இனிய ஜெயம்
கோவை உரை கேட்டேன். வழக்கம் போல உயர் படைப்புத்திறனும் கவித்துவமும் கூடிய உரை.நல்ல காஸ்ட்யூம்.எடை குறைஞ்சி ஸ்மார்ட் ஆ இருக்கீங்க… குறிப்பா எடை குறைஞ்சதும்தான் உங்க தோள்கள் இவ்ளோ அகலம் அப்டின்னே தெரியுது…
இப்டியே இருங்க
கடலூர் சீனு
*
அன்புள்ள சீனு
நான் எப்போதுமே மிகை எடைக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஓராண்டில் சட்டென்று எடை கூடிவிட்டது. காரணம் என்ன என்று கண்டுபிடித்தேன். திடீரென்று உருவான ஃபில்டர் காபி மோகம். நன்றாகச் சீனி போட்ட ஒரு கோப்பை ஃபில்டர் காபி என்பது ஒரு வேளை உணவுக்குச் சமம்.
நான் டீயிலேயே கொஞ்சம் கூடுதலாகச் சீனி போடுபவன். மூன்று டீஸ்பூன். ஒருநாளுக்கு எட்டு டீ. மொத்தம் 24 டீஸ்பூன் சீனி. எல்லாமாகச் சேர்ந்து கொஞ்சம் தொப்பை. சென்ற பிப்ரவரியில் அருணாச்சல் போனபோது கொஞ்சம், மிகக்கொஞ்சம், கால்களில் எடையை உணர்ந்தேன். அரங்கசாமி கடும் எடைக்குறைப்பில் இருந்த நேரம். நானும் குறைத்துவிட முடிவெடுத்தேன். அங்கேயே தொடங்கிவிட்டேன்
ஒன்று சீனியை அறவே தவிர்த்தேன். ஒரு மாதம் சீனி சாப்பிடாமலானால் அதன்பின் சீனி வாய்க்குள் சென்றாலே குமட்டல். வாயை கொப்பளித்து கொஞ்சம் மோர் அருந்துவது வரை ஒவ்வாமை நீடிக்கும். அது வெறும் ரசாயனம், உணவுப்பொருள் அல்ல என அப்போதுதான் தெரியும்.
அடுத்து இரவுணவான பழங்களை மாலையில் சாப்பிட்டு தொடர்ச்சியாக 16 மணிநேரம் வெறும் வயிற்றுடன் இருப்பேன். பசித்தால் பால் சீனி இல்லாத காபி. அது உடனடியாக பசியை அழித்து சுறுசுறுப்பையும் அளித்துவிடும்.
என் வயதுக்கு புரோட்டீன் கொஞ்சம் கூடுதலாக தேவை. ஆகவே காலையில் முட்டை வெண்கரு. மதியம் வழக்கம்போல சாப்பாடு. பேலியோ எல்லாம் நமக்குச் சரிவராது. நாக்கு சோறு கேட்கும்.
எடை 10 கிலோ குறைத்து உற்சாகமாக ஆகிவிட்டேன். நடை மிக எளிதாக ஆகிவிட்டது. எனக்கு என் பயணங்கள் முக்கியம். அதில் நான் களைப்பை உணரக்கூடாது என்பதே என் நோக்கம்.
டயட் என்பதன் மிகப்பெரிய சிக்கலே டயட் இருப்பவர்கள் நூறுபேர் என்றால் டயட் ஆலோசனை சொல்பவர்கள் லட்சம் பேர் என்பதுதான்
ஜெ