ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் யாவரும் பதிப்பகம் (கடை எண் 27) வள்ளி பதிப்பகம் (கடை எண் 146) மீனாட்சி புத்தக நிலையம் (கடை எண்கள் 187, 188) ஆகியவற்றில் கிடைக்கும்
விஷ்ணுபுரம் பதிப்பகம் சில புதிய நூல்களையும் சில மறுபதிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
புதிய நூல்கள்
அஜிதன் எழுதிய இரண்டாவது நாவல். அஜ்மீர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்காவில் நிகழ்கிறது. உஸ்தாத் படே குலாம் அலி கானின் இசை பின்னணியாகிறது. இஸ்லாமிய வரலாற்றின் ஒரு களம் ஊடே விரிகிறது. சூஃபி ஆன்மிகம் வெளிப்படும் தீவிரமான ஒரு காதல்கதை.
அல் கிஸா – அஜிதன் (நாவல்)
விஷால்ராஜாவின் இரண்டாவது தொகுப்பு. எளிமையை முதல்முகமாகவும் உளவியல் அடுக்குகளை அடித்தளத்திலும் கொண்ட அழகிய சிறுகதைகள்.
திருவருட்செல்வி – விஷால் ராஜா (சிறுகதைகள்)
ஜெயமோகனுடனான தன் காதல் நாட்களை நினைவுகூர்ந்து அருண்மொழி நங்கை எழுதிய கட்டுரையின் விரிவாக்கம் இது. கடிதங்கள் புகைப்படங்கள் அடங்கியது.
பெருந்தேன் நட்பு -அருண்மொழிநங்கை (அனுபவக்கட்டுரை)
மலையாள இலக்கிய ஆய்வாளர், நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி வெளிவந்து எழுபதாண்டுகள் கடந்தும் இன்றும் விவாதிக்கப்படும் நூல். இதில் ஐரோப்பிய பெருநாவல்களை ஒரு தீவிரவாசகனாக நின்று பரிசீலிக்கிறார் ஆசிரியர்.
நாவலெனும் கலைநிகழ்வு – பி.கே.பாலகிருஷ்ணன் (தமிழில் அழகிய மணவாளன்) இலக்கிய அழகியல் கட்டுரைகள்.
ஜெயமோகன் மதுரை நாயக்கர் ஆட்சிக்காலப் பின்னணியில் எழுதிய கதைகளின் தொகுப்பு. உணர்வுத்தீவிரம் கொண்ட சிறுகதைகள் அடங்கியது. வெளிவராத மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவலும் இதில் உள்ளது.
படையல் – ஜெயமோகன் (சிறுகதைகள்)
மறுஅச்சுகள்
சென்ற சில மாதங்களில் வெளிவந்த புதிய நூல்கள் மீண்டும் அச்சாகியுள்ளன
துணைவன் – ஜெயமோகனின் சிறுகதைகள். விடுதலை திரைப்படமாக வெளிவந்த துணைவன் சிறுகதைகளும், வேறெங்கும் வெளியிடப்படாத புதிய நான்கு சிறுகதைகளும் அடங்கிய தொகுதி.
துணைவன் – ஜெயமோகன் (சிறுகதைகள்)
நேரடியாகவே நூல்வடிவில் வெளிவரும் காதல்கதைகள். 12 கதைகளில் 3 மட்டுமே முன்னர் வெளிவந்தவை. எளிய இனிய கதைகள். காதலின் மின்னும் தருணங்களை மட்டுமே சொல்பவை.
மலர்த்துளி – ஜெயமோகன் (சிறுகதைகள்)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒட்டி தமிழகத்தில் வரலாறு – பண்பாடு சார்ந்த ஒரு விவாதம் நிகழ்ந்தது. பல தளங்களில் நிகழ்ந்த அந்த விவாதங்களுக்கான எதிர்வினைகள். சோழர்கள், தமிழக வரலாறு, புனைவிலக்கியம் சார்ந்த தீவிரமான கருத்துக்கள் கொண்ட நூல்
பொன்னியின் செல்வன் விவாதங்கள் ( கட்டுரைகள்)
மறுபதிப்புகள்
நீண்டகாலமாக பரவலாகக் கிடைக்காமலிருந்த சில நூல்கள் மறு பதிப்பாக விஷ்ணுபுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன
காடு முதற்காதலின் பசுமை மாறா சோலையை சித்தரிக்கும் புகழ்பெற்ற நாவல். விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள இனிய அழகிய படைப்பு
காடு -ஜெயமோகன் (நாவல்)
மிகமிக அடிநிலை வாழ்க்கையில்கூட மானுடம் தன் இயல்பான பெருமிதமும் ஆன்மிகமும் கொண்டிருப்பதைச் சித்தரிக்கும் நாவல். நான் கடவுள் என்னும் திரைப்படமாக இதன் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.
