இன்று எங்கள் மணநாள். ஆகஸ்ட் 8 எப்போதுமே அருண்மொழிக்கு சிறப்பான ஒரு நாளாக இருந்து வருகிறது. கோயில்களுக்குச் செல்வது வழக்கம். நான் அந்த நாளை பொருட்படுத்தியதில்லை. இணையப்பதிவுகளை வைத்துப் பார்த்தால் அந்நாளில் பெரும்பாலும் ஏதோ பயணங்களில்தான் இருந்திருக்கிறேன். மதியம் வாக்கில் அருண்மொழி கூப்பிட்டுக் கேட்பாள், இன்றைக்கு என்ன நாள் நினைவிருக்கிறதா? நினைவிருந்ததே இல்லை. அவளே சொல்வாள், இன்றைக்கு ஆகஸ்ட் 8. அதற்கென்ன என்பேன். ஆகஸ்ட் 8ல் நாம் திருமணம் செய்துகொண்டோம் என்பாள். அப்படியா என்று குழம்பி சரி என ஒத்துக்கொள்வேன்.
எனக்கு இந்த சிறப்புநாட்கள், நினைவுநாட்கள் எப்போதுமே முக்கியமல்ல. எனக்கு முக்கியமானவர்களான ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா. ஞானி, லோகிததாஸ் எவருடைய நினைவுநாள் குறிப்புகளும் என் தளத்தில் வருவதில்லை. நித்ய சைதன்ய யதியின் குருபூஜை நாள் கூட என்னால் நினைவுகூரப்பட்டதில்லை. என் பிறந்தநாள், என் பிள்ளைகளின் பிறந்தநாள் கூட நினைவில் இல்லை. அருண்மொழி சொன்னால்தான் நினைவுக்கு வரும். எனக்கு எல்லா நாளும் முக்கியமே. எந்த நாளும் வெறும் அன்றாடம் அல்ல. அன்றைய சவால்கள், அன்றைய மகிழ்ச்சிகள், அன்றைய சாதனைகள் முக்கியம். ஊக்கமும் உளநிறைவும் அடைய ஒரு தனி நாள் தேவையில்லை – எல்லா நாளும் அப்படித்தான். ஆசிரியர்களை நினைவுகூர்வது அவர்களின் நாட்களில் மட்டுமல்ல, எல்லா நாளிலும்தான். பிள்ளைகளையோ அருண்மொழியையோ கொஞ்சுவதும் குலவுவதும் எல்லா நாட்களிலும்தான்.
இன்று இந்நாளை நினைவுகூர்வதற்குக் காரணம் அருண்மொழி எழுதிய பெருந்தேன் நட்பு என்னும் நூல். சென்ற ஆண்டு, 2022 ஏப்ரல் 22ல் என் பிறந்தநாளை ஒட்டி எழுதப்பட்டது. சியமந்தகம் என்னும் என் தொகைநூலில் இடம்பெற்றது. புகைப்படங்களுடன் விரிவாக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. என் வாசகர்கள் பலருக்கும் பிரியத்துக்குரிய நூலாக மாறியிருக்கிறது. அதில் அருண்மொழி எங்கள் காதலை, எங்கள் இணைவை விவரித்திருக்கிறாள். என் காதல்கடிதங்கள் சில உள்ளன. என் பழைய கையெழுத்து அதிலுள்ளது. அடித்தல் திருத்தல்கள் இல்லாத சீரான எழுத்துக்கள். என் கைப்பிரதிகள் இதழ்களில் அச்சேற்ற மிகவும் உகந்தவை என்பார்கள். ‘சுஜாதா கையெழுத்த பாத்த கண்களுக்கு இதெல்லாம் கையெழுத்தே இல்ல சார், ஓவியங்கள்’ என்று என்னிடம் இதழாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். என் மொழி அன்றே முதிர்ச்சியுடன்தான் இருக்கிறது. அகக்கொந்தளிப்பை, அன்பை அதனால் சொல்லமுடிந்துள்ளது. அந்த காதல்கடிதங்களிலேயே பெரும்பாலும் இலக்கியம்தான் பேசியிருக்கிறோம். இலக்கியமேதைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
எங்களுக்கிடையே இன்றுவரை நீடிக்கும் ஆழ்ந்த உறவுக்கான அடிப்படையே இலக்கியம்தான். இலக்கியம் எனக்கு பொருளியல் அடித்தளத்தை அளித்தது. நான் விரும்பிய வண்ணம் உலகமெங்கும் பயணங்கள் செய்ய வழிவகுத்தது. நான் கொண்டாடும் பலநூறு நட்புகள், பல்லாயிரம் வாசகர்களின் சுற்றம் உருவாக வாய்ப்பளித்தது. ஆனால் முதன்மையாக எனக்கு மிகச்சிறந்த குடும்ப வாழ்க்கையையும் அளித்தது. கணவன் மனைவி நடுவே ஒரு காலகட்டத்திற்குப்பின் பேச ஒன்றுமே இல்லாமலாகிவிடுகிறது. குழந்தைகள் பற்றி மட்டுமே பேசமுடியும். அதுவே வெறும் கவலைப் பகிர்வாகவே அமையும். ஆகவே இனிய உரையாடலென்பது அதுவாக எப்போதாவது அமைந்தால் தான் உண்டு. ஆனால் அருண்மொழியுடன் இன்றும் இலக்கியம் பற்றி மணிக்கணக்காகப் பேச முடிகிறது. அந்த உரையாடலே எங்கள் நடுவே நீடிக்கும் பிரியத்தின் களம்.
