தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்…

புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இரண்டாயிரமாம் வருடத்தின் துவக்கத்தில் ஊடகங்களில் ஓர் செய்தி வந்தது. ‘பச்சை மனிதன்’ எனும் திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு அது. எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குநர் சேரன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் நாசர் உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் பங்கேற்று அதைத் துவக்கிவைத்தார்கள். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்குபெற்றிருந்தனர். காவிரி நதிநீர் சார்ந்த அரசியல்தான் அத்திரைப்படத்தின் மையக்கரு. எப்படியாவது அப்படத்தை மக்கள் சினிமாவாக எடுக்க வேண்டும் என முடிவேற்றிருந்தார் அதன் இயக்குநர் சரத் சூர்யா.

அதன்பிறகு, வெவ்வேறு சிற்றிதழ்களில் இயக்குநர் சரத் சூர்யாவின் நேர்காணல்கள் வெளியாகின. நாசர் அவர்கள் அதை மிகத்தீவிரமாக ஆதரித்தார். அத்திரைப்படத்தின் உருவாக்கக் கதையே ஒரு மாற்றுமுன்னெடுப்பு எனலாம். திரைப்படத்திற்கான டிக்கெட் விலையாக பத்து ரூபாய் நிர்ணயித்து, அதை முன்கூட்டியே திரட்டிச் சேமித்து, அதை வைத்து அப்படத்தைத் தயாரிக்க முடிவுசெய்தார்கள். தொடர்ச்சியாக நான்கைந்து மாதங்கள் இம்முயற்சி சார்ந்த பயணத்திற்குப் பிறகு திரைப்படத்தைக் காட்சியாக்கத் துவங்கினர். அவ்வாறு, முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கான தொகைதிரட்டலுக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குப் பயணித்தார்கள்.

அந்தப் பயணத்தில், பவானிக்கு அருகிலிருக்கும் ஒரு  சாயப்பட்டறையில் அக்குழுவினர் தங்கியிருந்தானர். அச்சமயத்தில் அவர்களைச் சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்கமைந்தது. பத்து நாட்கள் அவர்களோடு உடனிருந்தேன். ஒவ்வொருநாளும் வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று இத்திரைப்படம் குறித்து எடுத்துரைத்து, முன்பதிவு டிக்கெட்டை விற்று, இரவில் கணக்குவழக்குகளை நேர்செய்து உறங்குவோம். ஊர்மக்களிடம் செல்லும்போது, இயக்குநர் சரத் சூர்யா அங்குள்ள குழந்தைகளிடம் பேசுவார்.அக்குழுவில் தோராயமாக இருபது தன்னார்வலர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே மாற்றுசினிமா மீது தீராத ஆர்வமிருக்கும் இளைஞர்கள்.

உலக சினிமா, ஒருமைப்பாடு, இயற்கைவளம், மாற்றுசினிமா என தினந்தோறும் இரவில் வெவ்வேறு தலைப்புகளில் அந்தத் துறைசார்ந்த நுட்பமான கூர்மைப்பார்வையோடு விவாதிப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் நிறைய விதிகளை விதித்திருந்தனர். மக்களிடம் திரட்டிய பயணத்தில் எவ்வளவு எதற்காகச் செலவளிக்க வேண்டும் என்பதுகுறித்து தீர்க்கமான விதிகள் இருந்தன. நல்லுள்ளம் கொண்ட நிறைய நண்பர்களை அங்கு எனக்கு அறிமுகமானர்கள். அதில் பலர் இப்பவரை தொடர்பிலுள்ளனர். ஓவியர் குபேந்திரன், சுரேஷ் அண்ணன், தமிழ்செல்வன் என நிறைய நண்பர்கள் திரைப்படத்துறையில் வெவ்வேறு இயக்குநர்களிடம் அந்தந்த துறைசார்ந்த பணியிலுள்ளனர்.

