அல் கிஸாவும் அஜ்மீரும்

அல் கிஸா வாங்க

அல்கிஸா மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெ,

அஜிதனின் அல் கிஸா நாவலின் பகுதிகளை வாசித்தேன். நாவல் முன்னுரையையும் வாசித்தேன். நாவலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். வெளிநாட்டில் இருப்பதனால் ஸூம் மீட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

இஸ்லாம் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலகட்டம் இது. குறிப்பாக அஜ்மீர் ஷிஷ்டி மரபின்மேல் தாக்குதல் தொடுக்கும் சினிமா ஒன்று வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜ்மீர் 92 எப்படிப்பட்ட படமாக இருக்கமுடியும் என எவரும் சொல்லலாம். இச்சூழலில் அஜிதனின் நாவல் ஷிஷ்டி மரபின் சூஃபி மெய்ஞானத்தை முன்வைப்பதாக வெளிவரவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் மரபிலிருந்து ஒரு புதிய குரல் எழுவது நிறைவளிக்கிறது. எதிர்பார்க்கிறேன்.

பாஸ்கர்.எம்

அன்புள்ள பாஸ்கர்,

பொதுவாக நாவல்களை உடனடி அரசியலுடன் இணைத்து வாசிப்பது அவற்றின் ஆழம் பிடிகிடைக்காமல் செய்துவிடும். அல் கிஸா சூஃபி மெய்ஞான மரபு இசையில் வெளிப்படுவதை மட்டுமே முன்வைக்கும் ஒரு நாவல். உண்மை, சிஷ்டி மரபின் மேன்மையை உயர்த்தி வைக்கும் பார்வை அதிலுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க ஆன்மிகநோக்கில்.

என் மரபு என ஏதுமில்லை. அப்படியொன்றை உருவாக்க நினைக்கவுமில்லை. உருவாக்கக்கூடாதென்றே கவனமாக இருக்கிறேன். அதற்கு முயன்றால் சொந்த வீட்டில் இருந்தே ஏமாற்றம் அமையும் என எனக்கு எப்போதுமே தெரியும். என்னுடன் மிக அணுக்கமான அருண்மொழியோ அஜிதனோ மற்ற இளம்படைப்பாளிகளோ என்னை பின் தொடர்பவர்கள் அல்ல. என்னுடன் மானசீக விவாதத்தில் இருப்பவர்கள்.அதன் வழியாகக் கற்றுக்கொள்பவர்கள். நாங்கள் விலகும் புள்ளிகளே மிகுதி.

அதிலும் அஜிதன் முழுக்க முழுக்க என்னிடமிருந்து வேறுபட்டவன். அவனுடைய முதன்மைக் களம் ஜெர்மானிய தத்துவ – கலை மரபு. அதுபற்றி எனக்கு மேலோட்டமாகவே தெரியும். பௌத்த ஆன்மிகத்தில் நாகார்ஜுனர் முதல் தர்மகீர்த்தி வரை, கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புனித அகஸ்டின் முதல் மேய்ஸர் எக்கார்ட் வரை, இஸ்லாமிய ஆன்மிகத்தில் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி வரையிலான சூஃபி மரபு ஆகியவற்றில் தீவிரமான ஈடுபாடும் அகப்பயணங்களும் கொண்டவன். அவை சார்ந்து என் அறிதல் எல்லைக்குட்பட்டதே.

அஜ்மீர் மெய்யாகவே அவனுக்குச் சில ஆன்மிக அனுபவங்களை அளித்துள்ளது. இங்கு மட்டுமல்ல, கேரளத்திலும் அஜிதனின் தலைமுறையினர் பெரும்பாலும் அனைவரிடமும் இஸ்லாமிய மெய்யியல் அழுத்தமான தாக்கம் செலுத்தியிருப்பதை காண்கிறேன். சென்ற முப்பதாண்டுகளில் இந்தியாவெங்கும் இஸ்லாமிய அறிவியக்கம் வலுவாக நிகழ்ந்தமை ஒரு காரணம். அரசியல் அதில் பெரும்பகுதி என்றாலும் இஸ்லாமிய மெய்நூல்கள் அனைத்துமே முழுமையாக எல்லா இந்திய மொழிகளிலும் கிடைக்க அது வழிவகுத்தது. அத்துடன், அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புக்கான இளைஞர்களின் எதிர்வினையாகவும் இது இருக்கலாம்.

நான் இவற்றுடன் உரையாட முடியாது, ஏனென்றால் இவை மிக அகவயமானவை.  அல் கிஸாவுக்கு நானும் ஒரு வாசகன் மட்டுமே.

ஜெ

அல் கிஸா- சில சொற்கள்- அஜிதன்

அல்கிஸா முதல் அத்தியாயம்  அகழ் இதழ்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருதுவிழா அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைபூ. அருணாசலம்