அதுவே குழந்தைகளுக்கும். வளர்ந்த குழந்தைகளுடன் பேச பெற்றோருக்குச் சொற்கள் இருப்பதில்லை. அறிவுரைகள், கவலைகள் மட்டுமே இருக்கும். அது நீடித்த உரையாடலாக ஆகாது. நான் என் இரு குழந்தைகளிடமும் இலக்கிய விவாதமே பெரும்பாலும் செய்கிறேன். இன்று இருவருமே என்னைவிட இலக்கியம் படித்தவர்கள். அஜிதனின் விரிவான தத்துவ வாசிப்பும், சைதன்யாவுக்கு பண்டைய ஆங்கில இலக்கியங்களிலுள்ள ஆழ்ந்த அறிவும் எனக்கே திகைப்பூட்டுபவை. ஆகவே விவாதங்கள் எனக்கு கற்றுக்கொள்ளும் அனுபவங்களும்கூட. அந்த உரையாடல் இனிய குடும்பச் சூழலை எப்போதும் அமைக்கிறது. இலக்கியமென்னும் தெய்வத்தின் முதன்மை அருள் அது. அதை நான் வழிபட்டேன், பிறிதொரு தெய்வத்திற்கு தலைகொடுக்கவில்லை, அது என்னுடன் என்றுமுள்ளது.
அத்தனைக்கும் மேலாக ஒன்றைச் சொல்லவேண்டும். அருண்மொழிக்கு இப்போது ஐம்பத்துமூன்று வயது. உடல்சார்ந்த, உளம்சார்ந்த மாறுதல்களால் பெண்கள் சிடுசிடுப்பும் சோர்வுமாக அலைக்கழியும் பருவம் அது. அவர்களை மிகக்கவனமாக குடும்பத்தினர் கையாளவேண்டிய காலகட்டம். நம் இந்தியப்பெண்களைப் பொறுத்தவரை பாலியல்விலக்கம், பிள்ளைகள் வளர்ந்து விலகிச்செல்வது ஆகியவற்றின் விளைவாக ஒருவகை பயனின்மையை அவர்கள் உணர்கிறார்கள். வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும், வாழ்க்கையை பிறருக்காக இழந்துவிட்டதாகவும் எண்ணத்தலைப்படுகிறார்கள். பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் அது ஓர் உண்மையும்கூட. இந்தக் காலகட்டத்தின் எந்தச் சோர்வும் அருண்மொழியிடம் இல்லை. அவளைக் காத்தது இலக்கியம்.
விருப்ப ஓய்வு பெற்றதுமே அருண்மொழி மிகுந்த வீச்சுடன் இலக்கியத்திற்குள் நுழைந்தாள். இசையில் மூழ்கினாள். வாசிப்பு, இசைகேட்பது, எழுத்து, பயணம் என அவளுடைய உலகம் அறிவார்ந்த மனநிலையால், படைப்புநிலையால் நிறைந்தது. அது அவளை மேலும் மகிழ்ச்சியானவளாக ஆக்கியது. எங்கள் வீட்டில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவள் அவளே. இசை அவளை விழித்திருக்கும் நேரமெல்லாம் திளைத்துக்கிடக்கச் செய்கிறது. ஒருவகையில் அருண்மொழி எனக்களித்த பெரும் கொடை இது என நினைக்கிறேன். இக்காலகட்டத்தின் மகிழ்ச்சிக்காக அவளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் அலைக்கழிவின் நாட்களில் பெரும் கனிவுடன் வாழ்க்கைக்குள் நுழைந்து அரவணைத்துக்கொண்டாள். எனக்கென ஒரு நல்ல குடும்பத்தை அமைத்தாள். என் எல்லா அகப்புறப் பயணங்களிலும் துணையென்றானாள். இன்று அன்னைக்கு நிகரான ஆதரவுடன் என்னருகே அமர்ந்திருக்கிறாள்.
ஆனால் அதன்பொருட்டும் நான் என்னையே பாராட்டிக்கொள்கிறேன். தெய்வங்கள் வணங்கி, கொண்டாடும் உபாசகர்களுக்கு அருள்பவை. இந்த தெய்வத்தையும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பூசனை செய்திருக்கிறேன்.