புத்தகக் கண்காட்சியில்….கடிதம்

அன்புள்ள சார்,

நேற்று உங்களிடம் நிறைய பேச நினைத்தேன். ஆனால் பதட்டத்தில் சரியாகப் பேச முடியவில்லை. முந்தைய நாள்ஒரு குடும்பம் சிதைகிறதுவாசித்து முடித்தேன். அதைப்பற்றி பேச நினைத்தேன். கிராதத்தில் பிச்சாண்டவர்வைசம்பாயனர் பற்றி, திருதராஸ்டிரர் பற்றி, அர்ச்சுனன் ரைவத மலையேறும் போது அந்த மலைப்படிக்கட்டுக்களை யானை முதுகில் கட்டப்பட்ட மணி என்று எண்ணுவான். அதை நான் மதுரை கீழக்குயில்குடியில் கண்டு பூரித்தேன். அதைப் பற்றியெல்லாம் பேச நினைத்தேன். முடியவில்லை. உங்களை சந்தித்ததே மிகுந்த மனநிறைவை அளித்தது. மிக்க நன்றி சார்.

நான் உங்களிடம் சொல்ல நினைத்ததை இப்படி ஒரு பதிவாக எழுதினேன்.

வெண்முரசில் துரோணர், விதுரர், திருதராஸ்டிரர் பீஷ்மர் உட்பட பெரும்பாலான முக்கியக் கதாப்பாத்திரங்களின் கதை பால்ய பருவத்தில் இருந்தே துவங்கிவிடுகின்றன. படிக்கும் போது அவர்களது குணங்களை ஆராய முடியுமே தவிர அவர்களோடு மனதோடு ஒன்றாக என்றுமே முடிந்ததில்லைகையில் புத்தகத்தை எடுத்து சுயமாகப் படிக்கக் கற்கும் முன்னமே பெரிய ஆகிருதிகளுடன் அறிமுகமானவர்கள் அவர்கள். மண்ணில் கால் பதியாத தெய்வங்கள். வணக்கத்திற்குரியவர்கள். அதிநாயகர்கள். அவர்களது வாழ்க்கையோடு அவர்களது சிக்கல்களோடு நம்மைப் பொருத்திப் பார்க்கவே முடியாது.

அவர்களுக்கு அடுத்த கட்ட நிறையில் நிற்பவர்கள்

சாத்யகி, திருஷ்டத்துய்மன், பூரிசிரவஸ் என்ற மூன்று‌ கதாப்பாத்திரங்கள். நான் அதுவரை பெரிதாக அறிந்திராத அந்த மூவரோடு ஒரு பிடிப்பு உண்டானது. அவர்களில் என்னை தேட முடியும் கண்டு கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மூவரும் இளஞ்சிறுவர்கள். சாத்யகி தன் வீட்டை விட்டு துவாரகை வந்து கிருஷ்ணரின் திருவடிகளை முத்தமிடும் பரமபக்தனாக மிக விரும்பியவன். தன் முதுகில் சூட்டுக்கோலால் தொழும்பர் குறியிட்டு கிருஷ்ணரின் அடிமையென்றாகி அவரது பிரியத்திற்குரிய நண்பனானவன். திரெளபதியின் தம்பி திருஷ்டத்துய்மன் அதிதிறமைசாலி, மாவீரன். மிடுக்கும் செருக்கும் கொண்ட அழகன். சிறுவன் என்று கன்னத்தைப் பிடித்துக் கிள்ளவா கம்பீரமான பார்வையைக் கண்டு விலகவா என்று யோசிக்க வைப்பவன். ஆனால் பூரிசிரவஸின் கதை வேறு. அவனது தந்தை தன் நாட்டு கருவூலத்தின்‌  மிக விலையுயர்ந்த நகையொன்றை எடுத்து கொடுத்துஇதையணிந்து கொண்டு மிடுக்காகச் செல்! சுயம்வரத்தில் வென்று திரும்புவாய் பார்! “என்று பூரிப்பார். சுயம்வரம் சென்ற பிறகு தான் இவனுக்குப் புரியும். தன்னுடைய நகையைப் போன்ற எளிதான ஒன்றை அங்கிருக்கும் மற்ற அரசர்களுடைய ஊழியர்கள் கூட அணிந்திருக்கவில்லையென்று.‌ கூச்சப்பட்டு குறுகி நிற்பான். அப்படியொரு இளவரசன். இருந்தாலும் அவனிடம் பெருங்கனவிருந்தது. தன் நாட்டை பாரதவர்ஷத்தில் ஒரு வலிமையான நாடாக்கவேண்டுமென்று. வாணிபத்தை, வளத்தைப் பெருக்க வேண்டும் என்று‌. நாடறிந்த வீரனாக வேண்டுமென்று. அவன் அவற்றைச் செய்து காட்டவும் செய்தான்.

