ஈரோட்டில் தூரன் விழாவை நிகழ்த்த முடிவெடுத்தமைக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, தூரன் ஈரோட்டைச் சேர்ந்தவர்.இரண்டு, ஈரோடு என் நண்பர்கள் அமைந்திருக்கும் இரண்டாவது மையம். நண்பர் வழக்கறிஞர் கிருஷ்ணன், ஈரோடு சிவா, பிரபு, அழகியமணவாளன், பாரி மற்றும் இப்போது கோவைக்குச் சென்றுவிட்ட ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் ஆகியோர் ஓர் அணியாகச் செயல்பட்டு இவ்விழாவை ஒருங்கிணைத்தனர். ஈரோட்டைச் சேர்ந்த சென்னை வழக்கறிஞர் நண்பர் வி.எஸ்.செந்தில்குமாரின் திருமணமண்டபம் இலவசமாகக் கிடைக்கிறது.
சென்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் ஈரோடு கவுண்டச்சிப்பாளையம் ராஜ்மகால் அரங்கில் தமிழ் விக்கி -பெரியசாமித் தூரன் விருது மு. இளங்கோவன் மற்றும் எஸ்.ஜே.சிவசங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இலக்கியவிவாதங்களுடன், இசைநிகழ்வுடன் நிறைவடைந்தது.
பெரியசாமித் தூரனின் கலைக்களஞ்சியம் நான் பள்ளி நாட்களில் நூலகத்திலேயே அமர்ந்து வாசித்தது. அதன் பல தகவல்கள் என் கனவுகளை விரியச்செய்தவை. ஒரு சிற்றூரின் சிறுவனுக்கு அது உலகை, தமிழ்ப்பண்பாட்டை விரித்துக் காட்டியது. தமிழ்விக்கி பணி தொடங்கியபோதுதான் பெரியசாமித்தூரனின் உழைப்பின், பங்களிப்பின் பேருருவம் தெரியவந்தது. அவர் தமிழகத்தில் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட ஆளுமை. ஒன்றுக்கும் உதவாதவர்களுக்கெல்லாம், அவர்களின் அரசியல் நிலைபாடு காரணமாகவே புகழும், நினைவகமும், சிலைகளும் அமையும் தமிழகத்தில் தூரன் அடையாளமே அற்று மறக்கப்பட்டார்.
அவருக்காக ஒரு விருதை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் சட்டென்று உருவம்கொண்டது. உண்மையில் தூரன் விருதை உருவாக்கக் காரணமே வாசு சுவாமி என்னும் வாசகர் விருதுத்தொகையை அளித்து எவ்வகையிலேனும் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னதுதான். குறைந்த செலவில் ஒரு இன்னொரு விருதுவிழாவை நடத்தி அவ்விருதை அளிக்கலாமென முடிவெடுத்தோம். அவ்வாறுதான் இவ்விழா அமைந்தது
சென்ற ஆண்டே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் அமர்வுகளின் எண்ணிக்கை காரணமாக விழா பெரிதாகிவிட்டது. இவ்வாண்டு நிகழ்வு மேலும் பெரியதாகியது- காரணம் பெரியசாமித் தூரன் இசை நிகழ்வு. அதற்கேற்ப செலவுகளும். நாங்கள் ஆண்டுக்கொரு முறை டிசம்பரில் மட்டுமே நன்கொடை பெற்றுக்கொள்கிறோம். சென்ற ஆண்டு பெற்ற நன்கொடையில் சிறிய அளவே எஞ்சியிருந்தது.
இம்முறையும் அருண் என்னும் நண்பரும் அரங்கசாமியும் தனியாக நன்கொடை அளித்தமையால் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சதீஷ் எனும் நண்பர் இசைநிகழ்வுக்கான பணத்தை அளித்தார் – அவ்விசைக்கலைஞர்கள் தங்கள் வழக்கமான ஊதியத்தில் நேர்பாதிக்கு வந்து வாசித்தனர் – இங்கே அவர்களின் இசையை கவனமாக அமர்ந்து கேட்பார்கள் என்னும் எங்கள் உறுதிமொழிக்காக மட்டுமே அவர்கள் வந்தனர்.
