அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
கவிஞர் அ. வெண்ணிலா ஆனந்த விகடனில் முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம் குறித்த நீரதிகாரம் என்னும் தொடரை சென்ற வருடத்திலிருந்து எழுதி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும்..நீரதிகாரம் 100 வது அத்தியாயம் இந்த வாரம் வெளியானது. விகடன் இந்த நூறாவது வாரத்தை ஒரு சிறு விழாவாகவே கொண்டாடியது.
முதல் அத்தியாயத்திலிருந்து தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் எழுதுபவள் என்னும் வகையில் எனக்கும் அவ்விழாவுக்கு அழைப்பு இருந்தது.
வெண்ணிலா இதை எழுத துவங்குகையில் அதிகபட்சமாக ஒரு 30 வாரங்கள் வரும் என நான் எதிர்பார்த்தேன். அணைக்கட்டுமானத்தை பேசுபொருளாக கொண்ட ஒரு தொடர் அதற்கு மேல் தொடருகையில் மொழி வறட்சி வருவதற்கான சாத்தியங்கள் இருக்கும் என நான் யூகித்தேன். ஆனால் 100 வாரங்களையும் தாண்டி இது சென்று கொண்டிருக்கிறது.
இந்த தொடரை வாசிக்கும் முன்பு எனக்கு முல்லைப்பெரியாறு மற்றும் பென்னி குக் பற்றி குறைவாகவே தெரியும். பென்னிகுக் இந்த அணையை பல சிரமங்களின் பேரில் கட்டினார், மதுரையிலும் தேனியிலும் பென்னியை கடவுளாகவே எண்ணி பொங்கல் வைத்தெல்லாம் வழிபடுகிறார்கள். இவ்வளவுதான்
ஆனால் வெண்ணிலா காட்டும் பென்னிகுக் மிக புதியவர். 100 வருடம் சாத்தியமே இல்லை என்று கிடப்பில் போடப்பட்ட கோப்புகளை எடுத்து மீண்டும் மீண்டும் மனம் தளராமல் பிரச்சனைகளை சந்தித்து ஒரே முடிவாக இதை கட்டியே முடித்திருக்கிறார்.
அவர் சந்தித்த இடைஞ்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கிய கொள்ளை நோய், பேரியாற்றின் வெள்ளம் என இயற்கையின் இடையூறுகள், கட்டுமானப் பணியில் பாறை என்று நினைத்த இடங்களில் குழிகளும் ,மென்மையான பகுதி என நினைத்த பகுதிகளில் பாறையும் இருப்பது, கட்டிமுடித்த பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் அடித்துசெல்வது, அவரது மேலதிகாரிகளும் உடன் வேலை செய்பவர்களுமாக பல படிநிலைகளில் இருப்பவர்களும் அவருக்கு பல வித தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கூலி ஆட்களை மேல் மலைக்கு வரவழைப்பது கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வது காட்டுவிலங்குகளின் பிரச்சனை. தொழில்நுட்ப சிக்கல்கள்,நிதி நெருக்கடிகள். அணை வருவதை எதிர்க்கும் உள்ளூர்க்காரர்கள், சில சதிகள், அங்கு தற்காலிக வாழிடங்களை எழுப்புவது என பலநூறு பிரச்சனைகள், எல்லாவற்றையும் மனம் தளராமல் சந்திக்கிறார் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறார்.
அவரது நண்பர் டெய்லர் மேலிருந்து கீழே ஒரு அரவை இயந்திரத்துக்குள் தவறி விழுந்து உடல் சிதறி இறந்த போது மட்டும்தான் பென்னி மனம் தளருகிறார்.
பென்னியின் கஷ்டப்பாடுகளை வாசிக்கையில் எல்லாம் எனக்கு கிராதத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் நினைவுக்கு வரும்:
“அது ஒரு தெய்வம். அவள் பெயர் விஷாதை, மானுடரின் வெற்றிக் கணங்களுக்கு முன்பு அவள் அமர்ந்திருக்கிறாள். அவன் அணுகுவதைக் கண்டதும் வஞ்சப் புன்னகையுடன் தன் கைகளை விரித்து குறுக்கே நிற்கிறாள். உச்சிமலைப்பாறையைப் பற்றி ஏறுபவனின் நெஞ்சில் கைவைத்து ஓங்கி தள்ளுகிறாள். நுனிவிளிம்பை தொற்றிக்கொள்பவனின் தலையில் மிதிக்கிறாள். அவளைக் கடந்துசென்ற பின் திரும்பிப்பார்த்தால் அவள் நம்மை வாழ்த்துவது தெரியும்.”
