புதுமைப்பித்தனின் சிடுக்குகள்

புதுமைப்பித்தனை நான் வாசிக்கும்போது எனக்கு பத்தொன்பது வயது, கல்லூரி இரண்டாமாண்டு. அதற்கு நெடுங்காலம் முன்னரே தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை வாசித்திருந்தேன். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உலக இலக்கியம் அறிமுகமாகிவிட்டிருந்தது. என் அம்மா இன்றைய என் கணிப்பின்படிக்கூட ஓர் முதன்மை இலக்கிய விமர்சகர் அளவுக்கே வாசித்தவர். ஆனால் அவருக்கே புதுமைப்பித்தன் என்றால் எவரென்று தெரியாது. எனக்கும் எவரும் சொல்லவில்லை. குங்குமம் இதழில் பாவை சந்திரன் ஒரு குறிப்புடன் புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் கதையை வெளியிட்டிருந்தார். அப்போதுதான் நான் அவரை கேள்விப்பட்டேன். முதல் கதை வழியாகவே அவரை அடையாளம் கண்டுகொண்டேன்.

இந்த ஆண்டுகளில் திரும்பத்திரும்ப அவரை வாசித்திருக்கிறேன். இப்போது என் வாழ்க்கையின் சாய்நிழலை பார்க்க ஆரம்பித்துவிட்டிருக்கிறேன் இன்று எனக்கு தமிழின் பெரும்பாலான முந்தைய எழுத்தாளர்களை வாசிக்க முடிவதில்லை. மிக மிகப் பின்னணியில் இருப்பவர் கு..ராஜகோபாலன். அவரை ஏன் சிறுகதை முன்னோடி என்று சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. மௌனியின் மூன்று கதைகள் தவிர நான் பொருட்படுத்துவன ஏதுமில்லை. .பிச்சமூர்த்தியின் சில கதைகள் நன்று. ஜானகிராமன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி என தமிழ் முன்னோடிகள் ஒவ்வொருவரையும் வாசிக்கையில் மிக விரைவாக கடந்துவிடுகிறேன். ஆனால் இன்றும் புதுமைப்பித்தனின் எழுத்துக்களை மீண்டும் கண்டடைய முடிகிறது. ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்று கிடைக்கிறது. இதுவரை கவனிக்காத ஒரு புதியகதையைக் கண்டடையமுடிகிறது. 

புதுமைப்பித்தனின் எழுத்தே நவீனத்தமிழிலக்கியத்தின் செவ்வியல் அடித்தளம். அந்த இடம் வேறு எவருக்குமில்லை. பின்னாளில் தமிழில் எழுதப்பட்ட எல்லா வகை எழுத்துக்களுக்கும் அவரே முன்னோடியாக இருக்கிறார். லா..ரா, சுந்தர ராமசாமி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் என இலக்கியவாதிகள் மட்டுமல்ல, சுஜாதா போன்றவர்கள்கூட புதுமைப்பித்தனின் வாரிசுகள்தான். அவர்கள் எழுதிய  நடையை, கதைவடிவை முன்னரே புதுமைப்பித்தன் முயன்றுபார்த்த சிலகதைகளையாவது கண்டடைய முடியும். லா..ராவை புதுமைப்பித்தனின் வாரிசு என்றால் உடனே துணுக்குறுபவர்கள் சித்தம்போக்கு, கனவுப்பெண்,சாயங்கால மயக்கம் போன்ற பல கதைகளை தேடினால் கண்டடையலாம். பின்தொடர்ந்தவர்கள்   எவருமே பின்தொடர முயலாத கதைவடிவம் கபாடபுரம். விஷ்ணுபுரத்தின் முன்னோடி வடிவம் அதுவே.