இரண்டுநாட்கள், வாசகர்கள் வந்து தங்கி, உணவுண்டு, உரையாடி, அமர்வுகளில் கலந்துகொண்டு செல்லும் நிகழ்வு இது. நூற்றைம்பதுபேர் பதிவுசெய்திருந்தார்கள். பதிவுசெய்யாமல் வந்தவர்களும் ஐம்பதுபேருக்குமேல் இருந்தனர். ராஜ்மகால் திருமண மண்டபத்திலும், ஈரோட்டில் இரண்டு விடுதிகளிலுமாக அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.
(வசதியான தனி விடுதிகளை விருந்தினர்களுக்கும், முதியோருக்கும், பெண்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் தேவதேவன், கொங்கு சதாசிவம் உட்பட அனைவரும் திருமண மண்டபத்தில் அனைவருடனும் தங்குவோம் என அடம்பிடித்தனர். கெஞ்சிக்கூத்தாடி ஆள் திரட்டி அனுப்ப வேண்டியிருந்தது.)
நான் ராஜ் மகாலில் தங்கினேன். அங்கே பத்து பெரிய அறைகளிலாக விருந்தினர்களில் இளைஞர்கள் தங்கினர். பிந்தி வந்தவர்கள் சிலர் கூடங்களில் தங்கினர். நான் மலையில் இருந்து நான்காம்தேதி மாலையே ஈரோடு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அங்கிருந்து ஐந்தாம்தேதி மதியம் சாப்பிட்டதுமே நான் அஜிதன் மற்றும் நண்பர்களுடன் ராஜ்மகாலுக்குச் சென்றுவிட்டேன். ஐந்தாம்தேதி மாலை கூட்டம் திரளத் தொடங்கியது. ஆறுமணிக்கு எஸ்.ஜே.சிவசங்கர் அமர்வு தொடங்கியதும் அவை நிறைந்திருந்தது.
சிவசங்கர் அமர்வை குருகு இணைய இதழ் ஆசிரியர் அனங்கன் ஒருங்கிணைத்தார். குருகு எஸ்.ஜே.சிவசங்கர், மு.இளங்கோவன் ஆகியோருக்கான சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. வாசகர்களின் வினாக்களுக்கு சிவசங்கர் பதிலுரைத்தார். கொங்கு சதாசிவம் தமிழக தொல்மானுடவியல் குறித்த காணொளிகளுடன் ஒரு சிறு உரையை வழங்கினார். அதன்பின் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.
இரவு அமர்வில் மு.இளங்கோவன் இசைத்தமிழ் ஆய்வாளர்களான குடந்தை சுந்தரேசனார், சுவாமி விபுலானந்தர் இருவரைப் பற்றியும் எடுத்த இரண்டு ஆவணப்படங்களின் சுருக்கமான முன்னோட்ட வடிவங்களை திரையிட்டார். ஒன்பதரை மணிக்கு இரவுணவு. அதன்பின் வழக்கம்போல நீண்டநேரம் இலக்கிய உரையாடல்களும் வேடிக்கைப்பேச்சுகளும் நிகழ்ந்தன.
ஆறாம்தேதி காலையில் எழுந்து ஒரு நடை சென்று அருகிருந்த தேனீர்க்கடையில் தேனீர் அருந்தி வந்தோம். குளித்து தயாராகி வரும்போதே காலையுணவு வந்திருந்தது. ஒன்பது மணிக்கு கூட்டம் திரண்டுவிட்டது. புதியவர்கள் ஏராளமாக வந்திருந்தனர். பத்துமணிக்கு முதல் அமர்வில் அவை நிறைந்திருந்தது. மு.இளங்கோவன் பாடிய நாட்டுப்புறப் பாடலுடன் அமர்வு தொடங்கியது.
