தூரன் விழா, கடிதங்கள்

தூரன் விழா, உளப்பதிவுகள்

தூரன் விழா விருது உரைகள்

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கி தூரன் விருதுவிழா நிகழ்வும் இப்போது ஓர் பண்பாட்டு நிகழ்வாக அமைந்துவிட்டது. இது முழுக்க முழுக்க வேறுவகையான ஒரு நிகழ்வாக உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விழா நவீன இலக்கிய அறிமுகத்துக்கு ஒரு மிகச்சிறந்த வாசல். சட்டென்று அது ஒரு பெரிய திறப்பாக அமைந்தது எனக்கெல்லாம். இன்னமும்கூட நான் 2016ல் பங்கேற்ற முதல் விஷ்ணுபுரம் விழாவின் நினைவின் இனிமை என் மனதிலே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விழா முழுழுக்க முழுக்க ஆய்வுக்கானது. ஆய்வாளர்களின் பார்வையும் வெளிப்பாடும் வேறுவகையாக உள்ளது. கொங்கு சதாசிவம் வாசகர்கள் கேட்ட கற்பனைகள், பெருமிதங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மென்மையான புன்னகையுடன் மறுத்துக் கடந்துசென்றார். ஆழமான உரை. பி.கே.ராஜசேகரன், எஸ்.ஜே.சிவசங்கர் அனைவருமே மிகச்சிறப்பாகப் பேசினர். நன்றி

ஆர்.செந்தில்

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி தூரன் விருதுவிழாவில் நிகழ்ந்த நாதஸ்வர இசை என் வாழ்க்கையில் நான் கேட்ட மிகச்சிறப்பான இசை அறிமுகம். நான் இசைநிகழ்வுகளாகக் கேட்டவை எல்லாமே தற்செயலாக காதில் விழுந்தவை மட்டும்தான். நாதஸ்வரம் கர்நாடக இசைப்பாடல்களை வாசிக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் நான் எம்.எஸ்.வியின் ரசிகன். யூ டியூபில் சினிமாப்பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்ததைக் கேட்டுள்ளேன். நாதஸ்வரத்தை கல்யாண நிகழ்ச்சிகளில் கேட்கும்போது எனக்கு ஓசை மிகுதியாக் குமட்டல் தலைச்சுற்றல் வருவதுதான் வழக்கம். உடனடியாக வெளியே போய்விடுவேன்.

தமிழ் விக்கி நிகழ்ச்சியிலே மைக் ஒலிப்பெருக்கி இல்லாமலிருந்தது நாதஸ்வரத்தின் அற்புதமான ஓசையழகை கேட்கவைத்தது. கொஞ்சம் ஆண்மைகொண்ட ஒரு பெண் பாடுவதுபோலவே இருந்தது. ஒரு கட்டத்திலே குரல் பாடிக்கொண்டிருக்கிறது என்றே தோன்ற ஆரம்பித்தது. அதைப்போல திரு தலச்சங்காடு ராமநாதன் ஐயா அவர்கள் தவிலை மிக மென்மையாக, மிருதங்கம்போலவே வாசித்தார். அதுவும் ஒரு கட்டத்திலே பேசுவதுபோலவே எனக்குக் கேட்டது.

நான் எல்லா பாட்டுக்களையும் ஏழெட்டுத்தடவை கேட்டுவிட்டு வந்திருந்தேன். பாட்டுகள் என் மனதில் ஓடும்போது நாதஸ்வரம் அவற்றை பாடியது அபாரமான அனுபவம். பல ராகங்கள் என்னென்ன என்று உடனே யூ டியுபிலே பார்த்தேன். சாரங்க ராகத்திலேகூட பல பாட்டுக்கள் உள்ளன என தெரிந்துகொண்டேன். நன்றி

ஜெய்சங்கர்

முந்தைய கட்டுரைஅல் கிஸா- இஸ்லாம்- விளக்கம்
அடுத்த கட்டுரைதெய்வங்களுடன் நிலைகொள்வது….கடலூர் சீனு