பொறுப்பு எத்தகையது என்பதல்ல, அப்பொறுப்பை ஒருவர் எந்த அளவுக்கு தலைக்கொள்கிறார் என்பதைச் சார்ந்தது ஒருவரின் இடம். நூலக ஆணைக்குழு என்பது பெரிய அதிகாரங்களோ நிதியோ இல்லாத பொறுப்பு. ஆனால் பெரும் கனவுகளுடனும் செயலூக்கத்துடனும் மனுஷ்யபுத்திரன் அதில் செயல்பட்டு வருகிறார்.
இரண்டு பணிகள் மிக முக்கியமானவை. முதன்மையானது கல்லூரிகள் தோறும் அவர் உருவாக்கும் வாசிப்புப் பயிற்சி இயக்கம். ஒரு காலகட்டத்தில் அது சுந்தர ராமசாமியின் கனவாக இருந்தது. நம் கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பு என்பது அறிமுகமாவதே இல்லை. ஓர் இயக்கமென அதை நிகழ்த்தினாலொழிய அது அவர்களிடம் சென்று சேரவும் வாய்ப்பில்லை. அனைவரும் வாசிக்க மாட்டார்கள்தான். ஆனால் பத்து சதவீதம்பேர் வாசகர்கள் ஆனாலே பிரமிக்கத்தக்க மாறுதல்கள் உருவாகும்.
மனுஷ்யபுத்திரன் மிகுந்த திட்டமிடலுடன், ஒட்டுமொத்தமான பார்வையுடன், விசையுடன் அதைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் இயற்றிக்கொண்டிருக்கும் பெருஞ்செயல் நீண்டகால அளவிலேயே பயன் உணரத்தக்கது. இன்று அதைச்செய்ய அன்றாட லாபங்களுக்கு அப்பால் செல்லும் பார்வை தேவை. அது அவரிடமுள்ளது. அவருடைய கனவுகளுக்கு வணக்கம்.
விஷ்ணுபுரம் நாவல் வெளியீட்டுவிழா சென்னை தேவநேயப் பாவாணர் சிற்றரங்கில் நடைபெற்றது. அன்று அதற்கு 50 ரூபாய் வாடகை. ஐம்பது ரூபாய்க்கு இருநூறு தபால்கார்டுகளில் விழாச்செய்தியை அறிவித்துவிடலாம். நூறு ரூபாயில் இலக்கிய நிகழ்வு நிறைவுறும். அவ்வரங்கம் பலகாலமாக கைவிடப்பட்டிருந்தது. அதை மீட்டெடுக்க மனுஷ்யபுத்திரன் முயல்கிறார். அதைப்போன்ற அரங்குகளை மறுநிர்மாணம் செய்கிறார். பெரும் முக்கியத்துவம் உடைய பணி. அவருக்கு இலக்கியவாதியாக என் நன்றி
மனுஷ்யபுத்திரன் அறிவிப்பு
நான் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு நூலக அடிப்படைக் கட்டமைப்பின் புத்தாக்க பணிகளில் என்னால் சாத்தியப்பட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் எனது அலுவலகம் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தின் முதல் தளத்தில் சிற்றரங்கம் ஒன்று இருந்தது. சுமார் 50 பேருக்கு மேல் அமரக்கூடிய இந்த அரங்கில் சில ஆண்டுகள் முன்புவரை சிறிய அளவிலான புத்தக வெளியீட்டுக் கூட்டங்கள் , இலக்கிய நிகழ்வுகள் பெருமளவு நடந்துவந்தன. இடையில் இந்த அரங்கு பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.
அந்த அரங்கை புதுப்பித்து மிகவும் குறைந்த வாடகையில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த விரும்புகிறவர்களுக்கு அளிக்கும் நோக்கில் கோ.ஒளிவண்ணன் அவர்கள் மூலமாக ரோட்டரி சங்கத் தலைவர் திரு. குமார் ராஜேந்திரன் அவர்களை அணுகி அந்த அரங்கையும் அதை ஒட்டி அமைந்துள்ள மூன்று கழிவறைகளையும் முற்றாக புதுப்பித்துத் தருமாறு கேட்டுக்கொண்டேன். என் வேண்டுகோளை உடனடியாக ஏற்று அந்தப் பணிகளை உடனே மேற்கொள்ள திரு.குமார் ராஜேந்திரன் ஆவண செய்தார்.
பல இலட்ச ரூபாய் செலவில் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இன்னும் இரண்டுவாரத்தில் சிற்றரங்கு தயாராகிவிடும். சிறுகூட்டங்கள் நடத்த விரும்புகிறவர்களுக்கு இந்த அரங்கு கிடைக்கும். நகரத்தின் இதயமான அண்ணா சாலையில் வாகன நிறுத்தும் வசதியுடன் , குளிரூட்டப்பட்ட, சிறந்த ஒலி- ஒளி அமைப்புடன் இந்த அரங்கு நமது கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
இன்னும் சீர்படுத்த வேண்டிய நூலகங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்துதரவிரும்பும் புரவலர்கள், தொண்டு அமைப்புகள், நிறுவனங்கள் தொடர்புகொண்டால்மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன். அறிவியக்கம் பரவ தோள் கொடுங்கள்.
மின்னஞ்சல்: [email protected]
அன்புடன்
– மனுஷ்ய புத்திரன்
தலைவர்
சென்னை மாநகர நூலக ஆணைக்குழு