முதலில் பி.கே.ராஜசேகரன் அமர்வில் அவருடைய பேச்சை நான் மொழியாக்கம் செய்தேன். வாசகர்கள் இலக்கியவிமர்சகனின் இடம், இலக்கியவிமர்சகன் எழுத்தாளனாகவும் இருந்தாகவேண்டுமா, இலக்கியவிமர்சன மரபில் பெண்களின் இடம் ஆகியவை சார்ந்த வினாக்களை எழுப்ப அவர் விரிவாகப் பதில் சொன்னார்.
இரண்டாம் அமர்வில் மு.இளங்கோவன் வாசகர்களுடன் உரையாடினார். அவ்வமர்வை தாமரைக்கண்ணன், புதுவை தொகுத்தளித்தார். அதன்பின் மதிய உணவு இடைவேளை இருநூற்றைம்பதுபேர் உணவருந்திய விருந்து நிகழ்வு முடிவதற்கு ஒரு மணிநேரம் போதவில்லை. அதற்குள் அடுத்த நிகழ்வு. சு.தியடோர் பாஸ்கரன் வாசகர்களுடன் உரையாடினார். லோகமாதேவி தொகுத்தளித்தார்.
அவ்வரங்கில் லோகமாதேவி எழுதிய சாகே என்னும் நூல் தியடோர் பாஸ்கரன் அவர்களால் வெளியிடப்பட்டது. தாவரவியலாளரான ஆசிரியர் போதை தரும் தாவரங்கள் பற்றி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரைத் தொகுதி அது. வண்ணப்படங்கள் கொண்டது. ஆனால் திகைப்பும் வியப்புமாக ஒரு புனைவு போல வாசிக்கத்தக்கது. அத்தகைய அரியசெய்திகளும் எளிய கூரிய நடையும்கொண்டது.
சிறிய இடைவேளைக்குப்பின்னர் நாதஸ்வர இசை நிகழ்வு. இசைநிகழ்வில் பெரியசாமித் தூரனின் இசைபாடல்கள் மட்டுமே இசைக்கப்பட்டன. திருமெய்ஞானம் டி.பி.நடராஜசுந்தரம் பிள்ளையின் குமாரர் திருமெய்ஞானம் டி.பி.என். ராமநாதன், அவருடன் இணைந்து பாண்டமங்கலம் ஜி. யுவராஜ். சிறப்பு தவில் தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன், உடன் கட்டிமேடு பி.பாலசங்கர்.
கணநாதனே குணபோதனே.(சாரங்க) தாயே திரி்புர சுந்தரி (சுத்தசாவேரி) அன்பே சிவம், அருளே தெய்வம். (நளினகாந்தி) முருகா முருகா என்றால் (சாவேரி) ஹரிஹர சுதனே ஐயப்பா (ஆபோகி) எங்கே தேடுகின்றாய் (ஹரிகாம்போதி) எங்கு நான் செல்வேனய்யா (துவஜாவந்தி) முரளிதர கோபாலா (மாண்டு) கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் (பிருந்தாவன சாரங்க) அழகு தெய்வமாக வந்து (காவடிச்சிந்து) ஆகியவை இசைக்கப்பட்ட பாடல்கள். ராகவிரிவாக்கமாக ஆபேரி இசைக்கப் பட்டது.
ஒரு தமிழ் நவீன இலக்கிய அரங்கில் மரபிசை முன்பு நிகழ்ந்துள்ளதா என தெரியவில்லை. நாதஸ்வரம் முழுநிகழ்வாக நடைபெறுவது இதுவே முதல்முறை. நாதஸ்வரம் மட்டுமே எனக்கு தமிழின் இசை என தோன்றுகிறது. குமரிமாவட்டத்தினராகிய எங்களுக்கு முதன்மை நாதஸ்வரம் தஞ்சையில் இருந்து வந்தாகவேண்டும். (காருக்குறிச்சி அருணாச்சலம் விதிவிலக்கு). அதன்பொருட்டு நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து ஆயிரக்கணக்காக அமர்ந்து கேட்ட வரலாறு எங்களுக்குண்டு.