பென்னி பலமுறை அப்படி நெஞ்சில் உதை வாங்கினாலும் இறுதியில் விஷாதையை கடந்து சென்றிருக்கிறார்.
நீரதிகாரத்தில் எனக்கு மிக முக்கியமாக பட்டவை இரண்டு விஷயங்கள், ஒன்று அதில் வரும் பெண்களுக்கான இடங்கள். அந்த மாபெரும் கட்டுமானத்தை குறித்த பல முடிவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களால் எடுக்கப்படுகிறது.பென்னியின் மனைவி ஜார்ஜியா குருவாயி, மீனாட்சி, கார்த்திகேயனி, தேவந்தி, லட்சுமிகொச்சம்மை தம்புராட்டி என பலரின் வலுவான பங்களிப்பில் தான் நிறைவடைந்திருக்கிறது அணைக்கட்டுமானம்.
அக்காலத்தில் பெண்களை குறித்த அப்படியான சித்திரம் நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை,அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் எனவே பெண்கள் சித்தரிக்கபட்டார்கள். கூடத்தில் ஆண்கள் முதலில் உணவுண்டபின்னர் பெண்கள் அடுக்களையில் அமர்ந்து அப்பளம் நொறுக்கும் சத்தம் கூட வெளியே கேட்டு விடக்கூடாது என்று ரசத்தில் ஊற வைத்து சாப்பிடுவார்கள், என்பது போலத்தான் அதிகம் கேள்விப்பட்டும் வாசித்தும் இருக்கிறேன்
நீரதிகாரத்தில் பெண்களுக்கிருந்த இடம் எனக்கு பெரிதும் மகிழ்வளித்தது. அதிலும் இந்தியாவின் இனிப்புக்கு காரணமான கரும்பை கண்டுபிடித்த தாவரவியலாளர் ஜானகியம்மாள், குருவாயியின் கொடிவழி வந்தவர் என்பதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி
மற்றொன்று பிரிட்டிஷாரை குறித்த சித்திரம். பொதுவாகவே அவர்கள் இந்தியவாவை சுரண்டினார்கள் கொள்ளையடித்தார்கள் முதுகில் கால் வைத்து வண்டியில் ஏறினார்கள்,சவுக்காலடித்தார்கள் முலைப்பால் அளிக்கக்கூட நமது பெண்களை அமர்த்தியிருந்தார்கள் போன்றவற்றையே அறிந்திருந்தேன். ஆனால் பென்னிகுக், லோகன் டெய்லர் என பல பொறியாளர்களும் கலெக்டர்களும் கவர்னர்களும் இந்த அணையை கட்டிமுடிக்க படாத பாடுபடுகிறார்கள். பஞ்சத்தில் இறந்த மக்களை பார்த்தபின்பு , விவசாய நிலங்களுக்கு நீர் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து எப்படியும் இந்த அணையை கட்டி முடிக்க அயரராது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் பிரிட்டிஷாரை நான் நீரதிகாரத்தில்தான் பார்க்கிறேன்.
ஹானிங்டன் பிரபு ஓரிடத்தில் சொல்கிறார் என் கன்னத்தின் பளபளப்பு இந்தியர்களை சுரண்டியதால் வந்தது என்று. இப்படி பிரிட்டிஷார் நம்மை பல ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருந்தார்கள் என்ற ஒரே ஒரு பெருஞ்சித்திரம் மட்டுமல்லாமல், நீரதிகாரம் காட்டும் இப்படியான ஒரு நேர்மறையான சித்திரமும் மகிழ்ச்சியளித்தது.