சாத்யகி மனதுக்கு நெருக்கமானவன் தான். ஆனால் அவனிடம் இருந்தது ஒரு சரணாகதி. கண்ணை மூடிக்கொண்டு காலில் விழும் மனது. திருஷ்டத்துய்மன் இந்த மூவரில் சிறந்தவன் தான். என்றாலும் அவனொரு ராஜாவீட்டுக் கன்றுக்குட்டி. அவன் வீரனாக இருப்பதோ அழகனாக இருப்பதோ பெரிய ஆச்சர்யமில்லை என்று ஒதுக்கிவிட தோன்றும். ஆனால் கண்ணில் கனவுகளும் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட பூரிசிரவஸ் யார்? மிகுந்த தயக்கத்தோடு கால்நடுங்கி துரியோதனன் சபைக்குள் நுழைந்து, அவனது தோளைத் தழுவும் உற்ற நண்பனாகியவன். கர்ணன் தன் சொந்த தம்பியைபப் போல பார்த்துக் கொண்டவன். நாம் வரித்துக் கொள்ளவேண்டிய ஆளுமை. இவனே நம்மாள்

பூரிசிரவஸ் மூன்று இளவரசிகளின் மனதை வெல்கிறான். அவனது ஒவ்வொரு காதலும் வெல்லுந்தருவாயிலும் நான் மிகமகிழ்ந்து கொண்டிருந்தேன்அதுவே அவன்‌ காதல்கள் தோற்ற போது வருத்தமாக இருந்தது. அவன் துரியோதனின் தங்கை துச்சலையை மணந்திருக்க வேண்டும். அரசியல் லாபம் காரணமாக அவளை ஜயத்ரதனுக்கு மணமுடித்து விடுவார்கள். அந்த இறுதி அத்தியாயங்களின் கிருஷ்ணர் காந்தாரியின் அந்தப்புர அரண்மனையில் நுழைவார். “ஏழைக்கிரங்கினான் பரந்தாமன் இனி என்ன கவலை! கவலையேயில்லை!”என்று தொடையைக் குத்திக் குத்தி படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கிருஷ்ணன் வந்த விசயம் வேறு. பூரிசிரவஸின் காதல் அப்போதும் தோற்று விடும். தாங்க முடியாத ஏமாற்றத்தால் துவண்டுவிடுவான்.‌ அவனை விட விவேகியான துச்சலை அந்த காதற்தோல்வியிலிருந்து உடனே மீண்டு விடுவாள். அவளது மனதிடத்தைக் கண்ட பிறகு தான் அவனால் தேறமுடிந்தது. என்றுமே என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம் பூரிசிரவஸ் தான்

நேற்று கோவை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் ஜெயமோகனை சந்திக்கச் சென்ற போது மேற்சொன்னவை எல்லாவற்றையும் அவரிடம் விவரித்து எனக்கு பூரிசிரவஸைப் பிடிக்கும் என்று சொல்ல விரும்பினேன். ஆனால் பற்கள் கிட்டித்துக் கொண்டுவிட்டன. கொடிசியாவின் உயரமான கூரைக்கும் தரைக்கும் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது. முழுசாக சாத்யகி என்ற வார்த்தையைக் கூட மறந்துவிட்டு வெறும் பத்து இருபது வார்த்தைகளில்பூரிசிரவஸ் ரொம்ப புடிக்கும் சார்என்று குலைந்தேன். “ஆமா அவன் ரொம்ப earthlyஆ இருப்பான்என்றார். மேலும் திக்கி இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டேன்

பன்னிருபடைக்களம் நாவலின் அத்தியாயங்கள் மாதங்களால் வகுக்கப்பட்டிருக்கும். நான் ஐப்பசி மாதத்தின் அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கியிருந்தது மழைக்கு சம்பந்தமேயில்லாத நாளில். அன்று மழை பெய்ய‌ வாய்ப்பேயிருந்திருக்கவில்லை. அஸ்தினபுரியின் மக்களனைவரும் மழைக்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள். துரியோதனன் புழுக்கம் தாங்காமல் அரண்மனையைவிடுத்து சோலையில் மரத்தடியில் சபை கூட்டியிருப்பார். மக்கள் இரவு கடைகளை சாத்திவிட்டு வாசலில் கூட்டி நீர்தெளித்துவிட்டு அந்த ஈரத்தின் மேல் பாய் விரித்து படுத்துக் கொண்டிருப்பர். நாய்களும்,மாடுகளும், பறவைகளும் தாகம் தாங்காது வெக்கை தாங்காது ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஒருவன்மாமழை ஒன்று வந்து அழிந்தாலும் பரவாயில்லை. நம் நகரம் உப்புக்கல் நீர் பட்டு கரைவதைப் போல மழையில் கரையவேண்டும் அதுவே இப்போது நன்றாக இருக்கும்என்று சொல்வான். அருகிலிருக்கும் பெரியவர் ஒருவர்ஆம் அதனாலென்ன மாமழை பொழிந்தாலும் நல்லதே. அள்ளித் தரும் அன்னைக்கு சிரித்து அழிக்கவும் நம்முடன் விளையாடவும் உரிமையுண்டு. ஏனென்றால் மழையே அன்னம். அன்னத்தால் உண்டாவது தான் சொல். சொல்லில் தான் தேவர் அமர்வார்கள். மழை தான் எல்லாவற்றிக்கும் அடிப்படைஎன்பார். மேலும்கேள் மழை மூன்று விதம்என்று சொல்லி மிகஅழகான வரிகளைச் சொல்வார். “சோமனின் மழை இளஞ்சாரலாகப் பெய்யும். இடியும் மின்னலும் ஆக்ரோசமுமாகப் பெய்யும் இந்திரனின் மழை. அதிராமல் பறவை தன் சிறகால் பொத்தியதைப் போல நின்று நிதானமாக பெய்து கொண்டேயிருப்பது வருணனின் மழை.” 