ஏனென்றால் அது குமரிநிலத்தை ஆண்ட சோழப்பேரரசின் நினைவின் நீட்சி. மையத்தமிழ்ப்பண்பாடில் இருந்து குமரி நோக்கி நீண்டுவரும் ஒரு மாயக்கரம் அது. கேரளத்தில்கூட நாதஸ்வரம் அரிய இசையாக கருதப்படுகிறது – தமிழின் இசையாகவும். கேரளத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான திருவிழா ஜெய்சங்கர் குழுவினர் திருவிழா என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.
பலர் திருவிழா என்பது அவர்களின் பட்டம் என எண்ணுவதுண்டு. அது ஊர் என தெரிந்த சிலர் அவ்வூர் தமிழ்நாட்டிலுள்ளது என நினைப்பார்கள். அந்த ஊர் கேரளத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தலா அருகே உள்ளது. திருவிழா ஊரில் நீலகண்ட மகாதேவர் ஆலயம் உள்ளது. கேரளத்தின் பேராலயங்களில் ஒன்று இது. சோழர்காலத்தில் உருவான ஊரும்கூட. கேரளத்தின் சோழர்நினைவுகள் நாதஸ்வரம் வழியாகவே நீடிக்கின்றன.
விழாவில் இசைக்கப்படும் பாடல்களை ஒரு மாதம் முன்னரே இணையதளம் வழியாக அனைவருக்கும் அனுப்பியிருந்தோம். ஆகவே அவற்றை பலரும் கேட்டுவிட்டு வந்திருந்தனர். நாதஸ்வர இசையை கேட்கும் பழக்கமற்றவர்கள், இசைரசனையற்றவர்கள்கூட நாதஸ்வர இசைநிகழ்ச்சியை இதனால் மிகவும் ரசிக்க முடிந்தது.
உண்மையில் இசைநுணுக்கம் அறிந்து ரசிக்க இசையில் பயிற்சி தேவை. ஆனால் ஒரு நல்ல மரபிசை நிகழ்வில் தோய பெரிய பயிற்சி ஏதும் தேவையில்லை. பாடல்களை கொஞ்சம் முன்னதாகவே அறிந்திருக்கவேண்டும் என்பதே முக்கியம். செவியில் பழக்கமிருந்தாலே நம் மனம் மலர்ந்துவிடும். அத்துடன் உடன் அந்த ராகத்தைச் சேர்ந்த சில சினிமாப் பாடல்களையும் இணைத்துக் கேட்டிருந்தால் முழுமையாகவே ஈடுபட ஆரம்பித்துவிடுவோம்.
உதாரணமாக, ஆபோகி பண்ணில் அமைந்த ஹரிஹரசுதனே ஐயப்பா பாடலை கேட்பதற்கு முன்னர் அது நானன்றி யார் வருவார் என்னும் பாடலுக்குரிய ராகம் என தெரிந்துகொண்டால் ஒரு பொதுவான ரசிகன் மிகவும் ரசிக்கமுடியும்.
நாதஸ்வர இசை நம் மங்கலநிகழ்வுகளில் ஒலிக்கிறது, ஆனால் நாம் அதைக் கேட்பதில்லை. மங்கலநிகழ்வுகளில் அதற்கான சூழல் அமைவதில்லை. அத்துடன் அங்குள்ள சந்தடிக்குமேல் ஒலிக்கவேண்டும் என்பதற்காக ஒலிப்பெருக்கி அமைக்கிறார்கள். ஒலிப்பெருக்கிகள் நாதஸ்வரத்தைவிட தவில் நாதத்தை பலமடங்கு வாங்கிக்கொள்கின்றன. அவற்றின் தொழில்நுட்பம் அப்படி. விளைவாக நாம் பெரும்பாலும் கேட்பது தவிலின் இடிமுழக்கத்தையே.
