை மாந்தர்களை இணைத்து அந்த வரலாற்றுச் சித்திரத்தை வாசகர்கள் உருவக்கிக் கொள்ள வேண்டும். புனைவாக ரப்பர் வாசகனின் மனதில்தான் முழுமையடைய முடியும்.

ரப்பர் என் முதல் நாவல். என் 26 வயதில் எழுதி 28 வயதில் அகிலன் பரிசுபெற்று வெளியானது. இன்று பார்க்கையில் தமிழில் மிகப்பெரிய காலமாற்றத்தை ஒட்டுமொத்தமாக; மதம், வரலாறு சமூகவியல் பொருளியல்  எல்லா புள்ளிகளையும் இணைத்துக்கொண்டு பெரிய சித்திரமாகச் சொன்ன நாவல் அது ஒன்றே என்று படுகிறது. யதார்த்தவாத நாவல்கள் விரித்துச் சொன்ன கதைசொல்லும் முறையை ஒன்றுக்குள் ஒன்றாகச் சுருட்டிச் சுருக்கிச் சொல்கிறது. அதன் வடிவம் என்பதை நான் தீயணைக்கும் ஹோஸ்பைப் போல என்று சொல்வேன். அழுத்தி சுருக்கப்பட்ட உருளை அது. ஆனால் விரித்து, அதனூடாக நீர் செல்லும்போது மிக நீளமான ஒரு குழாயாக ஆகிவிடும்.

1990 ல் அந்நாவலை வாசித்த ஆ.மாதவன் சொன்னார். “ரொம்ப பெரிசா எழுதி, அகிலன் போட்டிக்காக கால்வாசியாச் சுருக்கிட்டீங்களோ?” . அகிலன் போட்டியின் நிபந்தனைகளிலொன்று அந்நாவல் 200 பக்கம் இருக்கவேண்டும் என்பது. நான் இல்லை என்றேன். நான் எழுதிய வடிவமே அதுதான். ஒரு பெரிய நாவலின் உச்சகட்டங்களை மட்டுமே வைத்து அதை மனதுக்குள் உருவகித்திருந்தேன்.

அந்நாவலை வாசித்த கி.ஆ.சச்சிதானந்தம் காஞ்சீபுரம் பட்டுச்சேலையை ஆங்காங்கே கிழித்து சுருட்டியது போல் உள்ளது என்றார். அது யதார்த்தவாத நாவல்களை ரசித்தவர்கள் அடைந்த துணுக்குறல். அந்நாவலில் விடுபட்ட பகுதிகளே மிகுதி. அவ்வகையில் ரப்பர் யதார்த்தவாத- நேர்கோட்டு நாவல்களின் முடிவை உருவாக்கிய நாவல் என இப்போது நினைக்கிறேன்

ஜெ

ரப்பர் நினைவுகள்

ரப்பர் கடிதம்

ரப்பர் எனும் வாழ்க்கை

ரப்பர் வாசிப்பு கடிதம்

முந்தைய கட்டுரைராஜ் சிவா
அடுத்த கட்டுரைபெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது