மூன்று இனிமைகள்

தூரன் விழா, உளப்பதிவுகள்

தூரன் விழா விருது உரைகள்

இனிய ஜெயம்

இந்த வருட 2023 தூரன் தமிழ் விக்கி விருது விழா முழுமையும் இனிமை நிறைந்த ஒன்றாகவே அமைந்திருந்தது என்றாலும் அதற்குள்ளாக அமைந்த என் மனதுக்கு மிக அணுக்கமான இனிமைகள் மூன்று. முதல் இனிமை திடுக்கிடும் வண்ணம் என்னைப் புறம் புல்கி பின்னர் முகம் காட்டி மகிழ வைத்த பவா. அவர் அங்கே அவ்விதம் தோன்றுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

தமிழ் இலக்கிய சூழலில் எழுத்து கடந்து பொதுவில்  சிறப்பாக கதை சொல்லும் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும் அவர்களை விட இந்தக் கலையில் முன்னணியில் நிற்பவர் பவாதான். காரணம் அவர் ஆளுமையுடன் கலந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நாகரீகம் முழுக்கும் முன்பான ஆதி குடியாக மனிதர்கள் இருக்கையில் அவர்களை சமூகம் என திரட்டிய பல அம்சங்களில் ஒன்று இந்த கதை சொல்லி கதை கேட்கும் அம்சம். பிற எழுத்தாளர்கள் சொல்லும் கதைகள் போலன்றி, பவா கதை சொல்கையில் இந்த ஆதிக்குடி அம்சம் ஒன்று பவா வழியே எழுந்து வந்து அவரையும் பார்வையாளர்களையும் பிணைத்து விடுகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ் நிலம் கண்ட தனித்துவமான கதை சொல்லி பவா.

விழாவுக்கு கிளம்பும் முன்னர் இலக்கியமே அறியாத என் நண்பர் சாவடியை சேர்ந்த முருகன் விழாவுக்கு பவா வருவாரா என்று கேட்டு திடுக்கிட வைத்தார். உங்களுக்கு எப்புடி பவா வை தெரியும் என கேட்டேன். அவர் சொல்ற கதையை தினமும் கேட்பேனே என்றார். அடுத்தடுத்து பவா சொன்ன பத்து கதைகளை எழுத்தாளர்கள் பெயருடன் சொன்னார். அன்று ஒரு நாள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிற்கையில் கிளம்பி சென்று கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி அதிலிருந்து ஒரு பெண் இறங்கி ஓடி வந்து என்னிடம் ” நீங்க கடலூர் சீனு தானே” என்று கேட்டு பரவசத்தில் மூச்சு வாங்கினார். அடடா எங்கெங்கு காணினும் எனது வாசகியடா என்று புளகாங்கிதம் கொண்ட என் மனதில் பவா வை தூக்கி போட்டு உடைத்தார். உங்களை எஸ் ரா உண்டாட்டுல பவா அறிமுகம் பண்ற வீடியோல பாத்திருக்கேன் என்று துவங்கி பவா சொல்லும் கதைகள் குறித்து பரசவமாக பேசிக்கொண்டிருந்த விட்டு போனார்.ஸ்டெல்லா அவர் பெயர். சூழல் பதற்றத்தில் தொடர்பு எண் வாங்கவோ பவா எண்ணை அவருக்கு அளிக்கவோ விடுபட்டு விட்டது.

இவை உதாரணங்கள் மட்டுமே. இப்படி பலரை சந்தித்திருக்கிறேன். ஒரு சமூகத்தில் எல்லோரும் தீவிர இலக்கியம் வாசிக்க வேண்டும் என்ற வாய்ப்பு மிக மிக குறைவு. அதே சமயம் ஒரு சமூகத்தில் கடை கோடி மனிதனும் தீவிர இலக்கிய ஆளுமை ஒருவரை அறிந்திருகிறான் என்பது, அந்த ஒட்டுமொத்த சமூகத்தின் கூறுணர்வு மேன்மை சார்ந்த ஒன்றாக அது அமைகிறது.  கேரளாவில் கர்நாடகாவில் இந்த கூறுணர்வு உண்டு. தமிழில் அந்த நிலையை கொண்டு வந்த ஆற்றல்களில் முக்கியமான தவிற்க இயலாத ஆளுமை பவா. அவரது வரலாற்று இடம் அது.

