வெல்லவேண்டிய அநீதி

அநீதி வசந்தபாலனின் திரைப்படம் இன்று வெளியாகிறது. நான் இப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு அதன் தயாரிப்பு ஏறத்தாழ முடிந்தபோதே பார்த்தேன். வசந்தபாலனின் படங்களிலுள்ள மென்மையான, நிதானமான ஒழுக்கு இல்லை. வன்மையான தீவிரமான படம். ஆனால் ஊடே ஓடும் காதல் மென்மையானது.

எனக்கு இந்தப் படம் பலவகையிலும் முக்கியமானது. சென்ற கோவிட் காலகட்டத்தில் நான் மிகுந்த பதற்றமடைந்த நிகழ்வு வசந்தபாலன் கோவிட் நோய்க்கு ஆளானது. தொடர்ச்சியாக அவச்செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். இளமையில் வந்த நியுமோனியாவால் பாலனின் நுரையீரல் ஏற்கனவே பழுதடைந்தது. கோவிட் அவரை வீழ்த்த 90 சதம் வாய்ப்பிருந்தது.

அவர் மீண்டது நண்பர்களால். இளமைக்காலம் முதலே அவருடன் இருப்பவர்கள். அவர் சினிமாவுக்கு வந்தபின் உடனிருப்பவர்கள். அவருடைய எந்த நண்பரும் அவரை விட்டு விலகியதில்லை. நான் உட்பட.

மருத்துவமனைகள் நிறைந்து வழிந்த காலகட்டம் அது. எவருக்கும் தனிக்கவனிப்பு இல்லை. குடும்பத்தினர் உடனிருக்க முடியாது. பாலனுடன் இருந்தவர்கள் நண்பர்கள். குறிப்பாக என் பிரியத்திற்குரிய வரதன். வசந்தபாலனின் இளமைக்கால நண்பர் வரதன். முப்பதாண்டுகளாக உடனிருப்பவர். வசந்தபாலனின் எல்லா சினிமாக்களுடனும் அவரும் உண்டு. ஆனால் அவர் சினிமாக்காரர் அல்ல. வேறு தொழில் செய்பவர். சினிமாவில் அவருடைய ஆர்வம் அவர் நண்பர் பாலன் மட்டுமே.

வரதன் பாலனுடன் இரவும் பகலும் உடனிருந்தார். ஒரு கட்டத்தில் பாலன் மூச்சுத்திணறு உயிர் அடங்கிக் கொண்டிருப்பதை அவர்தான் முதலில் உணர்ந்தார். டாக்டர்களுக்கும் செவிலியருக்குமாக ஓடி அலைந்தார். அவரே எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு தள்ளிக்கொண்டு சென்றார். அவரே செல்வாக்கான அத்தனைபேருக்கும் போன் போட்டார். பலருடைய உதவிகளை பெற்று பாலனை தீவிர சிகிழ்ச்சைக்குக் கொண்டு சென்று மீட்டார்.

சாவித்ரி தன் கணவன் சத்யவானை எமன் பிடியிலிருந்து மீட்டதுபோல ஒரு மெய்சிலிர்க்கச்செய்யும் கதை. ஆனால் இங்கிருந்தவன் நண்பன். மனைவியும் குடும்பமும் அமைவதற்கும் முன்னரே இருந்தவன். செய்தி அறிந்து நான் நெகிழ்ந்து கண்ணீருடன் வரதனுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். ஆனால் அவருக்கு அது கூச்சமூட்டும் ஒன்றாகவே இருந்தது. “என்ன சார் நீங்க?” என்று தயங்கி மறுமொழி இட்டார்

அறம் கதைகள் வரும்போது வந்து குவிந்த கடிதங்களில் பெரும்பாலானவை அப்படிப்பட்ட உறவுகள், நட்புகள் எங்குள்ளன என்பதே. எங்கே அறம் இருக்கிறது, எல்லாமே சுயநலம்தான் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர். சிறிய எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் எழுதுவது இதுதான் – அறம், அன்பு, தியாகம், நீதி எல்லாமே ஏட்டுச்சுரைக்காய்தான். வாழ்க்கை சுயநலத்தாலும், காமத்தாலும், வெறுப்பாலும் ஆனது மட்டுமே. அவ்வாறு எழுதினால் உடனே சாமானியன் “ஆமாம்” என்று சொல்வான். அது சிறிய எழுத்து அடையும் சிறிய ஊதியம்.