நீரதிகாரத்தில் பல தொல்குடித் தாவரவியல் தகவல்களும் இருந்தன. தொல்குடி தலைவர் எந்த மரக்கட்டையில் செய்யப்பட்டிருக்கிறது.
உடல் நலமில்லாத போது எந்தவிதமான தாவரமருத்துவம் செய்கிறார்கள் என்றெல்லாம் பல குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.
அணை கட்டுமானம் என்னும் பேசுபொருளை வெண்ணிலா மிக அழகாகவும் நேர்மையாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்.
வெண்ணிலா நீரதிகாரத்துக்காக செய்த களப்பணிகளும் அப்படித்தான் அசாதாரணமானவை. நான் கடந்த வருடம் செப்டம்பரில் வெண்ணிலாவை சென்னை ஆவணக்காப்பகத்தில் சந்தித்தபோது தொட்டால் உதிரும் நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான ஆவணங்களுக்கு மத்தியில் அவரும் ஒரு புராதன ஆவணம் போல் இருந்து கோப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.
மதுரைக்கு சென்று பல தடயங்களை சேகரித்தார், லண்டனுக்கு சுமார் 1 மாதம் சென்றிருந்து பென்னியில் கல்லறையை பார்த்தது, பிரிட்டிஷ் நூலகத்தில் முக்கியமான ஆவணங்கள் தேடுவது என அயராத உழைப்பை இதன் பின் அளித்திருக்கிறார்.
பொதுவாக பெண்கள் எழுதுவதில்லை எழுதினாலும் அவை சிறப்பானதாக இல்லை அல்லது இணையாக இல்லை எனும் கருத்து இலக்கிய உலகில் பலரால் முன்வைக்கப்படுகிறது. வெண்ணிலா அதற்கெல்லாம் நீரதிகாரம் மூலம் பதில் சொல்லி இருக்கிறார்.
100 வாரமும் ஷியாமின் ஓவியங்களும் நீரதிகாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கி இருக்கிறது. கதாபாத்திரங்கள் பலரும் உண்மையானவர்கள் எனவே அவர்களின் சாயல் அப்படியே இருப்பதும் அந்த சாயல் தொடர்ந்து வருவதும், கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகளுக்கேற்ப அந்த சாயலை கையாள்வதும் பெரும் சவால். அதை ஷியாம் திறம்பட செய்திருக்கிறார்.
மேலும் ஷியாமின் ஓவியங்களில் அண்மை சேய்மைக்காட்சிகள் இந்த தொடரில் வெகு சிறப்பாக இருக்கின்றன.
விகடன் அலுவலகத்திலேயே விழா நடந்தது. தேனி ஈஸ்வர் மனுஷ்யபுத்திரன் பாஸ்கர் சக்தி ஆகியோருடன் வெண்ணிலா காலாபாணி ராஜேந்திரன் அவர்கள் ஓவியர் சியாம் ஆகியோர் நீரதிகாரம் குறித்து பேசினார்கள். தொடர்ந்து இந்த தொடருடன் பயணம் செய்த நானும் இன்னொரு இளைஞனும் எங்கள் வாசிப்பனுபவத்தை பேசினோம்.
இரு மாநிலங்களுக்கிடையேயான முக்கியமான அணை என்பதால் இதை பலர் வாசித்திருக்கிறார்கள். விழாவுக்கு பொதுமக்களில் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். 97 வயது வாசகர் ஒருவர் வாராவாரம் வெண்ணிலாவுக்கு கையால் கடிதம் எழுதி பாராட்டி கொண்டிருக்கிறார் அவரும் நாற்காலியிலேயே அமர்ந்த நிலையில் அழைத்துவரப்பட்டு உற்சாகமாக பேசினார்.
பலரும் இந்த தொடரை வாசித்திருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியளித்தது. ஒரு வரலாற்று தொடருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு நல்ல விஷயம்தான். மேலும் வெண்ணிலாவின் உழைப்பிற்கான அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இன்னும் சில மதங்களில் நீரதிகாரம் முடிவுக்கு வந்து நூலாகவும் வரவிருக்கிறது. அவசியம் அது பலருக்கு சென்று சேரவேண்டும்.
அன்புடன்
லோகமாதேவி