சமீபத்தில் திருவண்ணாமலை பகுதி கிராமங்களில் அலைந்து கொண்டிருந்தேன். வைரமுத்து பாஷயில் சொன்னால் கல்லைப் பிழிந்தே கஞ்சி காய்ச்ச முடியும். வெயிலை உருக்கியே தண்ணீர் வடிக்க முடியும். அந்த நிலத்தில் வேரோடிய பவா, அவர் சமீபத்தில் நயாகரா முன்பு நின்றிருக்கும் படம் கண்டேன். அந்த அனுபவம் எப்படி இருந்திருக்கும்? என அவர் அருகே நிற்கையில் கற்பனை செய்து பார்த்தேன். கற்பனையே பரவசமாக இருந்தது. பவா இன்னும் இன்னும் என பல மகிழ்ச்சிகளை அடையவேண்டும்.

இரண்டாவது இனிமை என் பிரியத்துக்குரிய ஆசிரியர் தியடோர் பாஸ்கரன் அவர்களை முதன் முறையாக அறிமுகம் செய்து கொண்டது. ரெய்ச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் நூல்தான் உலகு தழுவி வாசிப்பை அடைந்த முதல் சூழலியல் நூல் என்று சொல்வார்கள். முதன் முதலாக எதை விலையாக கொடுத்து முன்னேற்றம் என்பதை நோக்கி நகற்கிறோம் எனும் போதம் உலகு தழுவிப் பரவியது. முன்னேற்றம் எனும் ராக்கெட் ஏறி மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, (பெட்டோல் வளம் கொண்ட) அரபு நாடுகள் எவ்விதம் அந்த முன்னேற்றத்தில் ஈடுபடுகின்றன? உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அதன் எரிபொருள் தேவை முழுமையும் அமெரிக்க நிலத்துக்கு சம்பந்தம் இல்லாத வேறொரு நிலத்தில் இருந்து செல்கிறது. அந்த வணிகத்தில் பாதிக்கு முதலாளியும் அமெரிக்க கம்பெனிகள்தான். இப்படி எல்லா முன்னேற்ற நாடும் பிற முன்னேராத நாட்டின் வளத்தை சுரண்டியே முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே இதற்கு விலையாக சக உயிர்களும் பலியாகிக்கொண்டு இருக்கின்றன.

இந்தியா தனது முன்னேற்றத்துக்கு முன் மாதிரியாக அமரிகாவை போல முன்னேறிய நாடுகளை இலக்காக்கினால், அந்த அமெரிக்க ரயில் இன்ஜினில் பின்னால் ஒரு பெட்டியாக இந்தியா இணைய வேண்டும். தனது வளத்தை பிற நாடுகளுக்கு விற்க வேண்டும், வளம் குன்றா தாய்மை பொருளாதாரத்தை தூக்கி போட்டு விட்டு, தனது வளத்தை தானே ஒட்ட ஒட்ட சுரண்ட வேண்டும். சாலைகள் வழியே நகரங்கள் பெருக வேண்டும், விண்ணில் சாட்டிலைட்டுகள் வழியே உலக நாடுகள் உடன் போட்டி இட்டு இந்திய ஆதிக்கமும் நிகழ வேண்டும். விளைவு. அதைத்தான் கரோனா முடக்கத்தில் பார்த்தோம். நகரம் என்பது எவரின் குருதியால் ஆனதோ அந்த லட்சோப லட்சம் தினக் கூலி தொழிலாளர்கள் வாழ வழி இன்றி நகரத்தை நீங்கினார்கள்.  இந்த தொழிலார்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அவர்களுக்கு பூர்வீகமாக வேறு ஒரு வாழ்வும் தொழிலும் இருந்திருக்குமே அதெல்லாம் என்னானது? விடை. அதை அழித்தே நகர பண்பாடு உருவாகிறது என்பதே.  அமெரிக்காவில் ஒரு வீட்டு நாய் வளர ஆகும் செலவில், இங்கே இந்தியாவில் நான்கு கூலி தொழிலாளி குழந்தைகளை பரிபாலிக்க முடியும். இதெல்லாம் ஏன்? எப்படி இவை நிகழ்ந்தன? இவற்றையெல்லாம் இன்று இவ்விதம் நின்று யோசிக்க எனக்கு கற்று தந்த ஆசிரியர்களில் ஒருவர் பாஸ்கரன்.

சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் தமிழ் நிலத்தின் தியடோர் பாஸ்கரன் அவர்கள் அறிவு சார் பங்களிப்பு முக்கியமானது. காம க்ரோத மோகம் என அகம் சார்ந்துமட்டும் உழன்று கொண்டிருந்த தீவிர இலக்கியம், மார்க்சியம் தலித்தியம் பெண்ணியம் என புற வயமாக அரசியல் சார்ந்து பேசிய தீவிர இலக்கியம், என இங்கே இருந்த பிரதான போக்கை உடைத்து, இலக்கியம் கொள்ள வேண்டிய முழுமை பார்வைக்கு தேவையான சூழலியல் எனும் களத்தை அதற்கான சொல்லாடல், மொழி இவற்றுடன் உருவாக்கிய முன்னோடி பாஸ்கரன். தனிப்பட்ட முறையில் எனக்கு பாஸ்கரன் அவர்கள் பாலர்கள் வசம் சூழலியல் போதத்தை கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள் மீது ( அவை தோல்வி எனினும்) மிகுந்த மரியாதை உண்டு. .மா.கிருஷ்ணன் எழுதிய மழைக்காலமும் குயிலோசையும் நூலை உயர் அட்டை தாளில், வண்ணத்தில், 10 நூல்களாக பாலர் பதிப்பாக பாஸ்கரன் கொண்டு வந்தார். எவருக்கும் தேவைப்படாததால்  முதல் பதிப்புடன் அதன் பயணம் நிகழாமலேயே முடிந்து போனது. இப்படி பலவற்றை சொல்ல முடியும். மொத்தத்தில் தமிழ் சூழலியல் எழுத்துக்களில் பாஸ்கரன் அவர்களை நீக்கி விட்டு பார்த்தால், மலை ஒன்று இல்லாமல் போனதை போல இருக்கும்.

மண்டபத்துக்குள் பாஸ்கரன் வந்து விட்டார் என்பதை அறிந்து அவரை பார்க்க செல்லும் வழியில் அஜிதன் எதிர்ப்பட்டார். அவரையும் அழைத்து கொண்டு இருவருமாக சென்று சாரை பார்த்தோம். அஜிதன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது அவர் கண்களில் மெல்லிய வியப்பு எழுந்தது. பின்னர் என்னை அவரது வாசகன் என்று அறிமுகம் செய்து கொண்டு, முதல் வேலையாக அவரது இந்திய நாயினங்கள் நூலில் அவரது கையெழுத்தை பெற்றுக் கொண்டேன். நேரடியாகவே அந்த நூலில் இருந்து பேச்சை துவங்கினேன், அது உல்லாஸ் காரத், ராமன் சுகுமாரன், சந்தோஷ் பிள்ளை போன்ற ஆளுமைகள், அரிய பூ இனங்கள் தேடி அவரது பயணம், சினிமா ஆய்வுகள், வரலாறு சார்ந்த பயணம் என் சுற்றி சுழன்றது. பேச்சின் ஊடாகவே நான் வழிபடும் டேவிட் அட்டன்பரோ,  தமிழ் நிலதின்  ஆய்வாளர்கள் இருவர் என இவர்களின் எல்லை எது என்று சுட்டிக் காட்டினார். எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் எல்லோருமே ஒரே ரகம்தான் :). மிக சிறிய நேரத்துக்குள் ஆஸ்திரேலிய மலைகள் துவங்கி, இரட்டை படத்தில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தலை காட்டும் அபூர்வ நாய் இனம் வரை எத்தனையோ விஷயங்களை எனக்குள் போட்டு விட்டு கிளம்பிவிட்டார். என் பிரியத்துக்கு உரிய அக்கா லோகமாதேவி யின் ஸாகே நூல் அவரால் வெளியீடு கண்டது மிக மிகப் பொருத்தமானது.

