கோவை உரை, வசைகள்

அன்புள்ள ஜெ,

கோவை புத்தகக் கண்காட்சி உரை கேட்டேன். சங்க இலக்கியத்தின் மீதான நவீன இலக்கியம் சார்ந்த ஓர் அழகியல் ஆய்வு. குகை ஓவியங்களின் மானுடக்கனவு எப்படி சங்க காலம் முதல் இன்றுவரை ஓர் அழகியலுணர்வாக வளர்ந்து வருகிறது என்று விளக்கும் உரை ஒரு பெரிய பரவசத்தை அளித்தது. காமம், வீரம் போன்ற   வாழ்க்கையிலிருந்து உருவாகி, வாழ்க்கையை உதறிவிட்டு தூய கருத்துருவமாக ஆகும் பரிணாமத்தை அழகாகச் சொன்னீர்கள்.

இதே விஷயத்தை கலைஞர் மு.கருணாநிதியும் விரிவாகப் பேசியிருக்கிறார். சங்ககாலத்தில் யதார்த்தம் இருந்தது, அது வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்தது, கம்பராமாயணத்தில் அந்த யதார்த்தம் இல்லை, அது செயற்கையான ஒரு கருத்தை மட்டுமே அந்தரத்தில் உருவாக்கி நிறுத்துகிறது என்று விளக்கியிருக்கிறார். நான் கலைஞரின் ரசிகன். ஆனால் இன்றைக்கு அவர் பேரையெல்லாம் சொல்லும் சிலர் தினமலர் செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். உங்களை கண்டபடி வசைபாடுகிறார்கள். வருத்தமாக உள்ளது

அறிவரசு நாகராஜன்

அன்புள்ள அறிவரசு

சுந்தர ராமசாமி சிற்றிதழ்களுக்கு வெளியே பொது ஊடகங்களில் எழுதுவது பற்றி எதிர்மறைக் கருத்து கொண்டிருந்தார். எனக்குச் சிற்றிதழ்கள் அன்றே போதவில்லை. ஆகவே அவ்வப்போது பேரிதழ்களில் எழுதினேன். அதற்கு எதிராக சுந்தர ராமசாமி சொன்ன முக்கியமான கருத்து ஒன்று உண்டு. அது இதுதான்

பேரிதழ்களில் அவற்றின் வாசகர்களுக்கு உகந்தபடி, உகந்த விஷயங்களையே எழுத வேண்டும். அவர்கள் இடம் தந்தால்கூட தீவிரமானவற்றை எழுதலாகாது. ஏனென்றால் அந்த தீவிர இலக்கிய ஆக்கங்கள் அவர்களுக்கு புரியாது. புரிந்துகொள்வதற்கான முயற்சியையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அதைவிட மோசமானது, வாசிக்கும் எதையும் தங்கள் தரத்துக்கு அவர்கள் இழுத்துச்செல்வார்கள். பிழையாகப் புரிந்துகொள்வார்கள். அந்தப்பிழைகளின் அடிப்படையில் ஆதரித்தோ எதிர்த்தோ பெரும் பிழைகளை தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். உரிய மனநிலை இல்லாதவர்கள் நடுவே இலக்கியத்தை முன்வைப்பதென்பது அந்த உரிய மனநிலை இல்லாதவர்களுக்கே தீங்கிழைப்பது.

இது முழுஉண்மை அல்ல என்றே நான் இன்று வரை நம்புகிறேன். சுந்தர ராமசாமியை மீறி அனைத்து ஊடகங்களுக்கும் சென்றதே என் வெற்றியின் ரகசியம். இன்றுவரை எனக்கு வரும் வாசகர்களை கவனிக்கிறேன் . வெவ்வேறு விவாதங்கள், வசைகள் ஆகியவற்றை ஒட்டி என்னை அறிந்துகொள்கிறார்கள். என்னதான் நான் சொல்கிறேன் என கவனிக்கிறார்கள். நான் சொல்வது வேறு, வசையர்களுக்கு அது முற்றிலும் புரியவில்லை, அவர்கள் சொல்வது வேறு என அறிகிறார்கள். மேலும் என்னை கவனிக்கிறார்கள். என் வாசகர்களாகிறார்கள். மிகப்பெரும்பாலும் அப்படித்தான்.

வசைகளைக் கேட்பவர்கள் இருவகை. அந்த வசைகளை மட்டுமே கேட்டு என்னைப்பற்றி ஒற்றை வரியை உருவாக்கிக்கொண்டு, அதை நண்பர் சந்திப்புகளில் சொல்லிக்கொண்டு, ‘எனக்கும் விஷயம் தெரியுமாக்கும்என பாவனை காட்டும் கும்பல் ஒரு தரப்பு. உண்மையில் என்னதான் சொன்னார் என்று என்னை தேடி வாசித்து, நான் சொன்னவற்றை ஒட்டி சிந்திப்பவர்கள் இன்னொரு தரப்பு. முதல்தரப்பு எதையும் கூர்ந்து வாசிப்பது அல்ல. ஏதாவது ஓர் அரசியல்தரப்பின் எதிரொலியே அவர்களின் சிந்தனை. எல்லாவற்றைப்பற்றியும் ஒற்றை வரிகளே அவர்களிடமிருக்கும். அவர்கள் எனக்கானவர்கள் அல்ல. இரண்டாம் தரப்பினருடனேயே நான் பேசுகிறேன். அந்த இரண்டாம்தரப்பினரை என்னிடம் கொண்டு வருவதில் வசைகளுக்குப் பெரும் பங்குண்டு

என் யூடியூப் வீடியோக்கள் இன்று என்னிடம் வாசகர்களைக் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவற்றுக்குக் கீழே ஒரு முதிர்ச்சியில்லா கும்பல் திரும்பத் திரும்ப சலிக்காமல் புளிச்சமாவு என எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறது. யோசித்துப்பாருங்கள், அந்த உரைகள் இருக்கும் தளத்தை கொஞ்சமேனும் உணரும் ஒருவர் அந்த வசைபாடும் தரப்பைப் பற்றி என்னதான் நினைப்பார்? அவருடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? 