நாங்கள் இவ்விழாவில் ஒலிப்பெருக்கி இருக்காது என முன்னரே இசைக்கலைஞர்களிடம் சொல்லியிருந்தோம். குளிரூட்டப்பட்ட அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. எதிரொலிகள் சோதிக்கப்பட்டு நல்ல ஒலியமைப்பு உறுதி செய்யப்பட்டது. நல்ல மிதமான ஒலியில் நாதஸ்வரத்தைக் கேட்பது ஓர் அரிய அனுபவம். நாதஸ்வரத்திற்கு மட்டுமேயான ஓங்கலும் குழைவும் நம் மரபிசையின் அரிய தருணங்களை எளிதாகச் சென்று தொட்டுவிடுபவை.
இருநூறுபேர் அமர்ந்து இரண்டுமணிநேர இசையை கேட்டனர். நாதஸ்வரக் கலைஞர்களுக்கே அது புதிய அனுபவமாக அமைந்திருக்கவேண்டும். நாதஸ்வரம் இத்தனை இனியதா என பலர் என்னிடம் வியந்தனர். இவ்விழாவின் அழகை பெருமளவுக்கு அதிகரித்துவிட்டது இசை. நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன் (தலைச்சங்காடு ராமநாதனின் மைந்தர்) இதை ஒருங்கிணைத்தார். இனி வரும் ஆண்டுகளிலும் இசைநிகழ்வு இருந்தாகவேண்டும் என்னும் சூழல் உருவாகிவிட்டது.
விழாவுக்கு பேராசிரியர் மு.இளங்கோவன் தன் இரு மகள்களுடனும் மகனுடனும் மனைவியுடனும் வந்திருந்தார். எஸ்.ஜே.சிவசங்கர் தன் மனைவி, இரு மகன்கள் மற்றும் மனைவியின் அன்னையுடனும் வந்திருந்தார். பல பங்கேற்பாளர்களும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
ஆறரை மணிக்கு தொடங்கிய நிகழ்வில் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தில் நூறு பதிவுகளுக்கு மேல் போட்டவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. எஸ்.ஜே.சிவசங்கருக்கும் மு.இளங்கோவனுக்கும் விருதுகளை சு.தியடோர் பாஸ்கரனும் பி.கே.ராஜசேகரனும் வழங்கினர். காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டத்தைச் சேர்ந்த ஓவியர் மு.பிரகாஷ் வரைந்த மு.இளங்கோவன், எஸ்.ஜே.சிவசங்கர் ஆகியோரின் ஓவியங்கள் ஓவியரால் அவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டன.
முழுநாள் நிகழ்வை எப்படி அமைப்பது என்பது எப்போதுமே ஒரு சிக்கல். நாங்கள் இந்நிகழ்வுகளை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் எங்கள் இளையநண்பர்களுக்கான கூடுகைகளாகவே அமைக்கிறோம். ஆகவே கூடுமான வரை பயனுள்ளதாக முழுப்பொழுதும் அமைய முயல்கிறோம். அப்போது நிகழ்வுகள் செறிவாகி, இடைவெளியே இல்லாமலாகிவிடுகின்றன. இம்முறை திட்டமிட்டு நிகழ்ச்சிகளை இடைவெளி விட்டு அமைத்தோம். ஆனாலும் ஓடி ஓடி முடிக்கவேண்டியிருக்கிறது.
விளைவாக இறுதி நிகழ்வான பரிசளிப்பு விழாவை சுருக்கமாக, இரண்டு மணிநேரத்துக்குள் முடித்தாகவேண்டியிருக்கிறது. விஷ்ணுபுரம் விருதுவிழாவும் அப்படியே சரியாக இரண்டு மணிநேரத்தில் முடியும். இம்முறையும் அவ்வாறே நிகழ்ந்தது.
தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கியபின் நான் வாழ்த்திப் பேசினேன். என் உரையில் நான் குறிப்பிட்ட கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர் எவர் என பலரும் கேட்டுக்கொண்டிருந்தனர். எஸ்.ஜே.சிவசங்கரும் மு.இளங்கோவனும் ஏற்புரை வழங்கினர். எட்டரை மணிக்கு நிகழ்வு நிறைவுற்றது. அதன்பின் இரவுணவு.
அதன்பின் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். எஞ்சியோர் அங்கேயே தங்கி இரவு ஒருமணி வரை பேசிக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சிக்கு பெரும் உழைப்பை வழங்கிய நண்பர் பிரபுவுக்கு நான் சால்வை அணிவித்துப் பாராட்டினேன்.
இந்த விழாவில் ஒரு மெல்லிய உறுத்தல், தங்குமிடம் பெற்றுக்கொண்டு, நிகழ்வுக்கு வந்த மிகச்சிலர் விழாவன்று அரங்குக்கு வராமல் கிளம்பிச் சென்றுவிட்டமை. அவர்கள் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அது எவ்வகையிலும் அறமுள்ள செயல் அல்ல. அவர்கள் எங்களை சுரண்டினர் என்றே சொல்லவேண்டும். வெறும் இலவச உணவு, தங்குமிடமாக எங்களை பயன்படுத்திக்கொண்டனர். வேறு சிலருடைய இடங்களையும் அவர்கள் பறித்துக்கொண்டனர். அவர்கள் எவர் என பட்டியலிட நண்பர்களிடம் சொன்னேன். மிகச்சிறிய தொகையை மிச்சப்படுத்த இந்த அற்பத்தனத்தை செய்ய நம்மவர் தயங்குவதே இல்லை.
ஒவ்வொரு முறையும் ஒரு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நிகழ்வு நிறைவுறும்போதும் அதிலிருந்து ஒரு விலக்கம் எனக்கு உருவாகும். நண்பர்களுடன் பேசிச் சிரித்து கொண்டாடுவது மனநிறைவூட்டும். ஆனால் சாதனையுணர்வோ பெருமிதமோ உருவாவதில்லை. காரணம் இவை என்னால் நிகழ்த்தப்படுவன அல்ல என்பதே. என் பங்களிப்பு உதாசீனம் செய்யுமளவுக்குச் சிறியதுதான்.
மறுநாள் காலையில் நண்பர்களுடன் அதே நீண்ட நடை, ஒரு டீ. மதியம் கிளம்பி ஈரோடுக்கு வந்து சாப்பிட்டோம். பி.கே.ராஜசேகரனை நண்பர்கள் குமரிக்கல் பாளையம், விஜயமங்கலம் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர். நான் மாலை ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். அங்கிருந்து நேராக ரயில்நிலையம்.
நான் ஜூலை 22 அன்று வீட்டை விட்டு கிளம்பி கோவை புத்தகக் கண்காட்சி, ஒரு கேரளப்பயணம், மலைத்தங்குமிடத்தில் மூன்றுநாட்கள், ஈரோடு என கிட்டத்தட்ட அரை மாதம் அலைந்துவிட்டிருக்கிறேன் என நினைவுக்கு வந்தது.
விழா முடிவின்போது ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டுப்புகைப்படம் எடுத்துக்கொள்வோம். விஷ்ணுபுரம் நண்பர்கள் மேடைக்கு வரவும் என அழைக்கும்போது அரங்கிலிருப்போரில் பாதிப்பேர் மேடைக்கு வருவார்கள். ஏனென்றால் மெய்யாகவே விஷ்ணுபுரம் அமைப்பினர் ஏறத்தாழ அனைவருமே இவ்விழாக்களுக்கு வருவது வழக்கம். இந்த அமைப்பை தன்னுடையதென நினைக்கும் அனைவருமே இதன் உறுப்பினர்கள்தான்.