இரண்டாம்கட்ட படப்படிப்பு நிகழ்ந்துவந்த நேரத்தில், எதிர்பாரதவிதமாக நிறைய நெருக்கடிகளால் அத்திரைப்படம் நின்றுவிட்டது. மீண்டும் படத்தைத் தொடர்வதற்கு நிறைய முயற்சி செய்தனர். அச்சமயத்தில் இயக்குநர் சேரனும், சில இயக்குநர்களும் சேர்ந்து  அக்குழுவினரை அழைத்து, “தொகை நெருக்கடியால் படம் பாதியிலேயே கைவிடுவதாகத் தெரிகிறது. நாங்கள் யாராவதொரு தயாரிப்பாளர் மூலம் மீதித்தொகையை வாங்கித்தர ஏற்பாடு செய்கிறோம். படத்தைத் தொடருங்கள்” எனச் சொன்னார்கள்.

ஆனால், படத்தின் இயக்குநர் சரத் சூர்யா, “எந்தக் காரணத்திற்காக நாம் விலகிவந்து, மக்களிடம் சென்று மாற்றுசினிமாவுக்கு ஆதரவு திரட்டினோமோ அதைவிட்டு வெளியேறுவதா?  இந்த முயற்சியில் நாம் தோற்றுகூடப் போகலாம். ஆனால், மீண்டும் இதைக் கைவிட்டு வழக்கமான திரைப்படமாக இதைத் தயாரித்தால் இது தவறான முன்னுதராணமாக மாறிவிடும். இது நம்பிக்கையாக மாறாமல் போய்விடும். மக்களின் சிறுசிறு பங்களிப்போடு ஒரு மாற்றுசினிமாவை உருவாக்க விரும்பினேன். என் கனவை என்னால் சமரசம் செய்துகொள்ள இயலவில்லை. படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை. இம்முயற்சி தோற்றாலும்கூட, இப்படியொரு முயற்சி இங்கு நிகழ்ந்தது என்றாவது இருக்கட்டும்” என்றார்.

சரத் சூர்யாவின் இந்த பதில் அவரது நண்பர்கள் மூலமாக எனக்கும் வந்துசேர்ந்தது. அடுத்தசில மாதங்களில் ஓவியர் குபேந்திரனும் நானும் உரையாடிக் கொண்டிருந்தோம். சரத் சூர்யாவை நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து அவரைத் தேடிச்சென்றோம். அன்று நான் அவரைக் கண்டகாட்சி அச்சுப்பதிவாக நினைவிருக்கிறது. ஒரு கோவில் திருவிழாவில் அவர் பொம்மை விற்றுக் கொண்டிருந்தார். சொல்லவியலாத ஒரு மனப்பதட்டம் எனக்குள் உளைச்சலை உருவாக்கியது. அன்றிரவு பதினோரு மணிக்குமேல் அவரிடம் உரையாடினேன்.

அடிப்படையில் அவர் காந்தியின் செயறசித்தாந்தத்தை உள்வாங்கிய மனிதர். எவருக்கும் தீங்கு நினைக்காதவர். ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் எளிய இயற்கை உணவு (பொதுவாக தேங்காய், வாழைப்பழம்) மட்டும் உண்டுவிட்டு படுக்கைக்குச் செல்பவர். அவ்வப்போது மெளனவிரதம் இருப்பார். அவரிடம் நான், “திரைக்கலைஞர் ஜான் ஆபிரகாம் அவர்களின் தாக்கத்தினால் நீங்கள் இந்த மாற்றுசினிமா முயற்சிகளைத் துவங்கினீர்களா?” எனக்கேட்டேன்.