வீ.அரசு பதிப்பாசிரியராக, சீர் வாசகர் வட்டம் மலிவுப்பதிப்பாக வெளியிட்ட புதுமைப்பித்தன் கதைகளை என் நூலகத்தில் இருந்து தற்செயலாக எடுத்தேன். இரண்டு தடவைகளிலாக, ஐந்து  மணிநேரத்தில் எல்லா கதைகளையும் மீண்டுமொரு முறை படித்து முடித்தேன். இப்போதும் படிக்க முடிவதே பெரிய வியப்பு. பல புதியகதைகளை கண்டடைய முடிவது மேலும் வியப்பு. அவர் எந்த அக்கறையுமில்லாமல் எழுதித் தள்ளிய கதைகளில்கூட கற்பனையும் கசப்பும் இணைந்து வெளிப்பட்டுள்ளன. அவை அவற்றை தவிர்க்கமுடியாதவை ஆக்குகின்றன.

பெரும்பாலும் எந்தக் கதையையும் புதுமைப்பித்தன்  மறுபடி எழுதியதில்லை, செப்பனிட்டதில்லை என தெரிகிறது. அப்படி திரும்பத் திரும்பச் செப்பனிடும் எழுத்தாளர்கள்மேல் எனக்கு பெரிய நம்பிக்கை இன்றில்லை. எழுதும்போதுள்ள அதீதநிலையை அதிலிருந்து இறங்கியபின் அடையவே முடியாது. அந்த படைப்புநிலையுடன் ஒவ்வாத சில பகுதிகள் படைப்பின் முதல்வடிவில் இருக்கும்.  தாவுதலுக்கு முந்தைய தயக்கங்கள். அவற்றை ஒருமுறை வாசித்து தவிர்க்கலாம், அல்லது குறைக்கலாம். படைப்புநிலையில் எழுதியவற்றில் இருந்து விசைகொண்டு மேலும் படைப்புநிலையை அடைந்து எழுதிச் சேர்க்கலாம். ஆனால் படைப்புநிலையில் எழுதிய பகுதிகளை எளிய உளநிலையில் நின்று செப்பனிட முடியாது. அப்படிச் செப்பனிடுபவர்கள் படைப்புவேகத்தில் எழுதுபவர்கள் அல்ல. அவர்கள் பிரக்ஞைபூர்வமாகச் செதுக்குபவர்கள். பல படிகள் கீழே நிற்கும் எழுத்தாளர்கள். எனக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ள பெரிதாக ஏதுமில்லை. 

அத்துடன் கச்சிதமான மொழி என ஒன்றில்லை. ஒருவர் செதுக்கிச் செதுக்கி கச்சிதமானதாக ஆக்கிய மொழி இன்னொருவருக்கு மிகத் தளர்வானதாகத் தோன்றும். கொஞ்சகாலம் கழிந்தால் பழையதாகவும் தெரியலாம். காலம்கடந்து நிலைகொள்வது எழுத்தாளன் தன்னைக் கடந்து எழுதும் சொற்கள், அவனுடைய பித்தின் வெளிப்பாடுகள் மட்டுமே. எனக்கு இன்று வாசிக்கையில் மௌனியும் கு..ராஜகோபாலனும் மிகமிகத் தளர்வான மொழியில், தட்டையான சித்தரிப்புடன் எழுதியவர்களாக தோன்றுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கதையையும் மாதக்கணக்கில் செப்பனிடுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது நமக்கு.

புதுமைப்பித்தனிடம் இன்றும் கவர்வது அவருடைய செறிவு. அது மொழிச்சிடுக்கு அல்ல. வெளிப்பாட்டின் சிடுக்கும் அல்ல. நிறையச் சொல்லிவிடவேண்டும் என்னும்வெப்புராளத்தின் விளைவும் அல்ல. அவருடைய கூர்நோக்கு மற்றும் நுண்ணுணர்வு வழியாக அவர் அடைந்த  வாழ்க்கை நுட்பங்களால் உருவான செறிவு அது. எழுதும் விசையைவிட, நடையின் விரைவை விட , அவருடைய கூறலின் விசையும் விரைவும் மிகுதி. ஒரு சொற்றொடருக்குள் சூழல், கதைமாந்தரின் தனிப்பட்ட இயல்புகள், அவர்களின் உளநுட்பங்கள், அரசியல் செய்திகள், சமூக விவரிப்புகள் என அவர் சொல்லவும் உணர்த்தவும் விழைவன மிகுதி. புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை மனிதர்களின் உடல்மொழி, பேச்சினூடாக உள்ளோடும் அவர்களின் அகத்தாவல்கள் ஆகியவையும் முக்கியம். அவருக்குப் பின்னர்கூட மனிதர்களின் உடலையும் மொழியையும் இவ்வளவு வண்ணவேறுபாடுகளுடன் எவரும் சித்தரித்ததில்லை. இத்தனை வகைவகையான கதாபாத்திரப்பெயர்கள்கூட பின்னர் வந்தவர்களின் ஆக்கங்களில் காணக்கிடைக்கவில்லை. இந்த நுட்பங்களெல்லாம் ஒரே சொற்றொடரில் ஒன்றுக்குமேல் ஒன்றென படிந்து அமைந்துள்ளதன் விளைவான செறிவே அவருடைய அழகியலை தீர்மானிக்கிறது. 