ஆனால் அதே சாமானியனிடம் “நீ தன்னலமி, காமமும் வன்முறையுமே நீ. அன்பும் தியாகமும் அறமும் நீதியும் உன்னிடமும் இல்லை” என்று சொன்னால் சீற்றம் கொள்வான். அவன் பிறரை குற்றம்சாட்ட மட்டுமே விரும்புகிறான். சிறிய எழுத்தாளன் விழுமியங்களை ஐயப்படுவதும் நிராகரிப்பதும் தன்னை ஒரு உயர்ந்த இடத்தில் நிறுத்தும் பாவனையுடன்தான். தன்னலமும் காமமும் வன்முறையும் உலகின் விசைகள். ஆனால் மகத்தான விழுமியங்களால்தான் வாழ்க்கை நிகழ்கிறது. நீங்கள் நம்பும் உறவுகளைச் சார்ந்தே நீங்கள் வாழமுடியும்.

பாலனுக்கே வரதன்கள் அமைய முடியும். சென்ற சந்திப்பு ஒன்றில் “வெண்முரசில் வரும் அர்ப்பணிப்புள்ள உறவுகள் எங்கே என்று பார்க்கிறேன். எனக்கு ஏன் அமையவில்லை?” என்று சங்கரன் என்னும் நண்பர் கேட்டார். “நீங்கள் அர்ப்பணிப்புள்ளவராக இருக்கிறீர்களா?” என்றேன். சிரித்தார். “அளிப்பதையே பெறுவீர்கள் என்பது பைபிளின் சொல்” என்றேன். உங்களுக்கு அமைவது நீங்கள் எவர் என்பதைச் சார்ந்தது. நான் மகத்தான உறவுகளை அடைந்தவன். மகத்தான நட்புகளை அடைந்தவன். ஆகவே நான் என்னை பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறேன்.

பாலன் தேறி வந்தார். அவருடைய ஜெயில் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. சினிமாக்களுக்கு குறைப்பிரசவம் என்பது எப்போதுமே ஒரு தீயூழ். பெரிய நட்சத்திர இயக்குநர்களுக்கே அந்த விபத்து அமையலாம். எவரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட முடியாது. அந்தப்படம் நீண்டகாலம் விட்டுவிட்டு எடுக்கப்பட்டது. முழுமையாக படப்பிடிப்பு நடக்கவில்லை. அதன் தயாரிப்பாளர் நோயுற்று சாவின் அருகே சென்று மீண்டார். படம் மிகத்தாமதமாக வெளியாகியது. பாலனின் திரைவாழ்க்கையில் பெரிய இருள் கவியச்செய்தது அப்படம்.

பாலன் உளம் சோர்ந்திருந்த போது மீண்டும் நண்பர்கள் உதவிக்கு வந்தனர். எவருமே சினிமாக்காரர்கள் அல்ல. எவருக்கும் மேற்கொண்டு சினிமா செய்யும் எண்ணமும் இல்லை. பாலனுக்காக மட்டுமே வந்தனர். அவர்களைச் சந்தித்த நாட்கள் என் வாழ்க்கையின் நெகிழ்வும் நிறைவும் மிக்கவை. நண்பர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு அநீதி எடுக்கப்பட்டது. அநீதி சிறிய படம் அல்ல. அதைப்பார்ப்பவர்கள் உணர முடியும். சராசரிக்கும் மேற்பட்ட செலவுகொண்ட படம். முதலீடு செய்தவர்கள் செல்வந்தர்களும் அல்ல. மேல்நடுத்தர வர்க்கத்தினர், வெவ்வேறு தொழில்கள் செய்பவர்கள். நண்பருக்காக அவர்கள் துணிந்தனர்.

அநீதி திரையரங்கில் வெளியாக இயக்குநர் சங்கர் கைகொடுத்தார். பாலனின் இயக்குநர் நண்பர்கள் அனைவருமே உடனிருக்கின்றனர். படம் திரையரங்குக்கு வருகிறது. திரைப்படம் என்பது ஒரு கேளிக்கை. ஒரு தொழில். ஆனால் எப்போதுமே அது சிலருடைய உயிர்வாழ்தலுக்கான அறைகூவல். இதைப்போன்ற மிக அரிதான தருணங்களில் அது பேரன்பின் வெளிப்பாடு.

அநீதி என பெயரிடப்பட்ட இப்படம் ஒரு மானுடநீதியின் வெளிப்பாடாக இருப்பது மிகப்பெரிய முரண்பாடு. அநீதி வெல்லவேண்டும் என என் வாழ்நாளில் முதல்முறையாக வேண்டிக்கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைஇரவுப்புயல்
அடுத்த கட்டுரைரமணி குளம் -கடிதம்