அதற்கு அவர், “இல்லை, காந்தியின் தாக்கத்தால்! கடைசிவரைக்கும் கையேந்திக் கையேந்தி அவர் கட்டுவித்த ஒருமைப்பாட்டு தேசம் இது. கையேந்திக் காரியம் முடிப்பதில் அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. எல்லோருடைய உழைப்பும் ஆசியும் அதில் பங்கேற்க வேண்டும் என அவர் விரும்பினார். சென்றடையும் இலக்கு முக்கியமல்ல. தேர்ந்தெடுக்கும் பாதைதான் முக்கியம் என்பது காந்தியவழி. ஏனோ எனக்கு அதன்மீது தீவிரமாக விருப்பம் வந்துவிட்டது. எனது செயலிலும் அதை முயற்சிசெய்ய விரும்பினேன். அவ்வளவுதான்” என்றார். வாழ்வுக்கும் எனக்கு நினைவிருக்கும் வார்த்தைகள் அவை.

இப்பொழுது சரத் சூர்யா எங்கு, என்னசெய்துகொண்டிருக்கிறார் எனத் தெரியாது. ஆனால்… சகமனிதனுக்குத் தீங்கிழைக்காத, மனதுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஏதேனுமொரு எளிய செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கிடப்பார் என்பதைமட்டும் என்னால் உள்ளுணர்வாக நம்பமுடிகிறது. நான் மீளமீள அவரது செயற்தீவிரத்தை எண்ணிப் பார்க்கிறேன். அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் உள்ள ஞானத்தையும் நான் வியக்கிறேன்.

‘பச்சை மனிதன்’ படத்திற்காக தமிழகத்தில் காவிரி துவங்கும் பகுதியிலிருந்து, அது கடலில் சங்கமிக்கும் பகுதிவரைக்கும் அவர்கள் காவிரிப்படுகைகளில் அவரும் மாணவர்களும் நடந்துசென்றார்கள். ஒருவித உள்ளொளிப் பயிற்சி போலவே அப்பயணத்தை அவர் வடிவமைத்திருந்தார். அவரிடம் உடனிருந்த அத்தனை மாணவர்களும் இன்று தங்களளவில் துறைசார்ந்து நுட்பமுடையவர்களாகவும், வாழ்வுசார்ந்து நேர்மையுள்ளவர்களாகவும் உள்ளார்கள். ஓர் ஆசிரியமனம் ஒரு மனிதனுக்குள் என்ன நிகழ்த்துகிறது என்பது எல்லா தர்கங்களுக்கும் அப்பாற்றபட்ட தன்னுணர்தல் என்றே புலனாகிறது.

இத்தகைய நெடிய கடிதத்தை உங்களுக்கு எழுதக் காரணமிருக்கிறது. சிலகாலம் முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘பச்சை மனிதன்’ திரைப்படத்தில் சரத் சூர்யாவோடு பணிசெய்த சுரேஷ் அண்ணன் பேசினார். திரைப்படத் துறையில் கடந்த இருபதுவருட காலமாக வெவ்வேறு மட்டங்களில் மிகத் தீவிரமாக இயங்கிய மனிதர். ஈழப்போராட்டத்தின் போது அதுசார்ந்த பலநிகழ்வுகளை இங்கு ஆவணப்படுத்தியவர். இந்தியா முழுக்க அவர் பயணித்துள்ளார். பேசும்போது அவர், “சிவராஜ்… நான் சோற்றுக்கணக்கு கதை படிச்சேன். நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிட்டேன். நாலஞ்சு மாசமா இங்கதான் இருக்கேன். ஊர்ல சுக்கு காப்பி விக்கிறேன்டா…” என்றார்.

நான், “அண்ணா, என்னாச்சு அண்ணா?” எனப் பதறியபோது அவர், “கெத்தேல் சாகிப்மாதிரி ஆகமுடியுமான்னு தெரியல. ஆனா, மனசுக்கு நிம்மதியா ஒரு வேலை பாக்குறேன். அப்பப்ப, சினிமாவுக்கு திரைக்கதைல சின்னச்சின்ன பங்களிப்பு செய்றேன். சினிமா கதை விவாதங்களுக்கு கூப்பிட்டா போய் தெரிஞ்சத பகிர்ந்துக்கிறேன். இதத்தாண்டா இப்ப செய்றேன்.” என்றார். உண்மையில் அக்கணம் நான் உணர்வுகலங்கி மெளனமாகிவிட்டேன். ஒரு மனித அகம் எதைத் தேடியடைந்து அதில் தனது அமைதியை எவ்வாறு கண்டடைகிறது? என்கிற கேள்விக்கான பதில், ஒரே சமயத்தில் புலப்படுவதாகவும் புதிராக மாறுவதாகவும் எனக்குள் தோன்றுகிறது.