அந்தச் செறிவு வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. கதையோட்டத்துடன் ஒழுகவிடாமல் வாசகனை தடுத்து வரிகளில் சுழலச்செய்கிறது. நல்ல படைப்பு வாசிப்புக்கு இப்படி ஒரு தடையை அளிக்கும். அந்தத் தடையை வாசகன் தனக்கே உரியமுறையில் உடைத்து தாண்டுவதன் வழியாக தனக்கான இலக்கியப்பிரதியை உருவாக்கிக்கொள்கிறான். அந்த இலக்கியப்பிரதி ஆசிரியன் எழுதியதில் இருந்து அவ்வாசகன் உருவாக்கிக் கொண்டது. அதை அவன் மறப்பதில்லை. அந்த தடையை அளிக்காத இலக்கியப் படைப்புகள் வாசகர்களின் சிந்தனையை, கற்பனையை வளர்ப்பதில்லை. வாசகர்களின் வாழ்க்கைப் பார்வையை மாற்றியமைப்பதில்லை. ஆகவே வாசகர்களால் வாழ்நாளெல்லாம் நினைவுகூரப்படுவதுமில்லை.

அந்த தடையை செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கும் நவீனத்துவ, பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகள் உண்டு. அவற்றில் சில பல்வேறு காரணங்களால் புகழ்பெறுவதுமுண்டு. சொற்றொடர்ச் சிக்கல், வடிவச் சிக்கல், கருத்துச் சிக்கல் ஆகியவற்றின் வழியாக அந்த தடையை அவர்கள் உருவாக்குகின்றனர். ஒரு படைப்பில் முற்றுப்புள்ளிகளை எல்லாம் அரைப்புள்ளிகளாக ஆக்கினாலே அந்தச் சிக்கல் வந்துவிடும். சித்தரிப்புகளை மிகமிக நீளச்செய்வது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாக்குவது வடிவச்சிக்கலை உருவாக்கும் வழி. கருத்துக்கள் ஒன்றுடனொன்று தொடர்பற்று பெருகச்செய்வதும் ஒரு வழியே. அத்தகைய படைப்புகளை வாசிப்பது ஒருவகை குறுக்கெழுத்துப் புதிர்விளையாட்டு போல. கற்பனை குறைவானவர்களுக்கு அவை பிடிக்கலாம். கற்பனையே இலக்கியவாசிப்பின் அடிப்படை. கற்பனை கொண்ட வாசகனுக்கு அவை மூளையை களைப்படையச் செய்து எரிச்சலையே அளிக்கும்.

மாறாக, புதுமைப்பித்தனின் செறிவு அந்தந்த வரிகளிலேயே திளைக்கச் செய்கிறது. ‘ஶ்ரீமான் உலகநாதபிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத்தன்மைக்கு மாறாக சைவசித்தாந்த தத்துவங்களை ஒதுக்கி மடத்துச்சைவம் ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்திற்குள் தம்மை இழந்தார். ஊர்க்குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது, காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல, பணம் இன்மை’ (நிர்விகர்ப சமாதி) என்ற கதைத்தொடக்கத்தை, இரண்டே வரிகள், சரியாகப் புரிந்துகொள்ள தமிழ்ப்பண்பாடு சார்ந்த எத்தனை உட்குறிப்புகளை அறிந்திருக்கவேண்டும் என யோசித்தால்போதும், அவருடைய செறிவு என்பது என்ன என்று புரியும். 

.