ஏழாம் உலகம் – ஜெயமோகன் (நாவல்)
ஜெயமோகனின் முதல் நாவல். சுருக்கமான பக்கங்களில் ஒரு யுகமாற்றத்தை வெவ்வேறு கதைமாந்தர்கள் வழியாகச் சித்தரிக்கும் படைப்பு
ரப்பர் -ஜெயமோகன் (நாவல்)
இலங்கையின் உள்நாட்டுப்போருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பை முன்வைத்து எழுதப்பட்ட ஓர் விறுவிறுப்பான திரில்லர். ஆனால் வாழ்க்கையின் சில மர்மங்களை அவ்வடிவுக்குள் தொட்டுச்செல்கிறது. முடிவின் கணம் சட்டென்று நாவல் இன்னொன்றாக உருமாறுகிறது
உலோகம் – ஜெயமோகன் (நாவல்)
ஓர் ஆண் தன்னுள் உறையும் பெண்ணை, அன்னையும் கன்னியும் மகளுமான ஒருத்தியை, இழப்பதன் கதை இது. விடுதலைகொண்ட பெண்ணின் முன்னகர்வையும் சித்தரிக்கிறது.
கன்யாகுமரி – ஜெயமோகன் (நாவல்)
பாலு மகேந்திரா சினிமாவாக எடுக்கவிருந்த கதை. திரைக்கதை வடிவில் இருந்து நாவலாக திரும்ப எழுதப்பட்டது. காமம் காதல் என்னும் இருமுனைகளில் ஊசலாடும் ஒரு கதை.
அனல் காற்று -ஜெயமோகன் (நாவல்)
இரவில் மட்டுமே வாழும் ஒரு சிறு சமூகத்தின் கதை. ஆனால் இரவு என்பது மானுடரின் ஆழ்மனம்தான். அங்கே என்ன நிகழ்கிறது? அங்கே நாம் வாழத்தொடங்கினால் அதன்பின் ஆழ்மனமாக அமைவது எது? பண்பாட்டின் இரவுப்பக்கத்தைப் பேசும் நாவல்.
இரவு – ஜெயமோகன் (நாவல்)
அறம் தொகுதிக்குப் பின் ஜெயமோகன் எழுதிய கதைகள் அடங்கியது. அறம் கதைகளின் உணர்வுநிலைகள் இக்கதைகளிலும் நீள்கின்றன
வெண்கடல் – ஜெயமோகன் (சிறுகதைகள்)
மகாபாரதத்தை களமாக்கி ஜெயமோகன் எழுதிய குறுநாவல், நாடகம், சிறுகதைகள் அடங்கிய தொகுதி.
பத்ம வியூகம் ஜெயமோகன் (சிறுகதைகள்)
கூந்தல் குமுதம் இதழில் வெளியான கதை. ஆனால் பல கதையடுக்குகள் கொண்டது. உரையாடல் வழியாகவே நீள்வது. அழுத்தமான சிறுகதைகள் கொண்ட தொகுதி
கூந்தல் -ஜெயமோகன் (சிறுகதைகள்)
ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்ற தொகுப்பு இது. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முதல் பல தமிழறிஞர்கள் பாராட்டிய கட்டுரைகள். சங்க இலக்கியத்தை வாழ்க்கையில் பொருத்தி வாசிப்பவை இக்கட்டுரைகள். இந்த வகை எழுத்து இந்நூலுக்குப்பின்னர்தான் ஒரு எழுத்துமரபாகவே தமிழில் உருவானது.