இத்தனைவருட சுய அடையாளத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தான் தெய்வமென நம்பும் கலைவடிவத்தை எவ்வகையிலேனும் தன்னால் தகவமைத்துக்கொள்ள முடியும் என்கிற அசாத்தியம் அவரில் உள்ளெழுகிறது. இந்த முடிவில் எள்ளளவும் அவரிடம் இறுமாப்போ அவநம்பிக்கையோ அசட்டையோ இல்லை. வனத்தில் தடத்தைக் கண்டறிந்தவனின் கவனம் மட்டுமே அவரிடம் உள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் என்றாலே, மிகுந்த காழ்ப்பும் கசப்பும் கொண்டு சீறியெழும் மனிதராக இருந்தவர், இன்று அவரெழுதிய கதையொன்றின் ஆன்மாவுக்குத் தலைவணங்கி அதன்நீட்சியாக வாழ்வை அமைத்துக்கொண்டார்.

இந்நிகழ்கை அடுக்கடுக்கான பல நினைவுகளை எனக்குள் எழச்செய்கிறது. இறுதியாக, மகிழ்வுக்குரிய இரண்டே இரண்டு உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். முதலாவது, இவ்வருடத்தின் தூரன் விருதுக்கான சிறப்பு விருதை எழுத்தாளர் சிவசங்கர் அவர்களுக்கு அறிவித்தது. நண்பர்களான பூவன்னா சந்திரசேகர், சிலம்பரசன் ஆகியோரை நான் முதன்முதலாகச் சந்தித்தபொழுது, அந்த இளைஞர்கள் உரையாடியதில் பெரும்பான்மையானது எழுத்தாளர் சிவசங்கர் அவர்களைப்பற்றித்தான். முகமறியாத எத்தனையோ வாசிப்புமனங்களுக்கு அவர் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு சார்ந்த தேர்ந்த அனுபவத்தீவிரம் அவரிடமுள்ளது. வெவ்வேறு மட்டங்களில் அவருக்கான நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள். எங்கெங்கோ இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் எழுத்தாளர் சிவசங்கரைக் குறித்த ஏதேனும் ஒரு தகவலைப் பகிர்கிறார்கள். அவரது அன்பின் அணுக்கம் பெருவட்டமுடையது.

அவருக்கு விருது அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்து நான் ஒரு புகைப்படத்தைத் தேடிக்கொண்டே இருந்தேன். நேற்றுதான் அதைக் கண்டடைந்தேன். நோய்மையிலிருந்து அவர் மீண்டுவந்த பிறகு, உங்களோடு எடுத்துக்கொண்ட ஒளிப்படமாக இருக்குமென நினைக்கிறேன். இளைய பையனின் கைகளைப்பிடித்து நின்றிருக்கும் அப்படம் மனதுள் பதிந்துவிட்டது.

அதுபோலானதொரு தருணம்தான், நிகழ்ந்துமுடிந்த கோவில் புத்தகக் கண்காட்சியில் உங்களோடு கோவர்த்தனன் இருக்கும் ஒளிப்படமும். முதல்நாள் இரவு உங்களுடன் உரையாடியதை, பின்னிரவு இரண்டு மணிக்கு அழைத்து என்னிடம் அவ்வளவு மகிழ்வுபொங்க பகிர்ந்துகொண்டான். “அஞ்சு கதை எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க…” என நீங்கள் நம்பிக்கையளித்தது குறித்து மிகுந்த மனநிறைவிலிருந்தான். மறுநாள் திடீரென மூளைநரம்பில் அடைப்பு ஏற்பட்டு நோய்மையில் வீழ்ந்தபோது, முதலாவதாக நிகழ்ந்த நம்பிக்கை என்பது கவிஞர் ஆனந்த் குமார் மூலமாக உங்கள் கவனம் அவனுக்குக் கிடைத்ததுதான்.

