மறைஞானத்தின் கதைகள்- கடிதங்கள்

தங்கப்புத்தகம் வாங்க

தங்கப்புத்தகம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

கரு குறுநாவலை பல  முறை வாசித்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் வித விதமான தரிசனங்கள்.ஷம்பாலா கனவு நகரும் பத்ம சம்பவரும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.  ஏற்கனவே இறந்தவர்களும் , இனி பிறக்கப் போகிறவர்களுக்குமான கனவு உலகம். இரு வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை, பவழ  மல்லியைக்  கோர்க்கும் நேர்த்தியோடு வழங்கியது சுவாரஸ்யம்.  தர்க்கங்களின் மூலம் உணர  முடியாத சம்பவங்கள். ஒவ்வொரு தேடலின் முடிவு நோக்கி நகரும்போது ஆடி பிம்பம் போல இளைஞன் ஒருவன் வழிகாட்டுகிறான். வந்தது சூசன்னாவின் மகனா, ஆடமுக்கு தந்தையா அல்லது பரம்பொருள் பத்மசம்பவரா?.  கடுங்குளிரில் ஆடம் தனியாகப் புறப்பட்டு செல்ல எந்த விசை செலுத்துகிறது..?.இந்த பூமியைப் போல,வாழ்வும் அறிய முடியாத புதிர்.

ஸ்நேகத்துடன்
கோபால்

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் நூலை நான் தயங்கித்தான் வாங்கினேன். நான் வாசிக்கமுடியாத ஏதோ அன்னியக்கதைகள் அதிலிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தியானம் பழகும் எனக்கு அதிலுள்ள ஒவ்வொரு கதையும் அற்புதமான குறியீட்டு ஞானக்கதை என இப்போது தெரிகிறது. இதுவரை மொத்தக்கதைகளையும் ஆறு தடவை படித்துள்ளேன். கரு, தங்கப்புத்தகம் இரண்டும் சுழற்றியடிக்கும் கதைகள்.

செ.மகாராஜா

முந்தைய கட்டுரைஅல் கிஸா வெளியீட்டு விழா உரை
அடுத்த கட்டுரைபிறிதொரு உலகம் – தன்யா