இதை நான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். மெல்ல பெய்யத் துவங்கியிருந்த மழை அலைபேசித் திரையில் பூந்தூறலாக விழுந்து கொண்டிருந்தது. ஒதுங்கி நிற்பதற்குள் பேருந்து வந்தது. ஏறிய ஐந்து பத்து நிமிடங்களுக்குப் பிறகே இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டேன். “இப்போது நம்மீது விழுந்த மழை யாருடைய மழை?” நானே சொல்லிக் கொண்டேன்நாம் நனைந்தது சோமனின் மழையில்“. வெளிய எட்டிப் பார்த்தால் சிங்காநல்லூரில் பெய்திருந்த மழை ஒண்டிப்புதூர் பாலம் ஏறி இறங்கியதில் காணமல் போயிருந்தது‌. சாலை ஈரமின்றி வரண்டிருந்தது. “தற்செயலென்று ஏற்காது நமக்காகவே பெய்தது இம்மழைஎன்று மிக உறுதியாக என் மனதை நம்பச் சொன்னேன். அந்த நொடி உடல் புல்லரித்து விட்டது. என்னுள் ஆயிரம் சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. ” நான்  நனைந்தது சோமனின் மழையில்என்று அவரிடம் சொல்லும் போது என்னை மீறி நிலைதடுமாறிவிட்டது. என்னைத் தோளில் தட்டிக் கொடுத்துத் தேற்றினார். கேவலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டுஅந்த வரிகள் மட்டும் ஜெயமோகன் சார் என்ன பக்கத்துல வான்னு கூப்ட்டு இந்த வரிகள் உனக்கு மட்டுந்தான்டா. வச்சிக்கோ..” என்று கொடுத்தது போல இருந்தது சார் என்றேன்.”அப்டியா?”என்று சிரித்தார். புகைப்படம் எடுக்கும் போது என் விரல்களை அணுக்கமாகக்  கோர்த்துக் கொண்டார். வெண்முரசில் எத்தனையோ வரிகள், உவமைகள், தருணங்கள் மறக்க முடியாததாக வந்து கொண்டேயிருக்கும். அவற்றை விட மனதிற்கு மிக நெருக்கமான வரிகள் இவை. ஒருவழியாக நூறு நூறு முறைகள் நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த உரையாடலை வெற்றிகரமாக நடத்திவிட்டேன்.

அந்த அத்தியாயத்தின் இறுதியில் அஸ்தினபுரியின் மக்கள் இடியும் புயலும் கொண்ட மழையில் நனைவார்கள். “வந்துவிட்டான் இந்திரன்என்று பெரிதாக முழங்கி, துள்ளிக் குதித்து, கொட்டும் மழையில் அரையாடையை நழுவ விடுவார்கள். நாங்கள் வீடு திரும்பும் போதும் மழை. நானும் மனைவியும் பைக்கில் அதிராது நின்று நிலைத்து பெய்யும் அந்தவருணனின் மழையில் தவளை போல ஊறிக் கொண்டே டீயும் சமோசவுமாக நிறுத்தி நிறுத்தி வெகுநேரம் பயணித்து திருப்பூருக்கு வீடு வந்து சேர்த்தோம்.

K.K.குமார்,

திருப்பூர்.

அன்புள்ள குமார்

அந்தச் சந்திப்பு எனக்கும் உணர்ச்சிகரமானதாகவே இருந்தது. நீங்கள் நெகிழ்ந்தபோது நானும் எழுதிய நாட்களை நினைவுகூர்ந்தேன்.

வெண்முரசு எழுதிய நாட்களில் பலமுறை உள்ளம் இத்தகைய இணைவுகளை நிகழ்த்திக்கொண்டுள்ளது. பெருமழையை எழுதியபின் வெளியே சென்று கோடையில்  பெருமழையில் நனைந்துள்ளே. பலமுறை நாகங்களை எழுதியபின் நடைசென்று நாகங்களை பார்த்துமுள்ளேன்.

ஜெ

முந்தைய கட்டுரைமுகில்களின் ஒளி
அடுத்த கட்டுரைசிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?