ஒவ்வொரு நினைவுகளாக எண்ணிப் பார்த்தால், எத்தனையோபேரின் எல்லா துயருற்ற நிலையிலும் நம்பிக்கைக்கரமாக உருக்கொள்வது உங்களது இருப்புதான். இதற்கு எத்தனை மனிதர்கள் ‘ஆம்’ எனத் தங்கள் உள்ளத்தில் உச்சரித்துக்கொள்வார்கள் என்பதையறிவேன். சுரேஷ் அண்ணன் போல, எழுத்தாளர் சிவசங்கர் போல, நண்பன் கோவர்த்தனன் போல… எண்ணற்ற மனிதர்களின் நல்மீள்கைக்கு உங்கள் வாழ்விருப்பு காரணமாகியுள்ளது. படைப்பாற்றலின் தெளிவுப்பாதையை வெளிச்சத்தை நோக்கித் துலக்கப்படுத்துவதிலும், துயருற்ற மனங்களின் கலக்கத்தைக் கரைக்கநீளும் மறைமுக உதவியிலும் உங்களிருப்பை நன்கறிவேன்.

எத்துயர் எவருக்கு நேர்ந்தாலும், நீங்களெழுதிய கடிதவரிகளான, “இது இன்று மாபெரும் துயரமாக இருக்கலாம். ஆனாலும் இதில் ஏதேனும் நன்மை இருக்கலாம். ஏதேனும் நாமறியா நோக்கம் இருக்கலாம். இந்த துயரம் வழியாக நீங்கள் உங்களை இன்னமும் நெருக்கமாக அறியக்கூடும். இந்த நெருக்கடி வழியாக உங்களுக்குள் மேலும் மேலும் அன்பு உருவாகி நீங்கள் இன்னமும் மேம்பட்டவராக இன்னமும் உணர்ச்சிகரமானவராக ஆகக்கூடும். உங்களை ஆன்மீகமாக இந்த நெருக்கடி பண்படுத்தக்கூடும்” என்பதை ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்.

நேற்று (01.08.23) நெரூரிலுள்ள யோகி சதாசிவ பிரம்மேந்திரர் அவர்களின் சமாதிக்குச் சென்றிருந்தேன். பழமையான வில்வமரத்தின் அடியில் அவரது ஜீவசமாதி உள்ளது. பட்டுப்போன அந்த வில்வ மரத்தின் மரபணுக்களை எடுத்து ஒட்டுரக முறையில் அதிலிருந்து உருவான புதிய மரத்தை அதே இடத்தில் வளர்த்தெடுத்திருந்தார்கள். அதை வணங்கிநின்ற கணத்தில், அலையாய் என்னுள் நானறிந்த ஆசிரியர்களின் குருமுகங்கள் என்னுள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள்.

அவ்வாறான எத்தனைநோ நெகிழ்வுத்தருணத்தை நீங்கள் எனக்களித்துள்ளீர்கள். அவை அத்தனையையும் எண்ணிக்கொண்டேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒருமித்த உணர்வால் ஒருங்கிணைந்த விஷ்ணுபுரம் நண்பர்கள் வட்டத்திற்கும் எனது நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள். நீங்கள் எண்ணித்துணிந்து நிகழ்த்திவைக்கும் அனைத்துச் செயல்களுக்கும் அருட்பெருஞ்சோதி ஆயுளருளும்!

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைவே.விவேகானந்தன்
அடுத்த கட்டுரைபிராமணர் கல்வியை மறுத்தனரா?