உண்மையில் அதில் ஒரு வகை இழப்பையும் நான் காண்கிறேன். அந்த வசையர்களின் அறிவுத் தரப்பு என ஒன்று உண்டு. அதையும் அறிந்திருப்பது சிந்திப்பவருக்கு அவசியமானது. அதே தரப்பைத்தான் என் நண்பர்களான கார்த்திக் வேலு, சரவணன் விவேகானந்தன், பவா செல்லத்துரை போன்றவர்கள் எழுதி வருகிறார்கள். ஆனால் இந்த வசைகள் காரணமாக அந்த தரப்பே மொத்தமாக அரைவேக்காடுகள் என்னும் சித்திரம் சீரிய வாசகர் நடுவே உருவாகிவிடுகிறது.

அந்த வாசகர்களிடம் நான் சொல்லவேண்டியிருக்கிறது, இல்லை சற்று கூர்ந்து கவனியுங்கள் என்று. உதாரணமாக,  ராஜன் குறை  என்னும் பிழைப்புவாதி அல்ல திராவிட இயக்கத்தின் தரப்பு என.  அவர் லாபநோக்கு கொண்ட ஒட்டுண்ணி. அத்தகையோர் இந்தியாவில் எப்போதுமே அதிகாரத்தை அண்டி வாழ்ந்தனர். உண்மையிலேயே அத்தரப்புக்கு ஒரு வலுவான பண்பாட்டுப் பார்வையும், நீண்ட மரபும் உண்டு. அந்த அறிவுமரபைச் சேர்ந்தவர்களை தொடர்ச்சியாக நானே என் தளம் வழியாக அறிமுகம் செய்து வருவதை என் தளத்தை வாசிப்பவர்கள் அறிவார்கள்.

என்னுடைய உரை ஓர் ஆழமான உசாவலை முன்னிறுத்துவது. உலகளாவிய தொல்மானுடப் பண்பாட்டில் இருந்து சங்க இலக்கியத்திற்கு ஒரு இணைவுக்கோட்டை அது உருவாக்குகிறது. வாழ்வுண்மைகளை உன்னதப்படுத்தி தூய கருத்துநிலையாக ஆக்குவதன் வழியாக சங்கச் செவ்வியல் அதற்கடுத்த நீதிநூல்காலம், கற்பனாவாதக் காலம், பக்தி காலம் ஆகியவற்றுக்கு எப்படி முன்னோடியாக அமைகிறது என விளக்குகிறது.  தினமலர் நிருபரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நாளிதழ் நிருபர்கள் உரைகளை முழுக்க கேட்பதுமில்லை. ஒரு புகைப்படம், நாலைந்து வரிகள்அவ்வளவுதான் அவர்களின் செய்தியின் அடிப்படை. இப்படி ஒரு விவாதம் வரும்போதுகூட அந்த உரையை கேட்காதவர்கள், கேட்டும் என்ன ஏது என புரியாதவர்கள் அந்த நாளிதழ் தலைப்பை வைத்து வசைபாடுகிறார்கள். 

உண்மையில் அதனால் எனக்கேதும் நஷ்டமில்லை, லாபம்தான். அந்த வசைபாடும் தரப்புக்கே இழப்பு. அவர்களிலுள்ள இளைஞர்களின் மூளைகள் இதையொட்டி எளிய காழ்ப்புகளால் நிறைகின்றன. அவர்களுக்குச் சாத்தியமான மிக எளிய சிந்தனையே கூட சாத்தியமில்லாமல் ஆகி, வெறும் முச்சந்திக் கூச்சலிடும் கூட்டமாக ஆகிவிடுகிறார்கள்.  இதிலேயே சிக்கிக் கொள்கிறார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்று என இதைப்போல எதையாவது பிடித்துக்கொண்டு கூவிக்கூவி வாழ்க்கையை விணாக்கிக்கொள்கிறார்கள்.  அந்த நாளிதழ் தலைப்பை மட்டுமே கவனித்து கூச்சலிடும் கும்பல் தங்களை மேலும் மடையர்களாக்கிக் கொள்கிறது. அதாவது பரவாயில்லை. அந்த உரையை கேட்டுவிட்டு, நான் சொல்வதென்ன என்று புரியாமல் குழம்புபவர்கள் மேலும் அடிமுட்டாள்கள் ஆகிவிடுகிறார்கள். அதை யோசிக்கும்போதுதான் சுந்தர ராமசாமி சொன்னதில் ஓர் உண்மை உண்டு என தோன்றுகிறது. 

என்ன செய்வது? இந்தக் காலகட்டத்தின் சிக்கல் இது. இது நவீன செய்தித்தொழில்நுட்பத்தின் காலம், நாம் நினைத்தாலும் இன்று இப்பரவலாக்கத்தை தவிர்க்கவோ ஒடுங்கிக்கொள்ளவோ முடியாது. அந்த தரப்பிலுள்ள தொடக்கநிலை இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே. நண்பரே இது உங்களுக்கானது அல்ல. உங்கள் அறிவுநிலைக்கு இது மிக அதிகம். உங்கள் சிறிய மூளைகளை சேதப்படுத்திக் கொள்ளாதீர்கள். அவ்வளவுதான்.

ஜெ  

முந்தைய கட்டுரைஎஞ்சியிருப்பது– கடிதம்
அடுத்த கட்டுரைசேனாதிராய முதலியார்