அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
https://twitter.com/AjithanJey5925
அல் கிஸா நாவல் பற்றி முதலில் ஒன்றைக் கூற வேண்டியுள்ளது. இந்த நாவல் ஏற்கனவே இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்த தியாக நிகழ்வு ஒன்றை மையமாகவும் கொண்டது என்பதால் அதில் கேள்விகள் / தர்க்கங்களுக்கு இடமில்லை. இவற்றை உள்வாங்கி கொண்டுதான் இந்த நாவலை வாசிக்க வேண்டும்.
அல் கிஸா நாவலுக்கு எத்தகைய மொழியை கைக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி வரலாற்றில் ஊடாடி எப்படி எழுதலாம் என்பது வரை அஜிதன் காட்டியிருக்கும் தீவிரத்தை உணர்கிறேன். ஆழ்ந்த படைப்பூக்கம் இல்லாதவர்கள் இதுபோன்ற களங்களை நிச்சயமாக தேர்வு செய்யமாட்டார்கள். கண் போய்விடும் காரியம் இது. பல்வேறு எல்லைகள் வகுக்கப்பட்ட களத்தில் மொழியும் புனைவும் அஜிதனுக்கு துணை புரிந்திருக்கின்றன.
(இந்த படைப்புக்கு எந்த வகையில் கவிஞர் அபி உறுதுணையாக இருந்தார் என்பதை அஜிதன் தன்னுரையில் பதிவு செய்துள்ளார்.)
அல் கிஸாவை வாசித்து முடிக்கும் போது இஸ்லாமிய மதம் & மரபு சார்ந்த படைப்பு ஒன்றை படித்த உணர்வுதான் மேலிட்டது. அந்த மனநிலை நாள் முழுவதும் என்னுள் நீடித்து மேவியிருந்ததை மறைக்க விரும்பவில்லை. இமாம் ஹுசைனின் படுகளக் காட்சிகள் காவியத்தன்மையை கொண்டிருக்கின்றன. (எனக்கு அவை முள்ளிவாய்கால் என்ற தியாக யுக நினைவுகளை மீளவும் கண்முன் கொண்டு வந்தது.) அந்த கணங்களை தமிழின் ஆழமான சொற்களில் வடித்து தந்திருக்கிறார் எழுத்தாளர் அஜிதன்.
மர்ஸியா எனப்படும் ஹுசைனின் உயிர்த்தியாக பாடலை (வரலாற்றை ) படே சாஹேப் என்ற முதிர்ந்து பழுத்த பாடகன் மூலமாக கேட்கும் கணமும் காதல் ஒன்றின் தொடக்கமும் ஒரே புள்ளியில் தொடங்குகின்றது. நாவல் முகமதிய சூஃபி மெய்யியல் வழியே மையம் கொள்வது குடும்பம் எனும் பிணைப்பின் மீதுதான். நபிகளின் பிராத்தனை என்பதும் தன் குடும்பம் பொருட்டே. கர்பலாஸில் அநீதிக்கு தலை வணங்காது மண் மறையும் ஹுசைனின் குடும்பத்தின் நீட்சியாகவே பாடகர் படே சாஹேப்பின் குடும்பமும் கூடத் தோன்றுகின்றது. விடுதலைப் போருக்கு குடும்பத்திற்கு ஒருவரை கேட்ட தளபதி ஒருவன் என் குடும்பத்தில் இருக்கும் மூவரையும் தருவதுதான் முறை என்று கூறிய எங்கள் ஈழ விடுதலை மரபில் இருந்து நானும் சிலவற்றை நினைவில் மீட்க முனைகிறேன். தியாகம் தியாகம் தியாகம்!.
“சகோதரர்களே, அனைத்தும் இறைவனின் ஆணைப்படி அந்தக் கணத்தில் நிச்சயிக்கப்பட்டது“
இந்த நாவலின் ஒவ்வொரு கணமும் மேற்கூறிய வாக்கியங்களைத்தான் தாங்கி நிற்கின்றது.
வாசு முருகவேல்