சோழர்களை மதிப்பிடுதல்

சோழர்கள் என்னும் நூலுக்காக சமஸ் எடுத்த பேட்டி. நீண்ட உரையாடலில் இருந்து அவர் எழுதியது. அருஞ்சொல் இதழில் இதை இப்போது வாசித்தேன். இத்தகைய உரையாடல்களை தமிழ்ச்சூழலில் நிகழ்த்த மிகப்பெரிய இடர்கள் உள்ளன. இந்த உரையாடலில் வெளிப்படும் வரலாற்றாய்வுமுறை மார்க்ஸியத்தின் முரணியக்க வரலாற்று பார்வை சார்ந்தது. ஆனால் தமிழ்ச்சூழலில் மார்க்ஸியத்தின் தத்துவ அடிப்படை கற்றுக்கொடுப்பது நின்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இன்று மார்க்ஸியம் பேசுபவர்கள் ஒருவகையான மதவாத வெறிகொண்டவர்களாக, ஒற்றைப்படையான வெறுப்புக்குரல் எழுப்புபவர்களாக உள்ளனர். டி.டி.கோஸாம்பியின் பெயரைக்கூட பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

வரலாற்றை மாபெரும் முரணியக்கமாக, ஒவ்வொன்றையும் அந்த பரிணாமத்தின் ஒரு கட்டமாக வைத்துப்பார்க்கும் மார்க்ஸியப் பார்வை இ.எம்.எஸ் முதல் கே.தாமோதரன் வரை மலையாளச் சூழலில் மிக விரிவாக முன்வைக்கப்பட்டது. பி.கே.பாலகிருஷ்ணனின் பார்வையும் அதுவே. அத்தகைய பார்வை இங்கே தொண்ணூறுகள் வரைக்கும் கூட இருந்தது. இன்று இங்கே ஒலிக்கும் அசட்டு மிகையுணர்ச்சிகள் இருபாற்பட்டவை. ஒன்று ராஜராஜன் காலம் பிழையற்ற பொற்காலம் என்னும் கூச்சல். இன்னொன்று, ராஜராஜன் காலகட்டம் இருண்ட காலம் என்னும் கூச்சல். மொண்ணையாகக் கூச்சலிட்டால் மட்டுமே கவனிக்கப்படும் சூழலில் இத்தகைய முரணியக்கப்பார்வையை புரிந்துகொள்ளும் சிலர் இருக்கக்கூடும்.

மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறையும் பிழையற்றது அல்ல. ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் ஆய்வுக்கருவிகளில் அதுவே புறவயமானது, தர்க்கபூர்வமானது, நவீனமானது, தொடர்ச்சியாக பிழைகள் திருத்தப்பட்டு முன்னகர்வது. அதன் அடிப்படைகள் இரண்டு. ஒன்று, வரலாறு என்பது தனக்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னகர்வது. தேங்கி நிற்பது அல்ல. பின்னகர்வதும் அல்ல. ஆகவே பொற்காலங்கள் எவையும் சென்றகாலத்தில் இருக்க இயலாது. சென்றகாலம் நோக்கி செல்வதும் ஆகாது. இரண்டு, வரலாறு ஒற்றைப்படையான விசைகளால் இயங்குவது அல்ல. முரண்படும் சக்திகளின் முரணியக்கத்தின் விளைவு. அம்முரணியக்கத்தை, அதன் அடிப்படையான புதிர்களை புரிந்துகொள்வதே நம் வரலாற்றை சற்றேனும் அறிவதற்கான வாய்ப்பு.

அதற்கு முதலில் நாம் கொள்ளவேண்டிய உறுதி அன்றாட அதிகார அரசியலின், அதன் முச்சந்திக்கூச்சலின் களத்தில் வைத்து வரலாற்றை மதிப்பிடலாகாது என்பது. இன்றைய சில்லறைப்பூசல்களுக்கு வரலாற்றை சாட்சியாக்குவதையே பின்நவீனத்துவம் எதிர்க்கிறது என்று நான் புரிந்துகொள்கிறேன். வரலாற்றுவாதம் என்பது இன்றைய தேவைக்கு வரலாற்றை இழுத்து விளக்குவது.  வரலாறு என்பது நடந்த உண்மை அல்ல, நாம் நடந்ததாகப் புரிந்துகொண்டு உருவாக்கிக் கொள்ளும் நம் உண்மை என பின் நவீனத்துவம் சொல்கிறது. அந்த உண்மை எந்த அளவுக்கு தர்க்கபூர்வமாக, சமநிலை கொண்டதாக உள்ளதோ அந்த அளவுக்கே அதற்கு மதிப்பு. மாபெரும் கூட்டு உண்மையாக வரலாற்றை உருவகித்துக்கொள்ளுதலே புதுவரலாற்றுவாதம் என இன்றைய அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

சோழர்கள் – ஓர் உரையாடல் 

முந்தைய கட்டுரைபழையநிலங்களில் முளைத்தெழல்
அடுத்த கட்டுரைகனவும் மொழியும்-கடிதம்