புதுமைப்பித்தனின் படைப்புகளை பல்லாயிரம் பிரதிகளாக மலிவு விலையில் மக்களிடம் கொண்டுசெல்ல சீர் பதிப்பகம் எடுத்த பெருமுயற்சி பாராட்டுக்குரியது. அதற்கு பின் நற்றிணை பதிப்பகத்தின் முயற்சியும் முக்கியமானது.

ஆனால் இப்பதிப்பு புதுமைப்பித்தனின் நடையுடன் அறிமுகமற்ற , ‘கல்லூரித்தமிழ்பயின்ற எவராலோ மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது. இயந்திரத்தனமாக போடப்பட்ட அரைப்புள்ளி, காற்புள்ளிகள் பொருள்கொள்ளுவதை இடர்மிக்கதாக்குகின்றன. உதாரணமாக மேலே அளித்த சொற்றொடரிலேயே ‘…மாறாக சைவசித்தாந்த தத்துவங்களை ஒதுக்கி மடத்துசைவம் ஏகான்மவாதம் என்று ஒதுக்கியஎன்ற சொற்றொடரில்  ‘…மாறாக சைவசித்தாந்த தத்துவங்களை ஒதுக்கி மடத்துச்சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கியஎன ஒரு அரைப்புள்ளி போடப்பட்டுள்ளது. மடத்துசைவம் மற்றும் ஏகான்மவாதம் என பொருள் வருகிறது. மடத்துச்சைவத்தால் ஏகான்மவாதம் என ஒதுக்கப்பட்ட என்பதே அச்சொற்றொடரின் பொருள். 

இன்னொரு உதாரணம், இந்த விபத்து ஏற்படும்முன் சென்னையின் தொண்ணூற்று ஒன்பதாவது குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய்  சணல் வெங்காய வியாபாரக் கம்பெனியின் ஹெட் குமாஸ்தான்ற வரியில்இந்த விபத்து ஏற்படும்முன் சென்னையின் தொண்ணூற்று ஒன்பதாவது குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய்,  சணல், வெங்காய வியாபாரக் கம்பெனியின் ஹெட் குமாஸ்தாஎன அரைப்புள்ளி போடப்பட்டுள்ளது. குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய், சணல், வெங்காயவியாபாரம் ஆகியவை ஒரு பட்டியல் போல ஆகிவிட்டன.(அபிநவ ஸ்நாப்) நவீன தமிழ் உரைநடையில் கூடுமானவரை கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள் தவிர்க்கப்படவேண்டும். ஆசிரியரே போடாத ஒற்று, கால்புள்ளி அரைப்புள்ளிகளைப் போட எவருக்கும் உரிமையில்லை. இயந்திரத்தனமாக வல்லினம் புணருமிடங்களில் எல்லாம் ஒற்று போடும் மடத்தனம் கூட இன்று வாசிப்புக்கு பெரும் இடைஞ்சல். ஒற்றே இல்லாமலிருந்தால்கூட பிழையாகத் தெரிவதில்லை. 

அத்துடன் இந்த பதிப்பில் தமிழாசிரியத்தனமான திருத்து வழியாக உருவான பிழைகள் பல செறிந்துள்ளன. அச்சுப்பிழைகளை நம் கண்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இவை பொருட்பிழைகளாக ஆகிவிடுகின்றன. உதாரணம், சங்குத்தேவன் தர்மம் கதையில் கிழவி சங்குத்தேவனிடம் உன் சாதிக்காரன் இப்படி ஊரெல்லாம் கொள்ளையடிக்கிறானே, நீ தேவன் தானே, நீயெல்லாம் தட்டிக்கேட்க மாட்டாயா என்கிறாள். சங்குத்தேவன் கலகலவென சித்துவிட்டுஅது கொலத்தொழிலுதானே…” என்கிறான். அதை இந்தப் பதிப்பில்அது கொலைத்தொழிலுதானேஎன திருத்தியிருக்கிறார்கள். 