சங்கச் சித்திரங்கள்-ஜெயமோகன் (கட்டுரைகள்)
எளியபொருளில் இவற்றை தன்னம்பிக்கைக் கட்டுரைகள் என்று சொல்லிவிடலாம். ஆனால் உண்மையில் இக்கட்டுரைகள் மனிதவாழ்க்கையின் அடிப்படைகளை ஆராய்கின்றன. இங்கு வாழும் முறையை வகுத்துரைக்கின்றன
பொன்னிற பாதை- ஜெயமோகன் (கட்டுரைகள்)
கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்த கோயில் இன்று கேரளத்தில் உள்ள கொடுங்கல்லூர். அந்த ஆலயத்தைப்பற்றிய ஆய்வுநூல்
கொடுங்கோளூர் கண்ணகி (மொழியாக்கம்) கட்டுரை
வெண்முரசு நூல்கள்
வெண்முரசு நாவல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் பல மறுபதிப்பாக விஷ்ணுபுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு பதிப்பக வெளியீடுகளும் அரங்கில் கிடைக்கும்.
வெண்முரசு நூல்கள் அனைத்தும் ஒரே சமயம் கிடைக்கச்செய்ய முயன்றோம். ஆனால் அது எளிதாக இல்லை. நாவல்களின் அமைப்பும் அளவும் பெரியது. ஆகவே மிகுதியாக அச்சிட்டால் இருப்பு வைத்துக் கொள்வதற்கு இடமில்லை. தரமான அச்சு தேவை என்பதனால் அறுநூறு பிரதிகள் அச்சிடப்படுகின்றன. ஆனால் ஒருபக்கம் புதிய நாவல்கள் அச்சில் இருக்கையில் வெளிவந்தவை விற்று தீர்ந்துவிடுகின்றன. வெண்முரசு நாவல்கள் தேவைப்படுபவர்கள் இருப்பு உள்ளவற்றை வாங்கி வைத்துக்கொள்வதே இப்போதைக்குச் செய்யக்கூடுவது.
பிற நூல்கள்
மற்றும் விஷ்ணுபுர வெளியீடாக வந்து தொடர்சியாக விற்பனையிலுள்ள நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள் கிடைக்கும்
அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைப் பின்னணியில் ஒரு காதல்கதை. ஆனால் இதன் அடுக்குகள் வாசிக்க வாசிக்க ஆழ்ந்து செல்பவை. நிலக்காட்சிகள், உணர்வுநிலைகள் ஆகியவற்றை வர்ணிப்பதனூடாக அஜிதன் சிவசக்தி லீலையின் ஒரு காட்சியை அளிக்கிறார்
மைத்ரி நாவல் அஜிதன்
தீவிரத் தமிழிலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற நாவல் என்று விஷ்ணுபுரத்தைச் சொல்லமுடியும். வெளியாகி கால்நூற்றாண்டாகியும் தொடர்ந்து வாசிக்கப்படும், பயிலப்படும் படைப்பு.
விஷ்ணுபுரம் – நாவல் ஜெயமோகன்
சோவியத் ருஷ்யாவின் கம்யூனிச அரசின் வீழ்ச்சியின் பின்னணியில் தென் தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கவாதியின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இது. ஆனால் கருத்தியல் என்பது எப்படி மனிதர்களை மூர்க்கமாக்குகிறது, தேசங்களை அழிவுச்சக்திகளாக்குகிறது என்று விவாதிக்கும் படைப்பு.
பின் தொடரும் நிழலின் குரல்
பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதைக்குள் லண்டனில் வாழ்ந்த இன்னொரு இலக்கிய ஆசிரியையின் கதை, அதற்குள் ஒரு நாடகக் கதாபாத்திரத்தின் கதை, அதற்குள் ரோமாபுரியில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுக்கதை என நீளும் பல அடுக்குகள் கொண்ட நாவல். ஆனால் ஒரு தீவிரமான பேய்க்கதையும்கூட்.
கதாநாயகி (நாவல்) ஜெயமோகன்
முழுக்க முழுக்க மங்கலத்தன்மை மட்டுமே கொண்ட நாவல் இது. மதுரை மீனாட்சிக் கல்யாணம் எப்படி குமரிமாவட்டத்தில் தொடங்கியது என்று விவரிக்கும் படைப்பு. கலைத்தன்மையே கண்ணீர் மல்கச்செய்யும் அனுபவமாக ஆவது இந்நாவலில்தான்
குமரித்துறைவி ஜெயமோகன் (நாவல்)
————————————————————————-