அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். ஆலயக்கலை முகாம் பற்றிய எனது அனுபவங்களைக் கீழே பகிர்ந்துள்ளேன்.
சிறு வயதில் நான் அடிக்கடி சென்ற, மிகவும் பிடித்த கோயில், எங்கள் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயில். மூலவர் ஒரு சிறிய உருளைக் கல். சுயம்புவாகத் தோன்றியவர் என்ற வரலாறு. அவருக்கு மேலே கூரை இல்லை. திருவிழா சமயங்களில் மட்டும் தென்னங் கீற்றுப் பந்தல். ஆனால் அம்மனுக்கு தனி சன்னிதி. பெரிய திறந்தவெளி பிரகாரம், அதில் கிணறு, மரங்கள், பூஜைக்கான பூச்செடிகள், தடித்த உயரமான சுற்றுச்சுவர், நுழைவாயில் சிறிய கோபுரம். இப்படி ஒரு ரம்யமான சூழலில்தான் எனக்கு கோயில் அறிமுகமாகியது.
பிறகு, திருச்சியில் வாழ்ந்த போது, உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் பிடித்துப் போனது. பெரிய நுழைவாயில் கோபுரம், அதை அடுத்து குளம், பெரிய தூண்களுடன் கூடிய நீண்ட பிரகாரங்கள், சிற்ப வேலைப்பாடுகள், இனிய இசை என என் கண்ணுக்கும், மனதுக்கும் இனியதாயிற்று.
பிறகு வேறு பல கோயில்கள். ஆனால், ஆலயக்கலை முகாமில் கலந்து கொண்ட பிறகுதான், கோயில்கள் ஒரு மிகப் பெரிய கலைப் பொட்டகம், நான் எவ்வளவு அழகியல் நுணுக்கங்களைப் பார்க்கத் தவறியிருக்கிறேன் எனப் புரிந்தது. ஒரு போதும் தெரிந்துகொள்ளாமல் போவதைவிட தாமதமாகத் தெரிந்து கொள்வது பரவாயில்லை என மனதை தேற்றிக் கொண்டேன்.
“யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற” என்பது போல இந்த முகாம் எல்லோரையும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் ஆசை. இதில் உள்ளவை ஒரு அழகிய சிறு புத்தகமாக அமைந்தால் குழந்தைகளுக்கு கோயிலை அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும் என்பது எனது அடுத்த ஆசை.
இந்த மூன்று நாட்களும் எண்ணில் அடங்காத தகவல்கள் எங்களை வந்தடைந்தன. ஒரு கோயிலை நிர்மாணிக்க வாஸ்து சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் மற்றும் சிற்பக்கலை எவ்வளவு முக்கியம் என்பதையும் நம் முன்னோர்கள் அவற்றில் எத்தனை அறிஞர்களாக இருந்தார்கள் என்பதையும் அறியும்போது கோயில்கள் மேல் பக்தியைத் தாண்டிய பெருமதிப்பு ஏற்படுகிறது.
அண்மையில் ஒரு கட்டுரையில் ”உலகியலுக்கு அப்பாற்பட்ட செயல்கள் இரண்டு கூறுகள் கொண்டவை. ஒன்று, தனக்கு நிறைவளிக்கும் செயலைச் செய்தல். இரண்டு, சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் கொடுப்பவராக ஆதல்” என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். அதைப் படிக்கும் போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் இந்த முகாமின் ஆசிரியர் ஜெயராஜ் அவர்களே.
கலாஷேத்ராவில் இசை பயின்றவர் , அந்த துறையில் நின்று விடாமல், MA தமிழ், MA வரலாறு மற்றும் கல்வெட்டுகள் சார்ந்த படிப்பு என அசாதாரணமான மேற்படிப்புகள் அவருடையது.
அவர் படித்ததை, பார்த்து ரசித்தவற்றை, அறிஞர்களுடன் பேசியவற்றை எங்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து அளித்தார். ஆலயக்கலையை அனுபவிக்க தமிழ் இலக்கியம் எவ்வளவு உதவி செய்கிறது என்பதை மிகச்சிறந்த உதாரணங்களுடன் எங்களுக்கு விளக்கினார். திருச்சி மலைக்கோட்டையில் உள்ள கங்காதரர் சிற்பத்தை பற்றி நினைக்கும் போதும், பார்க்கும் போதும் , எங்களுக்கு அவர் கூறிய அங்குள்ள கல்வெட்டில் இருக்கும் அழகிய கவிதை கண்டிப்பாக நினைவில் வரும்.
எனது வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் பெயர் தெரிந்த எனக்கு, கோயிலில் மாக மண்டபம், அர்த்த மண்டபம் என்று எதிலாவது படித்தால் எதுவும் புரியாமல் போனது. யாரைக் கேட்பது, எந்தப் புத்தகங்களில் தேடுவது என ஒன்றும் தெரியாமல் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு இருந்தேன்.
கோயில்களின் வடிவமைப்பு (Architecture), உயர அமைப்பு (Elevation) முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு கலைச்சொற்களை இம் முகாமில் கண்டடைந்தேன்.
சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் பல்வேறு கலைச்சொற்கள், நிற்பது, அமர்வது, கைகள் வைத்திருக்கும் விதம், அணிகலன்கள் இவற்றைக் குறிக்கும் கலைச்சொற்கள் என வெகு பல உதாரணங்களுடன் எங்களுக்கு விளக்கினார்.
பண்டைக் காலத்தில் எளிய வகையில் உருவான கோயில்கள், பிறகு குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கற்களை மட்டுமே வைத்து கட்டப்பட்ட கற்றளி கோயில்கள் என திகட்ட திகட்ட விவரங்கள் எங்களை வந்து கொண்டே இருந்தது.
அவர் மேற்கோள் காட்டிய மற்றும் பரிந்துரைத்த புத்தகங்களின் எண்ணிக்கை 50 க்கு மேலே! அத்தனை ஆழமான வாசிப்பு அவருடையது.
ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் ஹீரோ, 100க்கும் மேற்பட்ட பட்டப் பெயர்கள் கொண்ட, ராஜசிம்மன் என அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்ம மன்னன் என நினைக்கிறேன். அவரைப் பற்றி அவ்வளவு சிலாகித்து எங்களுடன் விளக்கினார்.
எல்லா கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு ஆவணப்படுத்தி பற்றி முடிந்துவிட்டன, இப்போது யாரும் கல்வெட்டுகள் படிக்க மாட்டார்கள் என்ற அறியாமையில் இருந்தேன். ஜெயக்குமார் அவர்கள் கல்வெட்டியல் படித்து, கல்வெட்டுகளை படித்து விளக்க இயலும் எனத் தெரிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த மூன்று நாட்களும் நாங்கள் அனைவரும் வேறொரு உலகில் இருந்தோம்.
இந்தக் கற்றலை எங்களுக்கு அமைத்துக் கொடுத்த உங்களுக்கும், ஆசிரியர் ஜெயகுமாருக்கும், நித்யவனத்தில் இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்
அன்புடன்,
சகுந்தலா