இன்னொரு உதாரணம், அபிநவ ஸ்நாப். அதில் கொஞ்சம் வில்லங்கமான ஒரு புதுமைப்பித்தனிசம்.   கம்பன் தன் கதாபாத்திரத்தின் பூரிப்பை குறிக்கவாமமேகலையினுள் வளர்ந்ததல்குலேஎன்கிறான். ஆனால் எனது ஜூனியர் கனகாம்பரம்வைக்கோல்போர் கதம்பத்தின் உள்நிகழ்ச்சி பற்றி எனக்கு தகவல் இல்லைஎன்பது புதுமைப்பித்தனின் வரி. அது  கம்பன் தன் கதாபாத்திரத்தின் பூரிப்பை குறிக்கவாமமேகலையினுள் வளர்ந்ததல்குலேஎன்கிறான். ஆனால் எனது ஜூனியர் கனகாம்பரம்வைக்கோல்போர் கதம்பத்தின் உள்ள நிகழ்ச்சி பற்றி எனக்கு தகவல் இல்லை என திருத்தப்பட்டு தமிழ்ப்பண்பாடு காப்பாற்றப்பட்டுள்ளது.

*

புனைவிலக்கியவாதியின் கலை உருவாக்கும் செறிவென்பது புதுமைப்பித்தனின் நடையிலுள்ளதுதான். அதை அடையுமளவு மரபு, பண்பாடு, சமூகம், மானுட இயல்புகள், உள்மொழிகள் ஆகியவற்றில் நுண்ணிய அறிதல் அற்ற மேலோட்டமான எழுத்தாளர்களால்தான் செயற்கைச் சிக்கல் உருவாக்கப்படுகிறது. அவ்வகையில் புதுமைப்பித்தன் நமக்கு மிக முக்கியமான ஒரு முன்னுதாரணம். 

ஆனால் இந்தச் செறிவு சிறுகதைக்கே உதவுவது. நாவலுக்கு இது பலசமயம் கலைசார்ந்த தடையாக ஆகும். நாவலின் பேரனுபவம் என்பது கதையுலகுக்குள் வாசகன் வாழ்தல். ஒரு நிகர்வாழ்க்கை அது. அந்த மூழ்கும் அனுபவத்துக்கு இந்த செறிவுநடை தடையாகும். பெருநாவல்கள் ஒரு கட்டத்தில் ஒருவன் எழுதி இன்னொருவன் வாசிக்கிறான் என்பதையே மறக்கச்செய்து ஓர் உளநிகழ்வு மட்டுமேயாக நின்றிருக்கும் மாயம் கொண்டவை. அவற்றின் செறிவு என்பது அவை  வாழ்க்கையையும் வரலாற்றையும்முழுமையாகஅள்ள முயலும் விரிவில் இருந்து எழுவது. அந்த விரிவு அதன் எல்லா வரிகளுக்கும் அதீதமான அர்த்தச்செறிவை அளித்துவிடுகிறது. மேலும் இது முழுக்க முழுக்க புதுமைப்பித்தன் என்னும் ஆசிரியனின் குரல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் நடையும்கூட. பலநூறு பக்கம் இப்படி ஆசிரியனே பேசிக்கொண்டிருந்தால் செவி ரீங்கரிக்க ஆரம்பித்துவிடும்.

புதுமைப்பித்தன் எல்லா வகை எழுத்துக்கும் முன்னோடி என்றேன். ஜி.நாகராஜன் எங்கே புதுமைப்பித்தனில் வெளிப்படுகிறார்? மிகச்சரியான ஒரு கதை உள்ளது. ‘அந்த முட்டாள் வேணுஓர் உதாரணமான ஜி.நாகராஜன் கதைபுதுமைப்பித்தன் எழுதியது. ஜி.நாகராஜனின்  நான் செய்த நற்செயல்கள்கதையுடன் இதற்கு ஒரு நேர்கோட்டை இழுத்துவிட முடியும்.  விபரீத ஆசைகூட ஜி.நாகராஜனின் உலகம். ஆனால் அந்தக் கதையில் புதுமைப்பித்தன் செல்லும் விபரீத உளவியலின் ஆழத்தை ஜி.நாகராஜன் தொட்டதே இல்லை.

முந்தைய கட்டுரைசீதை, முதல் கம்பராமாயண ஆய்வு
அடுத்த கட்டுரைபேய் தெய்வமாதல் – கடிதம்