அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
நான் அண்மையில்தான் அந்த முகில் இந்த முகில் வாசித்து முடித்தேன். நீங்கள் அதை இணையத்தில் தொடராக வெளியிட்டபோதே வாசித்திருந்தேன். அப்போது அடுத்தது என்ன என்ற அளவிலேயே வாசித்து முடிக்கமுடிந்தது. அப்போதைய உணர்ச்சிகள் அவர்கள் இருவரும் இணைவார்களா இல்லையா என்ற அடிப்படையிலேயே இருந்தன. புத்தகமாக ஒட்டுமொத்தமாக கையில் கிடைத்தபோதுதான் ஒற்றைக்கோட்டு வாசிப்பு தேவையில்லை என்ற நிலை வந்தமைந்தது. கதை முடிந்துவிட்டது. நம் கையில் இருப்பது ஒரு முழுமையான வாழ்க்கை அதை எப்படி நுட்பமாக அறிவது என்பதுதான் முக்கியமாக ஆகிவிட்டது,
இப்போதைய வாசிப்பில் முன்பு காணாத பலவற்றை பார்த்தேன். கதைநாயகிக்கு அந்த ஆடையால் புண் ஏற்படுகிறது என்பதையே இன்றைக்கு வேறுவகையாக புரிந்துகொண்டேன். திரையில் ஆடம்பரமாக, அரசகுலத்தோற்றமாக தெரிவது சரிகை. அது அவளுக்கு அவ்வளவு வலி ஏற்படுத்துவது. அதேபோல சீனியர் மெல்லி இரானி வானத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார். முகில்களை எடுக்கிறார். இரண்டு முகில்களின் கதையாக இந்நாவல் ஆவது அங்கேயே தொடங்கிவிட்டது. எனக்கென்னவோ கறுப்புவெள்ளை சினிமாவே முகில்களாலானது என்ற எண்ணம் வந்தது.
அவள் அவனுக்கு தன் நிர்வாணத்தை காட்டிவிட்டுச் செல்வதுகூட அப்படி ஒரு நுணுக்கமான இடம். அவள் அளவில் அவனுடன் முழுமையாக வாழ்ந்துவிட்டுத்தான் செல்கிறாள். ஆனால் அவன் அந்த வாழ்க்கையால் குற்றவுணர்ச்சி அடைந்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறாள். மிகுந்த நுட்பத்துடன் முழுமையாக வடிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட அழகான நாவல். ஒரு உருக்கமான சினிமா போல. மினிமம் உணர்ச்சிகள். ஆனால் மனதை துயரமும் ஏக்கமும் நிறைத்துவிட்டன. வாழ்க்கையை முழுக்க வாழ்ந்து பார்த்த அனுபவமே அமைந்தது
சி.கல்யாணசுந்தரம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
குகை வாசித்தேன். எளிமையான கதை என்று தோன்றியது. ஆனால் அந்தக் குகைக்குள் இன்றைக்கெல்லாம் என்னைப்போன்ற சிலர் போய்வருவது நடக்கிறது. இப்போது மன அழுத்தம், மனப்பிளவு எல்லாம் எல்லாருக்குமே கொஞ்சம் வந்துவிடுகிறது. இந்தக்காலகட்டம் அதை உருவாக்கிவிடுகிறது. மாத்திரைகள் இல்லாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் மாத்திரைகள் அதை உறுதியாக்கிவிடுகின்றன. எனக்கெல்லாம் அப்படித்தான் ஆகியது. இங்கே நிகழும் வாழ்க்கைக்கு அடியில் இன்னொரு குகைவழியில் வாழ ஆரம்பித்துவிடுகிறோம். அங்கே கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம் ஒன்றாகிவிடுகின்றன. எல்லாரையும் அணுக்கமாக வேறொரு கோணத்திலே அறியமுடிகிறது
ஆர்