மூன்றாவது இனிமை,  நீண்ட வருடம் கழித்து விழாவில் அனுபவித்த நாதஸ்வர தவில் கச்சேரி.  பால்யத்தில்  ஐந்து ஆறு வயதில் நான் கண்ட நெல்லை கோயில்பட்டி பக்க திருமணங்களில் இரவுகளில் ஊர் பெரியவர்கள்  குடும்ப பெரியவர்கள் கூடி கச்சேரி கேட்பார்கள். இரவு 10 மணிக்கு துவங்கி 12 கடந்தும் நீளும். அப்பா மடியில் கிடந்து உறங்கியபடி கனவில் என பல நாதஸ்வர தவில் கச்சேரிகளை கேட்டிருக்கிறேன். எல்லாம் சினிமா பாட்டுதான். ஆனால் அந்த கால சினிமா பாட்டு என்பதால் மிக மிக நன்றாக இருக்கும். அப்பா எப்போதும் துண்டு சீட்டில் எழுதி அனுப்பி கேட்கும் பாட்டு, அம்மா மனம் கனிந்துனது கடை கண் பார் எனும் பாடல்.

தூரன் விழாவில் தூரன் கீர்த்தனைகளை கொண்டே கச்சேரி எனும் அறிவிப்பே எனக்கு பரவசம் அளித்தது. சுட்டி வழியே அளித்த கீர்த்தனைகளை மீண்டும் கேட்டேன். எனக்கு மிக மிக பிடித்த கீர்த்தனை பாம்பே ஜெயஶ்ரீ பாடிய நான் என்ன செய்வேனைய்யா நீ என்னை தள்ளினால் எனும் கீர்த்தனை. துஜாவந்தி ராகம் என்று சிவாத்மா சொன்னார். சினிமா பாடல்கள் வழியே ராகங்களை அடைவதை விட கீர்த்தனைகள் வழியாக ராகங்களை அடைவதே  ராகங்களை பயில சிறந்த வழி என்று சொன்னார். காரணம் இரண்டு சினிமா பாடல்கள் பெரும்பாலும் உங்கள் கவனத்தை திசை திருப்பி இசையை உதறிய கற்பனை உலகுக்குள் அனுப்பி விடும். இரண்டு சினிமா பாடல்கள் ஒரு மாதிரி கூட்டு ராகங்களை கொண்டு உருவாவது. கீர்த்தனைகள் அவ்வாறு அல்ல. அதன் ராகம் தாளம் எதுவோ அது எங்கும் மாறாது. அது உங்களை இசை தாண்டிய கற்பனை உலகுக்குள்  தள்ளாமல் அந்த இசைக்குள்ளேயே வைத்திருக்கும் என்றார். சரி என்றே தோன்றியது. விழா வரும் வழி நெடுக காரில் துஜாவந்தி ராகத்தில் மதுரை t n s, மகாராஜபுரம் சந்தானம் போன்ற கலைஞர்கள் பாடியவற்றை கேட்டபடியே வந்தோம்.

என்ன சொல்ல அந்த ராகத்தில் நாதஸ்வரம் தவில் வழியே அந்த கீரத்தனையை கேட்டது ராஜராஜ சோழன் எழுப்பிய பெரிய கோயிலை முதன் முறையாக பார்க்க நேர்ததை போல ஒரு பிரம்மாண்ட அனுபவமாக இருந்தது.

இலக்கியம் என்று வந்த பிறகு நான் அடைந்த மிக பெரிய ஆசி என்பது,  எனக்கு எது சந்துஷ்டி அளிக்குமோ அந்த குவாலிட்டி டைம் களால் மட்டுமே ஆன பலப் பல பொழுதுகளை நான் அடைந்தது. அத்தகு குவாலிட்டி டைம் களில் என்றெனும் என் நினைவில் இனிக்கப்போவது இந்த இனிய மூன்றாக இருக்கும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமுதல் விண்மீன் – பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரைதுடிசைக்கிழார்